ஜிம் போறீங்களா?இதோ உங்களுக்கான டயட்...

நம் பாரம்பரிய உணவுகளை தவிர்த்து எப்போது மேலை நாட்டு உணவுகளுக்குப் பழகினோமோ அப்போதே ஆரோக்கிய கேடுகள் நம்மைச் சூழ ஆரம்பித்துவிட்டன. அதன் பிறகுதான் அதைப்  பற்றி யோசனை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்யலாம் என்று ஆரம்பத்திலே சுதாரிக்கும் சிலர் வாக்கிங், ஜாக்கிங் என முயற்சிக்கிறார்கள். சிலர்  ஜிம்மை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஜிம்முக்குப் போனால் மட்டும் போதாது. அதற்கேற்ற உணவுகளையும் மேற்கொள்ள  வேண்டும் என்று சொல்கிறார் உணவியல் ஊட்டச்சத்து நிபுணர் கலைவாணி.

“பெரும்பாலும் ஜிம்முக்கு வரும் பெண்கள் அதற்கேற்ற உணவுகளை எடுப்பதில்லை. உடல் இளைக்க வேண்டும் என்று அதிக உடற்பயிற்சி  செய்துவிட்டு கொஞ்சமாக உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். அது சரியான முறை அல்ல. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நிறைய எனர்ஜி செலவாகும். அதனால் அதிகம் பசிக்கும். அதற்காக சிலர் நிறைய சாப்பிடுவார்கள். அதுவும்  தவறு. உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவு ஆற்றல் தேவைப்படும். அதனால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.  உணவின் அளவை குறைத்து அதை எடுத்துக்கொள்வதனை மூன்று வேளையாக இல்லாமல் நான்கு அல்லது ஆறு வேளைகளாக எடுத்துக்கொள்ளலாம்.

அட்டவணை போட்டு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என பிரித்து பிரித்தும்   சாப்பிடலாம். காலையில் உணவு மிதமாக இருக்கவேண்டும், மதியம் சரிவிகித உணவு, இரவில் எளிதில் செரிக்கக்கூடிய உணவு. இடையில் பழங்கள், காய்கறி  சாலட், பழரசம், காய்கறி சூப், ட்ரை ஃப்ரூட்ஸ் (பாதாம், வால்நட், காய்ந்த திராட்சை, பேரீச்சை) இப்படிச் சாப்பிடலாம். பாதாமை ஊற வைத்தும்  சாப்பிடலாம். பாதாம் ஸ்டாமினாவின் அளவை உயர்த்தும். நிறைய புரதச் சத்து கொடுக்கும். எந்த  உலர் பழமாக‌ (ட்ரை ஃப்ரூட்ஸ்)  இருந்தாலும்  அளவோடு சாப்பிட வேண்டும். மாலை நேரங்களில் ட்ரை ஃப்ரூட்ஸ் எடுத்துக்கொள்வது சிறந்தது. வால்நட் நல்ல கொழுப்புச் சத்து உடையது.

அத்திப்பழம் இரும்புச்சத்து அதிகம் கொண்டது. காய்ந்த திராட்சை ரத்த விருத்திக்கு உதவும். ரத்த சிவப்பு  அணுக்களின் எண்ணிக்கைக் குறைவாக உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியது. இது மாதிரி சாப்பிடும் போது எனர்ஜியும் கிடைக்கும், மெட்டபாலிஸம் (வளர்சிதை மாற்றம்) அதிகரிக்கும், ஜீரண செயல்பாடுகளும் நன்றாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போது புரதச்சத்து மிகவும் அவசியம். பயிற்சிகள் மேற்கொள்ளும்போது சரியான உணவை சாப்பிடாமல் இருந்தால்  ஒல்லியாகலாம் என்ற எண்ணத்தின்படி செயல்படும்போது உடல் இளைக்கும். ஆனால் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். நிறைய பிரச்னைகள்  ஏற்படும். ஹார்மோன் கோளாறுகள் ஏற்படலாம்.

மூட்டுவலி, முதுகு வலி போன்றவை ஏற்படலாம். எதிர்காலத்தில் குண்டாக ஆகவும் வாய்ப்பு உண்டு. பேலன்ஸ்ட் உணவு சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஃபுல் மீல்ஸ் சாப்பிடக்கூடாது. அப்புறம் எடை குறைப்புக்கான ரிசல்ட் கிடைக்காது. பேலன்ஸ்டான உணவு என்பது உணவு அதிகமாக  இல்லாமல் அதே சமயம் புரதச் சத்து, கொழுப்புச் சத்து மற்றும் தேவையான ஊட்டச் சத்து, தாதுஉப்புகள் நம் உடம்பிற்குத் தேவையான அனைத்துச்  சத்துக்களும் அந்த உணவில் இருக்கும் உணவு. வாரத்தில் மூன்று நாட்கள் கீரை கட்டாயம் எடுக்க வேண்டும். இந்த வெயில் சமயத்தில் கீரை  குளிர்ச்சியும் வழங்கக் கூடிய தன்மை கொண்டது.

ஏதாவது ஒரு கீரை எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக முருங்கைக் கீரையில் நிறைய இரும்புச்சத்து இருக்கிறது. உடற்பயிற்சி செய்யும்போது எடுத்துக்கொள்ளும் உணவு சரியாக இருக்க வேண்டும். அது உணவானாலும் சரி. நீரானாலும் சரி. உடற்பயிற்சி  செய்யும்போது சிலருக்கு வியர்க்கும். சிலருக்கு வியர்க்காது. வியர்வை வராமல் இருப்பதற்கு தண்ணீர் சரியாக குடிக்காததும் ஒரு காரணமாக  இருக்கலாம். தண்ணீர் சரியாக குடிக்காதபோது உடலில் தசைப்பிடிப்பு ஏற்படும். அதனால் உடற்பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைப்போம்.

அதனால் உடல் எடை அதிகரிக்கும். இந்தப் பிரச்னை  வராமல் இருக்க  தண்ணீர் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  சரியான உணவுப்பழக்கம், சரியான அளவு நீர்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அத்துடன் தினமும் ஒரு  மணி நேரம் பயிற்சி மேற்கொண்டால் உடல் இளைப்பதோடு நல்ல ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். உடல் ஃபிட்டாகவும் இருக்கும். சாப்பாட்டு  இடைவேளைகளில் எடுத்துக்கொள்ளும் ஜூஸ் சத்துள்ளதாக இருந்தால் இன்னும் நல்லது'' என்கிறார்.

மோர்

மோரில் ஆளி விதை ( Flex Seeds ) கலந்து குடிக்கலாம். மதியம் சாப்பாட்டிற்கு பிறகு 2.30 அல்லது 3 மணி அளவில் வெயில் நேரத்தில்  குடிக்கலாம்.
ஆளி விதை கொழுப்பை குறைக்கும். அதனால் எடை குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்லது. மோர் குளிர்ச்சி கொடுக்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

வைட்டமின் ‘சி’ நிறைய கிடைக்கும்.
உடலுக்கு மிகவும் நல்லது. எடை குறைப்பிற்கு நன்கு உதவும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

ஏபிசி ஜூஸ் (ABC Juice)

ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ்.
ரத்த விருத்திக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
தேவையான புரதச் சத்துக்கள், தாது உப்புக்களும் கிடைக்கும்.
இந்த  ஜூஸில் ஆப்பிள் இருப்பதால் ஊட்டச்சத்து மதிப்பு (நியூட்டிரிஷன் வால்யூ) அதிகமாகும். அதே சமயம் கலோரி குறைவாக இருக்கும்.  உதாரணத்திற்கு வாழைப்பழ ஜூஸில் 50 கிராம் கலோரி இருக்கிறது என்றால், ஆப்பிளில் 30 கிராம் கலோரிதான் இருக்கும். உடலில் நல்ல விளைவை  ஏற்படுத்தும்.
இரண்டு காய்கள், ஒரு பழம் இணைந்து இருப்பதால் நல்ல நிறைவாக இருக்கும். அதனால் காலையில் சிற்றுண்டிக்கு
சமமாக இருக்கும். இதனையே காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

பிரண்டை ஜூஸ்

பிரண்டையை தோலெடுத்து அரைத்து மோருடன் சேர்த்து சாப்பிடலாம்.
கொழுப்பை குறைக்கும். குளிர்ச்சி கொடுக்கும்.

கொத்தமல்லி ஜூஸ்

கொழுப்பை குறைக்கும்.
குளிர்ச்சி கொடுக்கும்.

ஸ்ரீதேவி மோகன்