ஐந்திணைகளுக்குமான பொங்கல் விழா



தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழர்களின் வாழ்வியலை முன்னிறுத்துவதால்தான் மற்ற பண்டிகைகளைக் காட்டிலும் பொங்கல் நமக்கு அதி முக்கியமான பண்டிகையாக விளங்குகிறது. மொழி, பண்பாடு எனும் ஒன்றையொன்று சார்ந்த வலைப்பின்னலில் கலைக்கும் முக்கிய இடமுண்டு. தமிழர்கள் நிலங்களின் தன்மையைக் கொண்டு அவற்றை ஐந்திணைகளாகப் பிரித்தனர். அத்திணைகளின் வாழ்வியல் சார்ந்து ஒவ்வொரு திணைக்கும் தனித்துவமான கலைகள் உருவாகின. ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் இயங்கி வருகிறது கலைத்தாய் அறக்கட்டளை. ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று இவ்வமைப்பு முன்னெடுக்கும் ‘தமிழர் பண்பாட்டுக் கலை விழா’வில் ஐந்திணைகளுக்கும் ஐந்து பொங்கல் வைத்து அந்நிலங்களுக்கான கலைகள் அரங்கேற்றப்படுகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவர்களால் நிகழ்த்தப்படும் இந்நாட்டுப்புறக் கலைகளில் கிராமிய மணம் கமழும். பாரம்பரிய உடையணிந்து மாணவர்களும், மாணவிகளும் ஒருமித்த அசைவுகளில் நளினத்தை வெளிப்படுத்தி ஆடுவது பொங்கல் ருசி. நமது நாட்டுப்புறக் கலைகளுக்குள் நமது தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் முறைகள் பதிவாகியிருக்கின்றன என்றும் அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் வளமான சமூகத்தை உருவாக்க இயலும் என்கிறார் கலைத்தாய் அறக்கட்டளையின் நிறுவனரும், பயிற்சியாளருமான மாதேஷ்வரன்...

‘‘கலைத்தாய் சிலம்பப் பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டு 22 ஆண்டுகளாகின்றன. இப்பள்ளியின் மூலம் முதலில் சிலம்பப் பயிற்சி மட்டும்தான் அளிக்கப்பட்டு வந்தது. அதனுடன் நாட்டுப்புறக் கலைகளுக்கான பயிற்சிகளையும் இணைத்து அதனை கலைத்தாய் அறக்கட்டளையாக மாற்றி ஆறு ஆண்டுகளாகின்றன. ‘தமிழர் பண்பாட்டுக் கலை விழா’வை இந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இதன் நோக்கம் நாட்டுப்புறக் கலைகளின் வழியே தமிழர் பண்பாடு மற்றும் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதும், அதன் நெறிகளைப் புகட்டுவதும்தான். பொங்கல் என்பது நமது தமிழ்ச் சமூகத்துக்கான பண்டிகை என்பதால் இந்நன்னாளில் தமிழ் கலைகளை அரங்கேற்றுகிறோம். நிலங்களின் தன்மையை அடிப்படையாக வைத்து அதனை ஐந்திணைகளாகப் பிரித்திருக்கிறோம்.

இந்த ஐந்து நிலங்களுக்கும் தனித்துவமான வாழ்வியலும் அது சார்ந்த கலைகளும் உருவாகியிருக்கின்றன. ஆட்டக்கலைகளில் குறிஞ்சி நிலத்துக்கான ஆட்டம் பறையாட்டம். அடர்ந்த காடுகளுக்குள் பரவி இருக்கும் மக்களுக்கு செய்தியைத் தெரிவிக்க பறையைத்தான் பயன்படுத்தினர். பறை என்பதன் பொருளே பரப்புதல்தான். இறப்பு, சடங்கு, மக்களை ஒன்றுபடுத்தல், திருமணம், திருவிழா என இந்த ஐந்து நிகழ்வுகளுக்கும் தனித்தனியான ஓசைகளை எழுப்புவர். அதனைக் கொண்டு என்ன நிகழ்வு என்பதனை மக்கள் புரிந்து கொள்வார்கள். தமிழர்களின் முதல் செய்தித் தொடர்புக் கருவி என்றால் அது பறைதான். ஆக, குறிஞ்சி நிலத்தின் ஆட்டமாக இருக்கிறது பறையாட்டம்.

மேய்ச்சலை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கும் முல்லை நிலத்தின் ஆட்டம் சாட்டைக்குச்சி ஆட்டம். கால்நடைகளை மேய்க்கப் பயன்படுத்திய சாட்டைக்குச்சியைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆட்டக்கலை. உழவுத் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்ட மருத நிலத்தின் ஆட்டம் ஒயிலாட்டம். ஒயில் என்றால் அழகு என்று பொருள். ஒயிலாட்டத்தை ‘அறுவடை ஒயில்’ என்றே கூறுவர். நெல் விவசாயத்துக்கான செயல்கள்தான் ஒயிலாட்டம். நாற்று நடுவது தொடங்கி அறுவடை செய்து நெல் அடித்து மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு செல்லப்படுவது வரை அனைத்து செயல்பாடுகளும் அந்த ஆட்டத்துக்குள் அடங்கி இருக்கின்றன.

நெய்தல் நிலத்துக்கான ஆட்டம் பெரிய கம்பாட்டம். சதுப்பு நிலக்காடுகளுக்குள் படகில் பயணிக்க பெரிய கம்பைப் பயன்படுத்துவார்கள். அந்த பெரிய கம்பைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆட்டம். இந்த ஆட்டத்தில் நெய்தல் சமூக வாழ்வியலையே காட்டுவார்கள். வறண்ட நிலமான பாலை நிலத்துக்கான ஆட்டம் கோலாட்டம். வறட்சியான நிலத்தில் பயணம் செய்யும்போது பேசக்கூடாது. பேசினால் உடலில் உள்ள நீர்த்தன்மையை இழந்து விடுவோம். இதனால் கோல்களைத் தட்டி தகவலை பரிமாறிக் கொள்வார்கள். அந்தக் கோல்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுவது கோலாட்டம்.

ஐந்திணைகளுக்கும் பொதுவான ஆட்டம் கரகாட்டம். விதைகளை பாதுகாப்பதற்காக கரகத்தை பயன்படுத்தினர். கோவில்கள் தானியக்கிடங்குகளாக செயல்பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களது விளைச்சலில் ஒரு பகுதியைக் கோவிலுக்குக் கொடுத்து விடுவார்கள். நடவுக்கு முன் கரகத்தில் விதையை ஊற வைத்து பெண்கள் கையில் கொடுத்து விடுவார்கள். அது முளைப்புத் திறனைப் பெற்றதும் மீண்டும் கோவிலுக்குக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

அந்த விதைகளைப் பகிர்ந்தளித்து நடவு மேற்கொள்வார்கள். இப்படியாக விதைப்பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஆட்டம்தான் கரகாட்டம். பிற சமூகங்களில் உழைப்பு வேறு கலை வேறாக இருக்கும். தமிழ் சமூகத்தில்தான் உழைப்பின் வெளிப்பாடாக கலை இருக்கிறது. இந்தக் கலைகளுக்கும் நமது வாழ்வியலுக்குமான தொடர்பை உணர்த்தும் விதமாக இவ்விழாவை நடத்துகிறோம்.

ஐந்து நிலங்களுக்கும் ஐந்து பொங்கல் வைத்து, ஐந்து விதமான கலைகளையும் நிகழ்த்துகிறோம். ஐந்து நிலங்களுக்குமான வீரக்கலை என்றால் அது சிலம்பம்தான். இயற்கையிலேயே அழகு என்றால் ஆண், வீரம் என்றால் பெண். தன் இனத்தைப் பாதுகாக்க வேண்டிய உயிர் ஒவ்வொன்றும் வீரத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த அடிப்படையில் பெண்ணிடம் வீரம் இருக்கிறது. சிலம்ப விளையாட்டை ஆணுக்கான விளையாட்டு என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் அது பெண்ணுக்கான விளையாட்டு.

கலைகளின் அடிப்படையில் உடலின் கூறுகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறோம். ஆட்டக்கலை என்று வந்தால் வலது காலை முன் வைக்க வேண்டும். வீரக்கலை என்று வரும்போது இடது காலை முன் வைக்க வேண்டும். வலது என்பது அழகு சார்ந்தது. அழகு என்பது ஆண் தன்மை. இடது என்பது வீரம் சார்ந்தது. வீரம் என்பது பெண் தன்மை.

திருமண காலத்தில் ஆணுக்கு வலது கையில் காப்பு கட்டுவதும் பெண்ணுக்கு இடது கையில் காப்பு கட்டுவதும் இதனால்தான். மண மேடையில் ஆணுக்கு வலது புறத்தில் பெண்ணும், பெண்ணுக்கு இடப்புறத்தில் ஆணும் அமரக் காரணம் இதுதான். இடது மாராப்பு போடுவதும், ஆண் குழந்தைக்கு வீரம் வேண்டும் என்பதற்காக இடது மார்பில் பால் கொடுப்பதும், பெண்ணுக்கு அழகு வேண்டும் என்பதற்காக வலது மார்பில் பால் கொடுக்கும் வழக்கம் நம் மக்களிடம் இருந்திருக்கிறது. இவையெல்லாம் நம் நாட்டுப்புறக் கலைகளில் பதிவாகியிருக்கின்றன.

பெண் என்றால் தீ என்று பொருள். ஆகவேதான் பெண்ணை சக்தி என்கிறோம். பெண் தெய்வ வழிபாடுகளோடுதான் தீ தொடர்புப்பட்டிருக்கும். அக்கினிச்சட்டி எடுத்தல், குண்டம் இறங்குதல் ஆகியவை பெண் தெய்வ வழிபாட்டில் மட்டும்தான் இருக்கும். தீயே உற்பத்தி, தீயே ஆற்றல். பெண்ணும் அப்படியே என்பதை இதன் மூலம் உணர்த்துகின்றனர். ஆணுக்குத் தேவையான சக்தி பெண்ணிடம்தான் இருக்கிறது. பெண்ணை விட்டுத் தள்ளியிருக்கிற ஆணுக்கு சக்தி கிடையாது. நம் முன்னோர்கள் கண்டறிந்த அறிவை கலைகளின் வாயிலாகவே கடத்தியிருக்கின்றனர். இதன் அடிப்படையில்தான் வீரக்கலையான சிலம்பத்தை பெண்களுக்கு கற்றுக் கொடுப்பதில் அதிக முனைப்பு காட்டுகிறோம்.

அது மட்டுமல்லாமல் ஒயிலாட்டம் என்பது ஆண்களின் ஆட்டக்கலையாக இருந்தது. அதனை பெண்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறோம். கலைகளின் முக்கிய நோக்கம் கூட்டு மனப்பான்மையை உருவாக்குவதுதான். இந்தக் கலைகளை கூட்டாகச் சேர்ந்துதான் ஆட முடியுமோ தவிர தனித்து ஆட முடியாது. அவ்வகையில் நாட்டுப்புறக் கலைகள் நமக்கு ஒற்றுமையை புகட்டுகின்றன. இந்த கூட்டு மனப்பான்மையிலிருந்து நாம் வெளியேறும்போதுதான் பல இன்னல்களுக்கும் ஆளாக நேரிடுகிறது.

இதனைப் புரிந்து கொண்ட போதுதான் இக்கலைகளுக்கான இன்றைய தேவையை உணர முடிந்தது. அதனைப் பரப்பும் விதமாகத்தான் கலைத்தாய் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது’’ என்றவரிடம் கலைத்தாய் சிலம்பப் பயிற்சிப் பள்ளியின் மூலம் நீங்கள் எத்தனை மாணவர்களை உருவாக்கியிருக்கிறீர்கள்? என்றேன்.

‘‘ஈரோடு அருகே கருங்கல்பாளையம்தான் இதன் தலைமையகம். இங்கு தினமும் காலையும், மாலையும் ஆட்டக்கலைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. திருச்சி, கோவை, திருப்பத்தூர், தர்மபுரி, ஓசூர் ஆகிய ஊர்களில் வாராந்திரப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று பயிற்சி அளித்து வருகிறோம். இந்த 22 ஆண்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியிருக்கிறோம். அவர்கள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெற்ற பல போட்டிகளில் வென்றிருக்கின்றனர். லோகேஷ்வரன் என்கிற மாணவர் உலக சிலம்பப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்’’ என்கிறார் மாதேஷ்வரன்.

சிலம்பம் போன்ற வீரக்கலைகள் ஆண்களுக்கானவை, அழகு சார்ந்த ஆட்டக்கலைகள் பெண்களுக்கானவை என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதற்கு நேரெதிரானது என்று விளக்கினார் மாதேஷ்வரன். இங்கு பயிற்சி பெறும் பெண் குழந்தைகள் நம்மை பிரமிக்க வைக்கிறார்கள். பாரம்பரிய உடையான புடவை அணிந்து, காலில் சலங்கை கட்டி மென்மையும், நளினமும் கூட ஆட்டக்கலைகளை நிகழ்த்தும் அதே குழந்தைகள், டி சர்ட், ட்ராக் ஷூட் அணிந்து துடிப்புடன் சிலம்பம் சுற்றுகிறார்கள். வாளையும், கேடயத்தையும் ஏந்தி சண்டைப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆண் குழந்தைகளும் அப்படித்தான்.

வீரக்கலைகளில் துடிப்போடு செயல்படும் அவர்களே ஆட்டக்கலைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். ஐந்து வயது குழந்தை கூட சாதாரணமாக சிலம்பு சுற்றுவதைப் பார்க்க முடிகிறது. தன் ஏழாவது வயதிலிருந்து இங்கு சிலம்பம் கற்று வரும் பத்மாவிடம் பேசினேன்... ‘‘நான் ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பி. ஏ படிச்சுக்கிட்டிருக்கேன். அம்மாவும் அப்பாவும் கூலித்தொழில் பண்றவங்கதான். எங்க பயிற்சிப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானவங்க கூலித்தொழில் பண்ற குடும்பத்துல இருந்து வந்தவங்கதான். நான் பத்து வருசமா சிலம்பம் கத்துக்கிட்டிருக்கேன்.

அது மட்டும் இல்லாம தப்பாட்டம், கரகாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம், கும்மி, பெரிய கம்பாட்டம்னு நாட்டுப்புறக்கலைகளும்
 கத்துக்கிட்டிருக்கேன். எங்க பள்ளியில் மாணவர்களே ஆசிரியர்களாகவும் இருப்பாங்க. நான் ஆட்டக்கலை மற்றும் சிலம்பம் கத்துக்கிறதோட தொடக்க நிலையில இருக்கறவங்களுக்கு கத்துக் கொடுக்கவும் செய்யுறேன். சிலம்பப் போட்டிகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடந்த போட்டிகள்ல ஜெயிச்சிருக்கேன். நாட்டுப்புறக்கலைகளுக்கான போட்டிகளிலும் கலந்திருக்கேன். பல ஊர்களுக்கும் போய் ஆட்டக்கலைகளுக்கான பயிற்சியும் கொடுக்கிறேன்’’ என்கிற பத்மா ஜெர்மனிக்குச் சென்று ஆட்டக்கலைப் பயிற்சி அளித்திருக்கிறார்.

மற்றுமொரு மாணவியான லாவண்யா... ‘‘நான் வாசவி கல்லூரியில் பி ஏ படிக்கிறேன். சின்ன வயசுல இருந்தே இந்த ஆட்டக்கலைகளை கத்துக்கிட்டிருக்கேன். இந்தக் கலைகளை தொடர்ச்சியா பயிற்சி பண்றது மூலமா உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமான மாற்றத்தை உணர்றேன். தினமும் காலையும், மாலையும் பயிற்சிகள்ல ஈடுபடுவேன். என்னை விட மூத்தவங்க எனக்கு பயிற்சி கொடுப்பாங்க. இளையவங்களுக்கு நான் பயிற்சி கொடுப்பேன். ஸ்கூல் படிக்கும்போதே பல போட்டிகள்ல ஜெயிச்சிருக்கேன். இந்தக் கலைகள்தான் எனக்கான ஆற்றலைக் கொடுக்குது. எனக்கான அடையாளமும் இதுதான்’’ என்கிறார்.

- கி.ச.திலீபன்