நீராலானது இவ்வுலகு



அரசின் மணல் கொள்(ளை)கை `யாயும்
ஞாயும் யாராகியரோ எந்தையும்
நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’

மண்ணுக்கும் நீருக்குமான நெருக்கத்தோடு காதலின் இறுக்கத்தை உருவகப்படுத்துகிறது குறுந்தொகை. அத்தகைய உறவை கொண்டுள்ளன நீரும் மண்ணும். பூமியின் மிக முக்கிய அங்கம் நீரும் நிலமும். மண்ணின் தன்மையை நீரும், நீரின் தன்மையை மண்ணும் முறைப்படுத்துகின்றன. இந்த பரிமாற்றங்கள் பல லட்சம் கோடி வருடங்களாக இயற்கையில் தொடர்ந்து நடந்து வருகின்றன. உயிரிகளிடம் எப்படி பல்வேறு நிலையில் பல ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றனவோ, அதுபோலவே மண்ணுக்கும் நீருக்கும் இடையில் பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. மண்ணுக்கும் நீருக்குமான இந்த வேதியல் உறவில் பிறந்த உயிரினங்களே நாம் அனைவரும்.

உண்மையில் நம்முடைய முன்னோர் அவைதான். இன்றும் பழங்குடி மக்கள் காடுகளையும், மலைகளையும், நதிகளையும் தம்முடைய உறவுகளாக கொண்டாடுவது இதன் காரணமாகவே! வேட்டையாடிக் கொண்டிருந்த மனித சமூகம் விவசாயக் குடி மக்களாக மாற காரணமாக இருந்தது நதிக்கரையோரங்களே! இப்படி நமக்கு எல்லாமுமாக இருக்கும் மண்ணையும் நீரையும் நவநாகரிக மனித மனம் எப்படி பார்க்கிறது? எப்படி பயன்படுத்துகிறது?  அதிலும் குறி்ப்பாக மணல் மீது தொடுக்கப்பட்டு வரும் வன்முறை என்பது இனப்படுகொலைக்கு நிகரானது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக தனி நபர்களால் மணல் சுரண்டப்படுவதை எதிர்த்து 2000ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் மணல் திருட்டை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு ஆணையிட்டது. இந்த உத்தரவு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து 2003ம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் மணல் அள்ளுவதை தடை செய்து சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசே இனி மணல் குவாரிகளை எடுத்து நடத்தும் என்னும் சட்டமும் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக பல தனியார் நிறுவனங்கள் வழக்குப் பதிவு செய்தன. இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றன தனியார் நிறுவனங்கள். உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. இதன்படி 2003ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீர்நிலைகளில் மணல் எடுக்கும் உரிமை என்பது தமிழக அரசிடம் மட்டுமே உள்ளது. இருந்தபோதிலும் மணல் திருட்டு என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறதே? அதன் மர்மம் தான் என்ன?
 
மணல் குவாரிக்கான உரிமை வாங்குவது என்னவோ பொதுப் பணித் துறைதான். ஆனால் மணல் அள்ளும் வேலையை செய்வது தனியார்கள். புரியவில்லையா? மணல் அள்ளும் உரிமையை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பொதுப் பணித் துறை பெறும். அதற்குப் பின்பு மண் அள்ளுவதற்கான வேலை தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தங்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் இஷ்டம் போல மணலை கொள்ளையிடுவதை வேடிக்கை பார்க்கும் நிலைதான் இன்று பல இடங்களில் உள்ளது.

மணல் குவாரிக்கான உரிமை என்பது தமிழ்நாடு கனிம வள சட்டத்தின்படி கொடுக்கப்படுகிறது. இச்சட்டப்படி மணல் எடுக்கும் உரிமையை வழங்கக் கூடிய அதிகாரம் படைத்தவர் மாவட்ட ஆட்சியர். மணல் எடுக்கும் உரிமையை அளிப்பதற்கு முன்பு சில ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும். நிலத்தின் தன்மை, நீரின் தன்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து பின்புதான் ஆட்சியர் தனது அனுமதி ஆணையைத் தர வேண்டும். இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை வாசகர்களாகிய உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

2010ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் அதிகப்படியாக அள்ளப்படுவதாகவும் அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பல பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.  மூத்த அரசியல்வாதி திரு. நல்லகண்ணு அவர்களும் இந்த பொது நல வழக்கில் வாதிட்டார். இந்த வழக்கில் பல முக்கிய அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. குறிப்பாக பொக்லைன் போன்ற இயந்திரங்களைக் கொண்டு மணல் அதிகப்படியாக சுரண்டப்படுவதாகக் கூறப்பட்டது. மேலும் மணல் அள்ளும் முறை என்பது அறிவியல்பூர்வமாக இல்லை என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது.

இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்கு தாமிரபரணியில் மணல் எடுப்பதை தடை செய்தது. மேலும் இயந்திரம் கொண்டு மணல் எடுக்கும் முறைக்கும் தடை விதித்தது. ஆனால் பின்பு பதிவு செய்யப்பட்ட சீராய்வு மனுவின் அடிப்படையில்  மணல் எடுக்க இரண்டு பொக்லைன்களை மட்டும் பயன்படுத்தும் உரிமை வழக்கப்பட்டது. மணல் எடுக்கப்படுவதை கண்காணிக்க ஓர் அமைப்பையும் உருவாக்கியது உயர் நீதிமன்றம்.

அதேவேளையில் அரசு நிறுவனங்கள் மணல் எடுப்பதில் பல்வேறு சட்டமீறல்கள் செய்துள்ளதையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. மணல் அள்ளுவதற்கான அனுமதி ஆணையை பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகே கொடுக்க வேண்டும் என்றும் கூறியது நீதிமன்றம். இதற்குப் பின்பு 2013ம் ஆண்டு மணல் குவாரிக்கான உரிமையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி அனுமதி பெற்று கொடுக்கப்பட வேண்டும் என்னும் புதிய உத்தரவைக் கொடுத்தது உச்ச நீதிமன்றம். ஆக தற்போதைய நிலையில் கனிமவள சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களின் கீழும் அனுமதி பெற்ற பின்பே மணல் எடுக்கும் உரிமை பெறுகிறது பொதுப் பணித் துறை.

சுற்றுச்சூழல் அனுமதி ஆணை பல விதிகளை உள்ளடங்கியது. குறிப்பாக மணல் எடுக்கப்படும் இடம், அளவு, எடுக்கப்படும் முறை, பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள் போன்ற விவரங்கள் அதில் இடம் பெறும். இந்த அனுமதி ஆணை பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மணல் எடுக்கப்படும் இடம் தெளிவாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதும் சட்ட விதி. மணல் எடுக்கப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும். எடுக்கப்படும் மண்ணின் அளவு பதிவு செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் தாசில்தாரால் செய்யப்பட வேண்டும்.

மாதந்தோறும் இத்தகைய தகவல்களை கொண்ட அறிக்கையை தாசில்தார் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அளிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட மணல் எடுக்கப்படும்போது நிகழும் மணல் இழப்பை ஈடு செய்ய வேண்டிய ஆய்வு மிக முக்கியமானது. ஒரு மீட்டர் அளவிலான மணல் சேருவதற்கு பல ஆயிரம் வருடங்கள் ஆகின்றன. எனவே ஒரே பகுதியில் மணல் தொடர்ச்சியாக அள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசோ  மணல் குவாரிக்கான அனுமதியை தொடர்ந்து நீடித்துக் கொண்டே போகிறது.

புதிய மணல் குவாரிக்கான அனுமதியையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதற்குப் பின் உள்ள அரசியல் காரணம் நாம் யாரும் அறிந்ததே.
கடந்த 2016ம் ஆண்டு மணல் குவாரிகளை முறைப்படுத்த புதிய விதிமுறை அறிமுகம் செய்தது மத்திய அரசு. புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என எதுவும் இல்லாத வெறும் வார்த்தைகளைக் கொண்ட ஆவணம் என்றுதான் அதனை கூற வேண்டும். மணல் பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் பார்வை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாக அதனை கூறலாம்.

வளர்ச்சிக்கான தேவை என்னும் அடிப்படையிலேயே மணல் அள்ளப்படுகிறது. அதுவும் அறிவியல் முறையில் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இவை இரண்டும் உண்மை இல்லை என்பது நமக்கெல்லாம் தெரியும். மேற்கத்திய நாடுகளில் புதிய கட்டுமான முறைகள் பின்பற்றப்படுகின்றன.

கட்டுமான பகுதியின் அருகாமையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே கட்டுமானங்கள் செய்யப்படுகின்றன. நாம் இன்னும் மாற்றத்தை பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறோம். மணல் பாதுகாப்பு என்பது மணலை மட்டுமே சார்ந்தது இல்லை. அது நீர்ப் பாதுகாப்பு தொடர்பானது, நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு தொடர்பானது. நிலத்தடி நீர் காணாமல் போனதற்கு மணல் கொள்ளைதான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. நீர் பாதுகாப்பிற்கு மணல் பாதுகாப்பு முக்கியம். அத்தகைய பாதுகாப்பை உறுதி செய்ய மணல் கொள்ளையை தடுக்கும் கொள்கைகளே நமக்கு தேவை.