உடலுக்கு சுகம் தரும் நீராவிக்குளியல்நீராவிக்குளியல் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை எப்படி எடுக்க வேண்டும்? எடுப்பதனால் என்ன பயன்? அதை எடுக்கும் முறைகள் குறித்துச்  சொல்கிறார் உடற்பயிற்சியாளரும், ஜிம் ஒன்றில் மேனேஜராகவும் பணிபுரியும் ராணி. ஒரு சிறிய அறையில் ஹீட்டர்கள் மூலமாக நீராவி வெளிப்படும்.  அந்த அறை முழுவதும் உடல் தாங்கக்கூடிய சூட்டில் நீராவி வெளிவரும். நீராவியின் அளவையும், அது வெளிவரும் நேரத்தையும் அட்ஜஸ்ட் செய்து  கொள்ளலாம். குறைந்தபட்சம் 10 லிருந்து 20 நிமிடங்கள் வரை வைத்துக்கொள்ளலாம். அந்த அறை  முழுவதும்  அனல் புகை சூழ்ந்திருக்கும். அந்த  சூட்டின் காரணமாக நம் உடம்பிலிருந்து வியர்வை வெளியேறும்.

நீராவிக்குளியல் எடுப்பதன் பலன்கள்...

* நீராவிக்குளியலின் போது நம் உடம்பில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறுவதால் நம் உடம்பிலுள்ள நச்சுக்கள் வெளியேறும்.
*ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
*ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சருமத்தில் அழகு அதிகரிக்கும்.
* இறந்த செல்கள் வெளியேறும்.
* இறந்த செல்கள் வெளியேறுவதால் சருமத்தின் ஜொலிப்பு கூடும்.
* கலோரிகளை எரிக்கும் திறன் அதிகரிக்கும். இதனால் எடை குறைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
* அடித்தள வளர்சிதை மாற்றம்(Basal metabolic rate) அதிகரிக்கும்.
* சளித்தொல்லை இருப்பவர்களுக்கு நீராவிக்குளியல் நல்ல பலன் அளிக்கும்.
* ஜலதோஷம் காரணமாக ஏற்படும் தலைவலிக்கு நீராவிக்குளியல் நல்ல பலன் தரும்.

எத்தனை நாளைக்கு ஒரு முறை நீராவிக்குளியல் எடுக்க வேண்டும்?

தொடர்ந்து நீராவிக்குளியல் எடுப்பது உடம்பிலுள்ள நீர்ச்சத்தைக் குறைத்துவிடும் என்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை நீராவிக்குளியல் எடுப்பது  நல்லது.

நீராவிக்குளியல் எடுப்பதற்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டியவை...

நீராவிக்குளியலுக்கு  முன்னும் பின்னும் 2 கிளாஸ் தண்ணீரோ ஜூஸோ( திரவ உணவு) எடுத்துக்கொள்ள வேண்டும். நீராவிக்குளியல் எடுப்பதால்  வியர்வை வெளியேறி உடம்பில் உள்ள நீர்ச்சத்துக் குறையும்.  தண்ணீர் எடுத்துக்கொள்ளும் போது நீர்ச்சத்துக்குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும்.  இல்லையெனில் மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். தண்ணீரை ஒரே மடக்கில் குடிக்காமல் சிறிது சிறிதாக சப்பிக் குடிப்பது நல்லது.  நீராவிக்குளியல் முடிந்த பின் உடனடியாக குளியல் எடுப்பது நல்லது. நம் சருமத்தில் உள்ள துளைகள் திறந்து கொள்ளும்.

துளைகள் திறந்திருப்பதால் குளிக்காமல் இருக்கும் பட்சத்தில் அதில் மறுபடி தூசி மற்றும் அழுக்குச் சேர வாய்ப்பிருப்பதால் நீராவிக்குளியல் எடுத்து  வெளிவந்த உடன் குளிப்பது நல்லது. ஏற்கனவே வெகுநேரம் சூட்டில் இருந்ததால் மறுபடி வெந்நீரில் குளிக்கக்கூடாது. சாதாரண தண்ணீரில்தான்  குளிக்க வேண்டும். தலையை மறைக்கும்படி தலைக்கு ஷ‌வர் கேப் போட்டு நீராவிக்குளியல் எடுத்தால் தலைக்குக் குளிக்க வேண்டிய  அவசியமில்லை. இல்லாவிடில் தலையும் வியர்த்திருக்கும் என்பதால் கட்டாயம் தலைக்குக் குளிக்க வேண்டும்.

யாரெல்லாம் நீராவிக்குளியல் எடுக்கக்கூடாது?

* காய்ச்சல் மற்றும் ஏதேனும் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எடுக்கக்கூடாது.
* கர்ப்பிணிப் பெண்கள் எடுக்கக்கூடாது.
* தள்ளாத நிலையில் இருக்கும் முதியவர்கள் எடுக்கக்கூடாது.
* மாதவிடாய் காலத்தில் பெண்கள் நீராவிக்குளியல் எடுக்கக்கூடாது.
* அதீத ரத்த அழுத்தம் உடையவர்கள் எடுக்கக்கூடாது.

எந்த வயதில் நீராவிக்குளியல் எடுக்கலாம்?

எந்த வித பிரச்னையும் இல்லாத பட்சத்தில் 14 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருவருமே 15 நாட்களுக்கு ஒரு முறை நீராவிக்குளியல்  எடுக்கலாம்.

நீராவிக்குளியலின் போது சாப்பாடு எப்படி?

நீராவிக்குளியல் எடுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை எதுவும் சாப்பிட்டிருக்கக்கூடாது. அது போல் நீராவிக்குளியல் எடுத்து ஒரு மணி  நேரம் கழித்து உணவு எடுத்துக்கொள்ளலாம்.

நீராவிக்குளியல் எடுத்தவுடன் ஒர்க் அவுட் செய்யலாமா?

நீராவிக்குளியலின் நோக்கமே தசைகளின் ரிலாக்சேஷன் தான். அதனால் நீராவிக்குளியல் எடுத்த பின்னால் ஒர்க் அவுட் செய்தால் தசைகளை  ஸ்ட்ரெயின் பண்ணுவது போலாகிவிடும். நீராவிக்குளியல் எடுப்பதற்கு முன்பு ஒர்க் அவுட் செய்யலாம். தப்பில்லை.

நீராவிக்குளியலின் போது மசாஜ் எடுக்கலாமா?

நீராவிக்குளியலுக்கு முன் மசாஜ் எடுக்கலாம். எண்ணெய் மசாஜ் கூட எடுக்கலாம். (அதாவது Manual massage ) நீராவிக்குளியலுக்குப் பின் மசாஜ்  எடுக்கக் கூடாது. இயந்திரங்கள் மூலம் எடுக்கும் மசாஜ் என்றால் நீராவிக்குளியலுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம்.   

ஸ்ரீதேவி மோகன்