ஸ்டெர்லைட் எனும் அபாயம்



கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆலையில் இருந்து  வெளியேற்றப்படும் கழிவுகளால் தூத்துக்குடி பகுதி மக்கள் பல்வேறு நோய்கள் காரணமாக உயிரிழந்தும் இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஓர்  இழப்பை சந்திக்கும்போது தூத்துக்குடி பகுதி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக லட்சக்கணக்கானவர்கள்  ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பெரும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். மக்கள் போராட்டம் குறித்தும், ஸ்டெர்லைட் ஆலையால்  ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பேசும்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை நமக்கு தெரிவித்தனர்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜனிடம் பேசினேன். “ஸ்டெர்லைட் ஆலையை நிறுவ முதலில் திட்டமிட்டது  மகாராஷ்டிரா மாநிலம் ரத்தின‌கிரி மாவட்டம். அதற்காக அனைத்து கட்டுமான பணிகளையும் அந்த நிறுவனம் முடித்துவிட்டது. அந்த மாவட்ட  பகுதிகளில் அல்போன்சா இனத்தை சேர்ந்த மாம்ப‌ழங்களின் விளைச்சல் அதிகம். இந்த மாம்பழ விளைச்சல்தான் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம்.  அங்கு விளையும் மாம்பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மாம்பழத்தை இறக்குமதி செய்யும் வெளிநாட்டை சேர்ந்த  வியாபாரி ஒருவர், ‘உங்கள் பகுதியில் ஸ்டெர்லைட் எனும் தாமிர உருக்காலை வரப்போகிறது.

அப்படி உங்கள் பகுதியில் அந்த நிறுவனம் வந்தால் எங்களுக்கு அடுத்த ஆண்டில் இருந்து உங்களுடைய மாம்பழங்கள் வேண்டாம்’ என்று சொல்கிறார்.  அதனுடைய ஆபத்தை உணர்ந்த அந்தப் பகுதி விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு  ஆலைக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.  கட்டிடங்களை கடப்பாரை கொண்டு இடித்தனர். அதனால் அந்த மாநிலத்தில் இவர்கள் ஆலையை நிறுவ முடியவில்லை. அங்கிருந்து துரத்தி  அடிக்கப்பட்டனர். லண்டனை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் வேதாந்தா எனும் பன்னாட்டு நிறுவனம்தான் இந்த ஸ்டெர்லைட் ஆலையை  தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டது. இந்த நிறுவனம் தமிழகத்திற்குள் வரும்போதே மீனவர்கள் இதற்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்  நடத்தினர்.

ஆனால் வழக்கம் போல் இந்த அரசு சாதி ரீதியாக, மத ரீதியாக மக்களைப் பிரித்து தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்கும்  பணியை தொடங்கியது. அன்று முதல் இன்று வரை அந்தப் பகுதி மக்களின் போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ம.தி.மு.க பொதுச்  செயலாளர் வைகோ போன்றோரும் மக்கள் போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  ஆலையில் பணி  செய்தவர்கள் பலர் இறந்துள்ளனர். இந்த ஆலையில் நாம் மிக முக்கியமாக அறிவியலை உற்று நோக்க வேண்டும். வருடத்திற்கு 4 லட்சம் டன்  உற்பத்தி இருக்கும் ஆலைக்கு புகைதூக்கி 165 மீட்டர் உயரம் இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆலையில் 60 மீட்டர் மட்டுமே வைத்துள்ளனர்.

இவர்கள் தொடங்கும் போது 40 ஆயிரம் டன் உற்பத்தியுடன் தொடங்கினர். அந்த உற்பத்திக்கே 69 மீட்டர் அமைக்க வேண்டும். ஆனால் 60 மீட்டர்தான்  அமைத்திருக்கிறார்கள். இன்று 40 ஆயிரத்தில் இருந்து எந்த விதமான பாதுகாப்பு அம்சங்களையும் செய்யாமல் 4 லட்சம் டன்னாக உயர்த்தியுள்ளனர்.  இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம்  அனுமதித்த அளவை விட அதிகமாக தயாரிக்கிறார்கள், அனுமதி பெறாமலே புதிய  தொழிற்சாலைகளை தொடங்கிவிட்டார்கள்.  இதன் மூலம் உலகத்திலே மக்கள் அதிகம் வாழும் நிலப்பரப்பிற்கு அருகில் இயங்கப்போகும் மிகப்பெரிய  தாமிர உருக்கு ஆலையாக ஸ்டெர்லைட் இருக்கப்போகிறது. சீனாவில் 9 லட்சம் டன் உள்ள ஓர் ஆலை இருக்கிறது.

ஆனால் அது அமைந்திருக்கும் பகுதி மக்கள் வாழும் பகுதி அல்ல. இதனால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் தமிழகத்தில்  கடற்கரையில் இருந்து 12 கிலோ மீட்டருக்குள் இவ்வளவு பெரிய ஆலை அமைப்பதற்கு நாம் அனுமதிக்கவே கூடாது. இது பேராபத்தை ஏற்படுத்தும்.  அரசு எல்லா தவறுகளையும் செய்து விட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு, சட்டத்திற்கு புறம்பாக தற்போது இந்த ஆலையை  விரிவுபடுத்தவும் அனுமதியும் அளித்திருக்கிறது. தற்போது மக்கள் போராட்டம் வலுவடைந்திருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  வழக்கு மேல் முறையீட்டிற்கு சென்றிருப்பதால் மூடப்பட்டிருக்கிறது. இந்த ஆலை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்  கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏராளமான பெண்கள் போராடி வருகிறார்கள்.

அவர்களில் ஒருவரான சமூக செயற்பாட்டாளர்  பேராசிரியர் பாத்திமா பாபு கூறுகையில், “கடந்த 23 ஆண்டுகளாக இந்த ஆலையில் இருந்து  வெளியேற்றப்படும் கழிவுகளால் காற்று, நீர், நிலம் என அனைத்தும் பாழாகி இருப்பதை கண்கூடாக காணமுடிகிறது. இதனால் இந்த ஆலையை சுற்றி  உள்ள 14 கிராம மக்களும் பல கொடிய நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.  ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் தாமிர தாது   மூலக்கூறுகளில் 28 சதவீதம் மட்டுமே காப்பர் உள்ளது. மீதி உள்ள மூலக்கூறுகள் கேடு விளைவிக்கக்கூடிய ரசாயன‌ப் பொருட்களாகும். சல்ஃபர்,  குளோரைட், மெர்குரி, இன்னும் சில தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் சேர்ந்ததுதான் தாமிர தாது.

இதை உருக்கி எடுக்கும் போது மற்ற விஷத்தன்மை உடைய வேதிப் பொருட்கள் வெளியேறுகின்றன. இந்தக் கழிவுகளை கடலில் கொண்டு சேர்க்கும்  திட்டத்தை மேற்கொள்ளவிருந்தனர். ஒட்டுமொத்த மீனவ மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம்.  ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கேள்விப்பட்டது சின்ன ஸ்டிக் குழாய்கள் மூலம் அந்த கழிவுகள் கடலில் கலப்பதாக தகவலும் உண்டு.  அதனுடைய உண்மை தன்மை மர்மமாகவே இருக்கிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுதன்மை உடைய காற்றினால்  தொடக்கத்தில் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளை நாங்கள் உணர்ந்தோம். மூச்சுத் திணறல், சுவாச கோளாறு, ஆஸ்துமா போன்ற நோய்  தாக்குதல்கள் ஏற்பட்டன.

அடுத்தடுத்து சரும நோய்கள், கண் பார்வை கோளாறுகள் வரத்தொடங்கின. நச்சுத்தன்மை அதிகமாகும்போது நோயின் தாக்கமும் அதிகரித்தது.  பெண்களுக்கு கிட்னி சுருக்கம் போன்ற உயிரை கொல்லும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதய நோய் என்பது வயதானவர்கள், அல்லது நடுத்தர  வயதுடையவர்களுக்கு வருவது இயல்பு. ஸ்டெர்லைட் ஆலை வந்த பிறகு குழந்தைகளுக்கு கூட இதய நோய் ஏற்பட்டிருக்கிறது. அதே போன்று  கேள்விப்படாத ‘ஜுவனைல் கேன்சர்’ என்று சொல்லக்கூடிய குழந்தைகளை தாக்கும் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. இப்படி நாம் கேள்விபடாத  வியாதிகள் எல்லாம் தாக்கி வருகின்றன. ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் நான் பேசினேன்.

அவர் மருத்துவரை சந்திக்கும்போது “நீங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்க்கிறீர்களா?” என்று கேட்டார். ஸ்டெர்லைட் ஆலையில் வேலை  பார்க்கிறவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறினார் என்று அந்த பெண் கூறினார். அப்போது ஸ்டெர்லைட்  ஆலையில் வேலைபார்க்கும் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பான முறையில் வேலை செய்கிறார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஆலையின்  சுற்றுப்புறத்தில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இந்த நோய் வரக்கூடிய வாய்ப்புண்டு என்பதற்கு இந்தப் பெண்ணே சாட்சியாக இருக்கிறார். மிகவும்  அபாயகரமான நோய் தாக்குதலின் தலைநகரமாக தூத்துக்குடி மாறிவருகிறது.

சட்ட மீறல் செய்துதான் தமிழகத்தில் இந்நிறுவனம் நுழைந்தது. அதன் அடிப்படையில் சட்ட மீறல் செய்துதான் இத்தனை நாட்கள் இந்நிறுவனம்  இயங்கி வருகிறது. நாட்டின் வளர்ச்சி குறித்து எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வாழும் மக்களை பாதிக்கும் வளர்ச்சி என்பது  எந்த வகையிலும் ஏற்கதக்கது இல்லை. ஆனால் தமிழகம் போன்ற இடங்களில் மக்கள் வாழும் பகுதியில் இது போன்ற நிறுவனங்கள் இயங்குவது  மனித அழிவிற்கு வழிவகுக்கும். இந்த அரசு இவ்வளவு தீமையை விளைவிக்கும் ஆலையை தமிழகத்தில் அமைக்க அனுமதி கொடுத்திருப்பதற்கு  அவர்களுக்கு கிடைக்கும் பணம்தான் காரணமாக இருக்கிறது.

இவ்வளவு பிரச்சனைகளை மக்கள் சந்தித்தும் இந்த ஆலையை தொடர்ந்து நடத்த விடுவது என்பது  மக்கள் நலன் குறித்து இந்த அரசிற்கு எந்த  கவலையும் இல்லை என்பதை காட்டுகிறது.. ஒவ்வொரு ஆண்டும் போராட்டம் வ‌லிமை அடைந்து வருகிறது. மக்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய  பாதிப்பிலிருந்து இந்த போராட்டத்தை தன்னெழுச்சியாக நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த அரசு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை  செவிசாய்க்கவில்லை. இந்த அரசும், அரசு எந்திரங்களும், அதிகார வர்க்கமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவது என்பது மிகுந்த  வேதனையை கொடுக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பே அதிகமாக இருக்கிறது. காரணம் ஸ்டெர்லைட் ஆலையினால் பெண்களே  அதிகம் பாதிப்படைந்திருக்கிறார்கள். இந்த சூழலில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு பெண்கள் முன்நின்று இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள்.  இந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும், இதுவரை ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அந்நிறுவனம் இழப்பீடு வழங்க  வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் மாற்று வேலையை அரசு செய்ய வேண்டும். இந்த  கோரிக்கைகள் நிறைவேறும் வரை மக்கள் போராட்டம் தொடரும்” என்கிறார்.  


ஜெ.சதீஷ்