டப்பிங் கொடுப்பது வித்தியாசமான அனுபவம்




பின்னணி குரல் கலைஞர் கிருத்திகா

திரைப்படத்தில் கதாநாயகிகளை நாம் ரசிப்பதற்கு முதல் காரணம் அவர்களின் அழகு என்றால், இரண்டாவது முக்கியமான காரணம்  அவர்களின் வசீகர குரல். அந்த அழகிய குரலின் ரகசியம் பின்னணி குரல் கலைஞர்கள்தான். தற்போதைய முன்னணி நடிகைகளுக்குக்  குரல் கொடுத்து வருபவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கிருத்திகா. நமக்கு நன்கு அறிமுகமான பிரபல எழுத்தாளர்  சுரேஷின் (சுபா) மகளான கிருத்திகா நமக்களித்த பிரத்யேக பேட்டி இதோ...

‘‘அடிப்படையில் நான் ஒரு இசைக் கலைஞர். நல்லா பாடுவேன். சும்மா பண்ணிப் பார்க்கலாமேன்னு தான் டப்பிங்க்கு முயற்சித்தேன்.  இசை தெரியும் என்பதாலோ, என்னவோ இயல்பிலே என் குரலில் வசனங்களுக்கேற்றபடி  ஏற்ற  இறக்கங்கள் சரியாக வந்தது.  எல்லாருக்கும் என் குரல் பிடித்துப்போனதால  டப்பிங்  யூனியனில் பதிவு செய்த பிறகு ‘ேகா’ படத்தில் நடிகை பியாவிற்குக் குரல்  கொடுத்தேன். அப்படித்தான் என்னோட டப்பிங் கேரியர் ஸ்டார்ட் ஆச்சு. முதல் படம் என்பதால் நிறைய இம்ப்ரூவ் பண்ண வேண்டி  இருந்தாலுமே டப்பிங் எனக்கு ரொம்ப இயல்பா அழகா வந்தது என்று தான் சொல்லணும்’’ என்றவருக்கு அனுபவம் பாடம்  சொல்லிக்  கொடுக்கும் என்பதை உணர்ந்துள்ளார்.  

‘‘சின்ன படங்கள், பெரிய படங்கள்ன்னு பார்க்காம வாய்ப்பு கிடைக்கும் படங்களுக்கு டப்பிங் கொடுத்தேன். ஒரு சமயம் ஒரு படம் பாதி  செய்து கொண்டிருக்கையில் தான் அந்த படத்தின் வசனங்கள் பெண்களை இழிவுப்படுத்துவது போல் இருப்பது தெரிந்தது. எனக்கு அந்த  படம் செய்யலாமா? வேணாமான்னு ஒரே குழப்பமா இருந்தது. பாதி கடல் தாண்டியாச்சு, முழுசும் தாண்டிடலாம்னு முடிச்சு கொடுத்தேன்.  படம் முடிச்ச பிறகு தான் பாதியிலேயே வெளியே வந்து இருக்கலாமோன்னு தோணுச்சு. நம் வேலைய ஒழுங்காக செய்தா மட்டும்  போதாது. சிறப்பா செய்யணும்னு அப்பத்தான் உணர்ந்தேன்.

சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து செய்யும் போது தான் சினிமா இண்டஸ்ரியில் நம் பேரை நிலைநிறுத்த முடியும்னு அந்த சம்பவம்  எனக்கு சொல்லிக் கொடுத்தது. அதன் பிறகு ஒவ்வொரு படங்களை தேர்ந்தெடுப்பதில் ரொம்பவே கவனமா இருக்கேன்’’ என்றவர் தனக்கு  வந்த வாய்ப்பை மற்றவருக்காக விட்டுக் கொடுத்துள்ளார். ‘‘கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் செய்வதில்லை. மீடியாவில் பணிபுரிவதால்  நிறைய பயணங்கள் செய்ய வேண்டி இருக்கும் என்பதால் குறைந்த படங்களை செய்தாலும் நிறைவான படங்களாக செய்றேன். ‘என்னை  அறிந்தால்’ துவங்கி ‘நாயகி’ படம் வரை த்ரிஷாவிற்கு நான் தான் டப்பிங் வாய்ஸ் கொடுத்து வந்தேன். அதன் பிறகு ஒரு சமயம் என்னால்  பண்ண முடியாத சூழ்நிலையில் மானசாவை (96 படத்தில் த்ரிஷாவுக்குக் குரல் கொடுத்தவர்) நல்லா பண்ணுவாங்க என சொல்லிவிட்டேன்.  அதன் பிறகு அவங்க தொடர்ந்து  த்ரிஷாவுக்கு குரல் கொடுத்திட்டு இருக்காங்க’’ என்று சொல்லும் கிருத்திகா இயக்குனர் மணிரத்னம்  நாயகிகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

‘‘மணிரத்னம் சார் படங்களில் நாயகிகளுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தது சந்தோஷமான விஷயம். ‘கடல்’ படத்தில் துளசிக்கு குரல்  கொடுத்தேன். அதை கேட்டதும் அவருக்கு என்னோட குரல் ரொம்பவே பிடிச்சு போச்சு. ‘காற்று வெளியிடையில்’ அதிதி ராவ்விற்கு பேச  கேட்ட போது நான் பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ‘என்னால் வார இறுதி நாட்களில்  மட்டும் தான் சென்னைக்கு வர  முடியும், அதனால்  டப்பிங் முடிய தாமதமாகலாம்’ என்று சொன்னேன். ‘பரவாயில்லை நிங்களே பண்ணுங்க’ன்னு அவர் சொல்லிட்டார்.
அங்கிருந்து வந்து வந்து போய் என் டப்பிங்கை முடிக்க இரண்டு மாதம் ஆயிற்று. அவ்வளவு பெரிய டைரக்டர் எனக்காக காத்திருக்கணும்  என்கிற  எந்த அவசியமே இல்லை. அவ்வளவு பெரிய டைரக்டர் நமக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்கிற அந்த விஷயம் எனக்கு  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ‘காற்று வெளியிடை’ படத்தில் டப்பிங் சமயங்களில் சில காட்சிகளின் தாக்கத்தால் எனக்கு அழுகை வந்தது.  அந்த நேரத்தில் வெளியில் போய் கதறி கதறி அழுவேன். பிறகு வந்து டப்பிங்கை தொடர்வேன். ‘காற்று வெளியிடை’யின் மொத்த  டீமுமே எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ்வாக இருந்தாங்கன்னுதான் சொல்லணும்.

‘செக்க சிவந்த வான’த்திலும் அதிதிக்கு நான் தான் குரல் கொடுத்தேன். காற்று வௌியிடை படத்துக்கு அதிதிக்கு குரல் கொடுத்தேன்,  ‘உங்க குரல் அதிதிக்கு நல்லா செட் ஆயிடுச்சு. ஜூன், ஜூலையில்  குரல் கொடுக்க வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் எங்கேயும்  போயிடாதம்மா’ என்று டைரக்டர் சொன்னது எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது’’ என்று சொல்லும்  கிருத்திகா தெலுங்கிலும் குரல்  பதித்து வருகிறார்.‘‘அமீரின் ‘ஆதிபகவன்’ படத்தில் நீது சந்திராவிற்கு டப்பிங் செய்த பிறகு தெலுங்கிலும் என் வாய்ஸே வேண்டும் என  அமீர் சார் கேட்டார். எனக்கு தெலுங்கு தெரியாது. அதுவரை தமிழ் பெண் கேரக்டர்களுக்கு மட்டும் தான் தெலுங்கு படத்தில் வாய்ஸ்  கொடுத்திருக்கேன்.

ஆனா தெலுங்கு கத்துகிட்டு நானே அந்த கேரக்டருக்கு பேசணும்னு டைரக்டர் விருப்பப்பட்டார். தெலுங்கு கத்துக்கிட்டேன். இது என்னோட  குரலுக்கு கிடைக்கும் மரியாதையா நினைக்கிறேன். மகிழ்ச்சியா இருக்கு. இது தான் என்னை மேலும் நிறைய படங்களுக்கு பின்னணி  கொடுக்க ஊக்குவிக்க காரணம். ‘ஆரம்பம்’ படத்தில் டாப்ஸி கேரக்டர். டேக் நல்லா வரும் போதெல்லாம் விஷ்ணு சார் சூப்பர்...சூப்பர்னு.  என்னைப் பாராட்டிட்டே இருப்பார். ரொம்ப என்ஜாய் பண்ணுவார். அவருடைய அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.
‘அரண்மனை 2’ த்ரிஷாவிற்கு பண்ணும் போது ஒரு பேய்சீன். அந்த டேக் முடிச்சிட்டு திரும்பி பார்த்தா பின்னாடி எல்லாரும் ரொம்ப  அமைதியா இருக்காங்க. சில நொடிகளுக்குப் பின் ‘நீ பேய்னு தெரியும் ஆனா இப்படி ஒரு பயங்கரமான பேயா இருக்கியே’ என்று சொல்லி  பயங்கரமா கிண்டல் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அங்கே ஒரே சிரிப்பு தான் எல்லாருக்கும். இந்த  படத்தில் ஹை பிச்சில் குரல்  கொடுத்தது ஒரு அனுபவம் என்றால் ‘ஒரு நாள் கூத்து’  படத்தில் மியா ஜார்ஜ்க்கு சாஃப்டான குரல் கொடுப்பது சவாலாக இருந்தது. அவங்க குரல் ரொம்ப மென்மையா இருக்கும். என்னோட குரல்  போல்டா இருக்கும். ஸோ… அவங்க குரல் மாதிரி சாஃப்டா முயற்சி பண்ணணும். இது சரி வருமான்னு  எல்லாருக்கும் கொஞ்சம் டவுட்  இருந்தது. ஆனா கொஞ்ச சிரமப்பட்டாலும் ரிசல்ட் நல்லா வந்திருந்தது. இப்படி ஒரு நாள் கதாநாயகி, ஒரு நாள் குழந்தை, ஒரு நாள்  வில்லி, ஒரு நாள் பேய் என தினமும் பல பல கதாபாத்திரங்களில் வாழ வேண்டி இருக்கும். இது ஒரு வித்தியாசமான அனுபவம்.  பெரும்பாலும் கதாநாயகிகளின் குரலோடு ஒத்துப்போவது போல் குரல் கொடுக்க வேண்டி இருக்கும்’’ என்றவர்  கதாநாயகிகளுக்கு மட்டும்  இல்லாமல் மற்ற கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

‘‘பொதுவா டப்பிங் படங்களுக்கு நான் வாய்ஸ் கொடுப்பதில்லை. தனுஷின் தீவிர விசிறி நான். அவரது ராஞ்சனா படம் தமிழில்  ‘அம்பிகாபதி’யா வெளியான போது சோனம் கபூருக்கு குரல் கொடுத்தேன். அதன் பிறகு எனது பேவரைட் படமான ‘பாஜீராவ்  மஸ்தானி’யில் பிரியங்கா பேசியது என்னோட குரலில். அது நான் ரொம்பவே விரும்பி டப்பிங் செய்த படம். மும்பைக்கு போய் டப்பிங்  செய்து வந்தாலும், எல்லாருமே படத்தில் மிகவும் சிரத்தையா வேலைப் பார்த்தாங்க. என் மனதில் என்றும் பசுமையா நிலைத்து இருக்கும்  அனுபவம் அது’’ என்று சொல்லும் கிருத்திகா குறும் படத்தையும் விட்டுவைக்கல.‘‘மா’ குறும்படத்தில் அம்மா கேரக்டருக்கு குரல் கொடுக்க  ட்ரையலுக்கு  போனேன். டைரக்டர் கேட்டு ஓ.கே சொல்லிட்டார்.  ‘90 எம்.எல்’லில் பிக்பாஸ் புகழ் கதாநாயகி ஓவியாவிற்கு குரல்  கொடுக்கிறேன்.

“டப்பிங்கில்  எட்டு வருஷமா இருக்கேன். அதற்கு முக்கிய காரணம் சவுண்டு இன்ஜினியர்கள். டைரக்டர் ஓகே சொன்னால் கூட  ‘இவங்களால் இதை விட இன்னும் நல்லா செய்ய முடியும். அதனால் இன்னொரு  டேக்  போகலாம்’ என்று  சொல்லி நம்மை  செதுக்குவாங்க. நம் திறமையை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. நாம் மூடு அப்செட்டில் இருந்தாலும் எதாவது  பேசி சிரிக்க வைத்து நம்ம மனநிலையை சரி செய்திடுவாங்க. டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளின் வெற்றிக்குப் பின்னால் நல்ல சவுண்டு  இன்ஜினியர்களின் பங்கு மிக முக்கியமானது” எனும் கிருத்திகா எழுத்தாளர் அனுராதா ரமணனின் தங்கை மகள் என்பது எக்ஸ்ட்ரா செய்தி.

-ஸ்ரீதேவி மோகன்