கலைகளை கொண்டாடுவோம்



மொழி, கலாச்சாரம், மரபு என்று பல ரேகைகள் கொண்ட உள்ளங்கை போன்றது இந்தியா. அந்தந்த மொழி சார்ந்த மக்களுக்கு என்றுபாரம்பரியம்,கலாச்சாரம் அவரவர் அடையாளமாய் தொன்று தொட்டுத் தொடர்கின்றது. உடை, ஓவியம், கலைகள் என பலவும் தன் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்கின்றன. ஆனால் இந்தக் கலைகளைக் கொண்டாடுவதற்கென்று தனியாக நாள் எதுவும் இல்லை.

மக்களின் மனதோடும் வாழ்வோடும் பின்னிப் பிணைந்திருக்கும் இது போன்ற கலைகளைக் கொண்டாடுவதும், பியூஷன் வழியாக இணைப்பதும், டிரெண்டுக்கு ஏற்ப பாரம்பரியங்களை அப்டேட் செய்வதும் இன்றைய தேவை என்பதை திருப்பூர் நிப்டி காலேஜ் ஆஃப் நிட்வேர் ஃபேஷன்ஸ் கல்லூரி மாணவிகள் தங்களது புதிய முயற்சியால் உணர்த்தியுள்ளனர்.

அப்படி என்னதான் நடந்தது? அவர்களிடமே கேட்போம், ‘‘இந்தியா முழுக்க உள்ள ஆர்ட் அண்டு கிராஃப்டை இந்திய அளவுல கொண்டாடணும். அதுக்கு முதல்கட்டமா ஒரு நாள் ஒதுக்கணும். ஆன்லைன்ல உலகத்தையே ஒரு புள்ளியில இணைக்கிறோம். இந்தியாவோட ஒவ்வொரு மாநிலத்தின் பின்தங்கிய கிராமங்கள்ல அந்த மக்களோட பாரம்பரியக் கலைஞர்கள் வாழறாங்க. அந்த கலைகள் கண்டு கொள்ளப்படாததால படிப்படியா அழிஞ்சிட்டு வருது. கலைஞர்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்படறாங்க.

அதே மாதிரிதான் ஓவியம், சிற்பம் போன்ற கலைகளும் போன தலைமுறை ஆட்களை மட்டுமே நம்பியிருக்கு. இந்தத் தலைமுறை இளைஞர்கள் தங்களோட பாரம்பரியக் கலைகள் பற்றி யோசிக்கிறதில்லை. ஐ.டி. நிறுவனங்கள்ல வளமான மூளைகள் உயர்ந்த சம்பளத்துக்கு அடகு வைக்கப்பட்டிருக்கு. கார்ப்பரேட் நிறுவனங்கள் தர்ற அழுத்தம் தாங்காம பலர் பாரம்பரிய விவசாயத்துக்கு திரும்பியிருக்காங்க.

அது போல நம்மோட மண்ணையும், விதைகளையும் மீட்கறதுல இருக்கிற பொறுப்பு கலைகளை காப்பாத்துறதுலயும் இருக்கு. இதை இளைய தலைமுறையினர் உணரணும். ஜல்லிக்கட்டை மீட்கறதுக்கு கூடின மனங்கள் கலைகளை கொண்டாடுறதுக்காகவும் கூடணும். அதுக்கான முதல் முயற்சியா இந்தியாவை வரைஞ்சு... ஒவ்வொரு மாநிலத்திலும் அதோட அடையாளமா கலை, ஓவியம்...பாரம்பரியம்னு ஒரு விஷயத்தை ஓவியம், பெயின்டிங், கிராஃப்ட், கிளாத் டிசைனிங்னு பலவிதமா டெக்கரேட் பண்ணினோம்’’ என்கின்றனர் இவர்கள்.

இந்த முயற்சியை எப்படி திட்டமிட்டு செயல்படுத்தினோம் என்று விளக்குகிறார் ஃபேஷன் டெக்னாலஜியின் முதலாம் ஆண்டு மாணவி சந்தியா, ‘‘இது சாதாரணமா நடந்துடல. களத்துல இறங்குறதுக்கு முன்ன நிறைய ரிசர்ச் பண்ணினோம். ஒவ்வொரு மாநிலத்தோட அடையாளத்தையும் பட்டியலிட்டோம். நிறையப் படிச்சோம். தமிழ்நாட்டோட அடையாளங்களா விவசாயம், பாரம்பரியக் கலைகள், பாரதி, தஞ்சைப் பெரிய கோயில் வரை ஓவியத்தில் வரைந்தோம்.

கேரளாவின் இயற்கை வளம், கதகளி முகம், பெங்களூரின் அடையாளமா மயில், குஜராத் காந்தியை பென்சில் டிராயிங்ல கொண்டு வந்தோம், ராஜஸ்தான் பெண்ணை கலர்ஃபுல்லா டெக்கரேட் பண்ணினோம். இப்படி 12 பெண்கள் 40 நாள் தொடர்ந்து இந்தியாவையே ஆர்ட் அண்டு கிராஃப்ட்ல கொண்டு வந்தோம்.

இந்தியா முழுக்க உள்ள பாரம்பரியக் கலைகளை மீட்குறது ரொம்ப முக்கியமான வேலை. அதற்குன்னு ஒரு நாள் வந்தால் தான் பலராலும் கவனிக்கப்படும். அந்தக் கலைஞர்களும், கலைகளும் வெளியில வரும் வாய்ப்பு ஏற்படும். இந்திய அளவில் இவங்களோட கலைப்பொருட்களுக்கான கண்காட்சிகள் நடக்கும். சந்தைகள் உருவாகும். புதிய தொழில்நுட்பங்கள், பாரம்பரியக் கலைகளை உலகம் முழுக்க கொண்டு போறதுக்கான வாய்ப்பு கிடைக்கும்.

சின்னச் சின்ன விஷயங்களைக் கூட உலகளவுல யோசிக்க வேண்டியிருக்கு. இளைஞர்கள் இது போன்ற பாரம்பரியக் கலைகளை கத்துக்குற வாய்ப்பும் ஏற்படும். கலைகளைக் கொண்டாடாமல் நம்மால காப்பாற்ற முடியாது. அப்படியொரு எண்ணத்தை அரசுக்கு ஏற்படுத்துற முயற்சி தான் இது. இந்திய அரசு நம்ம பாரம்பரியக் கலைகளைக் கொண்டாட ஒரு நாள் தருமா?’’ என்று கேட்கிறார் சந்தியா. நமக்கும் அதே கேள்விதான்?

- கே.கீதா