வென்றது தேசிய சாம்பியன்ஷிப் என்றாலும் ஸ்போர்ட்ஸ் கோட்டா இல்லை



தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணி

தேசிய அளவில் நடைபெற்ற பெண்கள் கால்பந்து போட்டியில் முதல் முறையாக தமிழக அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 18 ஆண்டுகளாக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்திருந்த மணிப்பூர் அணியுடனான போட்டியில் 2-1 என்ற புள்ளியில் தமிழக அணி வெற்றிவாகை சூடியது. தமிழகத்தில் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். கபடி, கிரிக்கெட், ஈட்டி எரிதல் போன்ற விளையாட்டை தொடர்ந்து கால்பந்து போட்டியில் பெண்கள் சாதனை படைத்துள்ளனர். கால்ப்பந்து விளையாட்டில் பெண்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் வெற்றி குறித்தும் தமிழ்நாடு கால்பந்து பயிற்சியாளர் முருகுவேந்தனிடம் கேட்டபோது...

“1993ஆம் ஆண்டு பெண்கள் கால்பந்து அணி உருவாக்கப்பட்டது. சிறப்பு விளையாட்டு விடுதி, சிறப்பு அகாடமி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இதில் ஆண்டுக்கு 100 குழந்தைகளுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கால்பந்து விளையாட்டு நன்றாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பெண்கள் கால்பந்து விளையாட்டுக் கழகத்தில் இருந்து எங்களுக்கு எல்லா உதவிகளும் கிடைக்கின்றன. தமிழ்நாடு பெண்கள் கால்பந்து கழகத்தின் தலைவர் சீனி மொய்தீன் மற்றும் தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் ஜெஸ்யா வில்லவராயர் இருவரும் வீரர்களுக்கு தேவையானவற்றை செய்துவருகின்றனர்.

கடந்த 23ஆம் ஆண்டு தேசிய மகளிர் கால்பந்து போட்டி ஜனவரி 28ந் தேதி முதல் பிப்ரவரி 14ந்தேதி வரை கட்டாக் மாவட்டத்தில் நடைபெற்றது. இதற்காக தமிழக வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்தோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தமிழகத்தில் 3 விளையாட்டு விடுதிகள் மற்றும்  கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கென்று தனி விளையாட்டு விடுதி தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இது மட்டுமல்லாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் காவல் துறையிலும் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. விடுதி மற்றும் காவல் துறையில் உள்ள வீரர்கள் என 72 வீரர்கள் கலந்துகொண்டனர். அதிலிருந்து 20 நபர்களை தேர்வு செய்தோம். அவர்களுக்கு 10 நாள் முகாமில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு எனக்கு கடினமாக இருக்கவில்லை. ஏனெனில் ஜனவரி மாதம் இந்திய அளவில் நடைபெற்ற பல்கலைக்கழக போட்டியில் முதல் மூன்று இடங்களை தமிழகத்தை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் பெற்றன. இதனால் எனக்கு இந்த முறை சாம்பியன்ஷிப் வென்று விடலாம் என்ற நம்பிக்கை வந்தது. இதற்கு முன்பு 22 ஆண்டுகள் நடந்த போட்டிகளிலும் தமிழக அணி அரையிறுதிவரை மட்டுமே சென்றது. முதல் முறையாக காலிறுதிப் போட்டியில் ஒரிசாவுடன் விளையாடி 2-0 புள்ளியில் வெற்றி பெற்றோம்.

அரையிறுதியில் மேற்கு வங்கம் வீரர்களுடன் 4-1 புள்ளியில் வெற்றி பெற்றோம். இறுதி ஆட்டம் 18 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மணிப்பூர் அணியுடன் கட்டாக் மாவட்டத்தில் நடைபெற்றது. 2-1 என்ற ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளதால் இந்திய பெண்கள் கால்பந்து அணியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் ஏழெட்டு பேர் தேர்வாக வாய்ப்பிருக்கிறது. சர்வதேச அளவில் இந்திய பெண்கள் கால்பந்து அணி டாப் ரேங்க் பட்டியலில் இருக்கிறது” என்கிறார் முருகுவேந்தன்.

தமிழக கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் இந்து ராணி தனது அணியின் வெற்றி குறித்து நம்மிடையே பகிர்ந்து்கொண்டார். “நான் பிறந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கிராமம். பள்ளிப்படிப்பை அரசுப் பள்ளியில் முடித்தேன். 9ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து கால்பந்து விளையாடி வருகிறேன். ஈரோடு கால்பந்து விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்றுவந்தேன்.

கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தேன். சென்னையில் உள்ள கால்பந்து விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்றேன். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து தமிழ்நாடு கால்பந்து பெண்கள் பிரிவில் விளையாடி வருகிறேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 11 மற்றும் 12 தேதியில் சென்னையில் சீனியர் கால்பந்து போட்டிக்காக தேர்வு நடைபெற்றது அதில் கலந்துகொண்டேன். இதில் தேர்வு செய்யப்பட்ட 20 பேரில் நானும் தேர்வானேன்.

தமிழக கால்பந்து அணி இதுவரை இந்திய அளவில் அரை இறுதி சுற்றுவரைதான் சென்றிருக்கிறது. முதல் முறையாக, 18 வருடம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மணிப்பூர் அணியை வீழ்த்தி நாங்கள் வரலாற்று சாதனைப் படைத்திருக்கிறோம். மணிப்பூர் அணியில் விளையாடிய அனைவரும் இந்திய கால்பந்து அணியில் விளையாடுகிறவர்கள். எங்கள் அணியில் இந்துமதியை தவிர மற்றவர்கள் எல்லாம் மாநில போட்டியாளர்கள்தான். இந்துமதி எளிமையாக விளையாடி வெற்றி பெற்றுவிடலாம், யாரும் பயப்பட வேண்டாம் என்றார்.

போட்டி தொடங்கிய 3வது நிமிடத்தில் முதல் கோலை இந்துமதி அடித்தார். அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது கோலை நான் அடித்தேன். இரண்டாம் சுற்றில் 30வது நிமிடத்தில் மணிப்பூர் அணி ஒரு கோல் அடித்தது. போட்டி முடிவில் 2-1 என்ற புள்ளிகளில் நாங்கள் வெற்றி பெற்றோம். இந்த வெற்றியை எங்களால் மறக்கவே முடியாது. தமிழ்நாடு வந்த எங்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். நீண்ட காலமாக வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை வைத்திருந்தோம். இந்தத் தருணத்தில் அவரிடத்தில் எங்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.

இந்துராணியை தொடர்ந்து பேசிய நந்தினி... “எங்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது. எங்களுடைய பயிற்சியாளர் ஆண்கள் அணியுடன் சேர்ந்து பயிற்சி அளித்து எங்களை தயார்படுத்தினார். லீக் போட்டியில் சிக்கிம் அணியுடன் நடந்த போட்டியில் 5-0 புள்ளியில் வெற்றி பெற்றோம், கோவா அணியுடன் 1-1 புள்ளியில் போட்டி டிரா ஆனது. அடுத்து விளையாடிய உத்ரகாண்ட் அணியிடம் 11-1 புள்ளியில் வெற்றி பெற்று குவாட்டர் பைனலில் ஒரிசா அணியுடன் 2-0 புள்ளியில் வெற்றி பெற்றோம். செமி பைனலில் மேற்குவங்கத்திடம் 4-1  புள்ளியில் வெற்றி பெற்றோம். இந்த தொடரில் ‘மேன் ஆஃப் த பிளேயர்’ நான் வாங்கினேன். இறுதிப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற ஆர்வமும் அதிகமாக இருந்தது. இறுதிவரை நன்றாக விளையாடினோம்.

தமிழக அணி வெற்றி பெற்ற அந்த நொடியில் அனைவரும் அழுதுவிட்டோம். நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது ‘விளையாடுங்கம்மா நல்லா விளையாடுங்கனு’ தமிழில் மைக்ல ஒரு சத்தம் கேட்டதும் எங்களுக்கு புத்துணர்வு வந்தது போல இருந்தது. அப்புறம்தான் எங்களுக்கு தெரிந்தது அந்த சத்தம் சீனி மொய்தீன் சார்தான் கொடுத்தார் என்று. நாங்கள் ஒரிசா அணியை வீழ்த்தியிருந்தாலும் கூட அங்கு இருந்த ஒரிசா ரசிகர்கள் அனைவரும் தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும் என்று எங்களை உற்சாகப்படுத்தினர்.

எல்லா விளையாட்டுக்கும் ஸ்போர்ட்ஸ் கோட்டா உண்டு, கால்பந்து போட்டிக்கும் அது உண்டு. ஆனால் பெண்கள் அணிக்கு இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. எங்களுக்கு அரசு வேலை வழங்கினால் கால்பந்து போட்டியில் விளையாட பெண்கள் அதிக ஆர்வமாக இருப்பார்கள். அரசு தாமதப்படுத்தாமல் இதை செய்ய வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை. நாங்கள் தொடர்ந்து தமிழக அணியில் விளையாடுவோம், இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக விளையாடி பெருமை சேர்ப்போம்” என்கிறார் நந்தினி.

- ஜெ.சதீஷ்