கருணையின் தேவதைஇந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்தப் பெண்களைக் காப்பாற்றுவேன் என மனதிற்குள்  சபதமிட்டு அதைச் செய்து காட்டியவரும், உலகின் தரமான மருத்துவமனை எனப் பெயர் பெற்று, வளர்ந்து நிற்கும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கு முதல் விதை போட்டவரும் ஒரு பெண். அவர் பெயர் ஐடா ஸ்கடர்.

ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி இன்று மிகவும் பிரகாசமாக, உலகத் தரத்தோடு, மிகப் பெரும் மருத்துவமனையாக உருவெடுத்து  சென்னைக்கு மிக அருகே வேலூரில், நூற்றாண்டைக் கண்டு நிமிர்ந்து நிற்கிறது. இவர் நம் மக்களுக்காக அழுதிருக்கிறார். நம் மக்களின் மரணத்தைத்  தடுக்க தன் நாட்டில் டாக்டராகி இந்தியாவிற்குத் திரும்பி வந்து, இங்கு தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கிறார். இதைச் செய்து முடிக்க  அவர் கொடுத்த விலை அவரது வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் மேல் ஐடா ஸ்கடர் அன்னை தெரசாவிற்கே வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.

எங்கிருந்தோ கடல் கடந்து வந்து, நம் இந்திய மண்ணில் உழைத்து மக்கள் நலம் பெற மிகப் பெரும் தொண்டாற்றி யிருக்கும், ஐடா ஸ்கடரின்  தனிப்பட்ட கனவால் உருவானது வேலூர் சி.எம்.சி மருத்துவமனை. கடந்த 100 ஆண்டுகளில் பல லட்சம் மக்களை அது காப்பாற்றி  கொண்டிருக்கின்றது. பலர் இங்க வந்து உடல் நலம் பெற்றுச் செல்கின்றனர். ஐடா ஸ்கடர்  அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். திண்டிவனத்தில் மருத்துவ  மிஷினரிகளாக பணியாற்றி வந்த அமெரிக்க டாக்டர் தம்பதிகளாக ஜான் ஸ்கடர், ஷோபியா ஸ்கடர் இவர்களின் ஐந்தாவது குழந்தையாக 1870ல்  பிறந்தார். அக்காலத்தில் இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர்.

அப்படித்தான் 14 வயது நிரம்பிய சிறுமியான ஐடாவும் பெற்றோர்களுடன் இந்தியா வந்தார். அவர்கள் இந்தியா வந்த இரண்டே மாதங்களில் ஐடாவின்  அம்மா அமெரிக்கா திரும்பிவிட்டார். ஐடா தனது அப்பாவுடன் இங்கு விடுமுறையினை கழித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது சிறுமி ஐடாவின்  வீட்டுக் கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டிருக்கின்றன. கதவைத் தட்டியவரின் கண்கள் டாக்டரம்மா எங்கே எனத் தேடியிருக்கின்றன. அப்போது  ஐடாவின் அப்பா விவரம் கேட்க, அதற்கு வந்த நபர் ‘என் மனைவிக்கு பிரசவ நேர வலி டாக்டரம்மாவை அனுப்ப முடியுமா?' எனக் கேட்டிருக்கிறார்.  அதற்கு ஐடாவின் மருத்துவத் தந்தை, ‘இல்லை அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். நான் வேண்டுமானால் வரட்டுமா?' எனக் கேட்டிருக்கிறார்.

வந்த நபரோ, ‘இல்லை சார், எங்கள் சமூகத்தில் பெண்ணுக்குப் பெண்ணே பிரசவம் பார்க்க வேண்டும். அது எங்கள் சமூகக் கட்டுப்பாடு. அதை  என்னால் மீற முடியாது' என கண்களை துடைத்துக் கொண்டே திரும்பிச் சென்றிருக்கின்றார் மறுநாள் ஐடாவின் வீட்டின் வழியே இறந்துவிட்ட அந்தக்  கர்ப்பிணிப் பெண்ணின் உடலை எடுத்துச் செல்வதை ஐடா தந்தையோடு கவனித்தார். குற்ற உணர்வில் ஐடாவின் அப்பா அழத் துவங்க, ஐடாவும் மனம்  வருந்தி அழுதிருக்கிறார். மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபரும் பெண் மருத்துவரைத் தேடி ஐடாவின்  வீட்டிற்கு வந்து அதே கட்டுப்பாட்டை அவரும் சொல்லி இருக்கிறார். ‘டாக்டரம்மா இல்லை' என்றதும் வருந்திச் சென்றிருக்கிறார்.

மறுநாளும் கர்ப்பிணிப் பெண்ணின் இறப்பை காண்கிறாள் சிறுமி ஐடா. மனதால் வெடித்து அழுத ஐடா, ‘என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்கவும்  மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்' என்கிற புலம்பல்களோடு, இந்த மக்களுக்காக எதையாவது செய்ய  வேண்டும் எனச் சிந்தித்துள்ளார். இங்கு பெண்களை படிக்க வைப்பது என்பது அந்த காலகட்டத்தில் இயலாத காரியமாக இருந்துள்ளது. எனவே நாமே  படித்து டாக்டராகி இவர்களோடு தங்கிவிட்டால் என்ன என ஐடா யோசிக்கத் துவங்கியுள்ளார். மனதில் வைராக்கியத்தைச் சுமந்தா ஐடா அன்றே  அமெரிக்கா புறப்பட்டுச் சென்று, அங்கு நியூயார்க்கில் புகழ்பெற்ற கார்நெல் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து டாக்டராக  இந்தியா திரும்பியுள்ளார்.

அமெரிக்க நாட்டில் மிகப் பெரிய வேலைவாய்ப்புகள் ஐடாவிற்கு கிடைத்தபோதும், அவரின் கண்களில், பிரசவ வேதனையில் இறந்த அந்த இரு  பெண்களின் பிண ஊர்வலங்கள் நினைவில் வந்து, தூக்கம் இழக்கச் செய்து, அவரை இந்த மண்ணிற்கே திரும்பவும் கொண்டு வந்து  சேர்த்திருக்கிறது.‘இனி எந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும் சாகவிடமாட்டேன்' என மனதில் உறுதி பூண்டு மருத்துவப் பணியைத் தொடங்கினார் ஐடா.  அமெரிக்காவைச் சேர்ந்த வங்கிப் பணியாளர் ஒருவர் கொடுத்த பத்தாயிரம் டாலர் நன்கொடையைக்கொண்டு வேலூரில் சிறிய அளவில் ‘ஷெல்  மருத்துவமனை' என்ற பெயரில் சிறிய மருத்துவமனை ஒன்றைத் துவங்கினார். மகளிருக்கான முதல் மருத்துவமனை உதயமானது.

துவக்கத்தில் இவர் தனது தந்தையுடன் இணைந்தே மருத்துவப் பணியில் ஈடுபட்டார். தந்தையின் மறைவிற்குப் பிறகு மருத்துவப் பணியின் முழுப்  பொறுப்பையும் இவரே ஏற்றார். பெண்கள் தயக்கமின்றி ஐடாவிடம் சிகிச்சைக்கு வந்தனர். இங்கு அனைவருக்கும் மருத்துவமும், சிகிச்சையும்  இலவசமாகவே வழங்கப்பட்டன. முதலில் தனி ஆளாக நின்று போராடியவர், நாட்கள் செல்லச் செல்ல சேவை மனப்பான்மையுடைய பல  மருத்துவர்களோடு கை கோர்த்திருக்கிறார். இந்த மருத்துவமனை மிகப் பெரிய அளவில் பிற்பாடு வளர்ந்து 2000ம் படுக்கை வசதிகளோடு இன்று நவீன  வசதிகள் மற்றும் சிறப்புப் பிரிவுகளோடு ஆசியாவின் மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாக உலகத் தரத்தோடு சிறந்து விளங்குகிறது.

மருத்துவத் துறையில் பெண்களை  அதிகம் கொண்டு வரும் நோக்கில் பெண்களுக்கான நர்ஸிங் பள்ளி ஒன்றையும் துவங்கினார். ஆரம்பத்தில் இங்கு  மருத்துவப் படிப்பில் முழுவதும் பெண்களே சேர்க்கப்பட்டனர். 1918ல் சென்னை பல்கலைக் கழக அனுமதியுடன் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக  இது மாறியது. உலகளவில் பல பெண் மருத்துவர்களை இந்தக் கல்லூரி உருவாக்கியது. 1945ல் இருந்து ஆண்களும் மருத்துவப் படிப்பிற்கு  சேர்க்கப்பட்டனர். தற்போது இக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். உள்பட 179 வகையான படிப்புகள் உள்ளன.

ஆண்டிற்கு 3000 மட்டுமே கல்விக்கான கட்டணமாக பெறப்படும் இக்கல்லூரியில் படிப்பை முடித்தவர் மூன்று ஆண்டுகள் கிராமப்புறங்களில் கட்டாயம்  பணியாற்ற வேண்டும் என்கிற ஒப்பந்தத்துடனே இக்கல்லூரி செயல்படுகிறது. ஐடா ஸ்கடர் உலகளவில் சிறந்த 5 மருத்துவர்களில் ஒருவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 90ம் வயதில் 1960ல் இவர் இயற்கை எய்தினார். அவரின் கல்லறையும்  மருத்துவ வளாகத்திற்குள்ளேயே இருக்கின்றது.  மனித நேயம் எனும் அஸ்திவாரத்தால் அமைக்கப் பட்டிருக்கும் இந்த மருத்துவமனை யுகங்கள் பல கடந்தும் உறுதியுடன் நிற்கும்… இந்த  மருத்துவமனை நிற்கும் வரை மக்களுக்கு சேவை செய்ய நினைத்து தன் வாழ்வினை அர்ப்பணித்த ஐடா ஸ்கடர் நினைவுகளும் மக்களிடத்தில்  நீங்காமல் இருக்கும்!

மகேஸ்வரி