காதல் மனிதர்களின் அடிப்படை உரிமைமுன்பிருந்ததைவிட சாதி உணர்வு இப்போது சமூகத்தில் விஷம் போல ஊடுருவிக் கிடக்கிறது. காதல் சாதியை உடைப்பதற்கு பதிலாக காதலிப்பவர்களை சாதி கொன்று குவித்து வருகிறது. அவர்கள் உயிர் பிரியும் தருணத்தில் வெளிப்படுத்திய வலியை உள்வாங்காமல் இதைப் பற்றி நாம் பேசிட முடியாது.

உடுமலை சங்கர் ஆணவக் கொலையைப் பற்றி நாம் அதிகமாகப் பேசியதன் விளைவாக மதுரை மாவட்டத்தின் காவல் துறையில் சாதி மறுப்பு காதல் திருமணங்களில் அச்சுறுத்தல் இருந்தால் விசாரிக்க கடந்தாண்டில் தனிப்பிரிவு துவங்கப்பட்டது. பின்னர் இது தமிழகம் முழுக்க விரிவுபடுத்தப்படும் என்று சொல்லப்பட்டது. இது போல் தனிப்பிரிவு துவங்கினால் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியுமா?

சட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன என்று விளக்கம் அளிக்கிறார் சேலம் வழக்கறிஞர், பெண்ணிய செயற்பாட்டாளர் தமயந்தி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 வயது வந்த ஆணும் பெண்ணும் தாங்கள் விரும்பிய துணையை திருமணம் செய்து கொண்டு வாழ உரிமை அளிக்கிறது. இதை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. சிறப்புத் திருமணங்களில் வேறு வேறு மதங்களைச் சேர்ந்த இருவர் பதிவுத் திருமணம் செய்து கொள்ள விண்ணப்பிக்கும் போது இது குறித்த விவரம் அந்த பதிவு அலுவலகத்தின் தகவல் பலகையில் ஒரு மாதத்துக்கு வைக்கப்படும்.

யாராவது இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்களா என்று பார்த்து விட்டு ஒரு மாதம் கழித்தே சட்டத்தின்படி இவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு புறம் தனிமனித உரிமையாகப் பார்க்கப்படும் விஷயத்தில் அரசின்  நடைமுறையே அதற்கு எதிராகவும் உள்ளது. காத்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்களைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் எளிதாகிவிடுகிறது. மதம் மாறிய திருமணங்களையும் மற்ற திருமணங்களைப் போல உடனடியாக பதிவு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

சாதி மாறித் திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாத மனதின் வன்மம் அவர்களைக் கொல்லும் அளவுக்கு மனிதர்களைத் தள்ளுகிறது. 2003ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட கண்ணகி- முருகேசன் வழக்கு இன்று வரை நடந்து வருகிறது. அவர்களுக்கு நடந்த கொடூரத்தை இன்றளவும் மறக்க முடியாது. இருவரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். படிக்கும் போதே காதலித்தவர்கள். அப்போதே வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர்.

5.5.2003ல் இவர்கள் திருமணம் வீட்டில் தெரிய வருகிறது. முருகேசனும் கண்ணகியும் தலைமறைவானார்கள். சாதிப் பிரச்னை காரணமாக இருவரையும் பிடித்து வந்து கட்டிப் போட்டு விஷம் கொடுத்துக் குடிக்க வைத்தனர். அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதே அவரவர் சாதிக்கான சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ.யால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கான 2 லட்சம் நஷ்ட ஈடும் கொஞ்சம் கொஞ்ச மாகத்தான் கொடுத்தனர்.
 
தலித் சாதியினர் வேறு சாதியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் போது அது மோதலாக வெடிக்கிறது. இது போன்ற கொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் வயது வந்த ஆணும், பெண்ணும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும்போது சாதிய ரீதியாகவோ, சமூகரீதியாகவோ அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவது மிக மோசமான செயல். வட மாநிலங்களில் சாதியக் கட்டப்பஞ்சாயத்துக்கள் மூலமாக காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கேவலமான முறையில் தண்டிக்கப்படுகின்றனர். பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இது அதிகமாகவே உள்ளது.

தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் குழு இது போன்ற கட்டப்பஞ்சாயத்துகளை மத்திய அரசு தடுக்கத் தவறினால் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என அந்தத் தீர்ப்பினில் கூறியுள்ளது. ‘காதல் திருமணத்தைத் தடுப்பது சட்டவிரோதமானது. சாதி, சமூகம், பெற்றோர் யாருக்குமே இது போன்ற திருமணங்களைத் தடுக்க உரிமை இல்லை’ எனக் கூறியுள்ளனர். இது போன்ற சூழலில் மதுரையில் உடுமலை சங்கர் கொலைக்குப் பின்பே காவல்துறையில் இது போன்ற திருமணங்களில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக தனிப்பிரிவு துவங்கப்பட்டது. இப்பிரிவில் இதுவரை எத்தனை பேருக்கு உதவி அளிக்கப்பட்டது என்பதற்கான விவரங்கள் இல்லை.

இது போன்ற தனிப்பிரிவு தமிழகத்தின் வேறு மாவட்டங்களில் துவங்கப்படவில்லை. சாதி ஆணவக் கொலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கிறது. ஆனால் இது குறித்து பரவலாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. சங்கர் கொலை சார்ந்து அதிக அழுத்தம் கொடுக்கப்பட்ட போது அந்தப் பேச்சை நிறுத்தும் விதமாக இது போன்ற தனிப்பிரிவுகள் துவங்கப்படுகின்றன. அப்போதைக்கு பிரச்சனையின் வீரியத்தைக் குறைப்பதற்கு மட்டுமே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

சாதியக் கொலைகளை அரசு கண்டு கொள்வதில்லை. சாதி ஓட்டுக்களையே அரசியல் கட்சிகள் நம்பியுள்ளன. இவர்கள் அமைக்கும் அரசு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இவர்கள் சாதிக்கு எதிராக போராடுவார்கள் என்று எப்படி நம்புவது? தேசிய சட்டக் கமிஷன் 2011ம் ஆண்டில் திருமணத்தில் சாதிரீதியாக நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற முன்வரைவு சட்டத்தினை முன் வைத்தது.

ஆனால் இது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2014ம் ஆண்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் 22 மாநிலங்களில் சாதி ஆணவக் கொலைகள் நடப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் இது போன்ற கொலைகள் எதுவும் நடக்கவில்லை என அரசு பதிவு செய்துள்ளது. தர்மபுரியில் இளவரசன் - திவ்யா திருமணத்தை அடுத்து அங்கு மூன்று ஊர்கள் எரிக்கப்பட்டன. இது போன்ற தீண்டாமைக்  கொடுமைகள் நடக்கும் போது அந்த மாவட்டத்தின் உயர் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இது போன்ற கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம். அப்படி வழக்குப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் பணியிடை நீக்கம் செய்யலாம். சட்டம் இந்த உரிமையை அளித்துள்ளது.

ஆனால் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று காதலும், காதல் திருமணமும். சாதி போன்ற காரணங்களை வைத்து இவற்றைத் தடுக்க முடியாது என்று சொல்லும் சட்டங்கள் உள்ளன. ஆனால் குற்றங்கள் நடக்கும் போது இது செயல்படுத்தப்படுவதும், குற்றம் நடக்காமல் தடுப்பதிலும் இவை ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. சமூகம் அதிகம் அழுத்தம் கொடுக்கும் சம்பவங்களில் மட்டுமே விரைந்து நீதி கிடைக்கிறது. காதலுக்கு நீதி கிடைக்க சட்டங்கள் வலுப்படுத்தப்படுவதுடன் இது குறித்து விழிப்புணர்வும்  ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என்கிறார் தமயந்தி.

- யாழ் ஸ்ரீதேவி