YouTubeல் கலக்கும் பெண்கள்



ஊடகத்தை மக்கள் வசப்படுத்தியதே இணையத்தின் வெற்றி. திறமையுள்ள எவரும் வெளிச்சத்துக்கு வர முடியும் என்கிற நிலையை இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் கொண்டு வந்திருக்கின்றன. குறிப்பாக யூ ட்யூப் போன்ற சமூக வலைத்தளத்தின் மூலம் இன்றைக்கு பல திறமையாளர்கள் பொது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்கள். பொழுதுபோக்கு அம்சங்களில் திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் பிடித்த இடத்துக்கு நிகரான இடத்தை யூ ட்யூபும் பிடித்திருக்கிறது.

இங்கே யார் வேண்டுமானாலும் சேனல் தொடங்கலாம். மக்களுக்குப் பிடித்தமான வீடியோக்களைத் தந்தால் மக்கள் அவர்களை நிச்சயமாகக் கொண்டாடுவார்கள். இன்றைக்குக் கோலோச்சிக் கொண்டிருக்கும் யூ ட்யூப் சேனல்களில் கவனிக்க வைக்கும்படியான பங்களிப்பைத் தரும் பெண்களை அவர்கள் தோன்றும் வீடியோக்களில் மட்டுமே அறிந்திருந்தபடியால் அவர்கள் குறித்து தெரிந்து கொள்ளும் ஆவலில் தொடர்பு கொண்டேன்.

நக்கலைட்ஸ் சேனல் - தனம்
கோவைக்கார குசும்பர்களின் நையாண்டித்தனங்கள்தான் ‘நக்கலைட்ஸ்’ சேனல். அவர்கள் வெளியிட்ட ‘அம்மா அலப்பறைகள்’ வீடியோ லட்சம் பார்வைகளை கடந்து வெற்றி பெற்றது. அதில் அம்மாவாக நடித்திருந்த தனம் ஒட்டுமொத்த அம்மாக்களையும் பிரதிபலிப்பது போல் நடித்திருந்தார். அவரது இயல்பான நடிப்பும், சரளமான கொங்கு மொழியும் காணும் அனைவரையும் கவர்ந்தது. தனம் அம்மாவிடம் பேசினேன்...

‘‘நானும் என் கணவர் பொன் சந்திரனும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள். நக்கலைட்ஸ் சேனலோட ஸ்க்ரிப்ட் ரைட்டர் பாலச்சந்திரன் பிரசன்னாவும் அதே சிந்தனை உடையவர்ங்கிறதால அவருடன் நீண்ட கால நட்பு இருந்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் தன்னுடைய மாதொருபாகன் நாவலில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி தாக்கப்பட்டார். அது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல். சாதிப்பெருமைதான் அந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது. அதைக் கிண்டல் பண்ணும் விதமா பாலச்சந்திரன் பிரசன்னா ‘ஆண்ட பரம்பரை’ங்கிற பேர்ல ஒரு குறும்படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதினார். அதுல நான் லிவிங்ஸ்டனுக்கு மனைவியாக நடிச்சிருந்தேன்.

பண மதிப்பிழப்பை கிண்டல் பண்ணி நிறைய வீடியோக்கள் எடுத்து ‘சும்மாநாச்சிக்கி’ங்கிற சேனல்ல பதிவேத்தினோம். அதில் சில வீடியோக்கள்ல நடிச்சிருக்கேன். அரசியலை நையாண்டி பண்ணதால அந்த சேனலை ப்ளாக் பண்ணிட்டாங்க. அப்புறம் அதே குழுவால் தொடங்கப்பட்டதுதான் நக்கலைட்ஸ். தொடர்ச்சியா அரசியல் நையாண்டி வீடியோக்களையே பண்ணிக்கிட்டிருந்தா ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள்ள சுருங்குற மாதிரி இருந்திடும்னுதான் வேற ஜானர்ல முயற்சி பண்ணோம்.

அப்படிப் பண்ணினதுதான் அலப்பறைகள் வரிசை. ‘அம்மா அலப்பறைகள்’ வெளியானப்போ அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது. எல்லோரும் தன்னோட அம்மாவை ஞாபகப்படுத்துற மாதிரியே இருக்குன்னு சொன்னாங்க. அந்த நடிப்பு அவ்வளவு இயல்பா இருந்ததுன்னு சொன்னாங்க. எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. நான் அவங்ககிட்ட எப்படி நடந்துக்குவனோ அதே மாதிரிதான் எல்லா அம்மாக்களும் பசங்ககிட்ட நடந்துக்குவாங்க. நான் கேமரா முன்னாடி நடிக்கிறேங்கிற உணர்வே இல்லாம அருணை என் மகனா நினைச்சு வாழ்ந்தேன்னுதான்னு சொல்லலாம்.

வசனம் எல்லாம் எழுதிக் கொடுத்துப் பேசினது கிடையாது. கான்செப்ட் என்னன்னு சொன்னாங்கன்னா அந்த இடத்தில் எது வருதோ அதை அப்படியே பேசிடுவேன். அதுல ஏதாவது மாற்றம் வேணும்னா அவங்க சொல்லுவாங்க. குழுவோட கலந்து முடிவு பண்ணிக்குவோம்’’ என்கிறவரிடம் சினிமா ஆர்வம் இருக்கிறதா? என்றதற்கு ‘‘யூ ட்யூபோ, சினிமாவோ நல்ல வாய்ப்புகள் கிடைச்சுதுன்னா பயன்படுத்திக்கனும்ங்கிறதுல உறுதியா இருக்கேன். என்னுடைய செயல்பாடுகள் சமூகம் சார்ந்ததா இருக்கணும்னுதான் நினைப்பேன். அப்படியான கதாப்பாத்திரங்கள் கிடைச்சா சினிமாவிலும் நடிப்பேன்’’ என்கிறார்.

நிவேதிதா
கையால் மலம் அள்ளும் தொழிலாளியின் வாழ்வை முன் வைத்து அந்த அவலத்தைக் காட்டிய குறும்படம் ‘முகமூடி’. அக்குறும்படத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இந்த இழிநிலையை எதிர்த்து தன் இயல்பிலிருந்து கேள்வி எழுப்புபவராக நடித்தவர் நிவேதிதா. அடுத்ததாக ‘துப்பறிவாளன் 2’, ‘அப்பா - மகள் அலப்பறைகள்’ ஆகிய வீடியோக்களிலும் வந்து கவனம் ஈர்த்தார்.

‘‘கோவைதான் எனக்கு சொந்த ஊர். மோகன்ராஜ்ங்கிற நண்பர் அவருடைய குறும்படத்தில் நடிக்க முடியுமான்னு என்னைக் கேட்டார். எனக்கு நடிப்பு பத்தி ஒன்னும் தெரியாதுன்னு சொன்னதும் என்னை ஒரு நடிப்புப் பயிற்சிக்கு அனுப்பி வெச்சார். அந்தப் பயிற்சிப் பள்ளியில் வகுப்பெடுக்க வந்த நக்கலைட்ஸ் ராஜேஷ்வர், பிரசன்னாவுக்கு என் நடிப்பு ரொம்பவும் பிடிச்சிருந்தது. ‘முகமூடி’ குறும்படத்தில் நடிக்கக் கேட்டாங்க. பெற்றோரை இழந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் கதாபாத்திரம்.

அவள் தன்னுடைய அனுபவத்திலிருந்து இந்த சாதிய கட்டமைப்பை குத்துற மாதிரியான கேள்விகளைக் கேட்பாள். அதை என்னால் ரொம்பவும் இயல்பா பண்ண முடிஞ்சுது. ஆரம்பத்துல பதட்டம் இருந்தது. என்னதான் நடிச்சாலும் திருப்தியில்லாமதான் இருந்தேன். ஆனா வீடியோக்களுக்கு வர்ற கமெண்டுகளை படிக்கிறப்போதான் நம்பிக்கையே வந்தது.’’ என்றவரிடம் அடுத்த கட்ட பணிகள் பற்றிக் கேட்டதற்கு, ‘‘என்னோடு போராடு’ன்னு ஒரு குறும்படத்தில் நடிச்சிருக்கேன். இன்னொரு யூ ட்யூப் சேனல்ல இருந்தும் ஒரு வாய்ப்பு வந்திருக்கு. ‘முகமூடி’ குறும்படத்துல எனக்குக் கிடைச்ச கதாபாத்திரம் மாதிரி நல்ல கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கேன்’’ என்கிறார்.

கவிதா எலிசபெத்
நக்கலைட்ஸ் சேனலின் ஸ்க்ரிப்ட் ரைட்டர் பாலச்சந்திரன் பிரசன்னாவின் மனைவி இவர். ‘முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை’, ‘துப்பறிவாளன்’, ‘பாப்பா அலப்பறைகள்’ போன்ற வீடியோக்களில் கவனம் ஈர்த்தவர் நடிப்பைத் தாண்டியும் சேனலின் நிதி நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிறார். ‘‘என் கணவர் மூலமா நானும் பல புத்தகங்கள் வாசிப்பேன். சமூகத்துக்குத் தேவையான பங்களிப்பை செய்யணும்ங்கிற எண்ணம்தான் நக்கலைட்ஸ்ங்கிற குழுவையே உருவாக்கியிருக்கு. நாங்க ஒரு குடும்பமா இணைஞ்சிருக்கோம். இங்கே எல்லாருமே பயிற்சி பெற்ற நடிகர்கள் கிடையாது.

ஆர்வத்தோடு வந்து இணைஞ்சுக்கிட்டவங்கள்ல நானும் ஒருத்தி. நான் நடிச்ச வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்குங்கிறதுல மகிழ்ச்சி. நடிப்பை விடவும் நக்கலைட்ஸ் சேனலுடைய நிர்வாகத்துலதான் அதிக கவனம் செலுத்துறேன். எங்க மகள் லெனி ஷெர்லின் ‘பாப்பா அலப்பறைகள்’ல பாப்பாவாக நடிச்சிருக்கா. அவளுக்கு நடிப்பு, கேமரா, ஓவியம்னு பல துறைகளிலும் ஆர்வம். இப்படியா ஆர்வம் இருக்கிற பலர் இந்த சேனல் மூலமா வெளிய வருவாங்க’’ என்கிறார் கவிதா.

மெட்ராஸ் சென்ட்ரல் சேனல் - ஆர்.ஜே ஆனந்தி
‘ரீல் அந்து போச்சு’ என்கிற நிகழ்ச்சியில் முத்துவுடன் இணைந்து தமிழின் உப்புமா படங்களை வகையாக கேலி செய்வதில் ஆனந்தி ஸ்பெஷலிஸ்ட். ரேடியோ ஜாக்கியான ஆனந்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சீரியஸான நிகழ்ச்சி ஒன்றினைத் தொகுத்து வழங்கினார். ஆனால் நக்கலும், நையாண்டித்தனமும்தான் இவரை புகழின் வெளிச்சத்துக்குக் கூட்டி வந்திருக்கிறது.

‘‘கோவைதான் என் சொந்த ஊர். பி.எஸ்.ஜி கல்லூரியில்தான் விஸ்காம் படிச்சேன். படிக்கிற காலத்துலயே சூரியன் பண்பலையில பகுதி நேர நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருந்தேன். அப்புறம் முழு நேரமாகவும் பண்ணேன். சென்னை வந்து தனியார் பண்பலையில் வேலை பார்த்துட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினேன். அப்ப என் கூட தொகுப்பாளரா இருந்தவர்தான் முத்து. அவர் மூலம்தான் நான் மெட்ராஸ் சென்ட்ரலுக்குள்ள வந்தேன். காசு கொடுத்து படம் பார்க்குறவங்களுக்குத் தரமான படத்தைக் கொடுக்கணும்.

சினிமாவைப் பத்தின அடிப்படையான தெளிவு கூட இல்லாம எடுக்கப்படுற மூன்றாம் தரப் படங்களைத்தான் ‘ரீல் அந்து போச்சு’னு கலாய்க்குறோம். இதுவரைக்கும் நான் காமெடியா நிகழ்ச்சியைத் தொகுத்ததில்லை. இந்த நிகழ்ச்சியிலதான் இவ்வளவு நகைச்சுவையா பண்றேன். முத்து மெட்ராஸ் சென்ட்ரல் டீம் கூட சேர்ந்து படம் பார்த்துடுவார். நான் தனியா பார்ப்பேன். ரெண்டு பேரும் ஷூட் போறதுக்கு முன்னாடி எந்தெந்த காட்சிகளைப் பத்தி பேசலாம்னு டிஸ்கஸ் பண்ணிக்குவோம். அப்புறம் எல்லாம் நாங்க பேசுறதுதான். இது ஸ்க்ரிப்டட் கிடையாது.

அந்த நேரத்துல என்ன வருதோ அதைப் பேசிடுவோம். எனக்கு மணிரத்னம் படங்கள் பிடிக்கும். பிரம்மாண்டத்தின் மேலயெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. தரமான படமா இருக்கணும்னு நினைப்பேன். இந்த மாதிரி மூன்றாம் தரப் படங்களையெல்லாம் நான் பார்க்கவே மாட்டேன். பார்த்தாலும் எனக்கு கடுப்பு வரும். இந்த நிகழ்ச்சி பண்ண ஆரம்பிச்சப்புறம் நான் அதை ரொம்ப சந்தோஷமா பார்க்க ஆரம்பிச்சுட்டேன்’’ என்றவரிடம் இந்த ஓட்டு ஓட்டுறீங்களே இதுவரைக்கும் உங்களுக்கு எந்த எதிர்வினையும் வந்ததில்லையா என்றதற்கு ‘‘எக்கச்சக்கமா வந்திருக்கு. கமெண்ட்ல வந்து பயங்கரமாத் திட்டுவாங்க.

நம்மளை விமர்சிச்சா பரவாயில்லை. ஆனால் ரொம்ப வக்கிரமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுவாங்க. ஆரம்பத்துல அதைப் பார்த்தப்ப ரொம்பவும் கஷ்டமா இருந்தது. ஆனால் போகப் போகப் பழகிடுச்சு. ரொம்பவும் கூலா எடுத்துக்க ஆரம்பிச்சுட்டேன்’’ என்றவரிடம் சினிமா ஆர்வம் இருக்கா? என்றேன். ‘‘இதுவரைக்கும் நானும் அந்த வாய்ப்பைத் தேடிப் போகலை. அதுவும் வரலை. அது மேல பெரிய ஆர்வமும்
இல்லை’’ என்கிறார்.

பொறி உருண்டை சேனல் - ஹரிதா
முழுவதும் பெண்களால் நடத்தப்படும் யூ ட்யூப் சேனல் பொறி உருண்டை. எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் ஹரிதாதான் இதைத் தொடங்கியவர். நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என இச்சேனலின் ஆல்ரவுண்டராகத் திகழ்கிறார் ஹரிதா. ‘‘கேமரா மேலான ஆர்வம் சின்ன வயசுல இருந்தே இருந்ததுதான். என் ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்ட என் கணவர் எனக்கு ஒரு கேமரா வாங்கித் தந்தார். அதை வெச்சு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் யூ ட்யூப் சேனல் ஐடியா வந்தது. தோழிகளோடு சேர்ந்து இந்தச் சேனலைத் தொடங்கினேன். முதல் வீடியோவை என்ன கான்செப்ட்ல பண்ணலாம்னு யோசிச்சோம்.

ஒன்னும் கிடைக்கலை. அதையே கான்செப்ட்டா வெச்சு முதல் வீடியோவைப் பண்ணினோம். முழுக்கவும் பெண்கள்தான் எங்க சேனல்ல இருக்காங்க. பெண்களுக்கான உளவியலை, அவங்க வாழ்க்கையை பிரதிபலிக்கிறதுதான் எங்க கான்செப்ட். அது யதார்த்தத்தைப் பேசுறதால ஹிட் அடிச்சிருக்கு. மதர் அட்ராசிட்டீஸ், கமிட்டட் அட்ராசிட்டீஸ், ஆயா அட்ராசிட்டீஸ்னு வரிசை கட்டி வீடியோ பண்ணியிருக்கோம். இதெல்லாம் பெண்களுக்கான வீடியோ மட்டும் கிடையாது. ஆண்களுக்கும்தான்.

கமிட்டட் அட்ராசிட்டீஸ் பார்த்த ஆண்கள் பலர் தங்களோட காதலியை நினைவுபடுத்துறதா கமெண்ட் பண்ணாங்க. இரு தரப்பினரையும் கவரும் விதத்துலதான் கான்செப்ட் பிடிக்கிறோம். ட்ரைபேட்ல கேமராவை வெச்சு நானே ஷூட் பண்ணி, நானே நடிச்சு, நானே எடிட்டிங்கும் பண்றேன். ஆர்வம் உள்ளவங்க ஒவ்வொருத்தரா சேனல்ல இணைஞ்சு கிட்டிருக்காங்க. பெண்களால் மட்டுமே நடத்தப்படுற சேனலா இது இருந்தாலும், இது பெண்களுக்கான சேனல் மட்டுமே கிடையாது’’ என்கிறார். இச்சேனல் ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதிக பார்வைகளைப் பெற்று முன்னேறியிருக்கிறது. முழுவதும் பெண்களால் மட்டுமே நடத்தப்படும் இது போன்ற சேனல்களை நாம் வரவேற்க வேண்டும்.

-  கி.ச.திலீபன்