கானா Queen



இசைவாணி

பொதுவாக ஆண்கள் மட்டுமே பாடி வந்த கானாவை பெண்களாலும் பாட முடியும் என்று களம் இறங்கி இருக்கிறார் சென்னை மண்ணடியை சேர்ந்த இசைவாணி. சென்னை ஏராளமான அடையாளங்களை கொண்ட பெருநகரம். சென்னை மக்களின் தொன்று தொட்ட அடையாளங்களில் ஒன்றுதான் கானா. உழைக்கும் மக்கள், கவலை மறக்கும் பொழுதுபோக்குகளில் முக்கிய பங்கு வகிக்கிறது கானா இசை. “மனிதன் உருவாகுமிடம் கருவறைதானடா, கடைசியாக சேருமிடம் கல்லறை தானடா...”  குரலெடுத்து பாடுகிறார் இசைவாணி.

“தனியார் தொலைக்காட்சியில் நடந்த கானா பாடல்கள் குறித்த நிகழ்ச்சியில் என்னுடைய 13 வயதில் நான் பாடிய முதல் கானா பாடல் இதுதான்” என்றவர் தன்னுடைய இசைப் பயணம் குறித்து பகிர்ந்துகொண்டார். “என்னுடைய அப்பா கீ போர்டு பிளேயர். இசை மீது அவருக்கு இருந்த காதலாலே எனக்கு இசைவாணி என்று பெயர் வைத்த தாக சொல்லுவார். எனக்கும் இசை மீது ஆர்வம் ஏற்பட என்னுடைய அப்பாதான் காரணம். நான் சிறு வயதாக இருக்கும் போது அவருடைய எல்லா இசை நிகழ்ச்சி களுக்கும் என்னை அழைத்து செல்வார்.

அங்கு பாடல்களை கேட்டு கேட்டு நானும் பாடத் தொடங்கினேன். 8 வயதிலிருந்து நான் அப்பாவுடைய மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறேன். அந்த சமயத்தில்தான் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு மெல்லிசையை விட கானாதான் மிகவும் பிடிக்கும். அந்த நிகழ்ச்சியில் 10 பாடல்களுக்கு மேல் பாடினேன். அதன் பிறகு கானா பாடுவதற்கான சரியான மேடை எனக்கு கிடைக்கவில்லை” என்றார்.

‘‘கானா பாடுவதற்கு எந்த வித இசைக் கருவியும் தேவையில்லை. சாப்பாட்டு தட்டு அல்லது அன்னக்கூடையுமே கானா பாடகர்களின் இசைக்கருவியாக இருந்தது. நாளடைவில் டோலக் கானாவின் பிரத்யேக இசைக்கருவியானது. இயல்பான சொற்களோடு மெட்டெடுத்து பாடுவதே கானாவின் சிறப்பு. டோலக்கின் சத்தத்தோடு, சென்னைக்கே உரித்தான வட்டார மொழியில் மெட்டெடுத்து பாடும்போது அந்த இசைக்கு ஆடாதவர்களே இருக்க முடியாது. கானா பாடல்கள் சென்னை மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையது.  

கானா பாட்டை கேட்கும்போதே கவலைகள் எல்லாம் மறந்து போகும். அதனால்தான் சென்னை மக்களுடைய கொண்டாட்டங்களிலும், துக்கங்களிலும் கானா கட்டாயமாக இடம் பெறுகிறது. இந்த இசை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் இசை என்று சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இது உழைக்கும் மக்களுக்கான இசை, இதை யாராலும் தவிர்க்க முடியாது எனும் இசைவாணிக்கு இன்ஸ்பிரேஷன் பிரபல கானா பாடகர் ‘கானா உலகம்’ பழனிதான் என்கிறார்.

“நான் கானா பழனி அப்பாவின் எல்லா பாடல்களையும் கேட்பேன். அவருடைய பாடல் கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இன்பம், துன்பம், இறப்பு, பிறப்பு என வாழ்க்கையின் எல்லா தத்து வத்தையும் பழனி அப்பா தன்னுடைய பாடல்களில் சொல்லியிருப்பார். அவருடைய பாடல்கள்தான் என்னை கானா பாடுவதற்கு இழுத்து வந்தது என்று சொல்வேன். பழனி அப்பாவின் ‘நிச்சயம் ஒரு நாள் மரணமுண்டு, எப்போது வருமென்று தெரியாது’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

தெருக்களிலும், இரங்கல் கூட்டங்களிலுமே கேட்டுக்கொண்டிருந்த  கானாவை மேடை ஏற்றியதும், திரைப்படங்களுக்கு கொண்டு சென்றதிலும் கானா பழனிக்கு முக்கிய பங்குண்டு. 90களில் கானா திரைப்படங்களில் வரத்தொடங்கியது. கானாவிற்கு பெரும் வரவேற்பு கிடைக்க அடுத்தடுத்த திரைப்படங்களில் கானா பாடல்கள் பல்வேறு வடிவங்களில் இடம் பெற்றது. ஆனாலும் பெண்கள் கானா பாட முன்வரவில்லை’’ என்ற இசைவாணி கானாவில் பெண்களின் பங்களிப்பு குறித்து மேலும் பேசினார்.

“அப்போதெல்லாம் கானா நிகழ்ச்சி பெரும்பாலும் இரவு முழுக்க நடைபெறும். அதனால் பெற்றோர் கானா பாடுவதற்கு அனுப்புவதற்கு அச்சப்பட்டனர். கர்நாடக இசையோ, வேறு எந்த இசையையோ கற்றுக்கொண்டாலும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும், வருமானம் கிடைக்கும், கானாவில் என்ன கிடைக்கும். என்று பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் மீதும் தவறில்லை. ஏனென்றால் கானா பாடகர்களுக்கு அதற்கான மேடை கிடைக்கவில்லை. அவர்களின் பொருளாதாரமும் வளரவில்லை.

கானா இசைக்கான நல்ல மேடை அவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்பதுதான் உண்மை. ஆனால் இனி கானாவில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் பா.ரஞ்சித் அண்ணனுடைய ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழு அதற்கான மேடையை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதுவரை யாரும் செய்திடாத முயற்சியை அவர் செய்திருக்கிறார். அவருக்கு கானா பாடகர்கள் சார்பாக நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.  

அந்த மேடை எங்களுக்கு புதிது என்றாலும் எங்களாலும் சாதிக்க முடியும் என்று எங்களுக்குள் இருந்த திறமையை ரஞ்சித் அண்ணன் வெளியில் கொண்டுவந்திருக்கிறார். நாங்கள் தொடர்ந்து சிறந்த கானா பாடல்களை பாடுவதற்கு இந்த மேடை ஊக்கம் கொடுத்திருக்கிறது. ஒரு கலை மூலம் மக்களுக்கான அரசியலை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் தொடர்ந்து நாங்கள் இருப்போம்” என்று மகிழ்ச்சியும் நிறைவும் பொங்க பேசுகிறார் இசைவாணி. கானா உலகின் பெண் குரலுக்கு வாழ்த்துகள்!

- ஜெ.சதீஷ்