கிச்சன் டிப்ஸ்...



* குலோப்ஜாமூன் மாவை உருட்டியவுடன் அதன் முனையில் ஒரு சிறு துளை போட்டு பொரித்தால் நன்றாக வேகும். சர்க்கரைப்பாகில் ஊறும்போது பாகை ஜாமூன் நன்றாக உறிஞ்சி விடும்.
* பகாளாபாத் தயாரிக்கும்போது சாதம் குழைய வெந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் சாதம் வேகவைக்கும் போதே ஒரு டம்ளர் அரிசிக்கு ஒரு டீஸ்பூன் வீதம் அவலை சேர்த்து வேகவைத்தால் சாதம் நன்றாக குழைந்திருப்பதுடன் ருசியாகவும் இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

* சமைக்கும் எண்ணெயில் இரண்டு, மூன்று மிளகாய் வற்றலை போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்.
* ரசம் தயாரிக்கும் போது தேங்காய் தண்ணீரை கொஞ்சம் சேர்த்துக் கொண்டால் ரசம் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.

* பஜ்ஜி செய்வதற்காக நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வில்லைகளில் மிளகாய்ப்பொடி, உப்பு இரண்டையும் சேர்த்துக் கலந்து அரைமணி நேரம் கழித்து இவ்வில்லைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்ய, காரமாய் சுவையாய் இருப்பதோடு உள்ளிருக்கும் காயும், உப்பும் காரமுமாக நன்றாக இருக்கும்.
* குளிர்காலத்தில் பாலில் மோர் ஊற்றியதும் கொஞ்சம் புளியை உருண்டையாக உருட்டி அதில் போட்டால் கெட்டியான தயிர் கிடைக்கும்.
- ஆர்.அஜிதா, கம்பம்.

* வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ, காரமோ அதிகமாகி விட்டால் ரஸ்க்கையோ அல்லது பிரெட் தூளையோ கலந்து விட்டால் அது சகஜ நிலைக்கு வந்து விடும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

* பச்சை வேர்க்கடலையை கீரையுடன் சேர்த்து வேகவைத்து கடைந்தால் குழம்பு சுவையாக இருக்கும். அரிசியுடன் பச்சை வேர்க்கடலையை 2க்கு 1 என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து தோசை செய்தால் நன்றாக இருக்கும்.
* கொள்ளுவை வறுத்து உடைத்து அந்தப் பருப்புடன் தக்காளி, பூண்டு, சின்னவெங்காயம், மிளகாய் சேர்த்து சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
- சு.கண்ணகி, மிட்டூர்.

* எத்தனை பிசைந்தாலும் மாவை இட்டு தோசைக்கல்லில் போட்டால் சப்பாத்தி விறைப்பாகச் சுட்ட அப்பளமாக வருகிறதா? வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து மாவுடன் கலந்து இட்டு பாருங்கள். சப்பாத்தி பூப்போல் மிருதுவாய் வரும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* வேகவைத்த வெள்ளை மூக்கடலையை பாகற்காய் பிட்ளையில் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் பிட்ளை தனி மணத்துடன் இருக்கும்.
- என்.பர்வதவர்த்தினி, பம்மல்.

* உளுந்து கலந்த போண்டா அரைக்கும்போது சிறிது தனியே எடுத்து பேரீச்சைப்பழத்தையும் போட்டு அரைத்து விடுங்கள். இனிப்பு கலந்த போண்டா பழ வாசனையுடன் புஸு புஸு என்று நன்றாக இருக்கும்.
* பொரியல் செய்யும்போது காய்கறிகளை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்த பிறகு கடுகு தாளிக்கும் போதே துருவிய தேங்காயைப் போட்டு சிவக்க வதக்கி விட்டு வேகவைத்திருக்கும் காய்கறிகளை கொட்டி கிளறி இறக்கி வைத்தால் பசுமையாகவும், நிறம் மாறாமல் சுவையாகவும் இருக்கும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* தோசை வார்க்க வராமல் கிண்டிப் போனால், புழுங்கலரிசியோடு 1 கை பச்சரிசி, 1 கரண்டி உளுத்தம்பருப்பு, 1 டீஸ்பூன் வெந்தயம் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு நன்கு நைசாக அரைத்து உப்பு போட்டு கரைத்து தோசை வார்க்கவும். தோசை பட்டு பட்டாக ருசியாக இருக்கும். தோசைக்கல்லில் இருந்து  நன்றாக எடுக்க வரும்.
- ஆர்.சகுந்தலா, சென்னை.