பெண்கள் வேலையை இழக்கும் அபாயம்!



மத்திய  அரசு கொண்டு வந்துள்ள பேறு கால விடுப்பு தொடர்பான புதிய சட்டம் காரணமாக 1.8 லட்சம் பெண்கள் 2019ம் ஆண்டில் வேலையை  இழக்கும் அபாயம் இருப்பதாக தனியார் நிறுவனம் ஒன்றின்  ஆய்வறிக்கை கூறுகிறது. ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று  தேர்தல் பிரச்சாரத்தில்  மோடி தெரிவித்திருந்தார். ஆனால் ஆண்டிற்கு 2 பேருக்குக்கூட வேலை கிடைக்கவில்லை என்பதுதான் மோடி ஆட்சியின்
4 ஆண்டு சாதனையாக இருக்கிறது. குறிப்பாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த நான்கு ஆண்டுகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு என்பதில்  எந்த முன்னேற்றமும் இல்லை என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.

பெண்கள் வேலை வாய்ப்பு குறித்து தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த புள்ளி விவரங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங் களை மட்டுமே  கணக்கிடப்பட்டவை. ஆனால் ஒழுங்கமைக்கப்படாத சிறு, குறு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் நிலை என்ன என்பது குறித்து  செயற்பாட்டாளர் கீதா நாராயணன்  பேசுகையில்...  “பெரும்பாலும் பெண்கள் வேலை வாய்ப்பு குறித்து எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் தனியார் ஐடி  நிறுவனங்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. ஐடி நிறுவனங்களிலே  இவ்வளவு பேருக்கு வேலை போகிறது என்றால் ஒருங்கி  ணைக்கப்படாத சிறு, குறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு இந்தச் சட்டம் குறித்து என்ன தெரியும்?

அவர்களுக்கு அரசு தந்துள்ள பேறு கால விடுப்பை அந்தந்த நிறுவனங்கள் வழங்குகின்றனவா, சரியான ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து  யாரும் பேசுவதே  இல்லை. எத்தனையோ பெண்கள் பேறு கால விடுமுறைக்குப் பிறகு வேலையை இழந்து இருக்கிறார்கள். ஒருங்கிணைக்கப்படாத  துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அரசு பொறுப்பு எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சமூகத்தில் திருமணம் ஆன பெண்கள் என்றால் பணிக்கு  தகுதி அற்றவர் என்ற பார்வை இருக்கிறது.

இந்த பேறு கால விடுப்பிற்கு பிறகு தொடர்ந்து பணி செய்யும் பெண்கள் இருக்கும் இடம் எதுவென்றால் அரசு வேலையில் இருக்கும் ஆசிரியர்  பெண்கள் மட்டுமே. மற்ற  துறைகளில் அடிப்படை ஊழியர்களில் இருந்து உயர் பதவியில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் பேறு கால  விடுமுறைக்குப் பிறகு  வேலை இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. திருப்பூர், கோவை போன்ற இடங் களில் தொழிற்பேட்டையில் கூலி  தொழிலாளியாக வேலை பார்க்கும் பெண்களுக்கு ஞாயிற்றுக் கிழமை கூட விடுமுறை இல்லை.

அவர்களை எல்லாம் இந்த அரசு எந்தப் பட்டியலில் வைத்திருக்கிறது. அவர்களுக்கு பேறு கால விடுமுறைகள் வழங்கப்படுகின்றனவா?  விடுமுறை  முடிந்து அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை அவரால் தொடரமுடிகிறதா? சட்டங்கள் மட்டும் இல்லை. பொது வாகவே அடிப்படையில் இந்த  சமூகம் ஒரு பெண்ணை திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் எப்படி பார்க்கிறது என்பதிலே சிக்கல் இருக்கிறது. கிராமங்களில் இருக்கும்  பெண்கள்தான் ஒரு குடும்பத்தின் பொருளாதார பின்னணியாக இருக்கிறாள்.

கணவன் குடிகாரனாக இருக்கும் போது அந்த குடும்பத்தை பெண்ணே தாங்கிப் பிடிக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அவர்களுக்கு இந்த  அரசு என்ன  திட்டம் வைத்திருக்கிறது. உழைக்கும் பெண்களுக்கு பேறு காலங்களில் மாதம் குறைந்தபட்ச தொகையாவது வழங்க வேண்டும். பணியில் இருக்கும்  பெண்களுக்கு அவர் விட்டுச் சென்ற வேலையை விடுமுறைக்கு பிறகு உறுதி செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்கள் இது குறித்து ஆழ்ந்து சிந்திக்க  வேண்டும். அடிப்படையில் இருக்கும் பிரச்னை களை சரி செய்யாமல் வெறும் சட்ட திட்டங்களால் பெண்களின் வேலை வாய்ப்பை அதிகரித்து விட  முடியாது” என்கிறார் கீதா நாராயணன்.

ஜெ.சதீஷ்