பேசும் ஓவியம்



மேலைநாட்டு கலைகளில் ஒன்றான டூடுல் ஆர்ட்ஸ் இதுவரை கார்ட்டூன் பொம்மைகள் வரைவது, எழுத்துக்களை அழகு சேர்க்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தக் கலையை புகைப்படங்களில் பயன்படுத்தி வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளார் புகைப்படக்கலைஞர் பானுப்பிரியா.

தன்னுடைய கலைத் திறமையால் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி இருக்கிறது. டூடுல் ஆர்ட்ஸ் புகைப்படக் கலைஞர் பானுப்பிரியாவிடம் பேசியபோது...  ‘‘கடந்த 5 வருடமாக புகைப்படத்துறையில்  இருக்கிறேன். இரண்டு வருடம் சென்னையில் வேலை பார்த்தேன்.  தற்போது கோயம்புத்தூரில் கிராஃபிக் டிசைன் மற்றும் 360 டிகிரி போட்டோ கிராஃபிக் டிசைனராக வேலை பார்த்து வருகிறேன். நான் பிறந்தது திண்டுக்கல் மாவட்டம். கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் முடித்தேன். கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையை முக்கியப் பாடமாகத் தேர்வு செய்து எடுத்துப் படித்தேன்.

கல்லூரி இறுதி ஆண்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டமிடல் (Project) வழங்கப்பட்டது, அதில் நான் புகைப்படக் கலையைத் தேர்ந்தெடுத்து அது தொடர் பான வேலைகளில் இறங்கினேன். கல்லூரி படிப்பு முடித்ததும் புகைப்படம் எடுப்பதையே என்னுடைய முழுநேர ஃபேஷனாக்கிக் கொண்டேன். புகைப்படத்துறையில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், அதில் நான் ஃபைன் ஆர்ட்ஸ் போட்டோ கிராஃபியினை தேர்ந்தெடுத்தேன். ஒரு புகைப்படத்தை கண்களால் பார்க்கும் போது அது நமக்கு புகைப்படமாகத் தெரியாமல் ஒரு ஓவியமாகத் தெரியவேண்டும்.

அப்படியான புகைப்படங்களையே எடுக்க வேண்டும் என முடிவு செய்து, இயற்கை வளங்கள், ஸ்டிரீட் போட்டோஸ் எடுப்பதில் அதீத ஆர்வம் காட்டத் துவங்கினேன்.  கேண்டிட் ஃபோட்டோ மற்றும் ஈவன்ட்ஸ் தொடர்பான புகைப்படங்களை எடுப்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படவில்லை. பின் நவீனத்துவ ஓவியம் போல் என்னுடைய புகைப்படங்களும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்றே முயற்சி செய்கிறேன். சென்னையில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியில் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறது என  என் நண்பர் மூலமாக அறிந்து, நான் எடுத்த புகைப்படங்களை சற்று வித்தியாசமாக டூடுல் ஆர்ட்ஸை பயன்படுத்தி அதனை புகைப்பட தேர்வுக்கு அனுப்பினேன்.

நான் டூடுல் ஆர்ட்ஸ் செய்ய வேண்டும் என்று புகைப்படம் எடுக்கவில்லை. சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவது எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம்.அதுவே என்னை புகைப்படத் துறையினை நோக்கி உந்து சக்தியாகத் தள்ளியது. எனவே இந்த இரண்டையும் ஏன் ஒன்றாக பண்ணக்கூடாது என யோசித்த போதுதான் எனக்கு டூடுல் ஆர்ட்ஸ் போட்டோஸ் எண்ணம் வந்தது. ஏற்கனவே நான் எடுத்த புகைப்படங்களில் டூடுல் ஆர்ட்ஸை பயன்படுத்தினேன். இந்த புகைப்படங்களுக்கு சமூக வலைத் தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவே என் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக நான் எண்ணினேன்.

சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி கார்ட்டூன்களை வரைவதுபோல டூடுல் ஆர்ட்ஸை பயன்படுத்தி சமீபத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களின் பிரச்சனையை சித்தரிக்கும் ஒரு டூடுல் ஆர்ட்ஸ் புகைப்படத்தை இணையத்தில் நான் வெளியிட்டேன். எனது அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டது.  அரசியல் பிரச்சனைகளை மையப்படுத்தியும் அதற்கேற்ற புகைப்படத்தை எடுத்து, அதில்  டூடுல் ஆர்ட்ஸ் ஓவியத்தை வரைய வேண்டும் என்கிற புதிய முயற்சியை தொடங்க இருக்கிறேன்.

புகைப்படங்களில் இதுவரை யாரும் டூடுல் ஆர்ட்ஸை பயன்படுத்தியது இல்லை. ஒரு புது முயற்சியாகவே தொடங்கியிருக்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான புகைப்படங்களை டூடுல் ஆர்ட்ஸ் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். நான் எடுத்த ஒவ்வொரு புகைப்படமும் எனக்கு ஒவ்வொரு அனுபவத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஸ்டிரீட் போட்டோஸ் எடுக்கும் போது ஏழை எளிய மக்களின்  வாழ்வியலை என்னால் உணர முடிந்தது’’ என்கிறார் இவர்.

- ஜெ.சதீஷ்