வழக்கறிஞர் பணியை விடமாட்டேன்தன்னுடைய முதல் திரைப்படத்திலே கம்பீரமான நடிப்புத் திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் ‘அருவி’ திரைப்படத்தின் கதாநாயகி அதிதி பாலன். தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை கனகச்சிதமாக முடித்துக் கொடுத்திருக்கிறார். மென்மையான வசனங்களில் தொடங்கி இந்த சமூகம் சார்ந்த தீவிரமான வசனங்கள் வரை தனக்கே உரிய இயல்பான  நடிப்பை வெளிப்படுத்திய அவரிடம் பேசினேன்.

உங்களை பற்றி சொல்லுங்களேன்…
நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான். அப்பா பிசினஸ் மேன், அம்மா ஹவுஸ் வைஃப். சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் சட்டப்படிப்பை  முடித்தேன். நாடகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பரதநாட்டியம், கால்பந்து விளையாடுவது, மியூசிக் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.  

வழக்கறிஞர் நடிகையானது எப்படி?
சினிமா துறை மீது எனக்கு சிறு வயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக் கறிஞராக பயிற்சி மேற்கொள்ளவிருந்த சமயத்தில், என்னுடைய பள்ளி நண்பர்  ஒருவர் 10 நாள்  தியேட்டர் ஒர்க் ஷாப் நடத்திக்கொண்டு இருந்தார்.

அதில் கலந்துகொண்டேன். அந்த நேரத்தில் நண்பர் ஒருவர் மூலம் ‘அருவி’ படத்திற்கு நேர்முகத்தேர்வு நடக்கிறது என்று தெரியவந்தது. நேர்முகத்தேர்வு எப்படி இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் தேர்வுக்கு போனேன்.  

நான் தேர்வு செய்யப்பட்டது எதிர்பாராத ஒன்று. மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. ‘அருவி’ கதையை படிக்கும் போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சாதாரண சினிமா கதையாக இல்லாமல், சவாலான ஒரு திரைப்படமாக இருக்கும் என்று தோன்றியது.

ஒருநாள் இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் போலவும் பாவனைகளோடு பின்னணி இசையிட்டு நடித்து காட்டினார் இயக்குனர் . எனக்கு முழு படத்தையும் பார்த்தது போலவே இருந்தது. அது வரை சவாலான இந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் நீங்கி, ஒரு நம்பிக்கை வந்தது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு,  நாடகத்திற்கு நடப்பது போல் ‘அருவி’ திரைக்கதைக்கான பயிற்சி முகாம் நடந்தது.

பெண் மைய சினிமா குறித்து உங்கள் பார்வை…
முந்தைய  கால கட்டங் களில் பெண்களை மையப்படுத்தி பல நல்ல படங்கள் வந்திருக் கின்றன. அப்படி வந்த படங்களில் ‘உதிரிப் பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு பின் பெண்களை மையப்படுத்திய சினிமாக்கள் அதிகமாக வரவில்லை. இப்போது மீண்டும் அது போன்ற படங்களை படைப்பாளிகள்  எடுக்கத் துவங்கிவிட்டனர் என்று கருதுகிறேன். பெண் மைய சினிமாக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. அவை பெண்களை ஊக்கப்படுத்த உதவியாக இருக்கும்.

‘அருவி’ திரைப்படத்தின் வெற்றியை எப்படி பார்க்கிறீகள்?
படப்பிடிப்பின் போது கூட ஃபுட்டேஜ் எதுவும் நான் பார்த்தது கிடையாது. முதல் முறையாக டெல்லியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் முழு படத்தையும் பார்த்து அழுதுவிட்டேன். நான்தான் இப்படி நடித்திருக்கிறேனா என்று என்னால் நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு படம் நன்றாக வந்திருக்கிறது.

‘அருவி’ திரைப்படத்தின் வெற்றி எனக்கு தொடர்ந்து சினிமா துறையில் பயணிக்கும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. சிலர் இந்தப் படமே போதும் வேறு எந்தப் படமும் நடிக்கவேண்டாம் என்று  சொல்கிறார்கள். அவர்களுடைய இந்த எதிர்பார்ப்பு என்னுடைய அடுத்த படம் இதைவிடவும் திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் என்னை தள்ளி இருக்கிறது. நானும் தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.

‘அருவி’ படக்குழுவினரோடு பணியாற்றிய அனுபவம் பற்றி…
இந்தப் படத்தினுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் ‘அருவி’ படத்தினுடைய படக்குழுதான். எல்லோரும் இயல்பாக பழகக்கூடியவர்கள்.

தங்களுடைய வேலையில் முழு ஈடுபாடு கொண்டவர்கள். என்னுடைய முதல் படத்திலே இப்படி ஒரு நல்ல குழுவிடம் வேலை பார்த்தது எனக்குக் கிடைத்த வரம். இயக்குனர் அருண் பிரபு நல்ல மனிதர். நட்புணர்வோடு ஒவ்வொருவரையும் அணுகுவார். மீண்டும் இது போன்ற ஒரு குழு எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஒரு குடும்பமாகவே நாங்கள் இருந்தோம்.

தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த இயக்குனர்கள் யார் யார்?
எல்லா இயக்குனரும் சிறந்த படைப்பாளிதான். அவரவர் கருத்துக்கு ஏற்றவாறு தங்களுடைய படைப்புகளை மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் இயக்குனர் பாலுமகேந்திரா எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். அவர்களுடைய படங்கள் எல்லாம் விரும்பி பார்த்திருக்கிறேன். இயக்குனர் வெற்றி மாறன் திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். சாதாரண திரைப்படமாக இல்லாமல் மக்களுக்கான படங்களை இயக்கும் இயக்குனர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

உங்களுக்கு பிடித்த நடிகர்கள்?
நான் சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்தது கிடையாது. திடீரென என் வாழ்வில் நடந்த அதிசயம் ‘அருவி’திரைப்பட வாய்ப்பு. அதனால் குறிப்பிட்டு எனக்கு சொல்ல தெரியவில்லை. ஒரு ரசிகையாக எல்லா நடிகர், நடிகைகளையும் எனக்கு பிடிக்கும்.
 
உங்களுடைய அடுத்த திட்டம்?
சினிமா துறைக்கு வந்ததால் வழக்கறிஞர் வேலையை விட்டுவிட  மாட்டேன். தொடர்ந்து வழக்கறிஞர் பணிக்கான வேலையை செய்வேன். புதிய படங்களுக்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. என் நடிப்புக்கு தீனி போடும்படியான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறேன்.

- ஜெ.சதீஷ்