மகளிர் மாரத்தான்



சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் மட்டுமே பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் நிறைந்த நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. சவுதியின் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து பல சமூக மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்ட பல்வேறு விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது இதுவே முதல் முறை. இந்தப் போட்டியில் 1500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகம்தான் என்கிறார்கள் போட்டியாளர்கள். இதில் 28 வயதான மிஸ்னா அல் நாசர் என்கிற இளம் பெண் 15 நிமிடங்களில் 3 கிலோ மீட்டர் தூரம் கடந்து வெற்றி வாகை சூடியுள்ளார். மிஸ்னா தன்னுடைய குடும்பத்தின் முழு ஆதரவையும் பெற்று இந்தப் போட்டியில் கலந்துகொண்டார்.

அடுத்து வரவிருக்கும் டிராக் போட்டிகளில் கலந்து கொள்ள அந்நாட்டு அரசிடமிருந்தோ பெற்றோரிடமிருந்தோ எந்த தடையும் இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கடந்த 2014ல் இருந்து தினமும் பயிற்சிக்கு செல்வதாக கூறினார். “தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்டு வருவதாகவும் 2020ல் வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை  சேர்ப்பேன்"  என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.

அந்நாட்டு அரசு பெண்கள் விளையாட்டு துறையில் தொடர்ந்து ஈடுபட அனுமதி அளித்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ரியாத் சர்வதேச மாரத்தான் போட்டியில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எதுவாயினும் சமூக மாற்றத்தை நோக்கி சவுதி சென்று கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றே.

- ஜெ.சதீஷ்