கிச்சன் டைரீஸ்டயட்  மேனியா

சமச்சீர் டயட் பற்றி தற்போது நிறைய தவறான அபிப்ராயங்கள் உள்ளன. ‘அரிசி சாப்பிடுவதால்தான் உடல் எடை   அதிகரிக்கிறது. எனவே, அதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டேன். கோதுமை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன்’ என்றார்   ஒரு நண்பர். அரிசிக்கும் கோதுமைக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. இரண்டிலுமே மாவுச்சத்துதான்   (கார்போஹைட்ரேட்) உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கும் விகிதத்தை   கிளைசெமிக் என்ற அளவால் குறிப்பிடுகிறோம். கோதுமையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அரிசியைவிடவும் குறைவு.   அதாவது, அரிசியைவிடவும் அதன் குளுக்கோஸ் ரத்தத்தில் சற்று மெதுவாகச் சேரும் அவ்வளவே.

அதனால்தான்,   சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமையைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். மற்றபடி, கார்போஹைட்ரேட்  அடர்த்தி   விகிதத்தில் அரிசிக்கும் கோதுமைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அரிசியைத் தவிர்க்க விரும்புபவர்கள்   வேண்டுமானால் லோ கார்போ டயட் இருக்கலாம். லோ கார்போ டயட் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.    சமச்சீர்   டயட்டில் எடைக் குறைப்புக்கு என்ன வழி என்று கேட்பவர்கள் ‘எக்ஸ்பர்ட் விசிட்’ பகுதியைப் படியுங்கள்.

பதார்த்தகுண சிந்தாமணி


இணையத்தில் திரிந்து கொண்டிருந்தபோது ஒரு சுவாரஸ்யமான நூலின் பி.டி.எஃப் கிடைத்தது. ‘பதார்த்தகுண   சிந்தாமணி’ எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. முனிசிரேட்டர்கள் அருளியது என்று உள்ளது. திருநெல்வேலி   காசீம் முகையதீன் ராவுத்தர் அவர்களால் 1932ல் பதிப்பிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டு முதல் கடந்த நூற்றாண்டின்   பிற்பகுதி வரை இப்படியான பல மருத்துவ, ஜோதிட நூல்கள் ஓலைச்சுவடிகளில் இருந்து அச்சுக்கு இடம் பெயர்ந்தன.   அவற்றில் பலதில் எழுதியவர் பெயர் இருப்பது இல்லை. பதார்த்த குணசிந்தாமணிக்கு நிறைய பாட பேதங்கள் உள்ளன.

உணவு பற்றியும் மருந்து பற்றியும் உணவுக்கும், வாழ்க்கைமுறைக்கும், நோய்க்கும், மருந்துக்கும் உள்ள தொடர்பு   பற்றியும் பேசும் முக்கியமான நூல் இது. ஐவகை நிலங்களுக்கு என்ன இயல்பு, காவிரியாற்று நீர், தாமிரபரணியாற்று   நீர், கங்கையாற்று நீர் என ஒவ்வொரு ஆற்று நீருக்கும் என்ன இயல்பு, ஆட்டுப் பால், மாட்டுப் பால், கழுதைப்பால் (?!)   முதலிய பால் வகைகள், தயிர், மோர் போன்ற பானங்கள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், அரிசி வகைகள், பருப்பு   வகைகள் என ஒவ்வொரு உணவுப் பொருள் குறித்தும் அவை உடலை எப்படி பாதிக்கின்றன என்பது குறித்தும்   விவாதிக்கிறது

இந்த நூல். உணவு பற்றி மட்டும் அல்ல உணவு உண்ட பிறகு தரிக்கும் தாம்பூலம் முதல் காற்றாட விசிறிக்கொள்ளும்   பல வகையான மரங்களிலான விசிறி, கட்டில் வரை அனைத்தைப் பற்றியும் பேசுகிறது. முக்கியமாக, படுக்கையறை   சமாச்சாரங்கள் பற்றிகூட குறிப்பிடுகிறது. இப்படியான நூல்களிலிருந்து தற்கால வாழ்க்கைமுறைகளுக்கு ஏற்ப   விஷயங்களை வளர்த்தெடுத்துப் பேசும் அறிஞர்கள் போதுமான அளவு நம்மிடையே இல்லாததுதான் பெரிய குறை.

உணவு விதி #2


காய்கறிகள், பழங்களில் நாள்தோறும் ஒரு வண்ணம் என வானவில் கூட்டணி அமைக்கும்போது, ஏதேனும் ஒருவகைப்   பழத்தை மட்டுமே ஒரு நாளுக்கு எனத் தேர்ந்தெடுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பழவகைகளை ஒரே நாளில்   சாப்பிடும்போது அதன் ஃப்ரெக்டோஸ் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் ஒன்றோடு ஒன்று வினையாற்றுவதால் அவற்றின்   முழுமையான பலன் நமக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஃப்ரூட் சாலட் எனும் பழக் கலவை சாப்பிடுவதில் பெரிய   பலன் இல்லை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள் சிலர். எனவே, ஒரு நாளைக்கு ஒரேவிதமான பழத்தைச்   சாப்பிடலாம்.

பாலும் பாழாச்சுதடி!


ஆட்டுப் பால், மாட்டுப் பால் குடிக்கும் பழக்கம் மெல்ல பாக்கெட் பால் குடிக்கும் பழக்கமாக மாறிவிட்டது.   மனிதர்களாகிய நாம் விலங்குகளின் பால் பருகுவது  நல்லதா  என்பதைக் குறித்து இரு வேறு கருத்துகள்   அறிஞர்களிடமே நிலவுகின்றன. அந்தந்த விலங்குகளின் பால் அந்தந்த விலங்குகளின் குட்டிகளுக்கே ஏற்றவை. அவை   மனிதர்களுக்கு ஒருபோதும் ஏற்றவை அல்ல என்கிறார்கள் ஒருசாரர். வரலாற்றில் முன் எப்போதையும்விட   இப்போதுதான் நாம் பாலை அதிகமாக அருந்துகிறோம் என்பது மட்டும் உண்மை. பொதுவாக, விலங்குகளின் பால்   நான்கைந்து மணி நேரத்தில் கெட்டுப்போகும் இயல்புடையது. இப்படி பால் கெடாமல் இருப்பதற்கான டெக்னாலஜி   வளர்ந்தபோது பால் என்பது வணிகப் பொருளாகிவிட்டது.

பாலில் தண்ணீரைக் கலப்பது எல்லாம் ஹைதர் காலத்து டெக்னிக். தற்போது பால் நிறம் வருவதற்காகவும்   அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதில் யூரியா, ஸ்டார்ச்சு, மைதா மாவு, குளுக்கோஸ், பிளேட்டிங்   பவுடர் உட்பட பல்வேறு பொருட்களைக் கலக்கிறார்கள். இதனால் வயிற்றின் செரிமானத்திறன் பாதிக்கப்படுகிறது.   அல்சர் முதல் புற்றுநோய் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு வழுவழுப்பான சாய்வான டைல்ஸ் மீது ஒரு துளி பாலை விடும்போது பால் மெதுவாக கீழ்நோக்கி ஓடும். பால்   ஓடிய பாதையில் சுவடாக வெள்ளை நிறக் கோடு இருந்தால் அது சுத்தமான பால். சுவடுகள் ஏதும் இல்லை என்றால்   பாலில் தண்ணீர் கலந்துள்ளது என்று பொருள். அதுபோலவே, சிறிதளவுப் பாலில் சில துளிகள் டின்ச்சா; அயோடின்   அல்லது அயோடினைச் சேர்க்கும்போது பாலின் நிறம் நீலமாக மாறினால் அது ஸ்டார்ச் (மாவுப்பொருள்) சேர்க்கப்பட்ட   கலப்படப் பாலாகும்.

எக்ஸ்பர்ட் விசிட்


ராதிகா கர்லே பாலிவுட் பிரபலங்களின் மோஸ்ட் வாண்டட் டயட்டீஷியன். டயட் மற்றும் ஃபிட்னெஸ் தொடர்பாக இவர்   என்ன சொல்கிறார் என்பதைக் கைகட்டிக் கேட்கும் பிரபலங்கள் பட்டியல் பெரியது. சமச்சீர் டயட் எனப்படும் பாரம்பரிய   இந்திய உணவுமுறையைக் கொண்டே உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக இருப்பது எப்படி எனச் சொல்கிறார்   இங்கே…

பசித்துப் புசிப்பது என்பது நல்ல விஷயம்தான். ஆனால், எடைக் குறைப்பு என்று வந்தால் ஏற்ற முறை அல்ல. எனவே,   தினசரி மூன்று வேளை என்பதை ஆறு வேளையாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான ஒருவருக்கு அன்றாடம்   2000-2500 கலோரி வரை உடலுக்கு ஆற்றல் தேவைப்படும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு முறை    உண்பது என இதைப் பிரித்து எடுத்துக்கொள்ளலாம். வழக்கமான அளவான உணவையே இவ்வாறு பிரித்துக்கொள்வதன்   மூலம்  செரிமானம் எளிதாகும். உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும்.

எடைக்குறைப்பு எளிதாகும்.உங்களின் பி.எம்.ஐ அளவு எவ்வளவு எனக் கண்டறியுங்கள். அதைக்கொண்டு குறைக்க   வேண்டிய எடை அளவு எவ்வளவு என இலக்கை ஏற்படுத்துங்கள். அதற்கு ஏற்ப உண்ணும் உணவின் கலோரியைத்   திட்டமிடுங்கள். ஒரே மாதத்தில் பத்து கிலோ குறைப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. அப்படியே   குறைந்தாலும் அது எல்லோருக்கும் ஆரோக்கியம் இல்லை. எனவே, எடை எப்படி சிறிது சிறிதாக ஏறியதோ அப்படி   சிறிது சிறிதாகக் குறைப்பதுதான் ஹெல்த்தியான விஷயம். மாதம் இரண்டு கிலோ குறைப்பது என்பது சாத்தியமே.   எனவே, அதற்கேற்ப உணவைத் திட்டமிடுங்கள்.

கலோரி அதிகமாகும்போது அது உடலில் கொழுப்பாகத் தங்கி எடை அதிகரிக்கும். எனவே, கலோரியில் கவனமாக   இருங்கள். உடலில் சேரும் கலோரியை எரிப்பது என்பது எடைக்குறைப்புக்கு மிக முக்கியமான விஷயம். எனவே   அன்றன்று சேரும் கலோரியை அன்றன்று எரிப்பது நல்லது. எந்த மாதிரியான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியில்   எவ்வளவு கலோரி எரிக்கப்படும் என்று தெரிந்துகொண்டு பயிற்சியில் ஈடுபடுங்கள்.

குறைவான கொழுப்பு உள்ள உணவுகளை உண்ணுங்கள். எருமைப் பால் போன்ற  உணவில் கொழுப்பு  அதிகம். எனவே,   அவற்றைத் தவிர்க்கலாம். டயரி பால் எனில், லோ சேச்சுரேட்டட் பாலை பயன்படுத்தலாம். தினசரி இரண்டு டீஸ்பூன்   எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தலாம். நல்ல கொழுப்பு உள்ள மீன் போன்ற உணவுகளை உண்ணலாம். இவை,   கெட்ட கொழுப்பை நீக்கி உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தைக் கொடுத்து, எடைக்குறைப்பை சாத்தியமாக்குகிறது.   ரெட் மீட் எனப்படும் சிவப்பு மாமிசங்களைத் தவிர்ப்பது நல்லது.

வெள்ளைச் சர்க்கரையில் வெறும் கலோரி மட்டுமே நிறைந்துள்ளது. சத்துக்கள் ஏதும் இல்லை. எனவே அதனை அறவே   தவிர்ப்பது நல்லது. நம் உடலுக்குத் தேவையான சர்க்கரை நாம் உண்ணும் பழங்கள், உலர் பழங்கள்  போன்றவற்றிலேயே  கிடைத்துவிடும். எனவே, கவலை வேண்டாம். ருசிக்காக சர்க்கரை தேவை என்றால்  பனங்கற்கண்டைப்பயன்படுத்தலாம்.  எடைக் குறைப்புக்கு வெள்ளை சர்க்கரை விரோதி என்பதை மறக்க வேண்டாம்.

தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம்.  தினசரி ஆறு வேளையாக   தண்ணீர் அருந்தும் நேரத்தைப் பிரித்துக்கொண்டு உணவு உண்ட அரை மணி நேரம் கழித்து நீர் பருகலாம். இதனால்,   டீஹைட்ரேசன் சிறப்பாக நடைபெறும். மேலும், இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை, கொழுப்பைக் கரைத்து   உடலை ஃபிட்டாக்க உதவும்.

(புரட்டுவோம்…)
- இளங்கோ கிருஷ்ணன்