பத்து ரூபாய்க்கு சுவையான காபி தரும் காப்பியம்



இன்று தரமான சுவையான காபி வேண்டுமென சென்னையில் ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் குறைந்தபட்சம் 25 முதல் 35 ரூபாய் வரை செலவழிக்கவேண்டி இருக்கிறது. ஆனால் அதே காபி பத்து ரூபாய்க்கே கிடைக்கிறதென்றால் நம்ப முடிகிறதா?

சென்னை திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோயில் குளத்தருகே இருக்கிறது காப்பியம் என்கிற காபிக் கடை. அன்றாட வேலைகளுக்கு நடுவில் சாப்பிட காபிக்கு என்றும் தனியிடமுண்டு. காபியின் கசப்பைக் கெடுக்காமல் பின்னணியில் நிற்கும் சின்ன இனிப்புடன் இருக்கும் ஃபில்டர் காபிக்கு ஈடு இணை ஏதுமில்லை. அப்படியான ஃபில்டர் காபிக்கு மட்டுமேயான கடைதான் காப்பியம். பத்து ரூபாய்க்கு தரமான ஃபில்டர் காபியை அனைவருக்குமென கொண்டு சேர்க்கிறார்கள் குடும்பத் தொழிலாக இதனை நடத்திவரும் செந்தில்குமார், வனிதா தம்பதி. மாதத்திற்கு 40,000 முதல் 50,000 வரை வருமானம் கிடைக்கிறது. 7 வேலையாட்கள் நாளொன்றுக்கு 550 வாடிக்கையாளர்கள் என நல்ல வியாபாரம்.

காபிக்கடை என்பதால் காபிக்கே முன்னுரிமை. லெமன் டீயை மட்டும் வைத்திருக்கிறார்கள், வடை, போண்டா என்கிற எவ்வித துணைப்பண்டங்கள் ஏதுமின்றி காபி பிரியர்களுக்கே உரித்தான கடையாக வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற செந்தில்குமார், அடுத்து என்ன செய்யலாம் என வாய்ப்புகளைத் தேடியபோது ‘மனைவி வனிதாவின் சகோதரி உமாவின் கணவர் மணிராஜா  கொடுத்த உந்துதல்தான் நீங்கள் பார்க்கும் காப்பியம்’ என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறார் செந்தில்குமார். அதிகாலை 5.30 முதல் (நடைப்பயிற்சியாளர்களுக்காக) இரவு 9 மணி வரை கடை செயல்படுகிறது.

கர்நாடகாவில் இருந்து நேரடியாக காபிக்கொட்டைகளை கொள்முதல் செய்வதால்தான் குறைந்த விலைக்கு தரமுடிகிறது. ‘பிஸ்கெட்டுகள் சேலத்தில் இருந்து கொண்டு வருகிறோம்’ என்கிறார். பெண்களும் குழந்தைகளும் எந்த வித தயக்கமும் இல்லாமல், சிகரெட் புகை ஏதுமின்றி காபி குடிப்பதற்கு ஏதுவாக கடை அமைக்க வேண்டும் என வனிதாவின் விருப்பத்துடன் ‘காப்பியம்’ இன்னும் நெருக்கமாய் மக்களை சென்றடைந்துள்ளது. தொழில் வடிவமும், கொள்முதல் செய்வதற்கான  ஆட்களை மணிராஜா வழிகாட்டியபோதும் குறைந்த விலையில் கிடைப்பதில் தரமும் இருக்காது என்கிற பெரும்பான்மை மக்களின் எண்ணத்தை மாற்றவே ஓராண்டு தேவையாக இருந்தது என்கிறார்.

‘காப்பியம் தொடங்கிய பின் கணவன்  மனைவி என்ற உறவில் இருவரும் உடன் பணியாற்றுபவர்களாக மற்றுமொரு பரிமாணம் எடுக்கும்போது வரும் நிறைகுறைகளும் எங்கள் உறவை மற்றொரு கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது” என்கிறார். வெளிவேலைகளையும் மார்க்கெட்டிங்கையும் செந்தில் கவனித்துக் கொள்ள வனிதா கடையின் உள்வேலைகளையும் தொழிலாளர்களையும் அவர்களுக்கான பயிற்சியையும் வனிதாவே முன்னின்று கவனித்துக்கொள்கிறார்.

காபியின் விலை குறைவு என்பதால் அதன் படியே பிற உணவுகள் கொண்டு வருவதாக இருந்தால் விலை குறைவாக கொண்டுவர வேண்டும் என்கிற கட்டாயமும் அவர்களுக்கு உண்டு என்பதால் பரீட்ச்சார்ந்த முறையில் பல செயல்களை செய்து முயற்சித்தபடியே இருக்கிறார்கள் செந்தில்குமார்- வனிதா. சென்னை முழுமைக்குமான ஃப்ரான்சைஸ் உரிமையில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக் கிறார்கள்.

ஆண்கள் மட்டும் மாஸ்டர்களாக இருக்கும் ஹோட்டல்களுக்கு மத்தியில் காப்பியத்தில் பெண்கள் மட்டுமே காபி மாஸ்டர்கள். கேழ்வரகு முறுக்கு, பிஸ்கட்டுகளோடு இப்போது சாண்ட் விச்களும் இங்கு கிடைக்கிறது. காப்பியத்தின் சிறப்பம்சமே கூலித் தொழிலாளி முதல் வாக்கிங் செல்லும் மேல்தட்டு சமூகம் வரை அத்தனை பேரும் வந்து காபி பருகும்படியான பத்து ரூபாய் என்கிற விலைதான். இங்கு இரட்டைக்குவளை முறையை கொண்டுவர வேண்டும் என்று சொல்கிற சில வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிரிப்பை பதிலாக அளித்தபடி கடந்து விடும் செந்தில்குமார்- வனிதா தம்பதியினருக்கு ஒரு ராயல் சல்யூட்!

- ஆரண்யா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்


கைப்பக்குவத்தை கைமாற்றியவர்கள் (மணிராஜா  உமா) நாமக்கல்லில் இருபது ஆண்டுகள் மைசூர் காபிக்கடையை நடத்தி வருகின்றனர் மணிராஜா  உமா தம்பதி. தன் அம்மா தனக்கு சிரத்தையுடன் போட்டு கொடுத்த காபிதான் தன்னை காபி பித்தனாக்கியது என்கிறார் மணிராஜா. ’பெங்களூர் பயணமும் அங்கு கிடைத்த காபிதான் என்னை காபிக்குமட்டுமேயான பிரத்யேக கடையை வைக்கத்தூண்டியது’ என்கிறார். பத்து ரூபாய்க்கு 110 மில்லிலிட்டர் காபியை வழங்க முடியும் என நம்பி அதனை சாதித்தும் காட்டியுள்ளார்.

அதில் எண்பது சதவீதம் பாலும் இருபது சதவீதம் டிக்காஷனும், சரியான அளவு இனிப்பும் சேர அருமையான காபியின் செய்முறையை துல்லியமாக வரையறுத்து தன் கைப்பக்குவத்தை வனிதாவிற்கு கைமாற்றிய காபி மாஸ்டர்தான் மணிராஜா. மணிராஜா கொடுத்த பத்து நாள் பயிற்சிதான் வனிதா காப்பியத்திற்கு வரும் பெண் பணியாளர்களுக்கு கற்றுக்கொடுத்து காப்பியத்தின் தரம் குறையாமல் அதனை தொடர்ச்சியாக வழங்கவும் பயிற்சியை மேற்கொள்கிறார். காப்பியத்தில் காபி குடித்தபின் அங்கு விற்கப்படும் காபித்தூளையும் வாங்கிவிட்டு, உடனடியாக ஃபில்டர் பாத்திரத்தையும் வாங்கியபின்னரே வீட்டுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களும் உண்டு. 

டிப்ஸ்
டிக்காசன் போட்டு இறுதியாக எஞ்சி நிற்கும் காபித்தூளை பூச்செடியின் தொட்டிகளில் போட்டால் கொசு, ஈக்கள் குறையும். காபி சக்கையில் சிறிது தேங்காய் கலந்து முகத்தில் தேய்க்க இயற்கையான ஸ்க்ரப்பர் தயார்.