சென்னையின் மறுபக்கம்...



- ஜெ.சதீஷ்

சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்று பிராட்வே. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த இடத்தில் ஆங்கிலேயர் காலங் களில்  கட்டப்பட்ட உயர்ந்த கட்டிடங்கள் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. தீபாவளி, பொங்கல் என பண்டிகை காலங்கள் மட்டும் இல்லாமல் தினந்தோறும் சிறு குறு தொழில் முனைவோர் பிராட்வேயை நோக்கி படையெடுத்தபடியே இருக்கிறார்கள். பகலில் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடம்தான் இரவு நேரங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்விடமாக இருக்கிறது.

பகல் முழுதும் கூலி வேலை செய்துவிட்டு இரவு நேரத்தில் சாலையோரம் உள்ள கடைகள் எப்போது மூடப்படும் எப்போது நாம் உறங்க போகிறோம் என்று காத்துக்கிடக்கும் மக்களை சந்திக்க ஊர் அடங்கிய இரவு வேளையில் சென்றேன். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடிக்கொண்டிருந்த வேளை அது. இந்த மக்களின் வாழ்வாதாரம் என்ன? பண்டிகை நாட்களை எப்படி கொண்டாடுகிறார்கள்? என்று தெரிந்துகொள்ள ஒரு வங்கியின் வாசலில் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ராஜகுமாரியிடம் பேசினேன்.

எத்தனை ஆண்டுகளாக இங்கு இருக்கிறீர்கள்? என்று பேச்சுக்கொடுத்தேன். “நாங்க ஒரு நாலு தலை முறையா இங்கதான் இருக்கோம்” என்று பேசத் தொடங்கினார். “எங்களுக்கு ஓட்டு போடுற உரிமை இருக்கு, குடும்ப அட்டை இருக்கு, ஆனால் வீடு இல்லை. இந்த பிளாட்பாரம் தான் எங்களோட வீடு. எனக்கு இந்த ரோட்டுலதான் கல்யாணம் நடந்தது.

எனக்கு ரெண்டு புள்ளைங்க இருக்காங்க, பக்கத்துல இருக்குற அரசுப் பள்ளியில தான் படிக்கிறாங்க. பகல் முழுதும் பூ விக்கிறது, பழம் விக்கிறதுனு சின்னச் சின்ன வியாபாரம் நடத்தி பொழப்ப ஓட்டிட்டு இருக்கோம். எல்லா மக்களை போலவும் எங்களுக்கும் பண்டிகைகள் உண்டு.  கல்யாணம், கருமாதி எதுவா இருந்தாலும் இந்த தெருதான் எங்களுக்கு மணிமண்டபம். இங்கேயே மேடை போட்டு நிகழ்ச்சியை நடத்திப்போம். இரவு நேரத்தில் ரோட்டுல இருக்கோமே என்று எங்களுக்கு எந்த பயமும் இருந்தது இல்லை.”

இத்தனை ஆண்டுகளாக இருக்கிறீர்கள், குடியுரிமை பெற்றிருக்கிறீர்கள், இந்த அரசிடம் வீடு வழங்க கோரி மனு அளிக்கவில்லையா? என்றால், “வருஷத்துக்கு பத்துவாட்டியாவது போய் மனு குடுத்துட்டு வருவோம். எப்பவாச்சும் ஒரு நாள் ஒரு அதிகாரி வந்து எங்களை எல்லாம் போட்டோ எடுத்துட்டு போவார். ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை எல்லாம் நகல் எடுத்து தர சொல்லுவாங்க.

அவங்களுக்கு நகல் எடுத்து கொடுத்த பணத்தை சேர்த்து வெச்சிருந்தாலே சொந்தமா ஒரு வீடு வாங்கி இருக்கலாம் நாங்க.” இங்க இருக்கின்ற யாருக்கும் வீடு வழங்கப்படவே இல்லையா? என்று கேட்டால், “சென்ட்ரலை ஒட்டியுள்ள சாலை பகுதியில் இருந்தவர்களுக்கு வீடு கொடுத்துட்டாங்க. உயர் நீதிமன்றம் எதிரில் இருக்கின்ற யாருக்கும் இது வரை எந்த தகவலும் வரலை. நாங்களும் அரசாங்கத்து கிட்ட கேட்டுக் கேட்டு சலிச்சி போயிட்டோம்.  எல்லா பண்டிகையும் நாங்கள் கொண்டாடுவோம்.

எங்களுக்கு ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் அரும்பாடு பட்டாவது பிள்ளைகளுக்கு நல்ல நாட்கள்ல புதுத்துணி எடுத்து கொடுத்து அழகு பார்ப்போம். மனசுக்குள் நமக்கென்று சொந்த வீடு இருந்தால் நல்லா இருக்கும்னு தோணும். சின்னச் சின்ன சந்தோஷங்க எங்களை ஆறுதல் படுத்தும்” என்றார்.  ராஜகுமாரிக்கு விடைகொடுத்து விட்டு 10 கடைகளை கடந்து சாப்பிட்டு முடித்து உறங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்த கூலி தொழிலாளி மகாதேவனை சந்தித்து பேசினேன். தீபாவளி எல்லாம் எப்படி? என்றேன்.

“எங்களுக்கு ஏதுங்க தீபாவளி,  பொங்கல் எல்லாம்? அதெல்லாம் பணக்காரங்க கொண்டாடுற பண்டிகைங்க. எங்களுக்கு எல்லா நாளும் ஒரே மாதிரிதான்” என்று பேசத்தொடங்கினார். “எங்க தாத்தா இந்த ரோட்டோரத்துலதான் வாழ்ந்தாங்க. எங்க அப்பா, அம்மா இதே இடத்தில் தான் எங்களை வளர்த்தார்கள். இப்போ என்னுடைய பிள்ளைகளை நான் இங்கதான் வளர்த்துட்டு வர்றேன். பல முறை மனு கொடுத்தும் எங்களுக்கு வீடு தருவதாக எந்த தகவலும் வரலை. நான் எட்டாம் வகுப்பு வரைக்கும் அரசுப் பள்ளியில தான் படிச்சேன்.

அதுக்குமேல என்ன படிக்க வைக்கிறதுக்கு வசதி இல்லாததால மேற்கொண்டு என்னை எங்க அப்பா, அம்மாவால படிக்க வைக்க முடியல. சின்ன வயசுலயே கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். எந்த பண்டிகையும் சிறப்பா கொண்டாடுனதா எனக்கு நினைவில்லை. என்னுடைய குழந்தைகளுக்கு மட்டும் புதுத்துணி எடுத்துக்கொடுத்துடுவேன். நிரந்தரம் இல்லாத ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கோம்.  ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் ஓட்டு கேட்டு வர்றவங்க இந்த முறை உங்களுக்கு வீடு வந்துடும்னு வாக்கு கொடுப்பாங்க.

ஆனா சொல்றதோட சரி, அதற்கு பிறகு இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்குறது இல்லை. கடன் வாங்கி சிறு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். டிராஃபிக் ராமசாமினு ஒருவர் ரோட்டோரத்தில் கடைகள் போடக்கூடாதுனு வழக்கு போட்டு தடை விதிச்சிட்டாரு. இந்த பொழப்பும் போச்சி. இப்படி இருந்தா எப்படி நாங்க பண்டிகை கொண்டாடுறது. எப்படி ஒரு வேளை சோறு திங்குறது. எங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவும் இந்த அரசு தயாராக இல்லை. வீடு கொடுக்கவும் தயாராக இல்லை, இப்போது நாங்கள் பிழைப்பதும் கடினமாக ஆகிவிட்டது. 

இங்கேயே இருந்து படித்து நல்ல நிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். நாங்களும் வாடகை வீடு எடுத்து வாழலாம்னு வாடகை வீட்டிற்கு போனோம். வேலையில போதிய வருமானம் இல்லாததால் மறுபடியும் இங்கேயே வந்துவிட்டோம். சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து போகும் போது டூ வீலர் ஒன்னு என் அம்மாவை மோதிவிட்டு மின்னல் வேகத்தில் போயிடுச்சி. கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ல பார்க்க முடியாதுன்னு அனுப்பிட்டாங்க. எலும்பு உடைஞ்ச நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்க பணம் இல்லாததால் ஒரு மாசமா இருக்கும் இடத்தை விட்டு நகராமல் சாலை ஓரமாவே இருக்காங்க.

இந்த நிலையில்தான் நாங்க ஒவ்வொரு பண்டிகையையும் கடந்து வருகிறோம். இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் இரவு தங்குவதற்கு ஒரு இடம் இருக்குன்னு ஒரு நம்பிக்கையிருக்கு. மழைக்காலங்களில் எங்களுக்கு திண்டாட் டம்தான். குடும்பத்துடன் குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு கடை கடையா இரவு முழுக்க ஒதுங்கி நிற்கணும். தூக்கம் இல்லாமல் குழந்தைகள் மறு நாள் பள்ளிக்கு எப்படி போக முடியும். இப்படி தினம் சவாலான வாழ்க்கையைதான் இங்கு இருக்கக்கூடிய 1000க்கும் மேற்பட்ட மக்கள் சந்திக்கிறோம்.

இங்கு எல்லா மதத்தைச் சேர்ந்தவர்க்ளும், எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இருக்காங்க. எங்களுக்கு எல்லாம் பண்டிகை காலங்கள்ன்னு ஒன்னும் இல்லை. எப்போது எங்களுக்கு சொந்த வீடு கிடைக்கிறதோ அப்ப தான் எங்களுக்கு தீபாவளி பண்டிகையெல்லாம்” என்றார். சென்னையில் பிராட்வே மட்டும் இல்லாமல் சவுகார் பேட்டை, மெரினா உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் நாம் நடந்து போகும் சாலைகள்தான் இவர்களின் புகலிடமாக இருக்கிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அவர்களால் இயன்ற சிறு சிறு உதவிகளை செய்து வந்தாலும் நிரந்தர தீர்வாக அவர்கள் விரும்புவது சொந்த வீட்டை தான்.  அரசு இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்,  ஏ.டி.தமிழ்வாணன்