அதிக புரதம் ஆபத்து!



புரதம் மனிதனுக்கு தேவையான முக்கியமான சத்துக்களில் ஒன்று.  இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியமானது.  தசை, உறுப்புகள், செல்கள், திசுக்கள் என உடல் வளர்ச்சிக்கு பெரிதளவில் தேவைப்படுவது புரதம்.  செரிமானத்தின் போது புரதம் சிறு சிறு துகள்களாக உடைக்கப்படுகிறது.  புரதத்தில் உள்ள அமினோ அமிலங்கள் உடலுக்கு சத்துக்களாக மாறுகிறது.  இந்த அமினோ அமிலங்களில் பல பிரிவுகள்  உண்டு.  சில புரத உணவுகளில் பெரும்பாலும் அனைத்து சத்துக்களும் கிடைத்து விடுகிறது.

 அசைவ உணவு, பால் பொருட்கள், மீன், முட்டை இவை ஒரு பிரிவு. தாவர வகையில் முழுதானியங்கள், பருப்புகள், விதைகள் என இவை மற்றொரு பிரிவு. உடலில் நீருக்கு பிறகு அதிகம் இருப்பது இந்த புரத சத்துதான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் உடலுக்கு ஏற்றவாறு புரத அளவு மாறுபடும். பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 46 கிராம், ஆண்களுக்கு 56 கிராம் புரதம் தேவை. நாம் யாரும் புரதம் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உண்பதில்லை. 

ஆனால் பலவகை உணவுகளை உட்கொள்ளும்போது அந்த அளவீட்டை நெருங்கி விடுகிறோம்.  தேர்ந்தெடுத்து பார்த்து பார்த்து புரதம் நிறைந்த உணவை உண்ணும் பழக்கம் பாடி பில்டர்ஸிடம் உண்டு. உடல் எடையை குறைக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைப்பவர்கள் புரதம் எடுத்துக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். புரதத்தின் அளவு நம் உடலில் குறைந்தாலும் பிரச்சனை, அதிகரித்தாலும் பிரச்சனை.  இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன் கூறுகையில்...

ஒருவரின் எடை 50 கிலோவாக இருந்தால் 40 கிராம் புரதம் அவருக்கு தேவைப்படும். ஒவ்வொரு வயதினருக்கும் புரதத்தின் அளவு மாறுபடும். புரதம் எடுக்கும் அளவிற்கு தண்ணீர் குடிப் பதும் கார்போஹைட்ரேட் உணவு எடுத்துக்கொள்வதும் அவசியம். தேவைக்கு அதிகமான புரதம் எடுக்கும்போது சிறுநீரகம் பாதிப்படையும். அதிகமாக புரதம் உட்கொள்வதால் உடலில் கால்சியம் இழப்பும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. அதை ஈடு செய்யும் அளவிற்கு கால்சியம் எடுத்துக்கொள்ளாவிட்டால் எலும்புப்புரை நோய் தாக்கும் அபாயம் அதிகம்.

அதனால் உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் சமஅளவில் புரதமும் கால்சியமும் எடுத்துக்கொள்வது சிறந்தது. உடல் தேவைக்கு அதிகமாக புரதம் உட்கொள்ளும்போது உங்கள் உடல் எடை அதிகரித்து உறுதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவை கொழுப்பாக மாறிவிடும்.  அதே போல புரதம் அதிகம் உட்கொள்பவர்கள் அதிகப்படியான தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறுவதற்கும் ஒரு காரணம் உண்டு.  அதாவது புரதத்தை உடைத்து சத்தாக மாற்றுவதற்கு தண்ணீர் தேவைப்படும். அதனால் உடலில் நீர்ச்சத்து இழப்பும் அதிகமாகவே இருக்கும். 

உடல் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கே அதிக புரதம் உட்கொள்வது சிறுநீரக பிரச்சனைகளை உருவாக்கும். முன்னதாகவே சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் புரதத்தின் அளவை உணவில் கூட்டும் போது சிறுநீரகத்தில் கல், செயல் இழப்பு போன்றவை ஏற்படும்.  ஆகையால் சிறுநீரக பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று புரதம் உட்கொள்வது நல்லது.

முதலில் புரதச்சத்து குறைபாட்டை போக்கும் முக்கிய உணவுகள் என்னவென்று பார்த்தோமானால் சிக்கன் போன்ற அசைவ உணவில் புரதம் நிறைந்து உள்ளது. அதிலும் நாட்டுக்கோழியாக இருந்தால் மிகவும் நல்லது. சிக்கனை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வாரம் 300 முதல் 500 கிராம் கோழி இறைச்சி சாப்பிடலாம்.

முட்டையிலும் புரதம் நிறைந்திருக்கிறது. நன்றாக உடற்பயிற்சி செய்பவர்கள், கடுமையான உடல் உழைப்பு செய்பவர்கள் தினமும் சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முறை உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம். அசைவ உணவை தவிர்ப்பவர்கள் பருப்பு வகையில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சாப்பிடலாம். முளைக்கட்டிய பயிர்களை சாப்பிட்டு வந்தாலே போதும். அதேபோல் சோயா பால், சோயா சீஸ் போன்றவற்றை சரியான கால இடைவெளி விட்டு சாப்பிடலாம். 

இவையெல்லாம் சராசரியான புரத தேவையை பூர்த்தி செய்யும் உணவுகள். இந்த உணவுகளின் அளவு அதிகரிக்கும் போது தான் புரதம் அதிகரித்து உடல் உபாதைகள் வருகிறது. புரதச்சத்து குறைந்தால் உடல் வளர்ச்சி, உயரம் தடைபடுதல், உடல் மெலிதல் போன்றவை ஏற்படும். உணவில் கார்போஹைட்ரேட் குறைந்தால் உடலில் கீடோ மெக்கானிசம் நடைபெற்று உடலின் சக்திக்காக கொழுப்பை எரிக்கும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும். மூலையில் உள்ள செரட்டோன் எனப்படும் ஹார்மோன்  உற்பத்திக்கு கார்போஹைட்ரேட் தேவை.

புரத உணவை எடுப்பதால் கார்போஹைட்ரேட் அளவு குறைந்து செரட்டோன் உற்பத்தி குறையும். இதனால் கோபம், மனஉளைச்சல் போன்ற உணர்ச்சி கோளாறுகள் தோன்ற வாய்ப்புள்ளது. புரத உணவு அதிகம் சாப்பிடுவதால் அதிக அளவில் உடல் நைட்ரோஜனை உற்பத்தி செய்யும். இதனால் சிறுநீரகம் இரண்டு மடங்கு வேலை செய்யவேண்டியதாக இருக்கும்.

அதிகமாக பீன்ஸ், பட்டாணி போன்றவை சாப்பிடும்போது அமிலம் உடலில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் அசிடிட்டி, வாயு பிரச்சனை, அஜீரணம், வயிறு உப்புசம் போன்ற உபாதைகள் தோன்றும். ஆகவே உடலில் புரதம் அதிகரிக்காமலும், குறையாமலும் பார்த்துக்கொண்டால் எந்தப் பிரச்னையும் நம்மை நெருங்காது என்கிறார் ஷைனி.

- பி.கமலா தவநிதி