பன்முகத் திறமைகர்நாடக மாநில புதிய மந்திரி சபையில் ஒரே பெண் அமைச்சர் ஜெயமாலா! இவருக்கு பன்முகம் உண்டு. நடிகை மற்றும் அரசியல்வாதி. கட்சி  மாறாமல் காங்கிரசிலேயே தொடருபவர்! எம்.எல்.சி. கன்னட பட உலகின் முதல் நேரடி அமைச்சர். ஏற்கனவே ஆனந்த நாக், உமாஸ்ரீ மற்றும்  குமாரபங்காரப்பா ஆகியோர் ஜூனியர் அமைச்சர்களாக மட்டுமே இருந்துள்ளனர். சினிமா நட்சத்திரங்களில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் இவரே.

அல்மாட்டி அணை கட்ட பல மக்கள் இடப்பெயர்ச்சி செய்ய வேண்டி வந்தபோது, பெண்கள் அனுபவித்த வேதனைகளை பேட்டிகள் கண்டும், மேலும்  பல இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தும், கட்டுரையாக எழுதி பெங்களூர் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்தார். அவருக்கு டாக்டர் பட்டம்  வழங்கப்பட்டது. 1974ல் கன்னட படவுலகில் நுழைந்து மொத்தம் 45 கன்னட படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்கள் சூப்பர் ஹிட். இவர் தயாரித்து  நடித்த ‘Thayi Sahaha’ என்ற படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மாநில விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் விருது ஆகியவை இவருடைய சிறந்த  நடிப்புக்காக வழங்கப்பட்டன.

தமிழில் கிட்டத்தட்ட ஏழு படங்களில் நடித்துள்ளார்.

1. ஒரு கொடியில் இரு மலர்கள்
2. ஜம்பு
3. அன்று முதல் இன்று வரை
4. கண் சிவந்தால் மண் சிவக்கும்
5. குவாகுவா வாத்துக்கள்
6. படிக்காத பண்ணையார்
7. வள்ளி

மலையாளத்தில் ‘தேவலோகம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஹெச்.எம்.ஆர்.ராமச்சந்திராவை மணந்துள்ளார்.சபரிமலை சென்ற போது  ஐயப்பனை தொட்டு வணங்கினேன் எனக் கூறினார். இது அகில இந்திய அளவில் பெரும் பிரச்சனையாக அலசப்பட்டது. பிறகு பின்னாலிருந்து தள்ளி  விட்டனர். விழும்போது ஐயப்பன் மீது கைப்பட்டது என சமாளித்தார். ஆனால் இதனை சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை குருக்கள்  நடந்திருக்கவே வாய்ப்பில்லை எனக் கூறி நிராகரித்து விட்டார்.

ஜெயமாலாவுக்கு ஒரே பெண். செளந்தர்யா ஜெயமாலா. கன்னட படவுலகில் வளர்ந்து வரும் நடிகை. 1959ல் பிறந்த ஜெயமாலாவுக்கு இன்று வயது 59.  தட்சண கர்நாடகாவைச் சேர்ந்தவர். புதிய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்ந்த அமைச்சர். பெண்கள் நலனில் அக்கறை  கொண்டவர். அவர்கள் உரிமைக்காக அவ்வப்போது குரல் கொடுப்பவர். இதனால் அமைச்சர் பதவி மூலம் பெண்களுக்கு நல்லது நிச்சயம் நடக்கும்  என்ற நம்பிக்கை கன்னட பெண்களிடம் நிறையவே உள்ளது.

- வைஷ்ணவி, பெங்களூர்.