கிச்சன் டிப்ஸ்...



* மைசூர் பாகு  செய்ய கடலைமாவுதான் தேவை என்றில்லை... சேமியாவிலும் செய்யலாம். சேமியாவை நெய்யில் மிதமான சூட்டில் வறுத்து மிக்சியில் நைசாக பொடித்து, மைசூர் பாகு போல், அதே பதத்தில் செய்தால் அற்புதமான சேமியா கேக் தயார்.
* கார்த்திகை தீபத்தின் போது பொரி, நெல் பொரி, அவல்இவற்றை உருண்டை பிடிக்கும் போது, வெல்லம் நல்ல கெட்டி பாகு வந் ததும், சில சொட்டு எலுமிச்சைச்சாறு விட்டு கலந்து கிளறி உருண்டை பிடித்தால் அலர்ந்து போகாமல் கடைசி வரை உருண்டை பிடிக்க வரும்.
- எஸ்.வத்சலா, சிட்லபாக்கம்.

* சர்க்கரைவள்ளிக்கிழங்கு நாள்பட்டதாக இருந்தால், கரும்புள்ளிகள் இருந்தால் அதைப் பயன்படுத்தக் கூடாது. கசப்பு தன்மை உடையதாக இருக்கும். இதன் தோலில் தான் அனைத்து சத்துக்களும் உள்ளது. ஆதலால் சமைக்கும் முன் நன்கு கழுவி தோலுடன் சமைப்பதுதான் நல்லது.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

* கடலைப்பருப்பை ஊறவைத்து உதிர்த்து அதை வழக்கமாகச் செய்யும் பாகற்காய் பொரியலில் சேர்த்துக் கிளறினால் பாகற்காயின் கசப்பு குறையும்.
* வடை, சிப்ஸ் போன்றவற்றை எண்ணெயில் பொரித்து எடுக்கும் போது  நான்கைந்து  துளிகள் எலுமிச்சம் பழச்சாறை சேர்த்தால் எண்ணெய் குறைந்த அளவே செலவாகும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.

* உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து சிறிதளவு காரத்தூள், உப்பு சேர்த்து வடை போலத் தட்டி, இட்லி மாவின் நடுவில் வைத்து வேகவைத்து எடுத்தால் ‘வடா பாவ்’ போல் இருக்கும்.
- எஸ்.நிரஞ்சனி, முகலிவாக்கம்.

* வீட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஜாம்’ வகைகள்  வெகு நாட்கள் கெடாமலிருக்க, அத்துடன் ஒரு டீஸ்பூன் இஞ்சிச்சாறு ஊற்றிக் கலந்து வைக்கவும்.
* மாவடு  ஊறிய தண்ணீரில் சுண்டைக்காய் வற்றலைப் போட்டு ஊறியதும் காயவைத்து எடுத்து வைத்தால் புதிய சுவையுடன் வத்தல் தயார்.
* சமைத்த சாதம் வெகுநேரம் சூடு ஆறாமல் இருக்க வேண்டுமென்றால், சாதத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து அந்தப் பாத்திரத்தை வெந்நீருக்குள் வைத்திருக்க வேண்டும். எப்பொழுது எடுத்தாலும் சூடு குறையாமல் இருக்கும்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* தோசை ஊற்றும் போது சுண்டுவதாய் தெரிந்தால் கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு கல்லை தேய்த்து விட்டு பிறகு ஊற்றினால் தோசை சரியாக வரும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* பாதாம் கீர் செய்யும் போது வேகவைத்த சில பரங்கிக்காய்களை அரைத்து சேர்க்க இயற்கையான மஞ்சள் நிறத்தோடு இருப்பதோடு ருசியாகவும் இருக்கும்.

* உளுந்தில்லாமல் தோசை செய்ய ஊறவைத்த அரிசியுடன் அரை கப் வெள்ளைப்பூசணித் துண்டுகளை சேர்த்து அரைத்து, சற்று புளித்தவுடன் ஊற்ற சுவையாக இருக்கும்.

* மெதுவடை செய்யும்போது ஒரு கப் அவலை 10 நிமிடம் ஊறவைத்து, உளுந்து மாவை அரைத்து எடுக்கும் முன் சேர்த்து அரைத்து செய்ய, வடை வெளியே மொறுமொறுப்பாக உள்ளே சாஃப்ட்டாக சுவையாக இருக்கும்.

- மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி.