குரல்கள் - காதலுக்கு என்ன வேண்டும்?எந்த வரையறைகளுக்கும் உட்படுத்தி விட முடியாத, பொதுவான இலக்கணமொன்றை வகுத்து விட முடியாததொரு உணர்வே காதல். ஒவ்வொருவரது வாழ்விலும் புதிர் போல நிகழ்ந்தேறும் காதல் உலக இயக்கத்துக்கான முக்கிய காரணம். ஒவ்வொருவருக்கும் தங்கள் இணையர் எப்படி இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். அதனைக் கொண்டிருக்கக் கூடியவர்கள் மீது காதல் வயப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இவற்றையெல்லாம் கடந்து காதலுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்து உரையாடுவது முக்கியத் தேவையாகப்பட்டது. காதல் என்கிற உறவுக்குள் நுழைபவர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதிகளாக நீங்கள் நினைப்பது எது என்று சில பெண்களிடம் கேட்டேன்...

கயல்விழி கார்த்திகேயன், தனியார் நிறுவன ஊழியர்
பரஸ்பர மரியாதையும், நம்பிக்கையுமே காதலின் முக்கியத் தேவையாகக் கருதுகிறேன். இதை அடிப்படைத் தகுதியாகவும் எடுத்துக் கொள்ளலாம். காதல் உறவில் இறங்கிய பின்னர் காலப்போக்கில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனம் குறையும். அப்போது இவையே காதலை உயிர்ப்போடு வைக்கும். எதைப் பற்றியும் தன் இணையரோடு பகிர்ந்துகொள்ளத் தூண்டும், உறவை வலுப்பெறச்செய்யும். காதலில் இருவருக்குமான ஸ்பேஸ் இருத்தல் நலம். ஒருவரின் வாழ்க்கையை இன்னொருவர் அக்கறை என்ற பெயரில் வாழ நினைப்பது நலமன்று. அது அந்த உறவையே அர்த்தமற்றதாக்கி விடும்.

பிரபா கிருஷ்ணா, இல்லத்தரசி
நம்பிக்கையையும், பாதுகாப்புணர்வையும் தருவதே காதலுக்கான அடிப்படைத் தகுதி. எந்த ஒரு சூழல் வந்தாலும் தன் இணையர் தன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்க வேண்டும். எந்த நிலையிலும் தனக்கென தன் இணையர் இருப்பார் என்கிற நம்பிக்கை தரும் பாதுகாப்புணர்வு காதலின் தேவைகளில் ஒன்று. வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்வதும், அடிப்படை நேர்மையோடு இருத்தலும் முக்கியத் தகுதிகள் எனக் கொள்ளலாம். மற்றபடி காதலை வகைப்படுத்த முடியாது. தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு காதல் மலர்வதில்லை. காதலைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், காதல் வாழ்வு சிறப்பதற்கும் இது போன்ற தகுதிகளைக் கொண்டிருப்பது அவசியமாகிறது.

மதுமிதா, எழுத்தாளர்
‘கண்டவர்  விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்று கடவுளைக் குறிப்பார்கள். காதல் என்கிற  உணர்வுக்கும் இது பொருந்தும். வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட முடியாத ஒரு பேரற்புத உணர்வே காதல். இந்த உறவுக்கான அடிப்படைத் தகுதி என்றால் அது  நம்பிக்கைதான். தத்தம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் ஆழமான  நம்பிக்கையே சிறப்பான வாழ்க்கையை சாத்தியப்படுத்தும். அதனுடன் அக்கறையும்,  புரிதலும் அவசியமானது. காதலைப் பொறுத்த வரைக்கும் மனமே முதன்மையானது. ஆகவே மேற்சொன்னவையே அதற்கான முக்கியத் தகுதிகளாக இருக்கின்றன. வாழ்வதற்கு பொருளாதாரம் தேவைதான். ஆனால் காதலுக்கான அடிப்படைத் தகுதியாக அதனைக் கொள்ள முடியாது.

பொருளைக் குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவது காதலாக  இருக்காது. ஒத்தப்புரிதலோடும், மாற்றமில்லாத அன்புடனும் தொடரும் காதல் தோல்வியைச் சந்திப்பதில்லை. தான் காதலிக்கும் அந்த நபருக்காக எதை  வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் தீவிரம் காதலுக்கு அவசியமானது.  காதலில் பொசசிவ்நெஸ் இருக்கவே செய்யும். ஆனால் அதற்கும் ஓர் எல்லை  இருக்கிறது. அந்த எல்லையை மீறிச் செல்வது எதிர்மறையான விளைவுகளையே  ஏற்படுத்தும். தன்னை காதலிக்கிறவரை தன் உடைமையாக பாவிக்கும் மனநிலை கூடாது.  இந்த வாழ்க்கையில் அவருடன் கரம் கோர்த்து அவருக்கான சுக துக்கங்களில்  பங்கெடுப்பதோடு, அவருக்கான சுதந்திரங்களில் தலையிடாமல் இருப்பதே  காதலிப்பதற்கான முக்கியமான தகுதி என்று கூறலாம்.

காயத்ரி ராஜா, நடிகை
ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தலும், ஒருவருக்கொருவர் உண்மையாக இருத்தலுமே காதலுக்கான அடிப்படை தகுதிகளென நினைக்கிறேன். பரஸ்பரம் இருவரும் தங்களது இணையரை மரியாதையுடன் நடத்துவதும் முக்கியமான தகுதி. காதல் என்கிற உறவுக்குள் சுயநலம் அறவே கூடாது. பொதுவாக தனக்குப் பிறகுதான் மற்றவர்களுக்கு என்றே நினைப்போம். ஆனால் காதலைப் பொறுத்தவரைக்கும் தன் இணையருக்குப் பிறகுதான் தனக்கு என்கிற எண்ணத்துடன் இருக்க வேண்டும். உறவுக்குள் பல சிக்கல்களும், கசப்புகளும் வந்தாலும் அதையெல்லாம் கடந்து காதல் மாறாமல் இருப்பதுவே சிறந்த வாழ்க்கைக்கு அடித்தளம்.

அபிநயா, தனியார் நிறுவன ஊழியர்
ஆணின் பார்வையில் காதல் என்பது நிபந்தனைகளுக்குட்படாத அன்பு. தனக்காக அவள் இருப்பாள். அவள் அருகில் நூறு ஆண்கள் இருந்தாலும் தனக்கான அன்பு எப்பொழுதும் மாறாது என்கிற எண்ணம் அவனுக்கு மேலோங்கியிருக்கும். சாதி, மதம், இனம், அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றைத் தகுதியாகக் கொள்ளாமல் அவரவர்க்கான தனித்துவத்தோடு இந்த உறவு தொடர வேண்டும் என்று நினைப்பதே சிறந்த தகுதி. தன் நிலையறிந்து அவளும், அவள் நிலையறிந்து தானும் செயல்படுவதையே முக்கியமெனக் கருத வேண்டும்.

ஒரு பெண்ணின் பார்வையில் நல்ல நண்பனே நல்ல காதலனாக இருக்கக்கூடும். தான் தனியாக  வாழ்ந்த இத்தனை ஆண்டு காலத்தைப் போல் அவனுடன் வாழப்போகும் காலம் முழுவதும் தன் தனித்துவம் மாறாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே முக்கியம். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது ஒரு கனவாக மட்டுமே இருக்கிறது. ஆண்களுக்கு நிபந்தனைக்குட்படாத அன்பு தேவையாக இருப்பதைப் போல் நிபந்தனைகளுக்குட்படாத சுதந்திரம் பெண்களின் தேவையாக இருக்கிறது.

இவை அனைத்தையும் படிக்கும்போது ஏதோ காந்தத்தில் ஒரே துருவங்கள் இணைவது எப்படி சாத்தியம் இல்லையோ அதைப் போல் ஆண் - பெண் இணைவதும் சாத்தியமற்றது என்று தோன்றலாம். ஆனால் அது அப்படியல்ல. அவர்களுக்குள்ளான புரிதல் அனைத்தையும் சாத்தியமாக்கும். நாம் நம் இணையரை தேர்ந்தெடுக்கும் அடிப்படை அளவுகோல் மாறலாம். ஆனால் நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் காதல் ஒரு நாளும் மாறாது.

டோஷிலா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்
காதல் வாழ்க்கை நன்கு தொடர முயற்சி எடுக்கலாமே தவிர எந்த உறவையும் இழுத்துப் பிடித்து கூட இருக்க வைக்க முடியாது. காதலைப் பொறுத்தவரை தன் பணி காதலித்து கொண்டே இருப்பதுதான் என்பதை காதலர்கள் உணர வேண்டும். காதலுக்கான தகுதி என்று நாம் பொதுவாக எதனையும் உருவாக்கிவிட முடியாது. வரையறுக்கப்பட்டிருக்கும் ஒழுக்கத்துக்குள் காதலைக் கொண்டு வந்துவிட முடியாது. சிறைவாசத்திலிருக்கும் குற்றவாளிக்காக காத்திருக்கும் காதலி இருக்கவே செய்கிறாள்.

அவளின் காதலுக்கான தகுதிகளை அவன் வேறு பல விதங்களில் கொண்டிருக்கக் கூடும். All is fair in love and war என்பார்கள். எந்த வித நியாய தர்மத்தையும் எதிர்பார்க்காத காதலில், திருமண உறவுக்குள் செல்லும்போது கமிட்மென்ட் மற்றும் வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது. ஒருவரின் இயல்பை மற்றவர் ஏற்றுக்கொள்வதற்கு சில சமரசங்கள் தேவைப்படுகின்றன. நம் காதல் உறவில் ஏதோ ஒரு கணத்தில் மிகுதியான அன்பு வெளிப்படும். அப்போது தன் இணையருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் எனத் தோன்றும். இது யாரோ ஒருவருக்குத் தோன்றினாலே அந்த உறவு பெரிய பிரச்னைகளின்றி செல்லும். இருவருக்கும் தோன்றும்போது மிகச் சிறப்பான வாழ்க்கையாக அது நகரும்.

- கி.ச.திலீபன்