காதல் மட்டும் வாழ்க்கை அல்லகாதல் என்ற வார்த்தை காதில் விழும் போது மனதில் தேன் பாய்ந்தது அந்தக் காலம். இப்போதெல்லாம் கிலி பிடிக்க வைக்கிறது காதல். இந்திய அளவில் நடந்து முடிந்திருக்கும் காதல் கொலைகள் நெஞ்சில் அமிலம் பாய்ச்சுகிறது. தன்னை ஒரு தலையாய் காதலிப்பவனை பிடிக்காவிட்டால் தவிர்க்கும் சுதந்திரம் கூடப் பெண்ணுக்கு இல்லை. காதலிப்பவளைக் கொல்லும் அளவுக்கு வன்மம் வளர்ந்துள்ளது. ஒருதலைக் காதல் கொலைகளின் நீட்சியாய் இதையே பார்க்கலாம்.

காதல் கொலைகள் மற்றும் தற்கொலைகள் குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர வைக்கிறது. இந்திய அளவில் 2001ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை காதல் காரணமாக 38 ஆயிரத்து 585 கொலைகள், 79 ஆயிரத்து 189 தற்கொலைகள் நடந்துள்ளன. இதே காலகட்டத்தில் தீவிரவாதத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரம் மட்டுமே. தீவிரவாதத்தை விடக் காதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம் உள்ளது.

காதல் தொடர்பாக 2.6 லட்சம் கடத்தல்கள் நடந்துள்ளன. காதல் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. காதல் தற்கொலைகளில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 15 ஆயிரம் தற்கொலைகள் நடந்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இங்கு மட்டும் 9 ஆயிரத்து 405 தற்கொலைகள் நடந்துள்ளன.

இக்கொலைகளுக்கு சாதி வெறியே காரணமாக இருப்பதாக அந்தப் புள்ளிவிவரம் உறுதி செய்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் காதலே பெண்ணுக்கு எதிரான ஆயுதமாக மாறியிருப்பதை நமக்கு உணர்த்துகிறது. பள்ளி வயதில் பதின் பருவத்தில் ஏற்படும் காதலின் தேடல் பாலுறவில் முடிகிறது. இது போன்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்ட பெண் குழந்தைகள் தனக்குள் கரு உருவானதைப் புரிந்து கொள்ள முடியாமல் குழந்தை வயதில் தாயாகின்றனர். இதன் பின்னர் இவர்கள் எதிர்காலம், நிகழ்காலம் எல்லாமே சிதைவுகளாகிறது.

காதலுக்காக தன் குடும்பம், படிப்பு என எல்லாவற்றையும் துறந்து காதலனோடு வாழச் செல்லும் அளவுக்கு பெண்களே அதிகளவில் ரிஸ்க் எடுக்கின்றனர். பதின்பருவக் காதலில் திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் ஏமாற்றப்படும் பெண்கள் சிங்கிள் மதராக தங்கள் வாழ்வைத் துன்பங்களுடன் தொடர்வதையும் பார்க்கிறோம். திருமணத்தில் முடியும் காதல்  வெற்றி பெறுவதாகக் கற்பிக்கப்படுகிறது.

காதலிக்கும் பெண்கள் தன் வாழ்வே காதலன் என நம்பி தன்னை விட்டுக் கொடுக்கும்போது தான் இது போன்ற விபரீதங்களை சந்திக்கின்றனர். மனித வாழ்வில் காதலும் ஒரு பகுதி அவ்வளவே. தனக்கான அடையாளத்தையும், சுயத்தையும் விட்டு விலகாமல் காதலைத் தொடருங்கள். தன்னையே இழக்கும் அளவுக்குத் துணிய வேண்டாம். உங்களை நம்பி வாழ்வைத் தொடருங்கள் பெண்களே!

- யாழ் ஸ்ரீதேவி
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்