தினமும் என்னை கவனி



- கி.ச.திலீபன்

பற்கள் பராமரிப்பில் நாம் மிகுந்த கவனத்துடன் இருந்தாக வேண்டும். குறிப்பிட்ட வயதைக் கடந்த பின் மறு முளைப்புத் திறனை பற்கள் இழந்து விடுகின்றன. அதன் பிறகான நம் வாழ்நாட்கள் முழுவதையும் அந்த நிரந்தரப் பற்களுடன்தான் கடந்தாக வேண்டும். பற்களில் ஏற்படும் சொத்தை, பல் கூச்சம், ஈறுகளில் ரத்தக்கசிவு ஆகியவற்றோடு போராடாமல் அதனை முறையாகப் பராமரித்துக் கொள்ளுதலே சாலச்சிறந்தது. தங்களது குழந்தைகளையும் பற்கள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் முக்கியப் பொறுப்பாக இருக்கிறது. பொதுவாக இருக்கும் பல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் தீர்வுகளையும், பற்கள் பராமரிப்பு குறித்தும் பல் மருத்துவர் செந்தில்குமரனிடம் கேட்டேன்... 

பற்கள் பராமரிப்பில் அடிப்படையான சில விசயங்களாவன:

* காலையும், மாலையும் பல் துலக்க வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்புளிக்க வேண்டும்.
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து பல் சொத்தை இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பல் சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கும் நிலையில் அது ஏற்படாமல் முன்னரே தடுக்கும் Flouride சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம்.
* பல்லில் கறை படிந்திருக்கும் நிலையில் அதை சுத்தப்படுத்தி சரி செய்து கொள்ளலாம்.
* பல் விழுந்து முளைக்காமல் வெற்றிடமாக இருக்கும் நிலையில் அங்கு Space Maintainer Treatment மூலம் அந்த இடைவெளியை சீராக்கிக் கொள்ளலாம்.
 
குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு 
குழந்தை பிறந்து 6-12 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் முளைக்கும். பல் முளைத்த உடனேயே பல் மருத்துவரை அணுகி முளைப்பு சரியாக இருக்கிறதா? என்று பரிசோதிப்பது நல்லது. பல் முளைப்பதற்கு முன்பே ஈறுகளை பராமரிப்பது மிகவும் முக்கியம். தாய்ப்பால்/புட்டிப்பால் எது கொடுத்தாலும் குழந்தை குடித்து முடித்த பிறகு அப்படியே விட்டு விடக்கூடாது. கல் உப்பு போட்டு கரைத்த சுடுநீரில் சுத்தமான துணியை ஈரப்படுத்தி ஈறுகளை சுத்தப்படுத்த வேண்டும்.

பால் பல் என்பது விழுகின்ற பல்தானே என்கிற அலட்சியம் காட்டாமல் பால் பல்லிலேயே சொத்தை வராமல் தடுப்பதற்கு இப்படியான பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் பல் துலக்குவது குறித்து முழுமையாகக் கற்றுக் கொள்ளும் வரையிலும் பெற்றோரும் குழந்தையுடன் இணைந்து பல் துலக்க வேண்டும். இதனால் குழந்தை முழுமையாக அதனை கற்றுக் கொள்வதோடு, பல் துலக்குவதை ஊக்குவிப்பதாகவும் இருக்கும்.

குழந்தைகள் இனிப்பை விரும்பிச் சாப்பிடுவார்கள் என்றாலும் இனிப்பு பற்களுக்கு உகந்ததல்ல. அப்படியே சாப்பிட்டாலும் உடனே பல் துலக்க வேண்டும். ப்ரஷ்ஷுக்குப் பின் உள்ள டங்க் க்ளீனரிலேயே நாக்கை சுத்தம் செய்து கொள்ளலாம். அதற்கென தனியே உபகரணங்கள் வாங்கி பயன்படுத்தத் தேவையில்லை. குழந்தைகளுக்கு 8 வயது வரை பல் மருத்துவர் பரிந்துரைக்கும் பற்பசையைப் பயன்படுத்துவது
சிறந்தது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூத் ப்ரஷ்ஷை மாற்ற வேண்டும். யார் சளி, காய்ச்சல் போன்ற பரவும் நோய்க்கு ஆட்பட்டாலும் அதிலிருந்து மீண்ட பிறகு டூத் ப்ரஷ்ஷை மாற்றுவது நல்லது. 6 வயதுக்கு மேல்தான் நிரந்தரப் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். அப்போது பல் மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் க்ளிப் போட வேண்டிய தேவை இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்க முடியும்.

7 வயதிலிருந்து 13 வயது வரை பால் பற்களும், நிரந்தரப் பற்களும் கலந்திருப்பதால் பல் வரிசை சீராக இல்லாமல், ஒரு பல் சிறியதாகவும் ஒரு பல் பெரியதாகவும் கோரமாகக் காட்சி அளிக்கலாம். அதற்காக பயப்படத் தேவையில்லை. பால் பற்கள் எல்லாம் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும்போது பல் வரிசை சீராகி விடும்.

பொதுவாக பல் தொடர்பான பிரச்னைகள்
வாய் துர்நாற்றம் (Halitosis)
வயிறு தொடர்பான பிரச்னைகள், பற்காரை படிந்திருத்தல், பல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் ஈறுகளில் பிரச்னை இருக்கும்போது வாயிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. வயிறு தொடர்பான பிரச்னை எனும்போது இரைப்பை மற்றும் குடல் மருத்துவரை அணுகலாம், பல் தொடர்பான பிரச்னைகளுக்கு பற்களை சுத்தம் செய்வதன் மூலமே சரிப்படுத்தி விட முடியும். ஈறுகள் தொடர்பான நோய்களுக்கென சிகிச்சைகள் இருக்கின்றன.

ரத்தக்கசிவு
பற்காரை ஏற்பட்டிருந்தால் ஈறுகளில் வீக்கம் இருக்கும். அந்த வீக்கத்தின் மீது ப்ரஷ் படும்போதும், சாதாரண சூழ்நிலையிலும் பற்களிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும். பற்காரையை அகற்றி விட்டு பற்களை சுத்தம் செய்தலே இதற்கான தீர்வு. பற்காரையை நீக்கும்போது தானாகவே வீக்கம் குறைந்து ரத்தக்கசிவு நின்று போகும். ஈறுகளில் ஏற்படும் நோயின் காரணமாகவும் ரத்தக்கசிவு ஏற்படலாம். முதலில் என்ன காரணம் என்பதை மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறிந்து அதற்குத் தகுந்த சிகிச்சையைப் பெறலாம்.

பல் சொத்தை
இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பல் சொத்தைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஏனென்றால் நமது உணவுப் பழக்கம் அப்படியாக இருக்கிறது. பல் சொத்தைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மரபுரீதியாகவும் பல் சொத்தை வரலாம். சரிவர பல் துலக்காமல், சாப்பிட்ட பின் வாய் கொப்புளிக்காமல் இருந்தாலும் பல் சொத்தை வரும். பல் சீர் இன்றி இருக்கும்போது சாப்பிடும் உணவுத் துகள்கள் பற்களிலேயே தங்கி விடும்.

அதனுடன் எச்சில் கலக்கும்போது பல் சொத்தை ஏற்படும். பற்கள் சீரமைப்புக்கான தேவை இதுதான். பல் சொத்தை மேலோட்டமாக இருந்தால் அதனை சுத்தம்செய்து விட்டு அடைத்து விடலாம். வேர் வரையிலும் ஆழமாக பாதித்திருந்தால் வேர் சிகிச்சை செய்து அதன் மேல் Crown போடப்படும். பற்களை இழக்க நேரிடும்போது அந்த இடத்தில் ரீப்ளேஸ்மென்ட் அவசியம்.

பல் சீரமைப்புக்காக க்ளிப் போடுவதற்கு வயது வரம்புகள் கிடையாதுதான் என்றாலும் வயது அதிகமாக அதிகமாக அதன் சாத்தியங்கள் குறைந்து கொண்டேயிருக்கும். ஆகவே ஆரம்பத்திலேயே போட்டு விடுவது நல்லது. ஒன்றரை ஆண்டுகள் வரையிலும் க்ளிப் போட வேண்டியிருக்கும். க்ளிப்பை தொந்தரவாக நினைப்பவர்களுக்கு ஓய்வு நேரங்களில் மட்டும் போட்டுக்கொள்ளும் அலைனர்ஸ் போன்ற நவீன கருவிகளும் வந்து விட்டன.

கர்ப்பக் காலங்களில் கர்ப்பிணிகள் உடலில் நிறைய இயக்குநீர் (ஹார்மோன்) மாற்றங்கள் நிகழ்வதால் ஈறுகளில் தொந்தரவு வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் பல் சொத்தை இருக்கும்போது வலி அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரசவத்துக்குப் பின்னர் ஆறு மாதங்களுக்கு எந்த சிகிச்சையும் மேற்கொள்ள முடியாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால் மருந்துகள் எதையும் செலுத்த முடியாது. எனவே கர்ப்பம் தரிப்பதற்கான திட்டமிடலின்போதே பல் சொத்தை மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகளை தீர்த்துக் கொள்வது நல்லது.