அரசு விளம்பரத்தில் பாலின பேதம்நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் நடந்து போய்க் கொண்டிருந்த போது கண்ணில் பட்டது அந்த காட்சி. ஆண்களும் பெண்களும் சத்தம் போட்டு குரலெழுப்பி தெரு முனையில் வீதி நாடகம் நடத்திக் கொண்டிருந்தனர். ஒரு  அட்டையில் எலும்புகளுடன் கூடிய மண்டை ஓடு- பயங்கரத்தின் அடையாளமாய்! நாடகக்குழுவின் இன்னொரு பெண் தெருவில் நின்று வேடிக்கை பார்ப்போர், போவோர் வருவோரிடம் துண்டு பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். வாகனங்களின் ஒலியை மீறி வந்து விழுந்தது நாடகக் குரல்.

‘மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! பாதுகாப்பான உடலுறவே நல்லது. ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எய்ட்ஸ் நோயிலிருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முடியும். எய்ட்ஸ் நோயாளியோடு கைகுலுக்கினாலெல்லாம் நோய் தொற்றிவிடாது. எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் உடலில் செலுத்தப்பட்டாலோ, பல ஆண்களோடு உறவு கொள்ளும் பெண்களுடன் பாலியல்ரீதியான உறவு கொண்டாலோ எய்ட்ஸ் நோய் உங்களைத் தாக்கக்கூடும்!” இந்த ரீதியில் அந்த நாடக நடிகர் மக்களின் கவனத்தை ஈர்க்க சிரமப்பட்டு குரலெழுப்பிக் கொண்டிருந்தார்.

கல்லூரி காலத்தில் இது போல எய்ட்ஸ் விழிப்புணர்வு கூட்டங்கள், முகாம்கள் என கலந்து கொண்ட நினைவுகள் வந்து அலைமோதின. எங்கள் கல்லூரியின் கூட்டத் திற்கு வந்து, தன்னை எய்ட்ஸ் தொற்றிய விதம், தான் வாழ்க்கை நடத்திய விதம், நோயாளியான பின் பிறருக்கு இந்நோய் தொற்றாமல் காப்பாற்றுவதற்காக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தன் எஞ்சிய வாழ்நாளை செலவிட முடிவெடுத்தது என பல தனிப்பட்ட அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்ட, நான் பார்த்த முதல் எய்ட்ஸ் நோயாளியின் வார்த்தைகள் காதில் ஒலிக்கின்றன இன்னமும்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள், விளம்பரங்கள், இப்படி தென்படும் எதிலும் எங்கெங்கிலும் நீக்கமற நிறைந்திருப்பது ஆணாதிக்கம். எய்ட்ஸ் விழிப்புணர்வு, கட்டுப்பாடு போன்றவை ஆண்களுக்கு மட்டும்தானா? ஆண்களை ஆணுறை அணியச் சொல்லும் விளம்பரங்கள் ஏன் பெண்களை உறவுகொள்ள விழைபவனை ஆணுறை அணிய கட்டாயப்படுத்தும்படி போதிக்கவில்லை? அல்லது பெண்ணுக்கான தடுப்பு முறைகளைப்பற்றி விளம்பர வாசகங்கள் பேசுவதில்லை.

ஏன் விழிப்புணர்வு வாசகங்கள் ஆண்களிடம் மட்டுமே பேசுகின்றன? பல ஆண்களோடு உறவு கொள்ளும் பெண்ணை நெருங்கி உறவுகொண்டால் பால்வினை நோய் தொற்றுமென்றால் பல பெண்களிடம் தொடர்பு கொள்ளும் ஆணுக்கு நோய் இருக்க வாய்ப்பிருந்து, அவன் மூலம், அவனிடம் உறவு கொள்ளும் பெண்ணுக்கு அந்நோய் தொற்ற வாய்ப்பிருக்கிறதே? இருபாலாருக்கும் இது பொருந்தும் என்பது ஏன் பலருக்கு நினைவுக்கு வருவதில்லை?

இதற்குக் காரணம், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று பேச்சிலும் எழுத்திலும் கூறினாலும் இங்கே போதிக்கப்படுவது ‘ஒருத்திக்கு ஒருவன்’ தான். ஆண் இனத்தை மனித குலத்தின் பாலினங்களில் மேலானதாக இந்த சமூகம் பார்க்கிறது. பாடப்புத்தகங்களில் கூட ‘மனிதன் ஒரு பாலூட்டி’ (Man is a mammal) என்று போதிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பெண்தானே பாலூட்டியாய் இருக்கிறாள்? Woman is a mammal என்றுதானே இருக்க வேண்டும்? பெண்ணியவாதிகள் இப்போதெல்லாம் ‘Election manifesto’வோடு சேர்த்து ‘Election womanifesto’ வேண்டும் என்கின்றனர்.

ஒரு விஷயத்தை பொதுப்படையாக்கும் போது பேச்சானாலும், எழுத்தானாலும், ஆணை மையமாகக் கொண்டுதானே சமூகம் பதிவு செய்கிறது. ஆண்தான் மனிதகுலத்தின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறான்.  இங்கே ‘குடிமகன்’ நெடுங்காலமாக உண்டு. ‘குடிமகள்’ இப்போதுதான் புழக்கத்தில் வந்திருக்கிறது. மேன்மை பொருந்திய சொற்களெல்லாம் ஆண்களுக்காகத்தான். மேன்மை பொருந்திய பெண்ணை குறிக்க சொற்களே இல்லை. ஆனால் ‘கைம்பெண்’, ‘விதவை’ என கணவனை இழந்த பெண்களுக்கு அடைமொழிகள் உண்டு. மனைவியை இழந்தவனைக் குறிக்க அடைமொழி இன்று வரை இல்லை. ‘ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’தான்.

‘மகளை சான்றோள் எனக் கேட்ட தாய்’ அல்ல. ஒரு பெண்ணை ஏச வேண்டுமென்றால் எளிதாக அவள் நடத்தைகெட்டவள் என்ற ஒற்றைச் சொல் போதும். ஆணை ஏச இச்சமூகம் இவ்வகை வார்த்தையை வைத்திருக்கவில்லை. ஆணை ஏசுவதில் கூட அவனை விட்டுவிட்டு அவன் தாயாகிய பெண்ணைத்தான் ஏசுவது வழக்கமாக இருக்கிறது. ஆதிக்க சாதியினரைக் குறிக்கும்  ‘அந்தணன்’, ‘பிராமணன்’, ‘வைணவன்’ போன்ற சொற்களிலும் பெண்பாலை குறிக்கவல்ல சொற்களில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட சாதிகளில்  ‘பறையன்’ உண்டு. ‘பறைச்சி’யும் உண்டு. ‘வண்ணான்’ உண்டு. ‘வண்ணாத்தி’யும் உண்டு. ‘சண்டாளன்’ உண்டு. ‘சண்டாளி’யும் உண்டு. இடையன்-இடைச்சி, குறவன்-குறத்தி. ஆக, எவற்றையெல்லாம் இச்சமூகம் மேன்மை என்று கருதிக்கொண்டதோ அவற்றையெல்லாம் தனக்காக வைத்துக் கொண்டு எவற்றை மேன்மை குறைவானதாக கருதிக் கொண்டதோ அதை பெண்களுக்காக என பிரித்து வைத்து வந்திருக்கிறது.

ஆக, இவ்வழி வந்த இன்றைய ஆணும் இதற்கு விதிவிலக்கல்ல. பிரச்சார நாடகமோ, விழிப்புணர்வு வாசகமோ, விளம்பரமோ எதைச் சிந்தித்தாலும் ஆணாக இருந்து சிந்திப்பதன் வெளிப்பாடுதான் ஆண்களிடம் மட்டுமே அவை பேசுவதற்கான காரணம். மக்கள்தொகையின் சரிபாதியான பெண்கள் பால்வினை நோயால் தாக்குண்டால் என்ன பெரிய பாதிப்பாகி விடப்போகிறது? என்ன நட்டமாகி விடப்போகிறது? ஆண்களை பால்வினை நோய் தொற்றாமல் காப்பாற்றுவதே இவர்களின் பணியாக உள்ளது. ஆணிடமிருந்து பெண்ணுக்கு நோய் தொற்றுவதைப் பற்றி இவர்கள் பேசக்கூட மாட்டார்கள் என்பது எவ்வகையில் நியாயம்?  

பெரும்பாலான எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்களும், சொற்றொடர்களும் பெண்ணையே நோய் பரப்புபவளாக சித்தரிக்கின்றன. பெண்களிடம் இவ்வாசகங்கள் பேசுவதில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. ஆணாக இருந்து சிந்திப்பதால் ஆண்களுக்கான பாதுகாப்பு பற்றி மாத்திரம் யோசிப்பதன் விளைவு இது. எத்தனை அப்பாவி மனைவிகளுக்கு கணவன் மூலம் பால்வினை நோய் தொற்றிய செய்திகள் வருகின்றன. ‘மனைவிமார்களே! உங்கள் கணவனுக்கு பல பெண்களிடம் தொடர்பு உள்ளதா? அப்படியானால் அவனிடம் உறவு கொள்ளாதீர்கள்!’ என்றோ, ‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’ என்று விதியை நொந்தபடி வாழும் மனைவிகளிடம் ‘கணவனை ஆணுறை அணிய சொல்லுங்கள்!’ என எந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பரமும் சொல்லவில்லை.

குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான பிரச்சாரங்கள் எந்தத் தயக்கமுமின்றி பெண்களுக்குதான் போதிக்கின்றன. பெண்களே அதிகமாக குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது அபூர்வம்தான். ஆக, மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பெண்கள் சிரத்தையாக பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு எல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான் இங்கே! பெண் உடலின் மீதான வன்மம் இதன் மூலம் விளங்கும்.

நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி இதுதான். இவ்வகை நோய்த்தடுப்பு விளம்பரங்களெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கு நோய் வந்தால் பரவாயில்லையா? சமூகம் முழுவதையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிருக்கும்போது அதில் சரிபாதியாய் இருக்கும் பெண்களை விட்டுவிட்டு  ஆண்களை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுவது எவ்வகை நியாயத்தில் சேரும்? ஆண்கள் பாலியல் தொழிலாளர்களிடம் செல்கின்ற காரணத்தால் அவர்களைத்தான் அதிகம் எச்சரிக்க வேண்டியுள்ளது என்பது சவுகரி யமான பதிலாக இருக்கலாம்.

ஆனால் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அதற்கும் இந்த ஆண் சமூகமே பொறுப்பேற்க வேண்டும். ஆண்களின் சுகத்திற்காக, பெண்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் இத்தொழிலில் ஈடுபட்டே ஆக வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர் என்பது வரலாறு. அவ்வாறு தொடங்கி, இன்று கைவிடப்பட்டவர்கள், வாழ வழியில்லாதவர்கள், கணவனாலும், உறவினர்களாலும் விற்கப்பட்டவர்கள், பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாகி இந்த தொழிலுக்கு வந்தவர்கள் என பல வகையான பாலியல் தொழிலாளரை பார்க்கலாம். இச்சமூகமே இவர்களை இத்தொழிலில் ஈடுபட வைத்துவிட்டு, பின் அவர்களையே ‘நோய் பரப்புபவர்கள்’ என்று அவர்களைப் பற்றி பிரச்சாரமும் செய்கிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியமோ, தன்னார்வ தொண்டு நிறுவனமோ அல்லது அரசாங்கமோ எதுவாக இருந்தாலும் அதற்குச் சொல்ல வேண்டியது இதுதான். பால்வினை நோய்க்கிருமிக்கு உங்களைப் போல் பாலின பேதம் பார்க்கத் தெரியாது!

- கவின் மலர்