கேரளத்து சாரல் நிகிலா விமல்



கேரள மண்ணிலிருந்து தமிழ்த் திரையுலகுக்கு வந்திருக்கும் இன்னுமொரு சாரல் நிகிலா விமல். கேரளப் பெண்களுக்கு உரித்தான ஒரு தனித்துவ அழகின் சாயலை நாம் இவரிடமும் காண முடிகிறது. தமிழில் இதுவரை மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ‘வெற்றிவேல்’ மற்றும் ‘கிடாரி’ ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘வெற்றிவேல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘உன்னைப் போல ஒருத்தனை நான் பார்த்தது இல்லை’ பாடல் செம ஹிட். இப்போது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார். நம்பிக்கை தரக்கூடிய வரவான நிகிலாவிடம் பேசினேன்...

‘‘கண்ணூர்தான் எனக்கு சொந்த ஊர். அப்பா மத்திய அரசு ஊழியரா இருந்து ரிட்டயர்ட் ஆகிட்டார். அம்மா பரதநாட்டிய ஆசிரியர். பி.எஸ்.சி தாவரவியல் படிச்சிருக்கேன்’’ என்று தனது சுருக்கமான அறிமுகத்தைக் கொடுத்தவரிடம் திரைத்துறை ஆர்வம் குறித்துக் கேட்டேன். நடிக்கணும்ங்கிற ஆர்வம் இயல்பிலேயே வந்தது கிடையாது. வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டேன்னுதான் சொல்லணும்.

என்னோட 13 வது வயசுல ‘பாக்ய தேவதா’ங்குற மலையாளப் படத்துல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். அதுக்கு அப்புறம் குழந்தை நட்சத்திரமா வேற எந்த படமும் பண்ணலை. தமிழில் ‘பஞ்சு மிட்டாய்’ ங்கிற படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனேன். இரண்டு குறும்படங்களுடைய கதையை அடிப்படையா வெச்சு எடுத்த படம் அது. இன்னும் அந்தப் படம் வெளியாகலை. அடுத்ததா மலையாளத்துல திலீப்க்கு ஜோடியா லவ் 24x7 ங்கிற படத்தில் நடிச்சேன்.

என்னுடைய  போட்டோஸ் பார்த்துட்டு ‘வெற்றிவேல்’ படக்குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டாங்க. கொச்சினில் சந்திச்சு கதை சொன்னாங்க. அப்படிக் கிடைச்சதுதான் ‘வெற்றிவேல்’ பட வாய்ப்பு. இயக்குனர் சசிக்குமாரும், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரும் ‘கிடாரி’ பட இயக்குனர் பிரசாத் முருகேசன்கிட்ட ‘செம்பா’ கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னை பரிந்துரை செஞ்சாங்க. என் நடிப்புக்குத் தீனி போடுற மாதிரியான கதாப்பாத்திரமா அது இருந்தது’’ என்கிறார்.

மலையாளக் கலப்பு இல்லாமல் நன்றாகவே தமிழ் பேசுகிறார். எப்ப கத்துக்கிட்டீங்க? என்றதற்கு ‘பஞ்சு மிட்டாய்’ படத்துல நடிக்கும்போதே தமிழ் கத்துக்கிட்டேன். தமிழுக்கும், மலையாளத்துக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறதால தமிழ் கத்துக்கிறது கஷ்டமா இல்லை. ஆனா தெலுங்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. எந்த மொழியில நடிச்சாலும் அந்த மொழி தெரிஞ்சிருக்கணும்னு நான் நினைப்பேன். அப்பதான் அர்த்தம் புரிஞ்சு வசனம் பேச முடியும். அர்த்தமே புரியாம மனப்பாடம் பண்ணிக்கிட்டு பேசும்போது அதுல ஒரிஜினாலிட்டி இருக்காது’’ என்கிற நிகிலா ஒரு பரத நாட்டியக் கலைஞரும் கூட.

‘‘அம்மா பரதநாட்டிய ஆசிரியர்ங்கிறதால என்னையும் பரத நாட்டியம் கத்துக்க வெச்சாங்க. பள்ளி, கல்லூரிகளுக்கு இடையில் நடக்குற பரத நாட்டிய போட்டிகளில் பங்கெடுத்திருக்கேன். என்னோட அம்மா நடத்திட்டு வர்ற ‘சிலங்கா கலாக்ஷேத்ரா’வில் நானும் சில நேரங்கள்ல பரதம் கத்துக் கொடுப்பேன்’’ என்கிறார். அவரது வாழ்க்கை முறை மற்றும் விருப்பங்கள் குறித்துக் கேட்டதற்கு...

எல்லார் மாதிரியும்தான் என்னுடைய வாழ்க்கை முறையும். நடிகைங்கிறதுக்காக ஸ்பெஷலா எதுவும் கிடையாது. நான் எல்லாமே சாப்பிடுவேன். எனக்கு எவ்வளவு சக்தி தேவைப்படுதோ அதுக்கு அளவா மட்டும் சாப்பிடுவேன். பிடிச்சுதுங்கிறதுக்காக எதையும் அதிகமா சாப்பிட மாட்டேன்.  ஷூட்டிங்  இல்லாதப்ப வொர்க் அவுட் பண்ணுவேன். படம் பார்க்கப் பிடிக்கும். மலையாளம், தமிழ் திரைப்படங்களை தியேட்டர்ல போய் பார்ப்பேன்.

புத்தகம் வாசிக்கிற பழக்கம் இருக்கு. வைக்கம் முகம்மது பஷீர் கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இலக்கியத் தரம் உள்ள புத்தகங்கள்தான்னு இல்லை. எதுவா இருந்தாலும் படிப்பேன். ஆனால் சலிப்படைய வைக்காம இருந்தாப்போதும்’’ என்கிறார். நம்பிக்கை அளிக்கக் கூடிய விதமாக நடிக்கிறார் நிகிலா. இவரது நடிப்புக்காக பெற்ற பாராட்டுகள், விமர்சனங்கள் பற்றிக் கேட்டதற்கு...

‘‘வெற்றிவேல், கிடாரி படங்களில் நடிச்சதுக்கு நல்ல பெயர் கிடைச்சுது. கிடாரி படத்துல என் நடிப்பைப் பார்த்துட்டுதான் தெலுங்குப் பட வாய்ப்பு வந்தது. எனக்கு கதாநாயகியாக இருக்கிறதை விட நடிகையாக இருக்கிறதுதான் பிடிக்கும். தமிழ்ல நான் நடிச்ச இரண்டு படங்களுமே கிராமத்து சப்ஜெக்ட். கிராமப்பெண்ணாகத்தான் நடிப் பீங்களா?ன்னு கேட்குறாங்க.

இப்படித்தான் நடிப்பேன்னு ஒரு வட்டத்துக்குள்ள சுருங்கிப் போக நான் விரும்பலை. வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செஞ்சு நடிக்கணும்ங்கிற ஆசை இருக்கு. இப்ப தெலுங்குல ‘காயத்ரி’, மலையாளத்துல ‘அரவிந்தண்டே அதிதிகள்’ படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். எந்த மொழியாக இருந்தாலும் நான் விரும்புற மாதிரி வித்தியாசமான கதாப்பாத்திரம் கிடைக்கும்போது அதுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்’’ என்கிறார்.

- கி.ச.திலீபன்