லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்...



நிறைய வீடுகளின் முன் பகுதிகளில் ‘கீச்..கீச்..’ என்ற அதீத சத்தத்துடன் பல அடர் வண்ண நிறங்களில் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு, கூண்டுகளுக்குள் பறந்து சுற்றித் திரியும் இந்தக் குட்டி பறவைகளுக்கு ‘லவ்பேர்ட்ஸ்’ என பெயர் ஏன் வந்தது என்ற கேள்விகளுடன் காதல் பறவைகளை கொஞ்சி மகிழ்ந்து தன் பொழுதுகளில் அவற்றோடு சில மணி நேரத்தை கடக்கும் சுதாவை அணுகிேனாம். கண்கள் படபடக்க காதல் கிளிகளின் சுவாரஸ்ய தகவல்களை அள்ளி வழங்கினார்.

எப்பவுமே ஜோடியாகவேதான் இவை இருக்கும். ஒன்றைவிட்டு ஒன்று, இணை பிரியவே பிரியாது. கூண்டுக்குள் ஒன்றை ஒன்று பின் தொடர்ந்தே சுற்றும். எப்பவும் ஒன்றை ஒன்று கொஞ்சிக் கொண்டு, காதலுடனே அவற்றைப் பார்க்கலாம். ஒன்றோடொன்று புரிதலுடன் அன்போடு வலம் வரும். பௌர்ணமிக்குப் பிறகான, ஒவ்வொரு 40 நாட்களுக்கு ஒரு முறை முட்டையிடும். பெண் பறவை முட்டையிட்டதும், அந்த இடத்தை விட்டு நகரவே நகராது.

அப்போது ஆண் பறவைதான் பெண் பறவைக்கு உணவு எடுத்து வந்து பாசமாக ஊட்டும். இவைகளிடம் இத்தனை காதலா என அவை பார்ப்பதற்கே கொள்ளை அழகு. 21 நாளில் இருந்து 27 நாட்கள் வரை அவற்றுக்கு அடை காக்கும் பருவம். பெண் பறவை சில நேரம் வெளியில் வந்து ஓய்வு எடுக்கும். அப்போது ஆண் பறவை தொடர்ந்து முட்டைகளை அடைகாக்கும். குஞ்சு பொரித்து வெளியில் வந்ததும், இணை இரண்டும் சேர்ந்தே அதன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சி பார்க்க பார்க்க பரவசத்தைத் தரும்.

3 வாரங்கள் மட்டுமே குஞ்சுகள் பானைக்குள் உள்ளேயே பாதுகாப்பாக இருக்கும். இறக்கை முளைத்து, வெளியில் வந்ததும், ஆண் பறவை பறக்கவும், ஏறவும் கற்றுக் கொடுக்கும். பத்து நாட்களில் பறக்கத் துவங்கும். ஜோடியில் ஒன்று இறந்து விட்டால் அதன் இணை அதே நினைவிலே இருந்து ஒரே வாரத்தில் இறந்துவிடுவதும் சில இணைகளுக்குள் நடக்கும். அந்த அளவுக்கு காதலாக இணை பிரியாமல் அவை வாழ்ந்து மடியும்.

ஆண் பறவைக்கு அதன் அலகு ஊதா வண்ணத்தில் இருக்கும், பெண் பறவைக்கு வெள்ளை நிறத்தில் இருக்கும். பெண் பறவையை விட ஆண் பறவையே அடர்த்தியான  அழகான வண்ணங்களில் மனதைக் கவரும் வண்ணத்தில் இருக்கும். நமது தட்பவெப்ப நிலைக்கு பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் கலந்த பறவைகள் மற்றும் முழு வெள்ளை நிறப் பறவைகள் அதிகம் வளரும்.

சிவப்பு நிறக் கண்கள் கொண்ட லவ் பேர்ட்ஸ் ப்ரீடிங் வெரைட்டி. அடர் மஞ்சள் நிறத்திலான அவற்றின் கண்கள் மட்டும் அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். இந்த வகை காதல் கிளிகள் மட்டும் ஒன்று முதல் ஒன்றரை வருடத்தில் நூற்றி ஐம்பது முதல் இருநூறு பறவைகள் வரை இனப் பெருக்கம் செய்கின்றன.

- மகேஸ்வரி