சதுரங்க நம்பிக்கை



‘நிறைகுடம் தளும்பாது’ என்பார்கள். அதற்கு சிறந்த உதாரணம் திவ்ய பாரதி. வீடு நிறைய கோப்பைகள். ஆனால் தலையில் கனம் இல்லை. சூது வாது அறியாத கிராமத்து சின்னப் பெண் போல் இருக்கிறார். எளிமையான வீடு, அன்பான அப்பா, சதுரங்க விளையாட்டு - இதுவே அவள் உலகம். தொலைக்காட்சி, வீடியோ கேம், செல்போன் என்று இன்றைய பிள்ளைகளின் உலகத்திலிருந்து தள்ளியே இருக்கிறார்.

செஸ்ஸில் கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது கனவு. புத்தாண்டு தினத்தன்று திவ்யாவை சந்தித்தேன். முந்தின நாள் வரை பிஸியாக இருந்தவர் அன்றும் போட்டி ஒன்றிற்காக திருவாரூர் கிளம்ப தந்தையுடன் தயாராகிக்கொண்டிருந்தார். அந்த அவசரத்திற்கிடையேயும் வளர்ந்து வரும் செஸ் வீராங்கனையான திவ்யா அவரது தந்தையுடன் இணைந்து நமக்களித்த சிறு பேட்டி…

“5 வருடங்களுக்கு முன்,  அப்பாவுடன் வீட்டில் செஸ் விளையாட ஆரம்பித்தேன். அப்பா எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டு என்னை மயிலாப்பூரில் ராதா கிருஷ்ணன் மாஸ்டரிடம் சேர்த்தார். 2 வருடங்கள் தனியாக எனக்கு பயிற்சி தந்தார் மாஸ்டர். அதன் பிறகு நிறைய அணுகுமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தியாகராஜன் மாஸ்டரிடமும் அப்பா சேர்த்து விட்டார். இப்போது நான் நிறைய பரிசுகள் வாங்கி வருகிறேன்.

நேற்று கூட 14 வயதுக்குட்பட்டோருக்கான ‘தேர்டு மாஸ்டர் மைண்ட் பைடு ரேட்டட் இன்டர்நேஷனல் போட்டி’யில் முதலாவதாக வந்தேன். வெற்றிகள் பெறுகிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு முறை ஒரு போட்டியில் வெற்றி பெற்றபோது  விஸ்வநாதன் ஆனந்த் பரிசு வழங்கி பாராட்டினார். நிறைய மோட்டிவேட்டிவ்வான விஷயங்களை சொன்னார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. 

என்னோட வெற்றிக்கு எனது மாஸ்டர்கள் முக்கிய காரணம். நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு அப்பாவோட உழைப்பும் ரொம்ப முக்கியம். அப்பா தான் என்னை செஸ் பயிற்சிகளுக்கு கூட்டிட்டு போவார். வாரத்தில் இரண்டு நாள் ராதா கிருஷ்ணன் சாரிடம் மயிலாப்பூரில் பயிற்சி நடக்கும். தியாகராஜன் சாரிடம் வாரத்தில் இரண்டு நாட்கள் பாடி, இரண்டு நாள் பெரம்பூர் ஆகிய இடங்களில் பயிற்சி நடக்கும்.

அப்பாதான் நான் பள்ளியை விட்டு வந்ததும் கூட்டிச் செல்வார். விடுமுறை நாட்களில் அம்பத்தூரில் உள்ள புதூரில் பயிற்சி நடக்கும்.  6 மணி நேரத்தில் இருந்து 7 மணி நேரம் வரை கூட பயிற்சி நடக்கும். அது வரை அப்பா துணையாக இருப்பார். அது மட்டுமல்லாமல் போட்டிகளுக்கும் அப்பா தான் கூட்டிப் போவார்.

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் நடக்கும் போட்டிகளுக்கும் கூட்டிச் செல்ல வேண்டும். அம்மா இல்லாததால் வீட்டையும் பார்க்க வேண்டும். அப்பா தான் எனக்கு எல்லாம். முதலில் எல்லாம் அப்பா கொஞ்சம் கோபப்படுவாங்க. ஆனால் இப்போது எல்லாம் என்னிடம் கோபப்படுவதே இல்லை. ஏதாவது தவறு செய்தால் இப்படி செய்யக்கூடாது. இப்படி செய்ய வேண்டும் என்று சொல்லித் தருவார். என்னை நன்கு பார்த்துக் கொள்கிறார். செஸ்ஸில் சாதித்த பின்னர் அப்பாவை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அம்மா இறந்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. எனது பெரியப்பா மகளான வைரம் அக்கா தான் எனக்கு துணையாக இருக்கிறார். அவர் இருப்பது எனக்கு பெரும் உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. அவர் சென்னையில் வேலை பார்க்கிறார். செஸ் விளையாடுவதால் அம்மா இல்லாத துக்கத்தை கொஞ்சம் மறக்க முடிகிறது. சிறு வயதில் படிப்பில் ப்ரொஃபிஷியன்ஸி வாங்கிக்கொண்டு இருந்தேன். இப்போது படிக்க அவ்வளவாக நேரம் கிடைப்பதில்லை. பள்ளிக்கூடத்தில் போட்டிகளுக்காக நான் எப்போது லீவ் கேட்டாலும் தருவார்கள்.

எங்கள் பிரின்ஸிபல் என்னை பாராட்டி உற்சாகப்படுத்துவார். எங்கள் பி.டி மாஸ்டர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ்வாக இருப்பார். மற்ற ஆசிரியர்களும் உதவியாக இருக்கிறார்கள். அதனால் என்னால் சிரமமின்றி விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முடிகிறது. இப்போது படிப்பை விடவும் எனக்கு செஸ் மீது தான் அதிக ஆர்வமாக இருக்கிறது.

இப்போது நான் ரேட்டிங்கில் 1555 புள்ளிகளுடன் இருக்கிறேன். 2100 புள்ளிகள் பெற்றால் இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆகலாம். 2500 புள்ளிகள் பெற்றால் கிராண்ட் மாஸ்டர் ஆகலாம். பெரிய மாஸ்டர்களுடன் விளையாடி வெற்றி பெற்றால் நிறைய புள்ளிகள் கிடைக்கும். சின்ன ப்ளேயர்களுடன் விளையாடி தோற்றால் புள்ளிகள் குறையும். சீக்கிரமாக நிறைய புள்ளிகள் பெற்று கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும். எனக்கும் அப்பாவுக்கும் நான் கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவு” என்றபடி வெள்ளந்தியாக சிரிக்கிறார்.
 
மாசாணம், திவ்யாவின் தந்தை
“திவ்யா எங்களுக்கு ஒரே பொண்ணு. அருகில் இருக்கும் சிபிஎஸ்ஸி பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். சின்ன வயதில் இருந்தே திவ்யா படிப்பில் படுசுட்டி தான். டிராயிங்கும் நல்லா பண்ணுவா. டிராயிங்கில் நிறைய பரிசுகளும் வாங்கினாள். நாங்கள் அதை சின்சியராக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பார்க்குக்குச் சென்றிருந்தோம். அங்கே செஸ் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிறைய பேர் கலந்து கொண்டார்கள்.

எனக்கும் ஓரளவு செஸ் தெரியும் என்பதால் நானும் கலந்து கொண்டேன். அங்கே கலந்து கொண்ட எல்லாருக்கும் நினைவு பரிசு வழங்கினார்கள். எல்லாரும் விளையாடுவதை திவ்யாவும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டிற்கு வந்ததில் இருந்து என்னுடன் விளையாடத் துவங்கினாள். அப்போது தான் படிப்பைத் தாண்டி அவளுக்கு செஸ்ஸை ஏன் கற்றுக் கொடுக்கக்கூடாது என்று எனக்குத் தோன்றியது.  2013ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பயிற்சி ஆரம்பித்தது. தனிப்பட்ட முறையில் திவ்யாவிற்குப் பயிற்சி தரப்பட்டது.

திவ்யா ஆர்வமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். மறுமாதமே ஒரு போட்டிக்குப் போனாள். பரிசு எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவளுக்கு ஆர்வம் குறையவில்லை. விருப்பத்துடன் கற்றுக்கொள்வாள். அதற்கடுத்த போட்டியில் வெற்றி பெற்றாள். அவள் வெற்றி பெற்றவுடன் மற்றவர்கள் அளித்த பாராட்டு எங்களுக்கு மிகவும் உத்வேகமாக இருந்தது. அதற்குப் பிறகு செஸ் விளையாட்டை தீவிரமாக நினைத்து பயிற்சி எடுத்தாள். இரண்டு ஆண்டுகள் தனிப் பயிற்சி எடுத்தாள். அதன் பிறகு டிஃபரன்ட் வேரியஷன் கிடைக்கும் என்பதால் தியாகராஜன் என்பவரிடமும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். அவர் நிறைய பிள்ளைகளுடன் இணைந்து திவ்யாவுக்குக் கற்றுக்கொடுப்பார்.
 
முதலில் திவ்யாவுக்கு ரேட்டிங் வாங்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆறு மாதத்திற்குப் பிறகான ஒரு போட்டியில் ரேட்டிங் வாங்கினாள். பிறகு மிகுந்த சிரத்தையுடன் பயிற்சி எடுக்க ஆரம்பித்தாள். தினமும் அவளுக்கு வெவ்வேறு இடங்களில் பயிற்சி நடக்கும். பயிற்சிகளுக்கும், போட்டிகளுக்கும் கூட்டிச் செல்ல எனக்கு நேரம் சரியாக இருக்கும். நான் எல் ஐ சி ஏஜென்ட் ஆக இருப்பதால் இதற்கு நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனாலும் எனக்கு இன்னும் நேரம் இருந்தால் நிறைய பேருக்கு பாலிசி விற்க முடியும்.

ஏனென்றால் வருமானத்திற்கு அதிகமாக எங்களுக்கு தேவை இருக்கிறது. பயிற்சியாளர்களுக்கான பயிற்சி கட்டணம், போட்டிகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்து செலவு, உணவு, தங்குமிடத்திற்கான செலவு, ரிஜிஸ்டர் ஃபீஸ் என பணம் நிறைய செலவாகிறது. இதற்கிடையில் படிப்பிற்கான செலவையும் பார்க்க வேண்டும்.
 
இவ்வளவு செலவு, உழைப்பு இருந்தாலும் ஒரு சமயம் செஸ் அவளுக்கு மிகுந்த உதவியாக இருந்தது. கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு திவ்யாவின் அம்மா தனலஷ்மி இறந்துவிட்டார். இந்த சிறு வயதில் தாயை இழந்த அவளுக்கு அந்த துக்கத்தை கடக்க செஸ் மிக்க உதவியாக இருந்தது. போட்டிகள், அதற்கான பயணம், அதற்கான பயிற்சி என அதிலே பிஸியாக இருந்ததால் அவளால் அந்த துக்கத்தை கொஞ்சம் ஜீரணிக்க முடிந்தது. இல்லையென்றால் அவள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பாள்.

செஸ் தான் அவளை காப்பாற்றியது. அதுமட்டுமின்றி இது போன்ற விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது வெற்றி, தோல்விகள் கலந்தே இருக்கும். தோல்விகளை கடந்து வர வேண்டி இருக்கும். தோல்வியை எதிர்கொள்ளும் துணிச்சல் வரும். இது வாழ்க்கைக்கும் உதவும். வாழ்க்கையில் வரும் மேடு பள்ளங்களை சமாளிக்க இந்த பயிற்சி கட்டாயம் உதவும். அது மட்டுமில்லாமல் செஸ் போட்டி என்பது மைண்ட் கேம். அதற்கு நிறைய கவனம் தேவை. அதற்கு பொறுமையும், அமைதியும் தேவை. இந்த பொறுமையும் அமைதியும் கவனமும் வாழ்க்கையிலும் நல்ல பயன் தரும்”. வாழ்க்கையில் பல கஷ்டங்களை தாண்டி வந்ததாலோ என்னவோ அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன்மொழியாக இருக்கிறது.
 
‘‘மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் என பல போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாள். பல போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பைகளை கைப்பற்றி இருக்கிறாள். எவ்வளவு போட்டிகள் என்று கணக்கு வைக்க முடியாத அளவிற்கு ஓடிக்கொண்டே இருக்கிறோம். தேசிய அளவிலான போட்டிகளுக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்லும் போது 30,000 ரூபாய்க்கும் மேல் கூட செலவாகும். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி என் மகளை ஒரு கிராண்ட் மாஸ்டர் ஆக்கிவிட வேண்டும் என்பது தான் என் வாழ்வின் லட்சியம்.

அவளும் அந்த எண்ணத்துடன் மிகுந்த சிரத்தையுடன் செஸ் ஒன்றே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். மறுபடி ஜூன் மாதம் நேஷனல் போட்டிகள் வரும். சில காலம் கழித்து இன்டர்நேஷனல் போட்டிகளில் கலந்து கொள்ள வெளி நாடுகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கும் அவளை தயார் படுத்த வேண்டும்” என்கிறார் கண்களில் கனவுகளோடு.

திவ்ய பாரதியின் பள்ளித் தோழியான அக்‌ஷயா, “திவ்யா எப்போதும் அமைதியாக இருப்பாள். மாதத்திற்கு குறைந்தது நான்கு பரிசுகளோடு வந்துவிடுவாள். பெரிய பெரிய கோப்பைகள் வாங்கி வருவாள். நிறைய நாள் பள்ளிக்கு லீவ் எடுக்க வேண்டி இருக்கும். படிப்பையும் சமாளிப்பாள். முன்பெல்லாம் முதல் ரேங்க் எடுப்பாள். இப்போது போட்டிகளில் கலந்து கொள்வதால் முதல் ரேங்க் எல்லாம் எடுக்க முடிவதில்லை.

எவ்வளவு பரிசுகள் வாங்கி வந்தாலும் சரி, கர்வப்படாத ரொம்ப நல்ல பெண். பிரேயரில் எங்கள் சீனியர் பிரின்ஸிபல் இவளை போல் நீங்களும் இருக்க வேண்டும் நிறைய சாதிக்க வேண்டும் என்று எங்களுக்கு திவ்யாவை உதாரணமாகச் சொல்லுவார்கள். ஒரு முறை அவள் எங்கள் பள்ளியின் ராணி என எங்கள் சீனியர் பிரின்ஸிபல் பாராட்டினார்.”

-  ஸ்ரீதேவி மோகன்