‘கல்யாணத்துக்கப்புறம் பொறுப்பு வந்துருக்கு!’- காளி வெங்கட்

சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை தமிழ்நாட்டு மக்களை தன் சிறப்பான நடிப்பால் தற்போது பெரிதும் கவர்ந்து வருபவர் ‘முண்டாசுப்பட்டி’  புகழ் காளி வெங்கட். ‘மெர்சல்’, ‘தெறி’, ‘இறுதிச்சுற்று’, ‘ராஜா மந்திரி’, ‘மரகத நாணயம்’ என பற்பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் காமெடி  நடிகரான இவர் பல படங்களில் குணச்சித்திர நடிப்பாலும் கலக்கி வருகிறார். மேலும் கைவசம் நிறைய படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தான் அவரது உறவினர்கள் முன்னிலையில், மிக எளிமையான முறையில் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

தம் திருமண வாழ்வைப் பற்றி இயல்பாக நம்மிடையே பேசுகிறார் காளி. “கல்யாணமாகி எட்டு மாச‌ம்தான் ஆகுது. அரேன்ஞ்சுடு மேரேஜ் தான்.  கல்யாணத்தன்னிக்குத்தான் அவங்களை பார்த்து பேசினேன். கொஞ்சம் அவசர அவசரமா கல்யாணம் ஏற்பாடாச்சு. அவங்களுக்கு இரட்டைப்படை வயசு  வர்றதுக்குள்ள கல்யாணம் முடிக்கணும்னு அவங்க வீட்டுல பார்த்துட்டு இருந்தாங்க. எனக்கும் ரொம்ப நாளா பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க.  அதனால் ரொம்ப சீக்கிரம் கல்யாணம் முடிவாகிடுச்சி.

அவங்க பேர் ஜனனி. கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க டீச்சராக வேலை பார்த்ததால் காலையில் பள்ளிக்கூடம், மாலையில் டியூசன் என  எந்நேரமும் பிஸி தான். அதனால் அவ்வளவாக சினிமா எல்லாம் அவங்க பார்த்தது கிடையாது. அதில் விருப்பமும் இல்லை. திருமணம் முடிந்த பிறகு  ‘மெர்சல்’ கூட்டிட்டுப்போனேன். ‘மெர்சல்’ படத்தில் அந்த ஆக்ஸிடென்ட் காட்சி வந்த உடன் அவங்க படம் பார்க்க விரும்பவில்லை. அழுதுட்டே  பாதியில் வெளியே வந்துட்டாங்க. அதன் பின் ஒரு ஆங்கிலப் படம் கூட்டிட்டுப்போனேன்.

அதிலும் பாதியிலே வந்துட்டாங்க. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தான் முழுசா பார்த்தாங்க. அதுக்குப் பிறகு இப்ப தான் இரண்டு மூனு படம் முழுசா  பார்த்துருக்கோம். அந்த அளவு அவங்களுக்கு சினிமாவில் விருப்பமில்லை. திருமணத்துக்குப் பிறகு கோவா போனோம். ஊட்டி, கொடைக்கானல்  எல்லாம் நான் சூட்டிங்கிற்காக போய் இருக்கேன். அங்கே போனால் ‘இந்த படம் அங்க எடுத்தது. இந்த சீன் இங்க எடுத்தது’ என நான் அவங்களுக்கு  கைடு போல ஆகிடுவேன்னு தோணிச்சு. அதனால் நானும் பார்க்காத ஊரான கோவா போனோம்.

அங்க டூ வீலர் எடுத்துக்கிட்டு ஃப்ரியா ஊர் சுற்றினோம். நல்லா இருந்தது. அப்புறம் கார் எடுத்துக்கிட்டு டிரைவிங் பண்ணிட்டு புதுச்சேரி போய்  இருக்கோம். அவ்வளவு தான். என் கேரியரைப் பொறுத்தமட்டில் அவங்க என்னை எந்த விளக்கமும் கேட்க மாட்டாங்க. என் கேரியரைப் பத்தி பெரிசா  அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அதைப் பற்றி அவங்க எதுவும் தோண்டித் துருவி கேட்கவும் மாட்டாங்க. நான் டப்பிங் கிளம்பறேன்னு சொன்னால்,  ஆ… சரி என்பாங்க. இதுவரைக்கும் சூட்டிங்குக்குக் கூட கூட்டிப்போனதில்லை.

அவங்களும் கூட்டிப்போகச் சொல்லிக் கேட்டதில்லை. நாங்க கூட்டுக்குடும்பமாக இருக்கிறோம். அண்ணன் கேன்டீன் வைத்திருக்கிறார். அதனால்  அங்கிருந்து சாப்பாடு வந்துவிடும் என்பதால் ஜனனி எப்போதாவது சமைப்பார். ஓரிரு முறை சமைத்த போது நன்றாக சமைத்திருந்தார். மற்றபடி  கல்யாணத்துக்கு முன்னாடிக்கும் பின்னாடிக்கும் பெரிசா எனக்கு ஒண்ணும் வித்தியாசம் தெரியவில்லை.

கல்யாணம் என்றாலே அட்வான்டேஜ் டிஸ்வான்டேஜ் இருக்கத்தான் செய்யும். முன்னாடி எல்லாம் கொஞ்சம் சுதந்திரமா இருப்பேன். சூட்டிங் முடிந்தால்  நண்பர்களோடு தோணினா வெளியே போவேன். திடீர்னு சினிமா கிளம்பி போவோம். இப்ப அப்படி இல்ல. சூட்டிங் முடிந்தால் வீடு தான்.  கல்யாணத்துக்குப் பிறகு கொஞ்சம் கட்டுப்பாடுகள் வந்துடுது. கொஞ்சம் பொறுப்பு கூடி இருக்கு அவ்வளவுதான்” என்கிறார்.

ஸ்ரீதேவி மோகன்