சும்மா அதிருதில்ல செண்டை மேளம்



செண்டை மேளம் என்றதும் நம் நினைவுக்கு வருவது, அந்த மேளம் தரும் அதிர்வுதான். செண்டை மேளத்தை இசைப்பவர்களைப் பார்த்தால் தங்கள் உடலில் உள்ள மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி அடித்து நொறுக்குவது போலத் தெரியும். ஆனால் அப்படியொன்றும் இல்லை. நம் மனதை முழுவதும் இசைக்குள் செலுத்தி விட்டால் இந்த இசையும் மிகமிக இலகுவான விசயம்தான். கற்பதற்கான ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால் போதும். பள்ளி, கல்லூரி மாணவர்களில் துவங்கி, விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற மென்பொருள் கம்பெனிகளில் வேலை செய்கிறவர்கள், சொந்தமாக தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என பலதரப்பினரும் வந்து இந்த இசையைக் கற்கிறார்கள்.

முக்கியமாக குழந்தைகளும் பெண்களும் இதை மிக எளிதாக உள்வாங்கி கற்றுக்கொள்கிறார்கள் என நம்மிடம் பேசத் துவங்கினார் ஸ்ரீ சாஸ்தா பஞ்ச வைத்ய சங்கத் தின் நிறுவனரான, வைத்திய கலாரத்தின குரு தேவராஜ். ‘‘செண்டை ஒலியின் அதிர்வு அருகில் இருப்போருக்கு ஒரு வைப்ரேஷனை தானாகவே உருவாக்கி விடும். அந்த ஏரியாவே சும்மா ஒலியால் ‘திடும் திடும்’ என அதிரும். உடல் நலம் சரியில்லாதவர்கள் செண்டை மேளம் சத்தத்தால் சற்றே ரிலாக்ஸாகி அசைவு வர வாய்ப்புள்ளதாக ஒரு மருத்துவ ஆய்வுத் தகவலும் உண்டு.

தமிழ்நாட்டில் இதற்கு பாண்டி மேளம் எனப் பெயர். நிறைய தமிழ் மாணவர்கள் ஆர்வத்தோடு செண்டை மேளம் இசைக்க விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். நான் என் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் துவங்கும்போது மலையாள மக்களால் மட்டுமே சுலபமாக கற்க முடியும், தமிழ்நாட்டுக்காரர்களுக்கு தாமதம் எடுக்கும் என தவறாகக் கணக்குப் போட்டேன். ஆனால் தமிழ்நாட்டில் செண்டை மேளத்தை மிக விரைவாக ஆர்வத்தோடு கற்கின்றனர்.

இசைக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பில்லை. யார் வேண்டுமானாலும் கற்கலாம். சாதி, மதம், மொழி, மாநிலம் கடந்தது. தேவாலயங்களிலும் நாங்கள் இசைக்கிறோம். 1994ல் இரண்டு தமிழ் மாணவர்களோடு துவங்கிய இந்த செண்டை மேளப் பயிற்சி, இன்று இருநூறு தமிழ் மாணவர்களோடு வளர்ந்து நிற்கிறது. என்னிடம் பயிற்சி பெற்றவர்கள், அரங்கேற்றம் முடித்து, நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள். கோயில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், திறப்புவிழா என எல்லாவற்றுக்கும் இசைக்கின்றனர். சென்ற ஆண்டி லிருந்து நிறைய தமிழ்நாட்டுப் பெண்களும் இந்தக் கலையைக் கற்க ஆர்வமாக வருகிறார்கள்.

என்னிடம் பயிற்சியில் இருக்கும் மாளவிகா என்ற பதினோராம் வகுப்பு மாணவி முதல் படியில் பயிற்சி முடித்து அரங்கேற்றம் முடித்திருக்கிறார். செண்டை என்பது ஒரு கிளாசிக் மேளம். ஸரிகமபதநி மாதிரி நாங்கள் வாசிக்கும் அத்தனை ஒலிக்கும் எழுத்து உண்டு. அந்த எழுத்தை மனப்பாடம் செய்ய வேண்டும். முறைப்படி சரியான முறையில் முழுவதையும் கற்று அடிக்க வேண்டும் என்றால் இருபது ஆண்டுகளாவது ஆகும். செண்டை மேளத்தில் செண்டை, இலைத்தாளம், குழல் மற்றும் கொம்பு உட்பட நான்கு வாத்தியங்கள் உள்ளன.

அத்தனைக்கும் எங்களிடத்தில் பயிற்சி உண்டு. பஞ்சாரி மேளம், பாண்டி மேளம், சம்ப மேளம், செம்பட மேளம், அடந்த மேளம், அஞ்சடத மேளம், த்ருவ மேளம் என ஒவ்வொரு படியாகச் செல்லும். கதகளி, மோகினி ஆட்டமும் இத்தோடு இணைந்த கலைதான். செண்டை மேளத்தில் ஏராளம் கொட்டிக் கிடக்கிறது. இதில் மொத்தம் 18 தாளங்கள். ஒவ்வொரு தாளத்திற்கும் 5 படி நிலை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரியான இசையும் இதில் உண்டு. திருமணம் என்றால் ஒரு இசை, கோயில் நிகழ்ச்சி என்றால் அதற்கு வேறொரு இசை என செண்டை ஒலியின் இசை மாறுபடும்.

நன்கு தேர்ச்சி பெற்றவர்களைத்தான் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு செண்டை மேளம் வாசிக்க அழைத்துச் செல்வோம். இதில் குழந்தைகள் மற்றும் பெண்களும் உண்டு. கலையை எப்போதும் விற்கக் கூடாது. தமிழ்நாட்டில் இருப்பவர்களும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் செண்டை மேளப் பயிற்சியை முற்றிலும் இலவசமாகத் தருகிறோம். இசையில் ஆர்வமுள்ள எந்த வயதினரும் வந்து எங்களிடம் கற்றுக்கொள்ளலாம். வில்லிவாக்கம்,  அண்ணா நகர், வடபழனி, அடையாறு, வேளச்சேரி பகுதிகளில் தினமும் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.

தமிழ்நாட்டுப் பெண்களும் நிறைய இந்த இசையை கற்க வருவதால், தேர்ச்சி பெற்றதும் இவர்களையும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். இனி கேரளாவிலிருந்து பெண்களை அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. செண்டை வாசிப்பதற்கென ஓர் உடல் மொழி உள்ளது. அது தாளத்தோடு சேர்ந்தது. இந்த இசை தெரிந்தவருக்கு அது புரியும். இசையைப் பொறுத்து இசைப்பவர்களின் எண்ணிக்கையும் இதில் மாறும்.

செண்டையில் தாயம்பகா என்றால் களத்தில் ஒன்பது நபர் இருப்பர். பஞ்சாரி மேளம் என்றால் பதினொன்றில் இருந்து பதிமூன்று நபர்கள் தேவை. இசைக்கு ஏற்ப எண்ணிக்கை மாறுபடும். நிகழ்ச்சிக்கு கேரளாவில் இருந்து ஆட்களை அழைத்தால் செலவு அதிகம் ஆகும். இப்போது இங்கேயே அதற்கான ஆட்களை நாங்கள் தயார் செய்து வைத்திருக்கிறோம். தேவைப்படும் நபர்களைப் பொறுத்து நிகழ்ச்சிக்கு ஐந்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை ஆகும். ஒரு மாதத்திற்கு நான்கு நிகழ்ச்சி செய்தாலே இது ஒரு உபரி வருமானம்.

தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுவோர் இதைக் கற்பதால் எல்லாக் கவலைகளையும் மறந்து, தங்கள் மனம் ஒருநிலைப்படுவதுடன், மனசு மிகவும் இலகுவாகிறது என்கின்றனர். அவர்களின் நினைவாற்றலும் அதிகமாகிறது. சிங்காரி மேளம் என்பது இறப்பிற்கு அடிப்பது. அது செண்டை மேளத்தில் சேராது. இதையும் செண்டை மேளம் என சிலர் புரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் பிரச்சாரத்திற்கு அதிகமாக சிங்காரி மேளத்தைப் பயன்படுத்துகின்றனர்’’ என்றார்.

- மகேஸ்வரி
படங்கள்: ஆர்.கோபால்


ஸ்ரீவர்த்தினி,பள்ளி மாணவி
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். இங்கு ஒரு வருடமாக வருகிறேன். அரங்கேற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

ராஜீவ் குமார்,பிபிஓ நிறுவனர், சென்னை
என் நிறுவனத்தில் 200 பேர் வேலை செய்கின்றனர். எனது மூதாதையர் பூர்வீகம் கேரளா. எனக்குள் இருந்த ஆர்வத்தில் இதை கற்றுக் கொண்டேன். எனது மனைவி மற்றும் மகன்களும் என்னோடு இந்தக் கலையை சேர்ந்து கற்கின்றனர். முதலில் கருங்கல்லில் மிகப் பெரிய புளிய மரத்தின் உருட்டுக் கட்டை கொண்டு அடித்து பழகுவோம். அதில் நன்றாகப் பழகி பயிற்சியான பிறகுதான் செண்டையில் அடித்து பழகுவோம். செண்டையில் கொட்டவே எங்களுக்கு ஒரு வருடம் பிடித்தது. முதல் அரங்கேற்றம் செய்யவே இரண்டரை ஆண்டுகள் ஆனது.

ரமணன்,டாக்சி ஓட்டுநர்
செண்டை மேளத்தில் கொம்பு ஊதுவது என்பது மிகவும் கடினம். 100 பேர் கற்றால் அதில் 10 பேர்தான் வெளியில் வருவர். அனைவருக்கும் இது சுலபத்தில் வராது.  அவ்வளவு கடினம். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் எனக்கிருந்த ஆர்வமிகுதியால் இதைக் கற்று சுலபமாக ஊதுகிறேன். செண்டை மேளமும் எனக்கு வாசிக்கத் தெரியும்.

செண்டை மேளம் நூறு ஆண்டு பழமையான பலா மரத்தின் நடுப்பகுதி கொண்டு கணமாகத் தயாராகிறது. 25 முதல் 30 கிலோ எடை இருக்கும். இசைக்கப்படும் பகுதி பசுமாட்டின் தோல் கொண்டு தயாராகி இருக்கும். அதை ஒலி எழுப்பத் தட்டப்படும் கோல் பதிமுகம் எனப்படும் மூலிகை மரத்திலிருந்து தயாராகிறது. இரண்டு கைகளால் ஒலி எழுப்பி அடிக்கப்படும் எகத்தாளம் வெங்கலத்தால் தயாரிக்கப்படுகிறது. இது 4 கிலோ வரை எடை இருக்கும். பலவீனமானவர்களுக்கு என்று சற்று எடை குறைவாகவும் தயாரிப்பர்.

மாளவிகா,பள்ளி மாணவி
எனது பூர்வீகம் கன்னனூர். ‘அம்மா கணக்கு’ படத்தில் அமலாபால் மகளின் தோழியாக நடித்தேன். திரைப்படங்களுக்கும், சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் பின்னணிக் குரல் கொடுக்கிறேன். வெஸ்டர்ன் நடனமும் எனக்கு நன்றாக வரும். கோயில் விழாக்களில் செண்டை இசைப்பதை பார்த்து ஆர்வம் ஏற்பட்டு கற்க ஆரம்பித்தேன். பத்தாவது படிக்கும்போது ஆரம்பித்தேன். சென்ற ஆண்டு அரங்கேற்றம் செய்தேன். இப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறேன். இந்த ஆர்வம் என் படிப்பை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. பதினோராம் வகுப்பில் 90 சதவிகிதம் மதிப்பெண் எடுத்திருக்கிறேன்.