கிச்சன் டைரீஸ்டயட் மேனியா

சமீபமாய் மெல்லப் பரவிவரும் டயட் என்றால் அது மேக்ரோபயாட்டிக் டயட்தான். சீனாவின் புகழ்பெற்ற ஜென் தத்துவ மரபில் உருவானது இது. ஜென் என்பது நமது ஊரின் பெளத்தம் அந்த நிலத்துக்குச் சென்றபோது உருவான ஒரு சிந்தனை மரபு. இதில், உலக விஷயங்கள் குறித்து யின்-யாங் என்ற  இரண்டு அடிப்படையான பிரிவுகள் உள்ளன. யின் என்பது இருள், அடர்த்தி, கணமானது, மறைமுகமானது, எதிர்மறை ஆற்றல் கொண்டது. யாங்  என்பது ஒளி, மென்மையானது, எடையற்றது, நேரடியானது, நேர்மறை ஆற்றல் கொண்டது.

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே யின்-யாங் எனும் முரண்களின் கூட்டியக்கத்தால் உருவானது என்பது இதன் அடிப்படைத் தத்துவம். நாம் உண்ணும்  எல்லா உணவிலும் இந்த யின்-யாங் செயல்படுகிறது என்கிறது மேக்ரோபயாட்டிக் டயட். ஜப்பானில் பிறந்து பிரான்சில் வாழ்ந்த ஜார்ஜ் ஓசாவா என்ற  நிபுணரால் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மேக்ரோபயாட்டிக் டயட் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் அவரது மாணவர் மிஷியோ  குஷி இதை மேலும் செறிவாக்கினார்.

நாம் உண்ணும் உணவில் யின்-யாங் 5:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்கிறது இந்த டயட். பழுப்பு அரிசி 40-60%, காய்கறிகள் 25-30%,  விதைகள் 5-10%, சூப் 5% பாரம்பரிய முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் 5%, கடல் உணவுகள் 5% இதுதான் இந்த டயட்டின் உணவு விகிதம். பழுப்பு  அரிசி, ஓட்ஸ், பார்லி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள் ஆகியவற்றில் யின் மற்றும் யாங் இரண்டும் கிட்டதட்ட சமவிகிதத்தில் இருக்கிறது  என்கிறார்கள். தக்காளி, குறுமிளகு, உருளைக் கிழங்கு, கத்திரிக்காய், அவகேடா போன்றவற்றில் யின் சத்து அதிகம் என்பதால் அவற்றைத் தவிர்க்க  வேண்டும் என்கிறார்கள்.

இந்த உணவுமுறையில் உணவுப் பொருட்களை சமைக்கும் பாத்திரமும் முக்கியம். மரம், கண்ணாடி,  பீங்கான் ஆகியவற்றில் உணவைச் சமைக்கலாம்.  ஆனால், செம்பு, பித்தளை, பிளாஸ்டிக் பொருட்களில் உணவைச் சமைக்கவோ வைத்திருக்கவோ கூடாது. மேக்ரோபயாட்டிக் டயட் முறை புற்றுநோய்  போன்ற நீண்டகால பிரச்சனைகளில் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஏற்றது என்கிறார்கள். பொதுவாக, கொழுப்புச்சத்து குறைவான, நார்ச்சத்து நிறைந்த  டயட் என்பது நோயாளிகளுக்கு ஏற்றது என்ற வகையில் இந்த மேக்ரோபயாட்டிக் டயட் சிறந்ததுதான்.

உணவு விதி #7

வயிற்றைச் சுத்தமாக்கும் டீடாக்ஸ் எனும் நச்சு நீக்க சிகிச்சைகளை ஆறு மாதங்களுக்கு ஒருமுறையேனும் மேற்கொள்ளுங்கள். இயற்கையாகவே சில  உணவுப் பொருட்களுக்கும் உடலின் நஞ்சை நீக்கும் ஆற்றல் உண்டு. உதாரணமாக, எலுமிச்சை, நெல்லிக்காய், பாகற்காய், முள்ளங்கி, வெள்ளரிக்காய்,  பீட்ரூட், கேரட், வாழைப்பழம், நாவல் பழம், சாத்துக்குடி போன்றவை. இவற்றை அடிக்கடி உண்பதன் மூலமும் அப்போதைக்கு அப்போது டீடாக்ஸ்  செய்துகொள்ளலாம்.

எக்ஸ்பர்ட் விசிட்

சோனாலி சபேர்வால் இந்தியாவின் முதல் மேக்ரோபயாட்டிக் உணவியல் நிபுணர். பாலிவுட் செலிபிரிட்டிகள் பலருக்கும் இன்று இவர்தான் ஃபுட் குரு.  ‘நமது முறையற்ற வாழ்க்கைமுறை மற்றும் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகளால்தான் பெரும்பாலான நோய்கள் உருவாகின்றன’ என்று விவரிக்கும்  சோனாலி ‘இதை முறையான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில காம்ப்ளிமெண்டரி தெரப்பிகள் மூலம் எளிதாகச் சரி செய்யலாம். தனிப்பட்ட  சிகிச்சை அல்லது மருத்துவம் என்பது எல்லா நோய்களுக்கும் தேவை இல்லை.

ஏனெனில் நம் உடல் இயல்பாகவே நோயிலிருந்து குணமாகும் பண்பைப் பெற்றுள்ளது’ என்கிறார். ‘உடலில் உள்ள ஹைட்ரஜன் அளவை பி.ஹெச்  என்ற அளவால் குறிப்போம். இது குறைந்தால் அது அமிலத்தன்மை (Acid) பண்பை அடையும். அதிகரித்தால் அல்கலைன் (Alkaline) பண்பை  அடையும். எனவே, இந்த பி.ஹெச் அளவு மாறுபடும்போதுதான் நோய் உருவாகிறது.  இதைச் சீராக்குவதன் மூலம் நோயிலிருந்து முழுமையாக  விடுபடலாம்.

அதிக நார்ச்சத்து, குறைந்த நிறைவுற்ற கொழுப்புச்சத்து, அதிக தாதுஉப்புகள், வைட்டமின்கள் சத்துகள், கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைந்த ரத்தத்தில்  சர்க்கரையைக் குறைவாகச் சேர்க்கும் உணவுகள், சோடியம்-பொட்டாசியம் சமச்சீராக உள்ளவை போன்ற உணவுகள் உடலை ஆரோக்கியமாக  வைத்திருக்க மிகவும் அவசியம்’ என்று சொல்லும் சோனாலி பொது மருத்துவர்கள், புற்றுநோய் நிபுணர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் ஆகியோருடன்  இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் மிகுந்தவர். ‘ஒரு மேக்ரோபயாட்டிக் நிபுணராக சைவம்தான் ஆரோக்கியமான உணவுப் பழக்கம்.

ஆனால், உடலுக்குப் போதுமான புரதச்சத்து வேண்டும் என்பதால் மீனை நான் பரிந்துரைப்பேன். பேலியோ டயட் போன்ற மாவுச்சத்தை முழுமையாக  நிராகரிக்கும் உணவுப் பழக்கங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. கோடை காலங்களில் முழுமையான ஃப்ரூட்டேரியன் டயட்டைப் பின்பற்றலாம். சில  சமயங்களில் இதனால் ஊட்டச்சத்து இழப்பும் நிகழும் என்பதால் இதிலும் கவனம் தேவை. எனவே, எல்லாவகை உணவுகளையும் சமவிகிதத்தில்  உண்பதுவே சிறந்தது. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் அடிப்படையான கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன’  என்கிறார்.

போலி பருப்பும் வேகும்!

எல்லாவற்றிலும் கலப் படம் செய்யும் கலப்பட மன்னர்கள் பருப்பை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன? குழந்தைகள் முதல் முதியவர்கள்,  நோயாளிகள் வரை அனைவரும் உண்ணும் அத்தியாவசிய புரதச்சத்து நிறந்த பருப்பில் கலப்படம் செய்வதால் அஜீரணக் கோளாறு முதல் புற்றுநோய்  வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சரி? பருப்பில் என்ன கலப்படம் நிகழ்கிறது. பாலிஷ் செய்யப்பட்ட பருப்பு வகைகளில் மெட்டானில்  யெல்லோ கலர் (Metanil yellow colour) எனும் நிறமி  கலக்கப்படுகிறது.

நிறம் மங்கிய பருப்புகளின் தரத்தை மேம்படுத்திக்காட்டவும் பாலிஷிங் செய்யும்போது இழந்த மஞ்சள் நிறத்தை மீண்டும் ஏற்றவும் இது  கலக்கப்படுகிறது. இது ஒரு மோசமான நிறமி. டைல்யூட் ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டை (Dilute hydrochloric acid) டெஸ்ட் டியூப்பில்  எடுத்துக்கொண்டு சில துளிகள் விட்டுப் பார்த்தாலே பருப்பில் ஏற்றப்பட்டிருக்கும் கலர் பிரிந்து கசடுபோல் கீழே தங்கிவிடும். இந்த ஆசிட்  அனைவருக்கும் கிடைப்பது சிரமம். எனவே, இதை பரிசோதனைக்கூடத்தில் கொடுத்துதான் உண்மை அறிய முடியும். நல்ல தரமான பிராண்ட் அல்லது  நன்கு அறிந்த மளிகைக் கடையில் பருப்பை வாங்குவதுதான் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க உள்ள சிறந்த வழி.

தேவை ஒரு மடை நூல்

தமிழ் மொழிக்கு ஒரு விசேஷம் உண்டு. மனிதர்கள் வேட்டைச் சமூகத்தினராய் வாழ்ந்த காலந்தொட்டு உருவான பல சொற்கள் இன்னமும் இங்கு  நடமாடிக்கொண்டிருப்பதுதான் அது. உணவு என்ற சொல்லே வேட்டைச் சமூகத்துச் சொல் தான் என்பாரும் உளர். ஊண்  என்பதுவே உண் எனும்  வினைச் சொல்லாகி உணவு என்ற பொதுப் பெயர்ச் சொல்லானது என்பார்கள்.

தமிழில் ஆற்றுபடை இலக்கியங்கள், மணிமேகலை, பெருங்கதை போன்ற பழைய இலக்கியங்களில் நமது பாரம்பரிய உணவு முறை விரிவாகப்  பதிவாகியுள்ளது. உணவு பற்றிய செய்திகளை பதியும் நூலை மடை நூல் என்பது வழக்கம். உணவு உண்ணுதல் என்று பொதுவாகச் சொன்னாலும்  உண்பதில் மட்டும் எத்தனை வகை உண்டு தெரியுமா?

அருந்துதல் - நீர்மையான பொருட்களை சிறிது எடுத்துக்கொள்வது.
பருகல் - நீரியற் பண்டத்தை சிறுக சிறுகக் குடிப்பது.
விழுங்கல் - அப்படியே வாயிலிட்டு லபக்குவது.
நுங்கல் - முழுவதையும் சட்டென உறிஞ்சிக்கொள்வது.
குடித்தல் -  நீர்மையான பொருளை சற்றே வேகமாக எடுத்துக்கொள்வது.
மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
உறிஞ்சல் -  கொஞ்சம் கொஞ்சமாக உதடு கொண்டு உள்ளே இழுப்பது.
உண்ணல் -  பசி தீர புசிப்பது.
தின்றல் -  தின்பண்டங்கள் கொறிப்பது .
துய்த்தல் - இனிப்பானவற்றை சுவைப்பது.
நக்கல் - நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்.
மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.

இது எல்லாம் உண்பதின் பல்வேறு வகைகள். இதேபோல் ஒரு தலை வாழை இலையில் என்னென்ன வைக்கப்பட வேண்டும். எந்த வரிசையில்  வைக்கப்பட வேண்டும் எனப் பல விஷயங்களையும் பதிவு செய்துள்ளனர் நம் முன்னோர்கள். இன்று பலவகையான உணவுகள் வந்துவிட்டன.  சமைக்கும் முறை தொடங்கி சாப்பிடும் முறை வரை அத்தனையும் மாறிவிட்டன. ஆனால், இதை எல்லாம் நாம் போதுமான அளவில்  ஆவணப்படுத்தாமலே இருக்கிறோம். இந்தக் காலத்துக்கு என ஒரு மடை நூல் அவசியம் தேவை.
 

இளங்கோ கிருஷ்ணன்