நவோதயா பள்ளிகள் தேவையா?



இந்தியாவில் மத்திய அரசு கொண்டுவரும், மாநில சுயாட்சி அதிகாரத்திற்கு எதிரான பல திட்டங்களை எதிர்ப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் இன்றுவரை விளங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் கொண்டுவந்த குலக் கல்வித்திட்டமான, நவோதயா வித்யாலயா என்னும் மும்மொழிக் கல்வி திட்டம், திராவிட இயக்கங்களின் போராட்டங்களால் கைவிடப்பட்டது.

இன்று அதே திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவரும் முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசின் இந்தித் திணிப்பை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டாலும் மாபெரும் எழுச்சிப் போராட்டங்கள் மூலம் இந்தித் திணிப்பை உடைத்த பெருமை தமிழகத்தைச் சேரும்.

அன்றைய தமிழக முதல்வராக இருந்த அண்ணா அவர்கள் இருமொழிக் கல்வி என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று அழுத்தமாக தெரிவித்தார். அன்றைய பிரதமர் நேருவும் மாநிலங்கள் விரும்பாதவரை எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று உத்தரவிட்டார். 50 ஆண்டுகாலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த கொள்கை மாறாமல் ஆட்சியாளர்கள் நீதியை நிலைநாட்டி வருகின்றனர்.

அவ்வப்போது இந்தியை எப்படியாவது திணித்து விட வேண்டுமென்று மத்திய அரசு முயன்று தோற்றுப் போய் உள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்தியை குறுக்கு வழியில் திணிக்கும் முயற்சிதான்நவோதயா திட்டம். பெரும்பான்மையான சாமான்ய மக்கள் கேட்கின்ற கேள்வி ‘நவோதயாவா? அப்படி என்றால் என்ன? என்பதுதான். நாடு முழுவதும் ஒற்றை மொழியை  இந்தியா முழுவதும் திணித்து செல்வந்தர்களும் ஆதிக்க சாதியினர் மட்டும் கல்வி பயில வேண்டும் என்கிற திட்டமே நவோதயா திட்டம்.

கடந்தகால வரலாற்றில் மத்திய அரசு கொண்டு வந்த மாநில அரசுகளுக்கு எதிரான திட்டங்களை எல்லாம் தூசி தட்டி பா.ஜ.க. உயர்த்தி பிடித்திருக்கிறது.  பணமதிப்பீட்டு திட்டம், மாட்டிறைச்சி தடை, நீட் தேர்வு என அதைத் தொடர்ந்து நவோதயா என்று அதன் பட்டியல் நீளுகிறது. மேலும் மாநில அரசுகளால் நடத்த முடியாத பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் சமூக நீதிக்கு எதிரானது. நவோதயா வித்யாலயா பள்ளிகள் 30 ஏக்கர் நிலப்பரப்பில் மாவட்டத்திற்கு ஒன்று உருவாக்கப்பட்டு, தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டாலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் கொடுக்கப்படவில்லை.

இதனால் வர்க்கப் பாகுபாடு ஏற்பட்டு சமூகநீதி சிதைபடும். மேலும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக கொண்டுவருவதன் மூலம் தமிழ் மொழிக் கல்வி அழிவை நோக்கி நகரும். இது மொழி மூலம் ஓர் இனத்தின் பாரம்பரியத்தின் மீதும் கலாசாரத்தின் மீதும் தொடுக்கப்படும் அநீதியாகும். இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில்...
 
“மத்தியில் ஆள்வது காங்கிரஸாக இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும், தமிழகத்தின் மாநிலக் கொள்கைகளை பாதிக்கும் திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு பல திட்டங்கள் தமிழகத்தில் கைவிடப்பட்டுள்ளன. ஆனால் பாரதிய ஜனதா ஆட்சியில் மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன.

அதன் நீட்சியாகவே நீட் தேர்வு, காவிரிப் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என அதைத் தொடர்ந்து நவோதயா பள்ளிகள் மூலம் இந்தித் திணிப்பை தமிழகத்தில் கொண்டுவருவதற்கான முயற்சியாகத்தான் இதை பார்க்க முடிகிறது.  இது குறித்து தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் கூடாது, தமிழக அரசு நவோதயா பள்ளிகள்  தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தெளிவான அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.

இதையேதான் கடந்த காலகட்டத்திலும் தி.மு.க  தொடர்ந்து கடைபிடித்து வந்திருக்கிறது. முன்பு இருந்த அ.தி.மு.க தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா  போன்றோரும் இந்த நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் ஆன்மாவின் வழியில் நடக்கிறோம் என்று சொல்லி பதவிக்காக மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக இப்போதைய ஆட்சியாளர்கள் இழந்து வருகிறார்கள்.

அவர்களுக்கு மாநில உரிமைகளை பற்றிய கவலை இல்லை, விவசாயிகள் பற்றிய கவலை இல்லை, மாணவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை இல்லை, அவர்களது குறிக்கோள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும், இதற்காக தமிழகத்தையும் விட்டுகொடுக்கக்கூடிய சூழல்தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் யாரும் முதலீடு செய்ய வருவதில்லை. தமிழ்நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்றன.

மாதக்கணக்கில் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர். கேட்பதற்கு நாதியில்லை எனும் நிலை. தமிழக மக்களுக்கு இந்த அரசின் மீது அதிருப்தியையும் வெறுப்பையுமே  அதிகரிக்கும். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு தலையாட்டி பொம்மையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவேதான் தமிழகம் தொடர் போராட்டங்களை சந்தித்து வருவதை நாம் பார்க்கிறோம்” என்கிறார் கனிமொழி.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதித்து நீதிமன்ற தீர்ப்பு வந்த அடுத்த நாளே, தமிழகத்தின் முதல் எதிர்ப்பு குரலாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனக்கூட்டத்தை பெரியார் திடலில் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 50 ஆண்டுகாலமாக கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகின்ற சமூகநீதியை இன்றைய ஆட்சியாளர்கள் கைவிட்டுவிட்டனர். ஆர்.எஸ்.எஸ். மதவாத கொள்கைகளை தீவிரமாக திணித்து வருகிறார் மோடி.

தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி குறுக்கு வழியில் இந்தியை திணிக்க பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. கல்வியை அக்ரகாரச் சிறையாக மாற்றும் நவோதயா திட்டத்தை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இந்தியா ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிக்கிறதா என்று ஐயம் ஏற்படுகிறது.  தொடர்ந்து தமிழ் இனத்தின் மீது பண்பாட்டுரீதியாக தாக்குதலை தொடுத்து கூட்டாட்சி தத்துவத்தை பா.ஜ.க.  குழிதோண்டி புதைத்து விட்டது” என்று தெரிவித்தார்.

- ஜெ.சதீஷ்