காதல் பரன்



- த.சக்திவேல்

உண்மையான காதல் ஒருபோதும் குழப்பமடைவதில்லை. எந்தவித தகுதிகளையும் அது எதிர்பார்ப்பதில்லை. ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை. அது வேண்டும் இது வேண்டும் என்று கோரிக்கைகள் வைப்பதில்லை. குறையக் குறைய அதன் மேன்மையின் அளவற்ற சுழற்சியால் மறுபடியும் தன்னை நிரப்பிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. தன்னை இழந்து வாழ்வை ஒளிமயமாக்கும். ஏனென்றால் அதற்கு தியாகத்தின் உண்மையான அர்த்தம் தெரியும்.

- ஹென்றி மில்லர்

ஆப்கன் அகதிகளின் துயர்மிகுந்த வாழ்வினூடாக மிக மென்மையான காதலை அழகாக சித்தரிக்கும் ஈரானியப்படம் ‘பரன் ’. தலிபான், உள்நாட்டுப் பிரச்சனை, போர் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் அகதிகளாக குடியேறுகின்றனர். யாருக்கும் தெரியாமல் நகரின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் வசிக்கும் இவர்களுக்கு அடையாள அட்டை கூட இல்லை.

மிகுந்த நெருக்கடியான சூழலில் வாழ்வாதாரத்திற்காக கிடைத்த வேலைகளை சட்டவிரோதமாகச் செய்கின்றனர். நகரின் மையத்தில் வானுயர்ந்த ஓர் அடுக்குமாடி கட்டடம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்டடத்தில் அதிகமாக ஆப்கன் அகதிகள் கூலியாட்களாக வேலை செய்கின்றனர். உள்ளூர் வேலையாட்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தைவிட பாதி தான் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

அங்கே வேலை செய்பவர்களுக்கு தேநீர், சாப்பாடு தரும் வேலையில் இருக்கிறான் குர்தீஷ் இளைஞனான லத்தீப். அவன் அந்த கட்டட மேஸ்திரிக்கு வேண்டப்பட்டவன். அதனால் அவன் செய்கின்ற குறும்புகளை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக இருக்கிறான். எல்லோரையும் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சண்டையிடுகிறான்.

ஒரு நாள் கட்டட வேலையில் இருந்தபோது, ஆப்கன் அகதியான நஜாப்பின் கால் விபத்தில் சிக்கி முறிந்துவிடுகிறது. சில மாதங்களுக்கு அவரால் எந்த வேலையும் செய்யமுடியாது. அவர் மட்டுமே குடும்பத்தில் வேலைக்குச் செல்லும் ஒரே நபர். இந்த நிலையில் குடும்பத்தின் சுமையைப் போக்க தனக்குப் பதிலாக தன் இளம் மகனான ரஹமத்தை வேலைக்கு அனுப்புகிறார்.

அந்தச் சிறுவனுக்கு வயது 14. அகதியாக இருப்பதாலும், மென்மையாக இருப்பதாலும் பல நெருக்கடிகளுக்கு ஆளாகிறான். ஆரம்பத்தில் அந்தச் சிறுவனுக்கு சிமென்ட், மணல் மூட்டையை தூக்குகிற வேலை. ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்கிறான். ஒரு நாள் மூட்டையை தூக்கிக் கொண்டு போகும்போது கீழே போட்டு விடுகிறான்.

அது ஒருவரின் தலை மேலே விழுகிறது. மேஸ்திரி அவனை கடுமையாகத் திட்டுகிறார். வேலைக்கு வரவேண்டாம் என்கிறார். கடைசியில் மனம் மாறிய மேஸ்திரி சிறுவனுக்கு லத்தீப்பின் வேலையைத் தருகிறார். லத்தீப்பை மூட்டை தூக்குகிற வேலைக்கு மாற்றுகிறார். இதில் கோபமுற்ற லத்தீப் ரஹமத்தின் மீது எரிந்து விழுகிறான். வெறுப்போடு அவனைப் பார்க்கிறான். ஒரு நாள்... ரஹ்மத் ஆண் அல்ல; பெண் என்பது அவனுக்குத் தெரிய வருகிறது.

அவளின் பெயர்தான் பரன். அதுவரைக்கும் பரன் மீது இருந்த கோபம், வெறுப்பு எல்லாம் அன்பாக பரிணமிக்கிறது. ஈரான் நாட்டில் பெண்கள் இதுபோன்ற வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை. அதனால்தான் அவள் ஆண் வேடமிட்டு வேலைக்கு வந்திருக்கிறாள். அவளிடம் முறையான அனுமதி அட்டையும் இல்லை.

அவள் ஒரு பெண், அடையாள அட்டை இல்லை போன்ற விஷயங்கள் வெளியே தெரிந்தால் அவளுக்குப் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்று அவளின் ரகசியங்களை லத்தீப் பாதுகாக்கிறான். லத்தீப் தன்னைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்ட விஷயம் பரனுக்குத் தெரியாது. கட்டட வேலையில் ஆப்கன் அகதிகள் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறீர்களா என்று ஆய்வு செய்ய வருகின்ற அதிகாரிகளிடமிருந்தும், அங்கே வேலை செய்கின்ற மற்ற ஆண்களிடமிருந்தும் பரனைக் காப்பாற்றுவதே அவனுக்கு முக்கிய வேலையாகிறது.

ஒரு நாள் அந்த கட்டடத்தில் அகதிகள் யாராவது வேலை செய்கிறார்களா என்று சோதனை இட அதிகாரிகள் வருகிறார்கள். அவர்களிடம் பரன் மாட்டிக்கொள்கிறாள். லத்தீப் அதிகாரிகளிடம் கடுமையாகப் போராடி அவளை காப்பாற்றுகிறான். அதற்குப் பிறகு அவள் அங்கு வேலைக்கு வருவதில்லை. மேஸ்திரியிடம் பொய் சொல்லிவிட்டு அவளைத் தேடிச் செல்கிறான். அலைந்து திரிந்து அவளுடைய வீட்டை கண்டடைகிறான். வறுமையின் காரணமான அவளுடைய பாடுகளைப் பார்த்து துயரமடைகிறான்.

அவளுக்கு ஏதோவொரு வகையில் உதவிட வேண்டும் என்று அவனின் மனம் அலைபாய்கிறது. தான் சேமித்த பணம், இதுவரைக்கு சம்பாதித்தது எல்லாவற்றையும் கொண்டுபோய் நண்பர் ஒருவரின் மூலம் அவளின் தந்தையிடம் கொடுக்கச் சொல்கிறான். ஆனால், அந்த நண்பர் பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பிவிடுகிறார். அந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் லத்தீப் தனது ஒரே சொத்தான அடையாள அட்டையை விற்கிறான். அதில் கிடைக்கும் பணத்தை பரனின் தந்தையிடம் கொடுக்கச் செல்கிறான்.

அப்போது தான் பரனும்,அவளின் குடும்பமும் ஆப்கானிஸ்தானுக்கே திரும்பிச் செல்கிற தகவல் லத்தீப்பிற்கு கிடைக்கிறது. மேஸ்திரி கொடுத்ததாக அந்தப் பணத்தை பரனின் தந்தையிடம் கொடுக்கிறான். அவர்களின் பயணத்திற்கு உதவுகிறான். பரனும் லத்தீப்பும் நேருக்கு நேர் சில நொடிகள் சந்திக்கிறார்கள். அவள் அவனைப் பிரிந்து தன் நாட்டிற்குச் செல்கிறாள். அவனால் அழக்கூட முடியவில்லை. அப்பொழுது மழை பெய்ய ஆரம்பிக்கிறது. படம் நிறைவடைகிறது.

வெறுமனே காதல் படமாக மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. அகதிகளின் வாழ்வை, குறிப்பாக பெண்களின் நிலையை, அவர்களின் அன்றாட துயரங்களை பார்வையாளர்கள் உணரும்படி படமாக்கப்பட்டிருக்கிறது. தன் குடும்பத்திற்காக தலையிலும், தோளிலும், உடலின், மனதின் அனைத்து அங்கங்களிலும் சுமைகளைத் தாங்கும் ஒவ்வொரு பெண்ணும் பரன்தான்.

அதே நேரத்தில் காதலின் அழகான பக்கங்களையும் அற்புதமாக பதிவு செய்கிறது. நாம் பொதுவாக நினைத்துக் கொண்டிருப்பதைத் தாண்டி, நம் புரிதலையும், அனுபவங்களையும் தாண்டி காதலைப்பற்றி இன்னமும் நமக்கு அதிகமாக கற்றுத் தருகிறது இந்தப் படம். படத்தில் பரன், லத்தீப்பிடம் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

லத்தீப்பின் காதலை பரன் உணர்வதை அவர்கள் இருவரும் நேருக்கு நேர் பார்த்து கண்களால் உரையாடுவதின் வழியாகவே காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் மஜீத் மஜீதி. இசையைப் போலவே காதலும் மென்மையாக உருவாகிறது.

ஆனால், வாழ்வின் தேர்வு வேறு விதமாக இருக்க, இருவரும் பிரிவை மென்மையாக ஏற்றுக் கொள்கிறார்கள். மேன்மையான காதல் மனித இதயங்களையும் மேன்மைப்படுத்துகிறது.