சட்டத் துறையில் கால்பதிக்கும் திருநங்கைகள்



திருநங்கைகள் இந்த சமூகத்தில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு சாதனைப் படைத்து வருகின்றனர். திருநங்கை சமூகத்தில் இருந்து  வழக்கறிஞராக சட்டத்துறையில் கால் பதித்திருக்கிறார் திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா. இவரைத் தொடர்ந்து சட்டம் பயின்று வருகிறார் சென்னையை  சேர்ந்த ஆன்ட்ரியா பாபு. இவர்களின் அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். சென்னை பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த   சத்தியஸ் சர்மிளா கூறுகையில்... “என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடி தாலுகாவில் ஒரு கிராமம்.  

பள்ளி படிக்கும் காலங்களிலே நான் பெண் தன்மையை உணர்ந்து கொண்டேன். பள்ளி மற்றும் கல்லூரி படித்த காலங்களில் ஆண் உருவத்தில்  இருந்தேன். ஆனால் என்னுடைய நடவடிக்கைகள் எல்லாம் பெண்ணை போலவே இருந்ததால் எல்லா திருநங்கைகளும் அனுபவிக்கும் கேலி  கிண்டல்களை நானும் எதிர்கொண்டேன். பள்ளி, கல்லூரிகளில் சுற்றுலா செல்லும் இடங்களில் நிறைய பேர் கிண்டல் செய்வார்கள். வீட்டில் இருந்த  நாட்களில் என்னுடைய பெண் தன்மை காரணமாக  சில சித்ரவதைகள் இருந்தன. தெருக்களில் செல்லும் போது கேலி கிண்டல்களை  எதிர்கொண்டேன்.

இதனால் கலைக்கல்லூரி முடித்ததும் வீட்டைவிட்டு வெளியேறினேன். பின் சட்டப் படிப்பை தொடர்ந்தேன். 2006ம் ஆண்டிலிருந்து என்னுடைய  குடும்பத்துடனான தொடர்புகளை நான் தவிர்த்துவிட்டேன். சேலம் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து முடித்தேன். சட்டக்கல்லூரி படிக்கும் போது  விடுதியில் தங்கி படிக்க முடியாத சூழல் இருந்தது. ஆண் உருவில் இருப்பதால் எனக்கு ஆண்கள் விடுதிதான் வழங்கப்பட்டது. நான் என்னை ஒரு  பெண்ணாக உணரும்போது ஆண்களோடு தங்கி இருப்பதை வசதியாக நான் உணரவில்லை. இதனால் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கினேன்.

2007ம் ஆண்டு சட்டப்படிப்பு முடிந்ததும் திருநங்கையான என்னால்  வழக்கறிஞராக அப்போது பதிவு செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் மூன்றாம்  பாலினத்தவருக்கு பதிவு செய்யக்கூடிய அங்கீகாரம் கிடையாது. 2014ம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவருக்கு ஒவ்வொரு அரசுத்துறையிலும் அங்கீகாரம்  கிடைத்தது. தீர்ப்பு வந்தும் கூட இந்த ஆண்டோடு 4  ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனாலும் இன்னும் அது முறையாக பின்பற்றப்படாமல்  இருக்கிறது. என்னுடைய பெயர் மாற்றம் போன்ற வேலைகள் இருந்ததால் இத்தனை ஆண்டுகள் வழக்கறிஞராக பதிவு செய்ய முடியாமல் இருந்தது.

தற்போதுதான் அதற்கான சூழல் ஏற்பட்டு பதிவு செய்திருக்கிறேன். நான் முதல் முறையாக வழக்கறிஞராக பதிவு செய்யும் போது பெரும் மகிழ்ச்சி  அடைந்தேன். 11 ஆண்டுகள் காத்திருந்ததன் பலனை உணர்ந்தேன். அனைவரும் என்னை பாராட்டினார்கள். நீதி அரசர்கள் நான் நீதிபதியாக வேண்டும்  என்று வாழ்த்தினார்கள். இந்தியாவின் திருநங்கை சமூகத்தில் முதல் வழக்கறிஞர் என்ற பெருமையை பெற்றிருக்கிறேன். என்னுடைய சமூகம் உயர  என்னால் முடிந்தவரை தொடர்ந்து உழைப்பேன். என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய அப்பா.

அதன் பிறகு திருநங்கை சமூகத்தை சேர்ந்த சர்மிளா அம்மா, என்னுடைய மூத்த சகோதரி தேவி, மூத்த வழக்கறிஞர் பூங்கொடி அம்மா, ராஜேஸ்வரி  போன்ற அனைவரும்தான். எல்லாத் துறையிலும் திருநங்கைகள் கால்பதித்து உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும்  என்பதுதான் என்னுடைய விருப்பம்’’  என்றார் சத்யஸ்ரீ சர்மிளா. சென்னை சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு சட்டம் பயின்று வரும் ஆன்ட்ரியா பாபு பேசுகையில்... “நான் சென்னை சட்டக்  கல்லூரியில் 2013ம் ஆண்டு என்னுடைய சட்டப் படிப்பை தொடங்கினேன். சட்டக் கல்லூரியில் கலந்தாய்வு நடக்கும் போது திருநங்கைக்கான எந்த  எதிர்ப்பும் எனக்கு இல்லை.

நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது உடல் ரீதியாக எனக்கு சில பிரச்சனைகள். என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.  அதன் பிறகு இப்போதுதான் என்னுடைய படிப்பை தொடர்வதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக படித்து முடித்து நல்ல வழக்கறிஞராக  வரவேண்டும்  என்பது  என்னுடைய விருப்பம். என்னுடைய சொந்த ஊர் சென்னை தான். சின்ன வயதிலே பெண் தன்மையை நான் உணர்ந்தேன்.  பள்ளியில் படிக்கும் போது பள்ளி நிகழ்ச்சிகளில் அதிகமாக பெண் வேடமிட்டு நடிப்பது எனக்கு பிடித்திருந்தது.

என்னை நான் பெண்ணாகவே உணர்ந்தேன். வீட்டில்  எதிர்ப்பு இருந்தது. இதனால் என்னுடைய நடவடிக்கைகளை நான் என் வீட்டில் மறைக்கத்  தொடங்கினேன். ஒரு கட்டத்தில் வீட்டிற்கு தெரிந்து அப்பா எனக்கு தண்டனையும் கொடுத்தார். ஆனால் எனக்கு  அதனுடைய வலியை விட  பெண்மையே மகிழ்ச்சியை கொடுத்தது. நான்  நன்றாக  படிப்பேன். 6ம் வகுப்பு என்னை ஆண்கள் பள்ளியில் சேர்த்தனர். அங்கு நான் தனிமைப்பட்டது  போல் உணர்ந்தேன். பெண் தோழியிடம் கிடைக்கும் ஒரு மகிழ்ச்சி எனக்கு ஆண் நண்பர்களிடம் கிடைக்கவில்லை.

அந்த பள்ளியிலும் நான் என்னை அடையாளப்படுத்திக்கொண்டது பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பெண் வேடமிட்டு ஆடியதுதான். இதனால் சக  மாணவர்களால் கேலி கிண்டல்களை நானும் எதிர்கொண்டேன். சவுந்தர்யா  கோபி என்கிற திருநங்கை என்னை தத்தெடுத்தார். இதெல்லாம் வீட்டிற்கு  தெரியாது. அந்த காலகட்டத்தில்தான் திருநங்கைகளின் தொடர்பு எனக்கு கிடைத்தது.  12ம் வகுப்பு படிக்கும் போது என்னால் முழுமையாக படிப்பில்  கவனம் செலுத்த முடியவில்லை. அவர்களோடு நேரம் செலவிடுவதிலையே கவனமாக இருந்தேன். 12ம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பிறகுதான் நான்  யோசித்தேன். நாம் படிப்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று.

12ம் வகுப்பில் 999 மதிப்பெண் எடுத்தேன். இந்த மதிப்பெண்ணை வைத்தும்கூட சிலர் என்னை கேலி செய்தனர். 2011ம் ஆண்டு கல்லூரி படிக்கும்  போது பம்பாய் சென்று என்னுடைய உடல் தோற்றத்தை மாற்றிக்கொண்டேன். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சட்டப் படிப்பை சென்னை சட்டக்  கல்லூரியில் தொடங்கினேன். என்னுடைய வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருந்தது பாபு என்பவர்தான். அவர்தான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி  வருகிறார்.  என்னை ஒரு வழக்கறிஞராக பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. நிச்சயமாக வழக்கறிஞராக எனது படிப்பை முடித்து  திருநங்கை சமூகத்திற்கு என்னால் முடிந்தவற்றை செய்வேன்’’ என்கிறார் ஆன்ட்ரியா பாபு.


ஜெ.சதீஷ்