குழந்தைகளின் ஊட்டச்சத்து அக்கறையில்லாத அரசுசத்துணவில் இனி முட்டை இல்லை

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு  சத்தான உணவை கொடுக்க வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் நாள்தோறும் ஒரு மாணவருக்கு ஒரு முட்டை என வழங்கப்பட்டு வந்தது. இனி அப்படி முட்டை வழங்கப்படமாட்டாது என்று அறிவிப்பு வந்துள்ளதை அடுத்து அதிருப்தி நிலவுகிறது.

அங்கன்வாடி முதல் 10-ஆம் வகுப்புவரை ஒரு மாணவருக்கு வாரத்துக்கு 5 முட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. 1989-ல் கலைஞர் மு. கருணாநிதி முதல்வராக இருந்த போது சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்தனர். பிறகு 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி இத்திட்டத்தை நிறுத்தியது.

தி.மு.க கொண்டுவந்த திட்டம் என்பதாலே இத்திட்டத்தை ஜெயலலிதா முடக்கிவிட்டார் என்று அரசியில் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதன் பின் 2004ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் முட்டை வழங்கும் திட்டம் அமலானது. வாரத்திற்கு ஒரு முட்டை என்றிருந்ததை வாரத்திற்கு 3 முறை முட்டை என்று அதிகரிக்கப்பட்டது.

முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்காக  பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, வாழைப்பழம் வழங்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இத்திட்டம் நடைமுறையில் இருந்தது. வாரத்திற்கு 5 நாட்களும் முட்டை வழங்கும் அளவிற்கு இத்திட்டம் செயல்பட்டு வந்தது. அதன்படி வாரத்துக்கு 3 கோடி முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. 

சத்துணவில் முட்டை வழங்குவதை நிறுத்தியுள்ள அதிமுக அரசின் செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்  கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியிடம் கேட்டபோது... “ஆளுநர் மாளிகையில் அசைவம் சமைக்கக்கூடாது  என்று எடுக்கப்பட்ட முடிவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவதை நிறுத்தி இருப்பதும் ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஆனால் அரசு தரப்பில் முட்டை உற்பத்தி  குறைவு காரணமாக நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையான காரணம் இல்லை. இத்தனை ஆண்டு காலங்களில் விலை உயர்வு ஏற்படவில்லையா? அப்போதெல்லாம் தடையில்லாமல் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வந்தது எப்படி? கோழிகள் நோய் தாக்குதல் ஏற்பட்டு அதிக அளவில் இறந்த போது கூட சமாளித்து முட்டை வழங்கப்பட்டது.

இப்போது திடீரென முட்டை உற்பத்தி இல்லை என்று சொன்னால் அதனுடைய அடிப்படை என்ன? அதற்கான ஆய்வு எங்கு நடத்தப்பட்டது? தமிழகத்தில் எத்தனை கோழிப் பண்ணைகள் இருக்கின்றன? அரசு அவற்றை எவ்வாறு கையாள்கிறது என்ற கேள்வி எழுகிறது. இதே அ.தி.மு.க ஆட்சியில் ஆடு, மாடுகள் வழங்கப்பட்டன. அப்போது தமிழகத்தில் ஆடு, மாடு உற்பத்தி அதிகம் இருந்ததா? ராஜஸ்தான் மாநிலத்தின் கால்நடை சந்தையில் இருந்து வாங்்கி வந்து கொடுத்தார்களே?

அதே போல் மற்ற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து கொடுக்கலாமே? துவரம் பருப்பு தமிழ் நாட்டில் விளைவிக்கப்பட்டுதானா மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள்? வெளி மாநிலத்தில் இருந்துதானே கொள்முதல் செய்யப்படுகிறது? இப்படி இருக்கும்போது முட்டை விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்றால் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கிக் கொடுத்திருக்க வேண்டுமே தவிர நடைமுறையில் இருக்கக்கூடிய பழக்கத்தை பா.ஜ.கவின் நிர்பந்தம் காரணமாகவே நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் காவி அரசு இருக்கிறது சில தினங்களுக்கு முன்னால் ஆளுநரின் ஆய்வு நடவடிக்கை, அதைத்தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் முட்டையை நிறுத்தியது, இரண்டுமே தமிழகத்தில் இந்துத்துவத்தின் கருத்துக்களை அ.தி.மு.க அரசு அமல்படுத்துகிறது என்பதையே காட்டுகிறது.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறது என்று  ஐ.நாவின் சுகாதார நிறுவனம் கூறிய பிறகுதான் தமிழ்நாட்டில் முட்டை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. உற்பத்தி குறைவுதான் காரணம் என்றால் குறிப்பிட்ட 3 நாட்களோ அல்லது 1 நாளோ கொடுக்கலாம். அதை தவிர்த்து முற்றிலுமாக நிறுத்துவது என்பதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது. இதனால் குழந்தைகளுடைய ஊட்டச்சத்து வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படும்” என்கிறார் பாலபாரதி.
 
வழக்கறிஞர் அருள் மொழியிடம் பேசிய போது, “விலை உயர்வு காரணமாக அரசு வேறு எந்தத் திட்டத்தையும் நிறுத்தவில்லை.  அப்படி இருக்கும்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையை நிறுத்தியிருப்பது, இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதைக் காட்டுகிறது. இந்திய அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது ஆர்.எஸ்.எஸ் சமஸ்கிருத மநுதர்மத்தால் வழிநடத்தப்படுகிறது.

அதனுடைய கொள்கைகளை அதிமுக அரசு அமல்படுத்தி வருகிறது. சம்ஸ்கிருதம் மேலானது, பசு மேலானது என்று சொல்பவர்கள்தான் இந்தியர்கள் என்று அறிவித்தாலும் அறிவித்து விடுவார்கள். இந்திய நாட்டில் சமஸ்கிருதம் பேசக்கூடியவர்களும், பசுவை தெய்வமாக வழிபடக்கூடியவர்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.

அந்த சிறுபான்மை மக்களின் பழக்கத்தை பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கும் முயற்சிதான் தமிழக அரசின் இந்த முடிவு. ஆதார் கார்டு இருந்தால்தான் சத்துணவு வழங்கப்படும் என்று சொன்னவர்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து பிரச்சனையில் எப்படி கவனம் செலுத்துவார்கள்? பா.ஜ.க.வின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டுவதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது” என்கிறார் அருள் மொழி.

-  ஜெ.சதீஷ்