நீரிழிவு நோயால் அவதியுறுகிறீர்களா?பெண்களுக்கு வயதான காலத்தில் வரும் நோய்களில் இன்று நீரிழிவு நோய்தான் அதிகளவில் காணப்படுகிறது. சென்னை  நீரிழிவு நோய்  ஆய்வு மையத்தின் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா, நீரிழிவு நோய் சம்பந்தமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

நீரிழிவு நோய் பெரும்பாலும் பெண்களைத் தாக்குகிறது. அது ஏன்?


“நம் நாட்டில் 10 வயதிற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பூப்பெய்தியவுடன் பல சம்பிரதாயங்களுக்கு உட்பட்டும், பாதுகாப்பு நோக்கம்  கருதியும் வெளியில் சென்று விளையாடுவது நடமாடுவது ஆகியவை தடுக்கப்படுகிறது. இதனால் ஆண்களைவிட பெண்களுக்கான உடல்  உழைப்பு குறைகின்றது. சரியான அளவிலான உடற்பயிற்சியும், உடல் உழைப்பும் இல்லாமையே நீரிழிவு வருவதற்கான முக்கியமான  அடிப்படைக் காரணம் ஆகும். மேலும், இந்தியப் பெண்கள் திருமணத்திற்குப் பின் தங்களது உடல் எடை அதிகரிப்பதைப் பற்றி  கவலைப்படுவதில்லை. உடல் பருமன் நீரிழிவு நோய்க்கு மற்றுமொரு முக்கிய காரணியாக உள்ளது.

பெண்கள் கருவுற்றிருக்கும்போது ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய் இவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பிறந்தவுடன்  இந்நோய் குணமடைந்துவிடுகிறது. இதற்கான காரணம் என்ன?

குழந்தைக் கருவுற்றிருக்கும்போது தாயின் உடல் எடை 7 முதல் 8 கிலோ வரை மட்டுமே அதிகரிக்க வேண்டும். ஆனால், குழந்தைக்கும்  சேர்த்து உணவு உண்ண வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதாலேயே அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதால் தாயின் உடல் எடை  25 கிலோ வரை அதிகரித்து விடுகின்றது. பிரசவத்திற்கு பின்பும் ஏறிய உடல் எடையை குறைப்பதில் பெண்கள் கவனம்  செலுத்துவதில்லை. இதன் காரணமாகவே 40 வயதிற்குப்பின் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் நீரிழிவு நோயிலிருந்து  தங்களை காத்துக்கொள்ளலாம்.. யோகா, நடனம், விளையாட்டு, உடற்பயிற்சிகள் மற்றம் ஏரோபிக் போன்ற  ஏதேனும் ஒன்றில்  ஈடுபடுவதன் மூலம் தனது உயரத்திற்கு ஏற்ற எடையினை பராமரிக்க வேண்டும். உணவுகள் மீந்துவிட்டதே என்பதற்காக அதிக அளவில்  உண்ணக்கூடாது. அவ்வாறு செய்வதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெயை எடுத்துக்கொள்ளலாமா கூடாதா என்ற சந்தேகம்  பரவலாக இருக்கிறது. எனது எண்ணெய் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கும் எண்ணெய்களிலேயே மிகவும் தீங்கினை ஏற்படுத்துவது சூரியகாந்தி  எண்ணெய் என்று தெரியவந்துள்ளது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற பாரம்பரிய  எண்ணெய்களை  உபயோகப்படுத்தலாம். ஒவ்வொரு எண்ணெயிலும் ஒருவித சத்துக்கள் உள்ளன. எனவே, பொரியலுக்கு ஓர் எண்ணெயைப்  பயன்படுத்தினால், குழந்தைக்கு இன்னொரு வகை எண்ணெயை பயன்படுத்தலாம். இவ்வாறு  எல்லாவித எண்ணெய்களையும் உணவில்  கலந்து உபயோகப்படுத்தினால் அனைத்து விதமான சத்துக்களையும் பெறலாம்.

நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளவேண்டிய உணவுகள்


கார்போ ஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளைக் குறைத்துக்கொண்டு புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளையும், காய்கறிகளையும்  நார்ச்சத்து அதிகம் கொண்ட கீரை வகைகளையும் உண்ணலாம். பழங்கள் அதிகம் உண்பதால் நீரிழிவு கட்டுப்படும் என்ற கருத்து  நிலவுகின்றது.  இது ஒரு பொய்யான தகவல். இவ்வாறு வலைத்தளங்களில் காணப்படும் செய்திகளை உண்மை என்று கருதி மருந்துகளை   கைவிட்டு இவற்றை பின்பற்றியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு ஐசியூ வரை வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு நான்  சிகிச்சை அளித்திருக்கிறேன். தயவு செய்து மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகளை நிறுத்திவிடுவதோ, புதிய மருந்துகளை  எடுத்துக்கொள்வதோ தவிர்க்க வேண்டும். வலைத்தளங்களில் காணப்படும் தகவல்களை மருத்துவர் ஆலோசனை இன்றி பயன்படுத்த  வேண்டாம்" என்கிறார்.

இவரது முந்திரிப் பருப்பு பற்றிய ஆய்வு முடிவுகள் நமக்கு வியப்பினை அளிப்பதாக உள்ளது. வறுக்காத, உப்புக்கலக்காத முந்திரிப்  பருப்புகளை தினமும் ஒரு கை அளவு எடுப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான எச்டிஎல் என்ற நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது  என்று கண்டறிந்து வெளியிட்டுள்ளார். இந்த எச்டிஎல் மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு உதவி செய்கிறது. இவைத் தவிர்த்து  வடஇந்தியாவைவிட தென் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். இதற்கு என்ன காரணம் என்று கண்டறிய 32  மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் அளவு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரிசி உணவு  காரணமாக இருக்குமா என்பதும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் ஆய்வு முடிவுகள்  வெளியாகும். இவர் நார்ச்சத்து அதிகம் நிறைந்த அரிசி வகை ஒன்றையும் (ஹைஃபைபர் ரைஸ்) கண்டறிந்து வெளியிட்டுள்ளார். இந்த  வகை அரிசியை உண்ணும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்காது.

-தோ.திருத்துவராஜ்