பேக்யார்ட் போயிருக்கீங்களா?தனித்திறமைகளும், க்ரியேட்டிவிட்டியும் கொண்டவர்கள் தங்களைப் போன்ற சக திறமையாளர்களை சந்திக்கவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புவார்கள். தங்களது திறனை வெளிப்படுத்துவதற்கான களத்தைத் தேடிக் கொண்டிருப்பார்கள். புத்தகம் வாசிக்கும் ஆர்வம் உடையவர்கள் பரபரப்பான சூழலிலிருந்து விடுபட்டு முற்றிலும் மாறுபட்ட, அவர்களுக்கு ஏற்புடைய சூழலில் வாசிக்க ஆர்வம் கொள்வார்கள். கதை, கவிதை எழுதுகிறவர்களும் அப்படித்தான்.

அவர்களின் கற்பனை வளத்துக்கு நல்லதொரு புறச்சூழலும் முக்கியம். இப்படியான தேடல்களுடன் இருப்பவர்களுக்கான இடமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது பேக் யார்ட். சென்னை அடையாறில் இயங்கி வரும் பேக் யார்டில் செலவழிக்கும் நேரத்துக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் அன்லிமிடெட் காபி, டீ மற்றும் இணையவசதி கிடைக்கும். ஆனால் இது காஃபி ஷாப் அல்ல. தினம் தினம் புதுப்புது வகையான உணவுகள் கிடைக்கும். ஆனால் இது உணவகமும் அல்ல. இது மனிதர்களின் கூட்டிணைவை கோரும் முயற்சி.

கலாபூர்வமான இடத்துக்குள் நுழைந்த உணர்வு ஏற்படுகிறது. கலை வலுவுள்ள ஓவியங்களாலும், புகைப்படங்களாலும் அதன் சுவர்கள் அழகு கூடி தெரிந்தன. இதன் நிறுவனர்களும் நிர்வாகிகளுமான அக்‌ஷயா சிட்டிபாபுவும் நித்யா ஃபெர்னாண்டஸ் என இருவரும்  இப்புது முயற்சி குறித்து பகிர்ந்துகொண்டனர். ‘‘நாங்க ரெண்டு பேரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை படிச்சோம். படிப்பின் முடிவில் ஏதாவதொரு தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

அதுக்காக நாங்க எடுத்துக்கிட்ட தலைப்புகள் வெவ்வேறானதாக இருந்தாலும் அவற்றுக்குள் ஓர்  ஒற்றுமை இருந்தது. மனிதர்கள் கூட்டிணைவு பத்தி யோசிச்சதுல உருவானதுதான் இந்த பேக் யார்ட். இது காஃபி ஷாப்போ, ரெஸ்டாரன்டோ இல்லை. பல திறமையாளர்களும் ஒரு இடத்தில் கூடி அவங்க திறமைகளை வெளிப்படுத்துறதுக்கான தளம். காலை பத்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரைக்கும் பேக் யார்ட் இயங்கும்.

பகல் வேளையில் புத்தகம் வாசிக்கிறதுக்கு ரொம்ப ப்ளசண்ட் ஆன சூழல் இருக்கும். குழுவாக நண்பர்கள் வந்து காபி, டீ குடிச்சிக்கிட்டே பல விசயங்களைப் பத்தியும் பேசலாம். அது தங்களோட கடந்தகால நினைவுகளா இருக்கலாம். நாட்டு நடப்புகளாவும் இருக்கலாம். திறமையாளர்கள் தங்களோட திறமையை வெளிப்படுத்தலாம். அது மேல ஆர்வம் இருக்கிறவங்க அதைப் பார்ப்பாங்க. அதுக்கான தங்கள் ரிவ்யூவையும் கொடுப்பாங்க. ஆர்வம் இருக்கிறவங்க அவங்களோட இணைஞ்சு தங்களோட திறனையும் வெளிப்படுத்தலாம்.

உதாரணத்துக்கு சொல்லப்போனால் பாட்டுத் திறமை உள்ள ஒருத்தர் பாடுறார்னா மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ப்ளே பண்றவங்க கூட இணைஞ்சுக்கலாம். ஒருவருக்கொருவர் அறிமுகம் இருக்கணுங்கிற தேவையே இல்லை. ஒவ்வொருத்தருடைய தனித்திறன் அவங்களை கொண்டு போய் சேர்க்கும். அவங்களுக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக்கும். நாங்க அதுக்கான முகாந்திரத்தை மட்டும்தான் கொடுக்குறோம்.

ஓவியம், புகைப்படக்கலை, நாடகம் மற்றும் நிகழ்த்துக் கலைகள், இசை, இலக்கியம்னு எல்லா துறை சார்ந்தவங்களும் தங்களோட திறனை வெளிப்படுத்தலாம். தங்களோட வாழ்க்கையில நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கூட எல்லோர்கூடவும் பகிர்ந்துக்கலாம். நிச்சயமா அந்த அனுபவம் மத்தவங்களோட வாழ்க்கைக்கும் பயன் தரக்கூடியதா இருக்கும். பிடிச்ச புத்தகம், சினிமான்னு நல்ல விசயங்கள் எல்லாத்தையும்
பகிர்ந்துக்கலாம்’’ என்கிறார் அக்‌ஷயா.

‘‘ஒரே கருத்துடையவங்க, ஒரே துறை சார்ந்து இயங்குறவங்க ஒண்ணா சந்திக்கும்போது பல விசயங்களை பகிர்ந்துக்க முடியும். கை கோர்க்க முடியும். ஒருத்தருக்கொருத்தர் இணைஞ்சு செயல்படணுங்கிறதுதான் இதோட நோக்கம். அது இந்தத் துறையிலதான்னு இல்லை. விளையாடக் கூட செய்யலாம், எதைப் பத்தி வேணும்னாலும் பேசலாம், பெர்பாமன்ஸ்க்கான பயிற்சி பண்ணலாம். குறும்படம் & ஆவணப்படத் திரையிடலும் நடக்கும். படைப்பாளிகளின் படைப்பை சரியான முறையில் கொண்டு சேர்க்கிறது ரொம்பவே முக்கியம்.

அதுதான் அவங்களை ஊக்கப்படுத்தி மேலும் வளர்றதுக்கு தூண்டுதலா இருக்கும். இங்க இரண்டு தளங்கள் இருக்கு. தரைத்தளத்துல படிக்கிறது, எழுதுறது, உரையாடுறது, ப்ரௌஸிங் பண்ணலாம். முதல் தளத்துல ஹேங்கிங் கேன் லைட்ஸ் போட்டு, மெத்தைகள் தரையில விரிச்சிருக்கோம். கோவா பீச்சில் இருக்கிற மாதிரியான உணர்வைத்தரும் இந்த தளத்துலதான் திரையிடல் நடக்கும். அப்புறம் நாடகம், இசை நிகழ்த்துதல்களும் நடக்கும். இணையர்கள் தனிமையில் அமைதியான சூழல்ல பேசிக்க நினைச்சாங்கன்னா அதுக்கான இடமும் இருக்கு. மாங்காய் மரத்துக்குக் கீழ இருக்கை வசதிகளோட அப்படிப்பட்ட இடத்தையும் அமைச்சிருக்கோம்.

திறமையுள்ளவங்களுக்கு களம் அமைச்சுத் தர்றதுதான் எங்களோட நோக்கம். அதுல சமையல் கலையும் அடக்கம். சமையல் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம். அவங்க சமைக்கிறதை விற்று அவங்களுக்கான வருவாய்க்கும் வழி பண்றோம். இங்க வீட்டு உணவுகள் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் மெனு மாறிக்கிட்டே இருக்கும்.

ஓவியங்களும் புகைப்படங்களும் காட்சிக்கு வெச்சிருக்கோம். இது அந்தக் கலைஞர்களை கொண்டு போய் சேர்க்குறதுக்கான முயற்சி. ஓவியங்கள் பிடிச்சுப்போய் வாங்கணும்னு நினைக்குறவங்களுக்கு ஓவியரோட தொடர்பை கொடுத்துடுவோம். யார் வேணும்னாலும் இங்க தங்களோட ஓவியங்கள், புகைப்படங்களை டிஸ்ப்ளே பண்ணலாம். மாசத்துக்கு ஒரு முறை இதை மாத்திக்கிட்டே இருப்போம்” என்கிறார் இன்னொரு நிர்வாகியான நித்யா ஃபெர்னாண்டஸ்.

- கமலா தவநிதி