மகிழ்ச்சி துயரம் இரண்டுமே எழுத்தாளராக இருப்பதுதான்- ஸ்ரீதேவி மோகன்

அ.வெண்ணிலா
இன்றைய இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத எழுத்தாளர் அ.வெண்ணிலா. இலக்கியத்தில் கவிதையோடும் வாழ்க்கையில் கவிஞரோடும் இணைந்து வாழ்பவர். கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து வசித்துக்கொண்டிருக்கும் இவர் அருமையான கவிஞராக கதையாசிரியராக 15 ஆண்டுகள் இலக்கிய உலகில் இயங்கி வருகிறார். பெண்ணின் வலிகளை, நியாயங்களை, தேவைகளை தன் எழுத்தில் நறுக்கென பதிவு செய்பவர். அவர் தன் எழுத்துலகம் பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டவை…

இளமைப் பருவம்
பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது எல்லாம் ஒரே ஊர் தான். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள அம்மையப்பட்டு கிராமம்தான் என் வாழ்விடம். வீட்டுக்கு ஒரே பிள்ளை. அம்மா, அப்பா, நான். இளம்பருவம் முழுக்க இந்த வட்டத்துக்குள் தான் என் வாழ்க்கை. இளமைப் பருவத்து நினைவுகள் மிகக் குறைவாகவே நினைவில் இருக்கின்றன.

சொற்ப எண்ணிக்கையிலான தோழிகள். வீட்டை விட்டு வேறெங்கும் வெளிச் சென்றதில்லை. தெருவில் பையன்களுடன் கோட்டி விளையாடியது, பள்ளியில் ஆசிரியர்களிடம் நற்பெயர் வாங்கும் பெண்ணாக இருந்தது, அதற்காகவே நன்றாகப் படித்தது, பள்ளி நேரம் போக, வீட்டில் செய்ய வேண்டி இருந்த நெசவு  வேலைகள்...

துண்டுத் துண்டாக சின்னச் சின்ன நினைவுகள் மனதில் காட்சிகளாக  இருக்கின்றன. பத்து வயதிற்குப் பிறகான நினைவுகளே ஓரளவு நினைவில் நின்றிருக்கின்றன. பெரும் செல்வவளமும் இல்லை. கடுமையான வறுமையும் இல்லை. எல்லாம் நடுத்தரமாகக் கொண்ட, மிகச்சாதாரண ஒரு பெண்ணுக்குரியதாகவே என் இளமைப் பருவம் கடந்திருக்கிறது.
 
எழுத ஆரம்பித்தது விபத்தா? லட்சியமா?
இரண்டும் இல்லை. விபத்தென்றால் ஒரு நள்ளிரவிலோ, ஒரு பௌர்ணமி நாளிலோ, அமாவாசையின் அடர் இருட்டிலோ, தொடர் மழை நாளிலோ என் எழுத்துப் பயணம் தொடங்கி இருக்க வேண்டும். எந்தப்பூவின் இதழும் வெடித்து எனக்குள் இருந்து எழுத்து விதைகள் பரவவில்லை. லட்சியம் என்றால் நேர்ந்து கொண்டு உருவாக்கிக் கொள்வது. எழுத்தாளராவதை யாராவது லட்சியமாகக் கொண்டு இலக்கை அடைந்திருக்கிறார்களா? எனக்குத் தெரியவில்லை. எழுத்து என்னைத் தேடி வரவில்லை.

நானும் எழுத்தைத் தேடி போகவில்லை. வாழ்வின் ஓட்டத்தில், அனுபவங்களின் மீளலில், எழுத்தும் நானும் ஒருவரை ஒருவர் கண்டடைந்தோம். சமூகத்துடன் உரையாட எனக்குத் தேவையெழுந்தபோது நான் பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்தினேன். மேடைகளில் பேசினேன். கூட்டங்கள் நடத்தினேன். கலந்துரையாடினேன்.

எல்லா நேரங்களிலும் எல்லாருடனும் இந்த வடிவங்களை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியாது என்ற நிலையில் எழுதிப் பார்க்கத் தொடங்கினேன். எழுத்தின் மூலமாக இன்னும் நிறைய பேரை சென்றடைய முடிகிறது என்ற ஆர்வத்தில் எழுதத் தொடங்கினாலும், எழுத்தில் என்னையே எழுதிக் கொள்ள முடிகிறது என்ற சுவாரசியமே படைப்பாளி யாகத் தொடரச் செய்கிறது.
 
சந்தித்த சவால்கள்? தடைக்கற்கள்?
இந்தக் கேள்வியை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம். புற உலகில் படைப்பாளியாக நிலைபெற சந்தித்த சவால்கள் என்று எடுத்துக் கொண்டால், எனக்கு அப்படியெந்த சவாலும் தடையும் இல்லை. அலுவலக வேலைக்குச் செல்லும் பெண்களுக்குக் கூட எவ்வளவோ சங்கடங்கள், பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் தங்களின் பொருளாதார பலத்திற்காக அவற்றையெல்லாம் தடைகளாக சொல்லிக் கொள்வதே இல்லை. எல்லோருக்கும் பொருந்துமிது.

உண்மையில் நான் சவாலாக நினைப்பது, எழுத்தைத்தான். “நித்தம் நவமெனச் சுடர் விடும் மொழி கேட்டேன்” என்று சொன்ன பாரதியைப் போல், எழுதுவன எல்லாம் சுடர் விடும் எழுத்தாக இருக்க வேண்டும். புதியன பேசுதல் வேண்டும், புதியமுறையில் எழுதிட வேண்டும் என்பதே என் தீரா விருப்பம். என் மொழியுடன் நான் மேற்கொள்ளும் யுத்தமே எனக்கான நித்திய சவால்.
 
முதல் படைப்பு & முதல் புத்தகம்
“அடுத்த ஆண்டும் வசந்தம் ஆர்ப்பாட்டம் வரும்” என்ற கவிதையே என் முதல் கவிதை. 1996-1997களில் வந்தது. தான் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு, வேறோர் வீட்டுக்கு மணமாகிப் போக இருக்கிற, பெண்ணின் மன உணர்வுகளைப் பேசும் கவிதையது. நாற்றைப் போல் மொத்தமாய் பிடுங்கி வேறோர் இடத்தில் நடப்படும் பெண்ணின் பயம், பதற்றம், புது இடம் பற்றிய கவலை, புரிதலின்மை எல்லாம் சேர்ந்து தரும் கலவையான மனநிலை பற்றிய கவிதை.

நானும் கவிஞர் மு.முருகேஷும் காதல் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தின் முதல் நாள் நிகழ்வில் எங்கள் இருவரின் கவிதைகளையும் தொகுத்து, ‘என் மனசை உன் தூரிகைத் தொட்டு’ என்ற நூலாக வெளியிட்டோம். நூலாக வெளிவந்த புத்தகம் என்றால், இதுவே என் முதல் தொகுப்பு. முருகேஷூக்கு நான் எழுதிய கடிதங்களைத் தொகுத்து ‘கனவிருந்த கூடு’ எனும் தொகுப்பாக வெளியிட்டார். அதுதான் என் முதல் நூல். ‘நீரில் அலையும் முகம்’ என் முதல் கவிதைத் தொகுப்பு.
 
முதல் படைப்பு கவனம் ஈர்த்ததா?
ஒரு கலை என்றும் தோற்றுப் போகாது. தற்காலத்தில் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம். என்றாவது நிச்சயம் கவனிக்கப்படும். என்றுமே கவனிப்பு பெறவில்லையென்றாலும் கலை கலைதான். புத்தகங்களுக்கும் இதே அளவுகோல்தான். எல்லா எழுத்துக்கும் யாரோ ஒரு வாசகர்/வாசகி இருக்கவே செய்கிறார்கள். சிறந்த, வெற்றிபெற்ற என்ற அளவுகோல்கள் எல்லாம் காலத்தின் முன் தோல்வியடைந்து நிற்கும். படைப்புகள் உயிர்ப்போடு அதனதன் சக்திக்கு ஏற்ப கவனிப்பைப் பெறும்.
 
மனதுக்கு நெருக்கமான எழுத்து எது?
சிலை செய்யத் தொடங்கும் சிற்பிக்கு, முதல் சிலையிலேயே செய்து வைத்தது போல் கை, கால், உடல் எல்லாம் அமையலாம். ஆனால், இதழ்க் கடையில் ஒரு புன்னகையும், மலர்ந்த கண்களையும் கொண்டு வருவதற்கு சிற்பிக்கு எத்தனை சிலைகளை செய்து பார்க்க வேண்டியிருக்கும்? யாரோ ஒருத்தருக்கு முதல் சிற்பமே உதட்டில் மிளிரும் குமிழ்ச்சிரிப்பும், கனிவூறும் கண்களும் அமைந்து விட்டால், அந்தச் சிற்பி எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்? அப்படியொரு சிற்பிதான் வண்ணநிலவன்.

அவரின் முதல் மூன்று கதைகள் இன்னும் பிரமிப்பைத் தருவன. தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் பிரமிப்பை வளர்த்துக் கொண்டே சென்றவர் தி.ஜா. தி.ஜா.வில் அடைக்கலம் புகுந்து விட்டால் போதும் எந்த மன ஆழத்தினையும் அளந்து விடலாம். வானமளவு ரசனையை ருசித்து விடலாம். கடலளவு மனிதர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
          
நிறைய படைப்புகளை,  படைப்பாளர்களை சொல்லிக் கொண்டே போகலாம். மொழிபெயர்ப்பில் எப்பொழுதும் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருப்பது சிவராம்காரந்த்தின் சோமனின் துடி, லலிதாம்பிகை அந்தர்ஜனத்தின் அக்னிசாட்சி, கேசவதேவ்வின்அண்டை வீட்டார், நீலகண்டபறவையைத் தேடி, சமீபத்தில் வாசித்த கதிஜாமும்தாஜின் பர்ஸா இவையெல்லாம் எப்பொழுதும் மனதுக்கு நெருக்கமானவை.

குடும்ப வாழ்க்கை, வேலை மற்றும் எழுத்து எப்படி சமாளிக்கிறீர்கள்?
பெண்களை நோக்கி கேட்கும்போது, பெரும்பாலும் இந்தக் கேள்வி நேர மேலாண்மையை முதன்மைப்படுத்தி கேட்கப்படுவதில்லை. ஆண்களிடம் என்றால், கட்டாயம் நேர மேலாண்மையை மையப்படுத்தி மட்டுமே இருக்கும். நானும் அப்படியே எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கிற எல்லாமே எனக்குத் தனித்தனியானவை அல்ல.
 
ஒன்றுக்குள் ஒன்று பொருந்திக் கொள்ளக்கூடியவை. இயைந்து போகும் தன்மை கொண்டவை. எழுதப் போகிறேன் என்று என் மகள்களிடம் சொல்லி விட்டு, நான் எழுத்தில் ஈடுபட முடியும். காலை 9 மணி முதல் மாலை 5 வரை வேலை. ஐந்து மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய பிறகு மீதமுள்ள நேரம் மொத்தம் எனக்கே எனக்குத்தான். படிப்பது, எழுதுவது, பிள்ளைகளுக்காகச் செலவிடுவது எல்லாம் சேர்ந்தே நடக்கும். அம்மா எங்கள் எல்லோரையும் பராமரிக்கும் அன்னலட்சுமியாக இருக்கிறார். எனவே, வயிற்றுக்குச் சோறிடும் கவலையில்லை.

உங்கள் கதைகளில் நீங்கள் பேசும் பெண்ணியம்?
என் கதைகளில் நான் தனியாகப் பெண்ணியம் பேசுவதில்லை. தன்னிலை உணர்ந்த பெண்களின் கூற்றுகள் பெண்ணியத்தின் வெளிப்பாடே. தன்னிலை உணர்ந்த அல்லது உணர முயற்சிக்கும் பெண்களின் சித்திரங்கள் என் கதைகளில் உள்ளன. பெண்ணியத்திற்கான தீர்மானிக்கப்பட்ட வரையறை என்று எதுவும் இல்லை. தன்னை, தன் இயல்பில் இருக்கவிடாத விஷயங்களை எதிர்க்கும், மீற நினைக்கும் பெண்கள் எல்லோருமே பெண்ணியவாதிகள்தான். அவர்களின் செயல்பாடுகள் எல்லாமே பெண்ணிய செயல்பாடுகளே.
 
எழுத்தில் கிடைத்த மகிழ்ச்சியாக எதை நினைக்கிறீர்கள்?
கிடைத்ததற்கரிய நண்பர்கள் கிடைத்ததே எழுத்தில் கிடைத்த ஆகச்சிறந்த பொக்கிஷமாகப் பார்க்கிறேன். என் அமைதியான, மகிழ்ச்சியான, புரிதலுடன் கூடிய  வாழ்க்கை எழுத்தால் தான் கிடைத்தது. நானும் முருகேஷும் கவிதையால் இணைந்தே, வாழ்வில் இணைந்தவர்கள். சராசரி குடும்ப வாழ்வின் கரிய நிழல் எங்கள் மேல் படாமல், எழுத்தே எங்களை காத்துக் கொண்டிருக்கிறது.

எழுத்தின் மூலம் அறிமுகமானவர்தான் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப. எழுத்தையும் கடந்து, குடும்ப நண்பராக, வழிகாட்டியாக, எல்லா தருணங்களிலும் உடன் பயணிப்பவராக இருக்கும் அவரை எழுத்தின் மூலமே சென்றடைந்தோம். அவரின் எளிமையும் செயல்படும் வேகமும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும், அவருக்கு ஏராளமான நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது.

நாங்கள் சேர்த்து வைத்த  புத்தகங்களுக்குச் சமமாக, எங்கள் வீட்டை புத்தகங்களால் நிறைப்பவர் நண்பர் வேலூர் பா.லிங்கம். அவர் தன்னுடைய நாற்பதாண்டு கால வாசிப்பின் மூலம் கண்டெடுத்த அரிய புத்தகங்கள் எல்லாவற்றையும் எனக்கும் என் மகள்களுக்கும் அனுப்பிக் கொண்டே இருப்பார். வாசிப்பை மட்டுமே மையமிட்ட அவருடனான நட்பே எனக்கான இலக்கிய சாளரம்.

இவர்கள் இருவரையும் போல் இன்னும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். எந்த ஊருக்குச் சென்றாலும் வரவேற்பதற்கும், உபசரிப்பதற்கும் கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் சில நூறு நண்பர்களை இந்த எழுத்துதான் தந்திருக்கிறது. அன்பை விட சிறந்த தவமில்லை என்றான் பாரதி. அன்பான மனிதர்களை இலக்கியம் எங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
 
வாழ்க்கையின் மகிழ்ச்சி...
வாழ்க்கையின் மகிழ்ச்சி, துயரம் இரண்டுமே எழுத்தாளராக இருப்பதுதான்.
 
பெண்ணாய் பிறந்ததற்காக…
இயற்கை என்னைக் கொண்டாட சொல்கிறது. பெருமைபட சொல்கிறது. சமூகம் என்னை வருத்தம் கொள்ளச் செய்கிறது. சோர்ந்து போக வைக்கிறது. இயற்கையின் பெருமையை மீட்டெடுக்க, சமூகம் தரும் வருத்தத்தில் இருந்து மீட்சி கொள்ள எழுத்தே துணை நிற்கிறது.
 
எழுத்தில் சாதித்தது?
வாசகர்களே இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லத் தகுந்தவர்கள்.
 
தரவுகள் சேகரிக்கும் பழக்கம் உண்டா?
வரலாற்றில் ஆர்வம் உண்டான பிறகு, தரவுகளைத் தேடிக் கண்டெடுத்தலே என்னுடைய பிரதான ஆர்வமாக இருக்கிறது. வரலாறு குறித்து ஒரு வரி எழுத வேண்டுமென்றாலும், அதன் பின்னால் பெரும் உழைப்புத் தேவைப்படுகிறது. எழுதப்பட்ட புத்தகங்களில் இருந்து நாம் கண்டெடுக்கும் தரவுகள் முன்பின்னாக இருக்கின்றன. எல்லா நேரமும் தவறாகவே எழுதப்பட்டிருக்கிறது என்பதல்ல இதன் பொருள்.

புதுப்புது தரவுகள் கண்டெடுக்கப்படுவதற்கு முன் பின்னாக அந்த நூல்கள் எழுதப் பட்டிருக்கலாம். எனவே, வரலாற்று நூல்களை நாம் படித்தாலும் அதிலுள்ள தகவல்கள் எல்லாவற்றையும் அப்படியே பயன்படுத்தி விட முடியாது. பல நூல்களை படித்து ஆய்வு  செய்த பிறகே நம் எழுத்தில் பயன்படுத்த முடியும். வரலாற்றுக் கட்டுரைகள் எழுதுவது கடும் உழைப்பிற்குப் பின்னரே இயலும்.

புனைவிலக்கியத்தைப் போல் உடனடி கவனிப்பையும் எழுதுபவருக்கு பெற்றுத் தராது. வரலாற்றாசிரியர்கள் பல நேரங்களில் ‘எழுத்துத் தியாகிகள்’ போலவே இயங்க வேண்டியிருக்கிறது. கவனிப்பும் அங்கீகாரமும் இல்லையென்றாலும்  அவர்கள் தங்களின் ஆர்வத்தினால் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள், வரலாற்றின் மீதுள்ள தீராக் காதலால். வரலாற்றையும் இலக்கி யத்தையும் இணைக்கும் தீவிர விருப்பம் இருப்பதால், நான் இரண்டிலும் எழுதத் துவங்கியிருக்கிறேன்.
 
பெண் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் தற்போது கிடைக்கிறதா?
நிச்சயம் கிடைக்கிறது. பல நேரங்களில் அவர்கள் எழுதியதற்கு கூடுதலாகக்கூட கிடைக்கிறது. பெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாகவே இன்று எழுத்தாளர்களுக்கான ஊடக வெளிச்சம் கடந்த காலங்களைவிட அதிகம் தான். இது வரவேற்க வேண்டிய ஒன்று. எழுத்தாளர்களின் முகங்களே வெளித் தெரியாத காலங்கள் இருந்திருக்கின்றன. ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய எழுத்தாளர்களின் புகைப்படங்களைக் கொடுத்தால் தடுமாறி விடுவோம், யார் என்று கண்டறிய. அவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முந்தையவர்கள் என்பது மட்டுமல்ல காரணம், அவர்களின் புகைப்படங்கள் பெருமளவுக்குப் பிரசுரிக்கப்பட்டதல்ல என்பதே உண்மை.

முகம் காட்டக்கூட கூச்சப்பட்டு எழுத்தின் முன்னால் தங்களை மறைத்துக் கொண்ட எழுத்தாளர்களை நினைத்தால் இன்றும் வருத்தமாக இருக்கும். எழுத்திற்காக எத்தனை பேர் தங்களை தொலைத்திருக்கிறார்கள்? எங்கு சென்றாலும் “நீங்கள் கவிஞர் வெண்ணிலா தானே” என்று கேட்க பெரும்கூட்டத்திலும் ஓரிருவர் நிச்சயம் இருக்கிறார்கள். அவர்கள் என் எழுத்தைப் படித்திருக்கிறார்களா என்பதைவிட என் முகத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஊடகங்களில் படைப்பாளிகளுக்குக் கிடைக்கும் சிறு வெளிச்சம் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த சிறு வெளிச்சம் மூலம் இன்னும் கொஞ்சம் வாசகர்களை நான் சென்றடைய முடிகிறது. இதெல்லாம் நம் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களுக்குக் கிடைக்கவில்லை. பெண் எழுத்துக்களை பற்றிய விமர்சனம் தமிழில் வளரவில்லை. தொண்ணூறுகளில் நாங்கள் எழுத வந்தப் புதிதில் மிக ஆரோக்கியப் பார்வைகளும் விமர்சனங்களும் பெண் எழுத்துக்களின் மேல் முன்வைக்கப்பட்டன.

என்ன சிக்கல்கள் எழுந்தன, என்னவிதமான புரிதலின்மை நிகழ்ந்தது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பெண் எழுத்துக்களின் மீதான விமர்சனங்கள் கைவிடப்பட்டன. விமர்சித்தவர்களும் வெறும் நான்கு பேரை மட்டும் முன்னிறுத்தத் துவங்கினார்கள். நான்கு பேரில் விமர்சகர்களுக்கு ஏற்ப ஓரிருவரின் பெயர்கள் மாறும். மற்றபடி நான்கு பேரின் பெயர்களை விமர்சனம் என்ற பெயரில் ஓயாமல் சிலர் முன்வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பெண் எழுத்தின் முகமாக வர்ணித்தார்கள். மேடைகளில் நிரந்தர நாற்காலிகள் போட்டார்கள். இதனால் எல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் மற்ற பெண்கள் சோர்ந்து விடவில்லை. எழுதுவதை மட்டுமே தவம் போல் செய்பவர்களுக்குப் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதும் என்றைக்குமே  பாதிப்பை ஏற்படுத்தி விடாது.
 
வருங்காலத் திட்டம் என்ன?
நிகழ்காலத்திலேயே பெரிய திட்டமெல்லாம் இல்லை. இழுத்துச் செல்லும் நீரின் ஓட்டம், சங்கமத்தில் சென்று சேர்க்காதா என்ன?
 
வாசகர்கள்…
எப்பொழுதுமே படைப்பிற்கு ஆத்மார்த்தமான அர்த்தம் தருபவர்கள். ஏதோ ஒரு திசையில் இருந்து, திடீரென புதுக்குரலில் பேசி, நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவர்கள். சமீபத்தில் பொள்ளாச்சி வேளாண் கல்லூரியில் என் மகளைச் சேர்த்து விட்டு வீடு திரும்பியிருந்தேன். அடுத்த நாள் காலை என் மகளுடன் பேசும்போது சொன்னாள். “ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஒருத்தி வந்திருக்காம்மா, பேசிக்கிட்டு இருக்கும்போது உங்க அம்மா என்ன செய்றாங்கன்னு கேட்டா. எங்கம்மா ரைட்டர்னு சொன்னேன்.

உடனே பேர் கேட்டா. பேர் சொன்னவுடன், “நீரில் அலையும் முகம் எழுதின அ.வெண்ணிலாவா” என்று ஆச்சர்யமாகக் கேட்டாள்” என்றாள். பதினேழு வயது பெண், பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான என் கவிதைத் தொகுப்பின் மூலம் என்னை அறிந்திருக்கிறாள் என்பது என் அன்றைய நாளின் முதல் மகிழ்ச்சி. இப்படித்தான் எழுத்துக்கான வாசகர்கள். மலர்ந்த சிரிப்புடன் முதுகில் தட்டி, பின்னால் திரும்பிப் பார்க்கும்போது முன்னால் நின்று ஆச்சர்யப்படுத்துவார்கள்.
 
‘குங்குமம் தோழி’களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
மிகத் தேர்ந்த வாசகர்கள் செய்தி சொல்வதை ஏற்க மாட்டார்கள். தங்களுக்குத் தேவையானவற்றை வாசிப்பின் மூலம் கண்டடைவார்கள். கண்டடைய என் வாழ்த்துகள்.

இவரது நூல்கள்...
* என் மனசை உன் தூரிகைத் தொட்டு
* நீரில் அலையும் முகம்
* பிருந்தாவனமும் இளம் பருவத்து ஆண்களும்
* கனவை போலொரு மரணம்
* ஆதியில் சொற்கள் இருந்தன
* இசை குறிப்புகள் நிறையும் மைதானம் உட்பட பல நூல்களை எழுதி இருக்கிறார். சிற்பி இலக்கிய விருது உட்பட பல விருதுகளையும் வென்றிருக்கிறார்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்