எங்களால் முடியும்!- தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து அணி

தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து அணியின் பெண்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.  ஒவ்வொரு வார இறுதியிலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்  சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதா பேஸ்கெட் பால் ஸ்டேடியத்தில் பயிற்சி எடுக்கிறார்கள். சர்வதேச அளவில் பல  கூடைப்பந்து போட்டிகளில் வென்று மேலும் சாதனைகளுக்கு தயாராகி வருகிறார்கள்.

இந்தப் பயிற்சியின் பங்கேற்பாளரும் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்குமிடம் ஒன்றை நடத்தி வருபவருமான டாக்டர் ஐஸ்வர்யா  ராவிடம் பேசியபோது, “WBFI (Wheelchair Basketball Federation of India) அலுவலகம் சென்னை  மகாலிங்கபுரத்தில் செயல்படுகிறது. இதன்  செயலாளராய் மாலதி லதா இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றுத் திறனாளர்கள் குழுவை உருவாக்கி அவர்களை ஒருங்கிணைத்து,  விளையாடவும், அவர்கள் சாதிக்கவும் ஊக்குவித்து வருகிறார். WBFI செயல்பாடுகள் எங்கள் ஷெல்டரோடு இணைந்தே இருக்கிறது.

‘ஸ்போர்ட்ஸ் இஸ் ஸ்போர்ட்ஸ்’ என கண்களை அகல விரித்து ஆச்சரியம் காட்டியவர், விளையாட்டில் லாட் ஆஃப் ஃபன், வேர்க்க வேர்க்க ஹார்ட்  பீட்டிங், பாடி பெயினிங், என்ஜாய்மென்ட் எல்லாம் எங்களுக்கு நிறையவே கிடைக்கிறது. மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுக்கள் மற்றும்  நேஷனல் அளவிலான விளையாட்டிற்கான பயிற்சி, போட்டிகளில் பங்கேற்க WBFI ஏற்பாடு செய்து தருகின்றனர். இதில் மாற்றுத் திறனாளர்களுக்கு  ஸ்விம்மிங், பேட்மிட்டன், பேஸ்கெட்பால் போன்ற விளையாட்டுக்கள் உள்ளன” என்கிறார் இவர். தமிழ்நாடு பேஸ்கெட்பால் வீல்சேர் அசோசியேஷன்  தலைவர் மெடில்டாவிடம் பேசியபோது, “ஒன்றரை வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டேன்.

+2 வரை மட்டுமே என்னால் படிக்க முடிந்தது. சரியான வேலைவாய்ப்பற்ற நிலையில், அப்பாவின் பென்ஷன் எனக்கு கை கொடுக்கிறது. நாங்கள்  இருக்கும் வீடு எனக்கேற்ற மாதிரி இல்லை. வீட்டுக்குள் தரையில் கை ஊன்றி தவழ்ந்துதான் இயங்கினேன். வீடு வசதியாக இல்லாத நிலையில்  எனது வீட்டாருக்கு என்னால் கஷ்டம். தற்போது காம்தா நகரில் உள்ள டாக்டர் ஐஸ்வர்யாவின் இரவுநேர விடுதியில் தங்கியுள்ளேன். எனக்கு  தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாகக் கிடைக்கிறது. 2014ல் துவங்கி நீச்சல் பயிற்சி செய்கிறேன். வீல்சேர் பேஸ்கெட் பால் டீமிலும் உள்ளேன்.

இந்தப் பயிற்சிகளை நான் எடுக்கத் துவங்கிய பிறகு உடல் ரீதியாக எனக்கு நிறைய முன்னேற்றம் கிடைத்துள்ளது. எனது உடலின் எடையும்  குறைந்து, தன்னம்பிக்கை கூடியுள்ளது” என்கிறார். “பயிற்சிக்கான வீல் சேர்களை WBFIல் வாங்கி பயிற்சி எடுக்கிறோம். அங்கு 25 சேர்கள் மட்டுமே  உள்ளது. பயிற்சிக்குத் தேவையான வீல் சேர் பற்றாக்குறை நிறைய உள்ளது. விளையாடுவதற்கான பந்தைக்கூட சொந்த பணத்தில்தான்  வாங்குகிறோம். தமிழ்நாட்டில் 15 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் வீல்சேர் பேஸ்கெட்பால் வீரர்களாக உள்ளனர். மாற்றுத் திறனாளராய் பயிற்சி  எடுப்பதில் நிறைய சிரமங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சென்னையில் 5 பேர் மட்டுமே. மற்ற வீரர்கள் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு சரியான தங்குமிடம் இங்கு இல்லை.  பெரும்பாலும் நாங்கள் பயிற்சி எடுக்கும் ஆடுகளத்திற்கு அருகே உள்ள கழிவறைகளில் வீல் சேர் உள்ளே போகாத நிலையில் தரையில் தவழ்ந்தே  உள் செல்லும் நிலை. பயிற்சி எடுப்பதற்கு உள் விளையாட்டு அரங்கமாக இருந்தால் வெயில், மழை போன்ற நேரங்களில் பாதுகாப்பாக இருக்கும்.  பெரும்பாலும் அவுட்டோர் ஸ்டேடியம் எங்கள் பயிற்சிக்கான களமாக இருப்பதால் இயற்கை சிரமங்களையும் எதிர்கொள்கிறோம். வார இறுதி  நாட்களான சனி காலை மற்றும் ஞாயிறு மாலை வெயில் கடந்த பொழுதுகளையே தேர்வு செய்கிறோம்.

விளையாடுவதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீல் சேர் ஒன்றின் விலை 35 ஆயிரத்தில் துவங்கி 40 ஆயிரம் வரை ஆகும். ஆனால்  வெளிநாட்டவர் பயன்படுத்தும் வீல் சேர்கள் 3 லட்சம் முதல் 4 லட்சம் விலை மதிப்புள்ளவை. நாங்கள் சாதாரண வீல்சேர்களில் பயிற்சி  மேற்கொண்டுவிட்டு வெளிநாடுகளில் விளையாடச் செல்லும்போது, விலை உயர்வான வீல்சேர்களில் உட்காரும் நேரத்தில் அங்குள்ள தரைகளில்  சேர்கள் வழுக்கிக்கொண்டு மிகவும் வேகமாகச் செல்லும். அப்போது மிகப்பெரிய வித்தியாசத்தை நாங்கள் விளையாட்டில் உணர்வோம். இந்த  மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொண்டே வெளிநாடுகளில் விளையாடி வெங்கல மெடல்களை பெற்று வந்தோம்.

வேலைவாய்ப்பற்ற நிலையில், ஒவ்வொரு வாரமும் பயிற்சிக்கு வருவதற்கான போக்குவரத்து செலவு எங்களுக்கு அதிகமாகிறது. வாகன வசதி  இல்லாதவர்கள், ஆட்டோவில் வந்து செல்லும் நிலையே உள்ளது. அரசு பேருந்துகள் நாங்கள் பயணிக்க ஏற்ற நிலையில் இல்லை. வெளியூர்களுக்குச்  செல்லும்போது ரயிலாக இருந்தால் அதில் சரியான கழிப்பறை வசதி இருக்காது. பெரும்பாலும் மற்ற பயணிகள் பயணிக்கும் ேபாது பெட்டிகளிலே  நாங்களும் பயணிக்கிறோம். படுக்கை வசதிகூட பெரும்பாலும் மேலேதான் கிடைக்கும். பயணத்தில் கீழிருப்பவர்கள் உதவினால் உண்டு.  இல்லையெனில் ரயிலின் தரையில் விரிப்பை விரித்து வழிகளில் படுத்துக்கொள்வோம்.

வீல் சேரை உள்ளே பயன்படுத்த முடியாத நிலையில் தவழ்ந்த நிலையிலே ரயில் கழிப்பறைகளுக்குள் செல்கிறோம். எங்களை மாதிரியான மாற்றுத்  திறனாளர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களது உடல் ரீதியான இயக்கம் மற்றும்  முன்னேற்றத்திற்காகவாவது வந்து விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் நண்பர்கள்  வட்டம் விரிவடையும். தங்களின் தனிமையை விரட்டுவதற்காகவாவது மாற்றுத் திறனாளர்கள் வெளியில் வர வேண்டும்” என்கிறார் மெடில்டா.  சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த  பேஸ்கெட்பால் வீராங்கனை மாலதி, “நான் பி.காம். படித்துள்ளேன்.

பயிற்சிக்காக மடிப்பாக்கத்தில் இருந்து கீழ்ப்பாக்கத்திற்கு காலை 6 மணிக்கே வந்துவிடுவேன். எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோது போலியோவால்  பாதிக்கப்பட்டேன். குடும்பச் சூழலால் படித்தது வளர்ந்தது எல்லாம் விடுதியில். நான் தனியார் வங்கி ஒன்றில் வேலையில் சேர்ந்த பிறகு, பெற்றோர்  மற்றும் உடன்பிறந்தவர்களுடன் வசிக்கிறேன். என் வருமானத்தில்தான் குடும்பம் இயங்குகிறது. நான் விளையாட்டு வீராங்கனையாக மாறுவதற்கு  முன்பு, பொதுவெளிகளில் ஒரு மாற்றுத் திறனாளியா, அனுதாபக் கண்ணோட்டத்தில், நடக்க முடியாதவர்களாக எங்களைப் பார்த்தார்கள்.

யாரிடமாவது பேசச் சென்றால் கூட, உதவி கேட்டு வருகிறோம் என்கிற சிந்தனையில் இருப்பார்கள். இப்போது நிலைமை தலைகீழ். எங்களை  ஆச்சரியக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். காரணம், முன்பு உடல் ஊனமுற்றோராய் தெரிந்த நாங்கள் இன்று விளையாட்டு வீராங்கனைகள்.  பேஸ்கெட் பால் பிளேயர்ஸ் என்கிற அந்த அங்கீகாரத்தை விளையாட்டு எங்களுக்கு நிறைவாகக் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் தாய்லாந்து,  இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்குச் சென்று வந்தோம். 2 இன்டர்நேஷனல் டீமில் விளையாடினோம். அதில் தாய்லாந்தில் பிராஷோ மெடலை  பெற்றோம். பாரா கேம் தேர்வுக்குச் சென்றோம்.

சரியான எகியூப்மென்ட் வசதியின்றி எங்களால் அவர்கள் அளவுக்கு வேகம் காட்ட முடியவில்லை. WBFIன் மாலதி லதா மேடம் ஒரு இன்டர்  நேஷனல் ஸ்விம்மர், அவரும் ஒரு மாற்றுத் திறனாளர்தான். தனக்கு கிடைத்த முன்னேற்றம் மற்றவங்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும்  எண்ணத்தில், மாற்றுத் திறனாளர்கள் விளையாட வேண்டுமென்கிற எண்ணத்தை விதைத்தார். எங்களை மாதிரி மாற்றுத்திறனாளர் எங்கெல்லாம்  இருக்கிறார்களோ அவர்களையும் அழைத்து வந்து பயிற்சிகளில் நாங்கள் பங்கேற்க வைக்கிறோம். ஒவ்வொரு நேஷனல் விளையாட்டிலும்  தமிழ்நாடுதான் முதலிடம்.

அந்த அளவுக்கு முயற்சி எடுத்து செயல்படுகிறோம். இந்த வெற்றியை எங்களை மாதிரி இருக்கும் ஒவ்வொரு மாற்றுத் திறனாளரும் கொண்டாட  வேண்டும். உள்ளே நுழையும்போதே எங்களுக்கு படிக்கட்டுகள்தான் முதல் தடை. சரிவு நடைபாதைகளை காண்பதே மிகவும் அரிது. கழிப்பறைகளும்  படியேறி செல்ல வேண்டிய நிலையில், பயிற்சியின்போது உடல் உபாதைகளை அடக்கிக் கொள்வோம். பயிற்சி பெறும் இடங்களின் இன்டோர் கோட்  மற்றும் எங்களுக்கான ஓய்வு அறை இல்லாத நிலையில், வெயிலோ மழையோ வெளியில்தான் இருப்போம். எங்கள் விளையாட்டு வீரர்கள் வாரத்தில்  இரண்டு நாள் தான் பயிற்சி செய்யப் போகிறார்கள்.

அப்போது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தங்க, உடை மாற்ற, கழிப்பறை வசதிகள் கிடைத்தால் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு பயனாக  இருக்கும். விளையாட்டு உபகரணங்களை விலை உயர்ந்ததாக வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, சாதாரணமானதாக அரசு எங்களுக்கு  வாங்கித் தந்தால் நல்லது. மாவட்டத்திற்கு 2 என்ற நிலையில் கொடுத்தால்கூட அவரவர் இடத்திலேயே பயிற்சி எடுப்பார்கள். வாரத்தில் இரண்டு நாள்  எடுக்கும் பயிற்சிக்கே நாங்கள் நிறைய சாதிக்கின்றோம். தினமும் பயிற்சி எடுத்தால் எங்களால் இன்னும் நிறைய சாதிக்க முடியும். எங்கள்  நிலையினை மனதில் இறுத்தி எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

வீல் சேர் பேஸ்கெட் பால் மூலமாக ஊனம் எங்களுக்கு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறோம். மாற்றுத்திறனாளர்கள் அனைவரும் ஏதாவது  ஒரு விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டு, விளையாட்டு வீரர்களாய் நாங்கள் பெறும் இன்பத்தை அவர்களும் பெற வேண்டும்” என்கிறார் மாலதி.  பேஸ்கெட்பால் வீராங்கனை மேரி, “ஆசிரமம் ஒன்றில் வளர்ந்தேன். தையல் மற்றும் எம்ராய்டரிங் கற்றேன். எனக்கு எப்போது போலியோ பாதிப்பு  வந்தது என்ற விபரங்கள் சரியாத் தெரியாது. ராயபுரம் சிசு பவன் மற்றும் திருவான்மியூர் ஆசிரம விடுதிகளில் வளர்ந்தேன்.

குறிப்பிட்ட வயதிற்கு மேல் விடுதிகளில் தங்க முடியாத நிலையில் வெளியில் வந்துவிட்டேன். மெடிட்டா என் தோழி. அவர் மூலமாக விளையாட்டுப்  பயிற்சிக்குள் வந்தேன். டாக்டர் ஐஸ்வர்யா ராவ் நடத்தி வரும் இரவு விடுதியில் தோழி மெடிட்டாவுடன் தங்கியிருக்கிறேன். ஒரே இடத்தில்  உட்கார்ந்தே இருப்பதால் என் உடல் அதிகமாக எடை போட்டது. பயிற்சிக்கு வந்த இரண்டுஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி செய்வதால் கை கால்கள்  கொஞ்சம் கொஞ்சமாக இயங்குகிறது. என்னால் தனியாக கையை ஊன்றி எழுந்து உட்கார முடிகிறது. உடல் இயக்கத்திலும் மாற்றங்கள் தெரிகிறது.

வாழ்க்கையிலும் கொஞ்சமாக நம்பிக்கை வருகிறது. ஆஸ்ரமத்தில் வளர்ந்ததால் எனக்கு பான் கார்டு, ஆதார், ரேஷன் கார்டு எதுவுமே கிடையாது.  இதெல்லாம் இருந்தால்தான் அரசு எனக்கு மூன்று சக்கர வண்டி வாங்க மானியம் தருவார்களாம். அந்த முயற்சி தாமதமாகிறது. தொடர்ந்து பயிற்சி  மேற்கொண்டால் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் மாற்றம் கிடைக்கும்” என்கிறார். கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த வீராங்கனை இந்திரா, “என்  அப்பா ஆட்டோ ஓட்டுநர். நான் பி.காம். வரை படித்துள்ளேன். 2 வயதில் நான் போலியோவால் பாதிக்கப்பட்டேன்.

ஒப்பந்த அடிப்படையில் சென்னை பல்கலைக் கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியில் உள்ளேன்.  விளையாடுவதன் மூலம் நிறைய  மகிழ்ச்சி கிடைக்கிறது. நேஷனல் போட்டிகளிலும் விளையாடி ஜெயித்திருக்கிறோம். நாங்கள் அனைவருமே மிகவும் சாதாரண குடும்பங்களைச்  சேர்ந்தவர்கள். பயிற்சிக்கு மைதானம், விளையாட்டு உபகரணங்கள், போக்குவரத்து எல்லாம் எங்களுக்கு அதிகமான செலவைத் தருகிறது. எங்களுக்கு  அரசு உதவினால் மிகவும் நல்லது. ஊனத்தின் தன்மை 80 சதவிகிதம் இருந்தால்தான் அரசு ஸ்கூட்டர் வாங்க மானியம் தருகிறது.

அதற்கென சான்றிதழ் பெற வேண்டும். எனது ஊனத்தின் தன்மை 80ஐ விட சற்று குறைவாக உள்ளதால், எங்கு செல்வதென்றாலும் பேருந்திலேயே  பயணிக்கிறேன். உடை, உணவு, தங்குமிடமும் இருந்தால் மட்டும் எங்களுக்கு போதுமா? நாங்களும் சம்பாதித்தால்தானே எங்களின் தன்னம்பிக்கை  உயரும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் 100 சதவிகிதம் உழைக்கிறார்கள் என்றால் நாங்கள் 70 சதவிகிதமாவது உழைக்க மாட்டோமா? எங்களுக்கு  வேலைவாய்ப்பு தந்தால் எங்கள் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்துகொள்வோம்”  என்கிறார்.

* மிகவும் தரமான வீல்சேர் என்றால் 3 முதல் 4 லட்சம் செலவாகும். இந்தியாவில் இந்த வகை வீல்சேர்கள் கிடைப்பதில்லை.
* இதில் உள்ள டயர், உள் அரங்க விளையாட்டிற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இதை அவுட்டோரில் பயன்படுத்தக் கூடாது.
* வீல்சேருக்குத் தேவையான டயர் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதியாகிறது. இந்த டயரால் ஒரு முறை வீலை அழுத்தினால் வீல்சேர் நீண்ட  தூரம் வழுக்கிக் கொண்டு போகும்.
* வெளிநாட்டவரின் வீல் சேருடன் ஒப்பீட்டளவில் இந்தியாவில் நாம் அடிப்படை பேஸிக்மாடலில் இருக்கிறோம்.
* சாதாரண நிலை வீரர்கள் நின்று விளையாடு வார்கள். மாற்றுத் திறனாளர் வீல்சேரில் அமர்ந்து விளையாடுவர். சாதாரண வீரர்களது பேஸ்கெட்பால்  கோர்ட் உயரம்தான் மாற்றுத் திறனாளர்களின் கோர்ட்டும். சிறப்பு சலுகையும் எதுவும் மாற்றுத் திறனாளருக்கு இல்லை.
* அமெரிக்கன்,ஜெர்மன் போன்ற விளையாட்டு வீரர்களின் உடல் பலம் மற்றும் உயரம் நம் நாட்டவரோடு ஒப்பீட்டளவில் மிகவும் கூடுதல் திறன்  படைத்தது. வெளிநாட்டவர் உட்கார்ந்த நிலையிலேயே பந்தை கூடைக்குள் போடும் உயரமான உடல்வாகைப் பெற்றவர்கள்.

பேஸ்கெட் பால் ஸ்டேடியத்தில் பயிற்சி எடுக்க வரும்  இவர்களை ஒருங்கிணைத்து, கட்டணம் பெறாமலே உணவையும், தங்குமிடத்தையும்  வழங்கி,  அவர்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வரும் தமிழ்நாடு வீல்சேர்  பேஸ்கெட் பால் டீமில் இருக்கும் மருத்துவரான டாக்டர் ஐஸ்வர்யா ராவிடம்   பேசியபோது, மாற்றுத் திறனாளர்களின் தேவை மற்றும் திறமைகள் குறித்து நம்மிடம் பேசத் துவங்கினார். “எந்த ஒரு கட்டமைப்பையும் அரசு   உருவாக்கும்போது, அதில் உடல் ஊனமுற்றோர், விழிக் குறைபாடுடையோர்,  முதியோர், குழந்தைகள் என எல்லோரையும் மனதில் இருத்தி  உருவாக்க வேண்டும்.  

உதாரணமாக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வீல்சேர் ப்ரென்ட்லி டாய்லெட்  உள்ளது. அதன் கட்டமைப்பு மிகவும் நன்றாக உள்ளது. ஆனால்  வீல்சேர் உள்ளே போக  முடியாத நிலையில் வழி உள்ளது. வீல்சேர் ப்ரென்ட்லி டாய்லெட் என கதவில்  பொம்மை போடுவது மட்டும் ‘டிஸபிள்  ப்ரென்ட்லி டாய்லெட்’ ஆகிவிடாது.  வீல்சேரிலேயே செல்லும் சாய்வுப்பாதையும்(ramp) சில இடங்களில் உள்ளது. ஆனால்  வாகன நிறுத்துமிடம்  எங்கோ தொலைவில் இருக்கிறது. இந்த மாதிரியான சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கவனத்தில்   கொண்டு கட்டமைத்தால் மிகவும் நல்லது.

நானும் ஒரு  மாற்றுத்திறனாளர்தான். அடிப்படையில் நான் குழந்தைகள் நல மருத்துவர். எனது 4  வயதில் போலியோ பாதிப்பிற்குள்ளானேன். என்  அப்பா புஜங்கராவ், ஐ.ஏ.எஸ்  பதவியில் இருந்தவர். முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா  ஆட்சியில், நீண்டநாள்  ஆட்சியாளராக சென்னையில் பணியாற்றியவர். அப்பா மிகப்  பெரிய பொறுப்பில் இருந்தமையால் உடல் ஊனம் எனக்கு எந்தவிதத்திலும் தடையாக   இல்லை. எல்லா வசதிகளும் இயல்பாய் கிடைத்தன‌. நானும் நன்றாகப் படித்தேன்.  என்னை ஊக்குவித்தவர்களே மிகவும் அதிகம். எனது சுற்றுச்சூழல்  எனக்கு நன்றாக  அமைந்தது.

ஆனால் எனக்கு கிடைத்த வாய்ப்பு எல்லா மாற்றுத் திறனாளர்களுக்கும்  கிடைக்க வேண்டுமே? நான் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்   மருத்துவம் முடித்து, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவத்திற்கான மேல் படிப்பையும் முடித்தேன். குழந்தைகள்  எச்.ஐ.வி  தொடர்பாய் நிறைய பணியாற்றினேன். 2012க்கு பிறகு எச்.ஐ.வி. இறப்பு  கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து மாற்றுத்  திறனாளர்களுக்கு என்னால்  முடிந்ததை செய்ய எண்ணி ‘சொஷைட்டி ஃபார் ஆல் உமன் டிஸபிளிட்டி அசோசியேஷனை’  தொடங்கினேன்.

அதன் ஒரு அங்கமாய், சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘இரவு விடுதி’எனும் பிரிவில், மாற்றுத் திறனாளர் பெண்களுக்கென, அவர்கள் வேலை பெற்று,   பொருளாதாரத் தன்னிறைவோடு செயல்படும்வரை உணவு மற்றும் தங்குமிடத்தோடு  குறுகியகால தங்கும் விடுதி(short stay hostel) ஒன்றை  இலவசமாய் நடத்தி  வருகிறேன். இதில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் மாற்றுத் திறனாளர்  மற்றும்  விழிக் குறைபாடுஉடையோர். வாய்ப்புகள்  எல்லாம் சென்னையில்  மட்டுமே குவிந்து கிடப்பதால், சென்னைவாசிகள் மட்டும்தான் வாய்ப்புகளை பெற  முடிகிறது. வாய்ப்பே கிடைக்காத  பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நிலை?  

மேலும் ஊனத்தின் தன்மையைப் பொறுத்தே அவர்களின் வாழ்க்கையும் அமைகிறது.  பெரும்பாலும் இவர்களது பெற்றோர் இவர்களுக்கான எதிர்கால  வாழ்வை அமைக்க  முயற்சிப்பதில்லை. ஊனத்தால் பாதிப்படைந்தவர்கள் மாத வருமானமாக 1500  சம்பாதித்தாலும் அதை பெற்றோர்  பெற்றுக்கொண்டு, அவர்களின் திருமணம் மற்றும்  எதிர்காலம் குறித்து பேசுவதில்லை. எங்கள் ‘ஷார்ட் ஸ்டே ஷெல்டருக்கு’  வந்தபின் இதுவரை 6  பெண்களுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. இங்கே சிரிப்பு,  சந்தோஷம், அமர்க்களம், சண்டை, கூடல், பிரிவு எல்லாம் உண்டு. எங்கள்  விடுதிக்கு  வந்த பிறகு ஒருவருக்கு ஒருவர் உதவி, முன்னேற்றம், நிறைய வெளித்  தொடர்புகள் எல்லாமும் கிடைக்கிறது” என முடித்தார்.


மகேஸ்வரி