நீதிக்கான நெடும் பயணம் - தன்பாலீர்ப்பு தடைத் தகர்ப்பு



தன்பாலீர்ப்பை அங்கீகரித்து தீர்ப்பளித்திருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். சமகால மனித உரிமையிலும் சரி, இந்திய நீதித்துறையிலும்  சரி, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியை பார்த்தோமேயானால், பொது சமூகத்தில்,  எதிர்பாலீர்ப்பை தவிர மற்ற பாலியல் ஈர்ப்புகள் அனைத்துமே இயற்கைக்கு எதிரானதாக கருதப்படுகிறது. அதாவது ஆணுக்கும்  பெண்ணுக்குமான ஈர்ப்பே சட்டப்படியானதாக இதுவரை இருந்தது. ஆணும் ஆணும் கொள்ளும் ஈர்ப்பு அல்லது பெண்ணும் பெண்ணும்  கொள்ளும் ஈர்ப்பே தன்பாலீர்ப்பு எனப்படுகிறது. இது இந்தியா உட்பட பல நாடுகளிலும் தண்டனைக்குரிய குற்றமாகவும் இருந்தது,  இருக்கிறது.

ஈரான், சூடான், சவுதி அரேபியா, ஏமன் ஆகிய நாடுகளில் முழுமையாகவும், சோமாலியா மற்றும் மேற்கு நைஜீரியாவின் சில  பகுதிகளிலும் தன்பாலீர்ப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. சிரியா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளிலும் அரசு சாரா  குழுக்களால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 2000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட நாடுகளில்  ஆயுள் தண்டனை வரையிலுமான சிறைக் குற்றமாக இருந்து வந்தது.தன்பாலீர்ப்பு சமூக ஒழுக்கம் சார்ந்ததாகவும், மனநோயாகவும்  கருதப்பட்டுவந்தது. தன்பாலீர்ப்பாளர்கள் பலவித உளவியல் மற்றும் சமூகக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களின் பாலின  அடையாளத்தின் காரணமாக சமூக புறக்கணிப்பு, இழிவுபடுத்துதல், கௌரவ கொலைகள் மற்றும் தற்கொலைகள் போன்றவைகளுக்கு  இன்றளவும் ஆளாகி வருகின்றனர். எனவே, தன்பாலீர்ப்பு, இருபாலுணர்வு, மாற்றுப்பாலின, இடையிலிங்க, குயர் (LGBTQI) சமூகத்தினர்  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதற்கிணங்க, 100-க்கும் மேலான நாடுகள் தன்பாலீர்ப்பாளர்களின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு எதிரான சட்டங்களை நீக்கியும்,  ஓர்பால் திருமணங்களை அங்கீகரித்தும், அந்தத் தம்பதியர் குழந்தைகளை தத்தெடுக்கவும் சட்டங்கள் கொண்டுவந்தன. வயதுவந்தவர்களின்  ஒருமித்த குதவழி உடலுறவிற்கு 1791-ல் குற்றவிலக்களித்து, தன்பாலீர்ப்பை அங்கீகரித்த முதல் நாடாக பிரான்ஸ் விளங்குகிறது.  பெல்ஜியம், நெதர்லாண்ட்ஸ், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் 1900-க்கு முன்பே தன்பாலீர்ப்புக்கு குற்றவிலக்கு  அளித்துவிட்டன.அறிவியல் ஆராய்ச்சிகளிலும் இது மனநோய் இல்லை என்று நிரூபிக்கப்பட்டது. 1973-ஆம் ஆண்டு தன்பாலீர்ப்பானது ஒரு  மனநோயோ அல்லது நோயோ இல்லையென்று அமெரிக்க உளவியல் சங்கம் அறிவித்து, அதனை நோய்கள் பட்டியலிலிருந்தும் நீக்கியது.

ஆயினும் கூட, தன்பாலீர்ப்பை குற்றமாக்கும் சட்டங்களும், சமூகக் கொடுமைகளும் தொடர்ந்தன. இவற்றிற்கெதிரான போராட்டங்கள்,  அந்தந்த நாடுகளில்  மட்டுமில்லாமல், சர்வதேச அளவிலும் உருவெடுத்தன. தன்பாலீர்ப்பு, இருபாலுணர்வு, மாற்றுப்பாலின, இடையிலிங்க,  குயர் (LGBTQI) சமூகத்தினருக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை  ஆணையத்திடமும் தன்னார்வ அமைப்புகள் பல முறையிட்டன. அதனை ஏற்ற ஐ.நா.வின் மனித உரிமை ஆணையமும், தன்பாலீர்ப்பை  குற்றச் செயலாக்குவதையும், தன்பாலீர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளையும் ஆவணப்படுத்தியது. அந்த  அறிக்கையின் விளைவாக, நவம்பர் 2006-ல்,  சர்வதேச நிபுணர் குழு கூட்டம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. அதில், சர்வதேச மனித  உரிமைகள் சட்டத்தை தன்பாலீர்ப்பு தொடர்புடையவைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை விவாதித்து, அது தொடர்பான  கொள்கைகளும் நிறுவப்பட்டது. அவை, ‘யோக்யகர்த்தா கொள்கைகள்’ என்று பங்கேற்ற நாடுகளால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.  இதில் இந்தியாவும் பங்கேற்று, கையெழுத்திட்டது.

தன்பாலீர்ப்புக்கு ஏற்கனவே குற்றவிலக்கு அளித்த நாடுகள், அவர்களின் சமூக பாதுகாப்பிற்கும், பாகுபாட்டின்மைக்கும் நடவடிக்கைகள்  எடுக்க அதில் வலியுறுத்தப்பட்டன. இன்னும் குற்றவிலக்கு அளிக்காத நாடுகள், அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கும்  பொருட்டு உடனடியாக தகுந்த சட்டங்களை கொண்டுவரவும் வலியுறுத்தப்பட்டன.யோக்யகர்த்தா கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இந்தியா  கையெழுத்திட்டிருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எவ்வித சட்ட திருத்தத்தையும் மேற்கொள்ளவில்லை. இந்தியாவில்  தன்பாலீர்ப்பாளர்களை குற்றத்திற்கு உள்ளாக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்படாமலேயே இருந்தது.

பிரிவு 377 என்ன கூறுகிறது?


“ஒருவர் தன்னிச்சையாக, ஓர் ஆணுடன் அல்லது ஒரு பெண்ணுடன் அல்லது ஒரு மிருகத்துடன் இயற்கைக்கு மாறாக [குதவழி] புணர்ச்சி  செய்வது குற்றமென்றும், இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும்  சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.”இந்த சட்டத்தில் வயது வரம்போ, வயதுவந்தவர்களின் ஒருமித்த சம்மதம் குறித்தோ  எதுவும் சொல்லப்படவில்லை. இதனால், 18 வயது நிரம்பிய, ஒருமித்த சம்மதத்துடன் [குதவழி] உடலுறவு கொள்ளும்  தன்பாலீர்ப்பாளர்களும் குற்றம் செய்பவர்களாகக் கருதப்படுவர். எனவே, இச்சட்டப்பிரிவை திருத்த தன்பாலீர்ப்பாளர்கள் ஏற்கனவே நடத்திய  தொடர் போராட்டங்கள் தோல்வியடைந்த வண்ணமே இருந்தன.

இப்பிரிவிற்கெதிரான சட்டப் போராட்டமாக 2001-ஆம் ஆண்டு ‘நாஸ் அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தில்லி உயர்  நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் மனுதாரருக்கு தகுந்த  காரணம் இல்லையென்றும், ஒரு சட்டத்தின் செல்லுபடித்தன்மையை முடிவு செய்ய வழக்கு தொடுக்க முடியாதென்றும் 2004-ஆம் ஆண்டு  தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, நாஸ் அறக்கட்டளை. மேல்முறையீட்டை விசாரித்த  இந்திய உச்ச நீதிமன்றம், மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் தள்ளுபடி செய்யுமளவில் வழக்கின் தன்மை இல்லையென்றும்,  இவ்வழக்கு பரிசீலனைக்குரியது என்றும் 2006-ல் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில், நாஸ் அறக் கட்டளையின் வழக்கை தில்லி உயர்  நீதிமன்றம் மறுவிசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்திய அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான...
1) சட்டத்தின் முன் சம உரிமை மற்றும் சமமான சட்டப் பாதுகாப்பு (உறுப்பு 14)
2) மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டிற்கு தடை (உறுப்பு 15)
3) வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திர பாதுகாப்பு (உறுப்பு 21).

இவை வலியுறுத்தும் மனித உரிமைகளின் அடிப்படையிலும், யோக்யகர்த்தா கொள்கைகளின் அடிப்படையிலும், இது தொடர்பான பல  சர்வதேச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும்  இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377ஆனது அரசியலமைப்பின் உறுப்புகள் 14, 15  மற்றும் 21 ஆகியவற்றிற்கு எதிராக இருப்பதாக அறிவித்து, 2009-ஆம் ஆண்டு உத்தரவுப் பிறப்பித்தது தில்லி உயர் நீதிமன்றம். எனினும்,  சம்மதமில்லாத குதவழி உடலுறவோ, 18 வயதடையாதவர்களுடனான  குதவழி உடலுறவோ, மிருகங்களுடனான  உடலுறவோ பிரிவு  377-இன்படி குற்றமாகவே தொடரும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த   தீர்ப்பை எதிர்த்து பல தனிநபர்களும், மத மற்றும் கலாசார அமைப்புகளும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  அந்த மேல்முறையீடுகளை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்க்வி மற்றும் சுதன்சு ஜோதி முகோபதாயா அடங்கிய அமர்வு,இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ மக்களவையே திருத்த விரும்பவில்லை;தன்பாலீர்ப்பாளர்களின் குறிப்பிட்ட பாலியல் செயலை  பிரிவு 377 குற்றமாக்கவில்லை; எதிர்பாலுணர்வாளர்களும், தன்பாலீர்ப்பாளர்களும் சமமல்ல, வெவ்வேறு வகையினர்;தன்பாலீர்ப்பாளர்கள்  எண்ணிக்கையில் மிகச்சிறிய அளவே இருக்கிறார்கள்;உயர் நீதிமன்றம் வெளிநாட்டு தீர்ப்புகளைபெருமளவு சார்ந்திருக்கிறது...  போன்றவற்றின் அடிப்படையில் தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்தது.உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பாலியல்  சிறுபான்மையினரின் உரிமைகளை அலட்சியப்படுத்துவதாகவும், அத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் ஓர்பாலீர்ப்பு வெறுப்பு மனநிலையை  வெளிப்படுத்துவதாகவும் இருந்தது.இருப்பினும், தன்பாலீர்ப்பாளர்களின் உரிமைக்காக  உச்ச நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு தாக்கல்  செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு...எந்தவொரு  சட்டமும் அரசியலமைப்பின் உறுப்பு 21-இன்  கீழான ஒரு தனிநபரின் உரிமையை கட்டுப்படுத்தாமலோ, சிதைக்காமலோ இருக்க வேண்டும். எனவே, ஒருமித்த சம்மதத்துடன் குதவழி  உடலுறவில் ஈடுபடும் வயதுவந்தவர்களின் செயல்களை கட்டுப்படுத்தும் பிரிவு 377 குறித்த உச்ச நீதிமன்ற இருவர் அமர்வு வழங்கிய  தீர்ப்பின் மறுபரிசீலனை தேவைப்படுகிறது என்று உத்தரவிட்டது. இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி, இவ்வழக்கை பெரும்பான்மை  அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரைத்தது.அதனடிப்படையில் தான், தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் உரிமையை அங்கீகரித்து உத்தரவிட்ட  இந்திய தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ரா அவர்களை உள்ளடக்கிய ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

ஆனால், இவ்வழக்கின் தீர்ப்பு வரும் முன்பே, எதிர்பாராத திருப்புமுனையாக அமைந்தது  ஆகஸ்ட் 2017-ல், அப்போதைய இந்திய  தலைமை நீதிபதி திரு. ஜெகதீஷ் சிங் கெஹார் அவர்களை உள்ளடக்கிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு  வழங்கிய ‘தனியுரிமை’ குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு.அந்தத் தீர்ப்பின் சாராம்சங்களில் ஒன்றாக தன்பாலீர்ப்பை விவாதிக்கும்  பொழுது, “பாலியல் சிறுபான்மையினரின் கருத்துக்கள், நம்பிக்கைகள் அல்லது வாழ்க்கைமுறை ‘மையநீரோட்டத்துடன்’ ஒத்துப்  போகவில்லை என்ற காரணத்திற்காக அவர்களின் உரிமைகளை மறுக்க முடியாது. தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் தேர்வானது அவர்களது  தனியுரிமை. அந்த தனியுரிமையானது அரசியலமைப்பின் உறுப்புகள் 14, 15 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகளால்  பாதுகாக்கப்படுகிறது”, என்று கூறியது.

இத்தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றதற்கு காரணம், ஐவர் அமர்வின் விசாரணையில் இருந்த வழக்கின் தன்மை குறித்து, அதனை விடவும்  அதிகாரம் வாய்ந்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்திருந்ததும், அது நிலுவையில் உள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பை  பூடகமாக வழிநடத்துவதாகவும், வெளிப்படுத்துவதாகவும் அமைந்ததே!உலகில் எழுதப்பட்ட அரசியலமைப்புகளிலேயே மிக நீளமானதாக  கருதப்படுவது இந்திய அரசியலமைப்பு. உலகின் மிகப்பெரிய ஜனநாயகங்களில் ஒன்றாக கருதப்படுவதும், இந்திய ஜனநாயகம் தான்.  இத்தனை அரசியல் சிறப்புகள் வாய்ந்த இந்திய கூட்டமைப்பில், சமத்துவத்திற்கு பேர்போன இந்திய அரசியலமைப்பில் பாலியல்  சிறுபான்மையினரின் உரிமை அங்கீகரிப்பு மட்டும் இல்லாமல் இருந்தது.

உலகின் எதிர்பார்ப்பின்படியே,  வயதுவந்தவர்களின் ஒருமித்த சம்மதத்துடனான பாலியல் செயல்களுக்கு பிரிவு 377-லிருந்து குற்றவிலக்கு  அளித்து, தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் உரிமை இந்திய உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.தன்பாலீர்ப்பை அங்கீகரிக்கும் போது  இந்திய உச்ச நீதிமன்றம் கூறிய கீழ்வரும் வார்தைகளானது ‘மனிதனை மனிதனே ஒடுக்குவதை காட்டிலும், இயற்கைக்கு எதிரானது  எதுவுமில்லை’ என்று பொதுச் சமூகத்தின் பலநூறு ஆண்டுகள் தவறை சீரமைப்பதாக இருந்தது.“அடிப்படை உரிமைகளானது, அவர்கள்  சிறுப்பின்மையினரா இல்லையா என்ற வேறுபாடுகள் இன்றி சமமாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

நவீன ஜனநாயகத்தில், பெரும்பான்மை ஆட்சி செய்யும்பொழுது, இன்னபிற எல்லா குடிமக்களைப் போல, சிறுபான்மையினரும்  உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகளாலும், சுதந்திரங்களாலும் பாதுகாக்கப்படுவார்கள் என்பதே அரசியலமைப்பின் திட்டம். நூற்றாண்டுகளாய்  அல்லல்பட்டு வரும் இச்சமூகத்தினரிடமும், அவர்களின் குடும்பத்திடமும் வரலாறு மன்னிப்பு கோர வேண்டியிருக்கிறது. வாழ்நாள்  முழுவதும் ஒடுக்குமுறை மற்றும் தண்டனை பயத்துடனே வாழ தள்ளப்பட்டிருக்கிறார்கள். மனித பாலியல் போக்கில், தன்பாலீர்ப்பும் ஓர்  இயல்பான தன்மை என்பதை அங்கீகரிக்க பொதுச்சமூகம் தவறியிருக்கிறது. எனவே, குற்றமற்றவர்கள் என்ற ஒரு வாழ்க்கையை வாழ  தன்பாலீர்ப்பு, இருபாலுணர்வு, மாற்றுப்பாலின (LGBT)  சமூகத்தினர் தகுதியுடையவர்கள்.”

பாலியல் உரிமையை, நீதிமன்றத் தீர்ப்பு அங்கீகரித்தாலும் இது ‘ஒரு படி’ முன்னேற்றம்தான். சமூக உண்மை என்பது இன்னும் பல மைல்  தூரத்தில் இருக்கிறது. தன்பாலீர்ப்பின் அங்கீகாரத்தை தொடர்ந்து, ஓர்பால் திருமண உரிமை, ஓர்பால் தம்பதியர் குழந்தைகளை  தத்தெடுக்கும் உரிமை என அவர்கள் செல்லவேண்டிய பாதை நீண்டுகொண்டே தான் போகிறது.மே 2006-ஆம் ஆண்டு கணக்கின்படி, 92  நாடுகளில் தன்பாலீர்ப்பு குற்றமாக இருந்தது. இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு, செப்டம்பர் 2018-இன் கணக்குப்படி, இது 73-ஆக  குறைந்திருக்கிறது. மற்றவர்களை கண்ணியத்துடன் நடத்த சமூக அறநெறி, கலாசாரம் போன்றவை தடைகளாக இருக்கக்கூடாது. அப்புரிதல்  ஏற்பட நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சட்டவியல் அதனை நிகழ்த்திக்கொண்டேதான் இருக்கும்.

எங்கள் சமூகம் விடுதலை பெறும்!


‘லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்’ ஆவணப்படத்தின் இயக்குநர் மாலினி ஜீவரத்தினத்திடம் தீர்ப்பு குறித்து கேட்ட போது...“தீர்ப்பு  வருவதற்கு முன்பு 50 சதவீதம்தான் எங்களுக்கு ஆதரவாக வருவதற்கு வாய்ப்பு இருக்கும் என்றிருந்தேன். ஆனால் தீர்ப்பு எங்களுக்கு  ஆதரவாக வந்தபோது அந்த சந்தோஷ உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இந்த நாட்டில் சாதி சார்ந்து, மதம்  சார்ந்து, மொழி சார்ந்து இருக்கும் பாகுபாட்டிற்கே இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பாலினத்தை இந்த சமூகம் அங்கீகரிக்க இத்தனை  ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அதற்கு பெரும் போராட்டம் நடந்தது.

ஆனால் பாலீர்ப்பை பொறுத்தவரை ஆண்,பெண் உடலுறவிலே அவ்வளவு தடைகள் இருக்கிறது இங்கு. இப்படி இருக்க ஓர்பாலீர்ப்பை  ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இந்த சமூகம் வளர்ந்திருக்கிறதா என்கிற பெரிய கேள்வி இருக்கிறது. அந்த புரிதலுக்கான போராட்டத்தையும்  நாங்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில்தான் இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைகிறது. வரலாற்றில் இந்த சமூகம் இத்தனை  ஆண்டுகள் ஒடுக்கப்பட்டிருந்திருக்கிறது என்று நீதிமன்றம் வருத்தப்பட்டிருக்கிறது. ஒரே புரிதலோடு 5 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியது  மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியது.

இதன் பிறகு தீண்டாமையை எங்கள் சமூகம் அதிகமாக சந்திக்கும். ஆனால் சட்டம் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இது நாள் வரை  சட்டம், கலாசாரம், மதம் இந்த மூன்று விஷயங்களை வைத்துத்தான் எங்களை மிரட்டி வந்தனர். பைபிள், குரான், மநுதர்மம் ஆகியவற்றில்  சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை வைத்துத்தான் எங்களை மத அடிப்படைவாதிகள் ஒடுக்கிவந்தனர். ஆனால் அதிலிருக்கும்  எதிர்மறையான கருத்துகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்பினால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைப்பதில்லை.  இது இந்தச் சமூகத்தின்  உச்சபட்ச அறியாமையைக் காட்டுகிறது.  இப்போது மதம், கலாசாரம் கடந்து சட்டம் எங்களுக்கு வழிவிட்டிருக்கிறது. கூடிய விரைவில்  கலாசாரம், மதத்திலிருந்தும் எங்கள் சமூகம் விடுதலை பெறும்.’’

- ஜெ.சதீஷ்