பச்சை மலையின் இதயம்



கேரளாவின் வயநாடு மாவட்டம்... மலைகளும் பள்ளத்தாக்குகளும்  பீடபூமியும் கொண்ட பிரதேசம். வயநாடு மாவட்டத்தின் தலைநகரம் கல்பெட்டா.  இங்கிருந்து 14வது கிலோ மீட்டரில் செம்பர மலையின் உச்சியில் அழகான நீலவண்ண ஏரியை இதய வடிவத்தில் காணலாம். சில திரைப்  படங்களிலும் இந்த ஏரியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உள்ளம் கொள்ளை கொள்ளும் இந்த அழகிய காட்சியை கண்டுகளிக்க செம்பர மலையின்  உச்சிக்கு நடந்தே செல்லலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ் நாட்டின் நீலகிரி மலைத்தொடரையும், கேரளாவின் கோழிக்கோடு பகுதியின் வெல்லாரி மலைத்தொடரையும்  இணைக்கும் விதமாக இந்த மலை அமைந்துள்ளது. மெப்படி நகரிலிருந்து 3 மணி நேரத்தில் மலை உச்சியை அடையலாம். ஆனால் மேலே செல்ல,  வனத்துறையின் அனுமதி தேவை. காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதி சீட்டு பெறலாம். முதலில் 2 கி.மீ. சமவெளியில்,  தேயிலை தோட்டங்கள் இடையே பயணிக்க வேண்டும்.

அடுத்து சரிவான ஏற்றத்தில் வழுக்குப் பாறையில் மற்றும் மாவு போன்ற மண் ஆகியவற்றை கவனித்து ஜாக்கிரதையாக ஏற வேண்டும்.  வனத்துறையே, கைடு மற்றும் மலை ஏறத் தேவையான உபகரணங்களை கட்டணம் வாங்கிக் கொண்டு தந்து உதவும். கைடுடன் செல்வது,  பாதுகாப்புக்கு நல்லது. வன விலங்குகள் வாழும் பகுதி என்பதால் கவனம் தேவை. ஒரு கி.மீ. ஏறினால் அழகான நீலவண்ண ஏரியை இதய  வடிவத்தில் காணலாம். வருடம் முழுவதும் இதில் உள்ள தண்ணீர் வற்றுவது இல்லை.

இதனையும் கடந்து மேலும் சுமார் 1½ கி.மீ. சென்றால் மலை உச்சியை அடையலாம். இதே ஏரியை அங்கிருந்து பார்க்க மேலும் அழகாக இருக்கும்.  இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமாய்  வருகின்றனர். இதனை பார்த்து இறங்க அரை நாள் போதும். உச்சியிலிருந்து அருகிலுள்ள பனா சுராசாகர்  அணை; பனாசுரா மலை ஆகியவற்றையும் கண்டுகளிக்கலாம். இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ளது. கேரளாவின்  மூன்றாவது பெரிய மலை.

- ராஜேஸ்வரி  ராதாகிருஷ்ணன், பெங்களூர்.