பெண்களே தன்னம்பிக்கையுடன் இருங்கள்



பல்வேறு பிரச்சனைகளை  கடந்து ஒரு சில பெண்களே பல்வேறு துறைகளில்  தனக்கென தனி அடையாளத்தை  பதித்துவருகிறார்கள். பெண்கள் சிறுதொழில் செய்ய உதவுவதும், தான் நடத்தும் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு  கல்வி அளிப்பதும், ஐ,ஏ.எஸ் அகாடமி நடத்துவதும் இவருடைய பணிகள். படிப்பறிவற்ற ஏழை எளிய பெண்களும் இந்த  சமுதாயத்தில் தன்னம்பிக்கையோடு வாழ முடியும் என்றும் அவர்களுக்கு தன்னால்  முடிந்த உதவிகளை செய்ய  முடியும் என்று கூறுகிறார். மதுரவாயல் பகுதியை சேர்ந்த  அகல்யா முருகானந்த் அவரிடம் பேசினேன்.

“என்னுடைய சொந்த ஊரான ராமநாதபுரத்தில் உள்ள கோழிகுளம் எனும் சின்ன கிராமம். அங்குதான் என்னுடைய  பள்ளி படிப்பை முடித்தேன். என்னுடைய அப்பா, தாத்தா இருவரும் தலைமை ஆசிரியராக இருந்தவர்கள்.  என்னுடைய  கல்லூரி படிப்பை  திண்டுக்கல் மாவட்டத்தில் படித்தேன். அதே பகுதியில் ஆசிரியர் பயிற்சியையும் முடித்தேன்.
அந்தக் கல்லூரியில் லட்சுமி என்கிற ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரை மாணவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.  மாணவர்களுடனான அவருடைய அணுகுமுறை, அவர்களுடைய பயிற்சி முறை என்னை வெகுவாக ஈர்த்தது.  அவரிடம்தான் ஆசிரியர் துறை என்பது சேவை துறை, கல்வி கண்ணானது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற  உந்துதலை எனக்குள் உருவாக்கியது.. திருமணத்திற்கு பிறகு சென்னை வந்தேன். 

ஒரு பள்ளியை நடத்த வேண்டும், அதில் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்  எனக்கு ஓடிக்கொண்டே இருந்தது.  அதை தொடங்குவதற்கான அனுபவம் பெற சில காலம் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணிசெய்தேன். மதுரவாயல் பகுதியில் வாணி நர்சிங் ஆரம்பப்பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறேன். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டும் தேவையான கட்டணம் வாங்கி வருகிறேன். 

ஏழை எளிய பிள்ளைகளின் பெற்றோர்களிடம் கட்டணம் வாங்காமல் ஸ்பான்சர் மூலம் படிக்க வைக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பாக என் பள்ளியில் படித்த மாணவன் என்னை தொடர்பு கொண்டு பேசினான்.. “நீங்கள் எனக்கு இன்னொரு தாய் போல நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் தான் முக்கிய காரணம்” என்றான். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும். அவன் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து இங்கு படிக்க வந்தான். எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம்.

இன்று வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக சொல்லும் போது எனக்கு மன நிறைவாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சிதான்  என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறது. இன்றும் எங்கள் பள்ளியில் பெரும்பாலான பிள்ளைகள் ஏழை எளிய  குடும்பத்தை சேர்ந்தவர்கள்.  அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களின் பொருளாதாரம் என்னை மிகவும் வேதனை அடைய செய்தது. இப்படி எத்தனை பெண்கள், கணவர் சரியில்லாமல், கல்வி இல்லாமல், சரியான வேலை  இல்லாமல் வருமானம்  இன்றி  அவதிப்பட்டு வருகிறார்கள், அவர்களுக்கு என்னால் முடிந்தவரை ஏதாவது ஒன்றை  செய்ய விருப்பப்பட்டேன்.  என்னுடைய சகோதரர் ஒருவர் மதுரையில் இயற்கை முறையில் மரசெக்கு எண்ணெய்  வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் இருந்து கருப்பட்டி, நல்லெண்ணெய், தும்ப நல்லெண்ணெய், விலக்கெண்ணெய்,  கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய்களை மொத்தமாக தயாரிப்பதால், குறைந்த விலைக்கு பெற்று  ஏழை எளிய பெண்களுக்கு விற்பனைக்கு கொடுத்து வருகிறோம்.

ஒரு பாட்டிலில் 25 லிருந்து முப்பது ரூபாய் வரையில் அவர்களால் லாபம் பெற முடியும். வீட்டு வேலைக்கு  செல்லக்கூடியவர்கள், அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் இதை விற்பனை செய்யும் சிறு தொழிலாக ஏற்படுத்தி கொடுக்கிறோம். முதலீடு போட வசதி இல்லாதவர்களிடம் நாங்கள் முன்பணம் வாங்குவது கிடையாது.  எண்ணைகளை பெற்று விற்றபிறகே அதற்கான பணத்தை நாங்கள் பெற்றுக்கொள்கிறோம்.  இந்த எண்ணெய்கள்  பெரும்பாலும் சென்னை போன்ற நகரங்களில் கிடைப்பது கிடையாது.  அப்படி கிடைத்தாலும் அது விலை உயர்ந்ததாக  இருக்கும். எங்களிடம் இருந்து பெற்று விற்பனை செய்யும் பெண்களிடம் அது குறைந்தவிலையில் கிடைக்கிறது.  அதனால் மக்களும் பயன் அடைகிறார்கள், விற்பனை செய்பவர்கள் நல்ல லாபம் ஈட்டுகிறார்கள். 28க்கும் மேற்பட்ட  பெண்கள் தற்போது எங்களிடம் எண்ணெய்யை பெற்று வியாபாரம் செய்கிறார்கள்.  

இவர்களை தவிர பல்வேறு தரப்பிலிருந்தும் வாடிக்கையாளர்கள் எண்ணெய்யை பெற்று விற்பனை செய்கிறார்கள்.  வீட்டில் இருந்து சம்பாதிக்க நினைக்கும் பெண்களுக்கு இது சிறு தொழிலாக  இருக்கும். அதற்கான வாய்ப்பை நாங்கள்  ஏற்படுத்தி கொடுக்கிறோம். இதை தவிர ஆழ்வார் திருநகர் பகுதியில் ஐ,ஏ,எஸ் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறோம்.  இதில் ஏழை எளிய பிள்ளைகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்துகிறோம்.  இந்த சிறப்பு பயிற்சி வகுப்பு கடந்த  ஆண்டில் தொடங்கினோம்.  இதில் 10,11,12 ஆம் வகுப்பு  படிக்கும்  மாணவர்களுக்கு  சிறப்பு வகுப்புகளும்  நடத்துகிறோம். தமிழ்,ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி மொழி வகுப்புகளும் சிறந்த ஆசிரியர்களை வைத்து பயிற்சி  கொடுக்கிறோம். வசதி இல்லாத பிள்ளைகளுக்கு இலவச வகுப்பு நடத்துகிறோம்.

 அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும். குறிப்பாக ஏழை எளிய பெண்கள். தன்னம்பிக்கையுடன் இந்த  சமுதாயத்தில் வாழ வேண்டும் என்கிற நோக்கத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறேன். என்னுடைய  இந்த முயற்சிகளுக்கு என்னுடைய கணவர் உறுதுணையாக இருந்து ஆதரவு கொடுத்து வருகிறார். என்னுடய இந்த  முயற்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் இதில் பயன்பெற வேண்டும்.. ஒவ்வொரு  பெண்ணும் சுயமரியாதையோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். எங்களால் முடிந்த  அளவிற்கு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்று நம்புகிறோம். எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை  இழக்காமல், தைரியமாக பெண்கள் வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.
என்கிறார்.                                                    l

- ஜெ.சதீஷ்