களமாடும் பெண்கள் - டிராக் ரேஸ்சாலைகளில் அதிவேகமாக நம்மை கடந்து செல்லும் வாகனங்களை பார்க்கும்போது நமக்கு சிறு பதற்றம் உருவாகும். இதையே தொலைக்காட்சிகளில் வெளிநாடுகளில் நடக்கும் மோட்டார் சைக்கிள் பந்தயங்களை பார்க்கும் போது உற்சாகம் பீறிடும். மேலைநாடுகளில் பரவலாக விளையாடக்கூடிய விளையாட்டுகளில் ஒன்றான மோட்டார் சைக்கிள் பந்தயம் இந்தியாவில் மட்டும்தான் ஆபத்தான விளையாட்டாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில் ஆண்கள் மட்டுமே பங்குபெற்று வந்த இந்த விளையாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களும் களமாடுகிறார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஆசியப் போட்டியில் ஆண்கள், பெண்கள் என 7 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள்  கலந்து கொண்டனர்.

இதில் சென்னையை சேர்ந்த ரிஹானா மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கல்யாணி போட்டேகர் என்ற இளம் பெண்கள் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்று சென்னை திரும்பிய ரிஹானாவிடம் பேசினேன்.. “முஸ்லீம் சமுதாயத்தில் பெண்களுக் கென்று இருக்கும் பல கட்டுப்பாடுகளையும் கடந்து ஒரு வருடமாக ஸ்பீடு அப் ரேசிங் குழுவோட மோட்டார் பந்தயத்தில் விளையாடி வருகிறேன். தொடக்கத்தில் அச்சப்பட்ட என்னுடைய பெற்றோர்கள் தற்போது ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

இந்திய அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். அதன் அடிப்படையில் ‘ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா’ (FMSCI) என்னையும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கல்யாணி போட்டேகர் என்பவரையும் பரிந்துரைத்து சர்வதேச அளவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் விளையாட வைத்தனர். அக்டோபர் மாதம் தைவான் நாட்டில்  நடைபெற்ற போட்டியில் 3 பெண்கள், 4 ஆண்கள் என 7 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டோம். அனைத்து போட்டியாளர்களுமே சவாலாக இருந்தார்கள். அவர்களோடு போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தோம்.

இந்தியாவில் மட்டும்தான் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. திறமை இருந்தும் வெளிவரமுடியாத சூழலில் போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள். மற்ற நாடுகளில் ஆண், பெண் பாகுபாடின்றி விளையாடுகிறார்கள். அதிக புள்ளிகள் அடிப்படையில் போட்டியாளர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தியாவில் மற்ற விளையாட்டு  போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இந்த விளையாட்டிற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கும் எங்களுக்கு ஸ்பான்சர் தேவைப்படுகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறோம்.

இந்த விளையாட்டு நாடு முழுவதும் பரவலாக வளர்க்கப்படவேண்டும். தெருக்களிலும் சாலை களிலும் மோட்டார் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவது ஆபத்தானது. இதற்கென தற்காப்பு உடை அணிந்து டிராக் ரேஸ் ஓட்டுவதுதான் உண்மையான போட்டியாளர்களுக்கு அழகு. இதுவே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். இந்திய அரசே இந்த போட்டிகளை எடுத்து நடத்த வேண்டும். பெண்கள் குறிப்பாக அச்சப்படாமல் இந்த போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ரிஹானாவை தொடர்ந்து கல்யாணி போட்டேகரிடம் பேசியபோது, “அப்பா பைக் ரேசராக இருந்ததால் பைக் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும். பைக் ஓட்டுவதுதான் என்னுடைய பொழுது போக்கே. குதிரைப் பந்தயத்திலும் தேசிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறேன். பைக் ரைடிங் போட்டியில் கடந்த ஒரு வருடம் தேசிய அளவில் பங்கேற்று வருகிறேன். ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து ஆசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு என்னைத் தேர்வு செய்தனர்.

‘FIM’ என்று சொல்லக்கூடிய ஆசியா ரோடு ரேசிங் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது இடம் பிடித்தேன். இந்தி யாவில் இப்போதுதான் மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டு வளர்ந்து வருகிறது. இத்தகைய போட்டிகள் மற்ற நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்துவதாகவே  அமைந்திருக்கிறது. தொடர்ந்து நடக்கவிருக்கும் பெண் களுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் கலந்துகொள்ள இருக்கிறேன்.

சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்களுக்கு இந்திய அரசு ஊக்கமளிக்க வேண்டும். மோட்டார் ரேஸ் பந்தயத்தைப் பொறுத்தவரை இது ஒரு ஆபத்தான விளையாட்டு என்ற தவறான பார்வை இந்தியாவில் இருக்கிறது. இது குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இது போன்ற போட்டிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்’’ என முடித்தார்.

- ஜெ.சதீஷ்