வாட்ஸ் அப் வாந்தி பேதி நோய்



டாக்டர் கு.சிவராமன்

இந்த புது வியாதி குறித்து உலக சுகாதார நிறுவனம் ஏதும் முறையான அறிவிப்பு கொடுக்கவில்லை. சுகாதாரத்துறை அமைச்சகம் செயலகம் எல்லாம் நிலைமை இன்னும் கட்டுக்குள் உள்ளது என வழக்கமான பொய் பிரச்சாரம் செய்யவில்லை. எந்த எதிர்க்கட்சியும்  இந்த வியாதியில் இந்தியாவே முடங்கிப்போய்விட்டது என்று இன்னும் உதார் காட்டவில்லை. கோரக்பூரில் எந்த குழந்தையும் இந்த வியாதிக்கு இதுவரை அட்மிட் செய்யப்படவில்லை என்பதால், இதையும் கடந்து போகச் சொல்லி, நம் பிரதமர் கொடி ஏற்றவில்லை.

ஆனாலும் இந்த வியாதியில் ஒட்டு மொத்த இந்தியாவும் கன்னாபின்னாவென கசங்கிப்போய் வருகின்றது. மூளையில் செரிக்காத தேவையில்லா செய்திகளை வாந்தியாகவும், என்னவென்றே ஜீரனிக்காமல் அத்தனை புலம்பலையும் புளுகலையும் பேதியாய் ஒருசேர இது ஏற்படுத்தினாலும் இது செரிமான நோயல்ல... உளவியல் நோய் பிரிவிலேயே வருகின்றது.

இந்த உளவியல் நோய்க் கிருமியை எந்த ஏடிஸ் கொசுவும் பரப்புவதில்லை. ஆண்ட்ராய்டு /ஆப்பிள் திசுக்கள்தாம் பரப்புகின்றன. ஏடிஸ் மாதிரி பகலில் கொஞ்சம் கடித்தாலும், இரவில்தாம் இந்த தொற்று ஏகத்துக்கு கடிபட்டு பரப்பப்படுகின்றன. டெங்கு, சிக்குன்குனியா மாதிரி ஒவ்வொரு ஏரியாவாக இந்நோய் பரவுவதில்லை. ஒரே நேரத்தில் உலகத்தமிழர்கள் அத்தனை பேருக்கும் இந்த வாந்தி-பேதி நோய் பரவப்படுவதற்கு இந்த ஆண்ட்ராய்டு ஆப்பிள் திசுக்களின் `தமிழனாய் இருந்தால் சேர் செய்யவும்; இந்தியனாய் இருந்தால் டேபிள் செய்யவும்’ என்ற முழக்கங்களுடன் பரப்பும் வீ(ர)ரியமே காரணம்.

ஏற்கனவே இந்தியாவில் 10ல் 3 பேர் உளவியல் சிக்கலில் வந்து சேர்ந்திருக்கும் இந்த சூழலில், இந்த வா.வா.பே.’ உளவியல் நோய்க் கூட்டம் படுவேகமாய்ப் பரவி வருகின்றது. குறிப்பாக, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர், புதிதாய் வேலைக்குச் சேர்ந்த மென்பொருள் ஊழியர் கூட்டம். டிகிரி முடித்த கையோடு வேலைக்குப் போகாமல், குடும்ப பாரத்தை சுமக்கும் பட்டதாரி நடுவயது இளம்பெண்கள், பிரசவத்துக்கும் பேபி கேருக்குமென அட்லாண்டாவுக்கும் கலிபோர்னியாவுக்கும் பறக்கும் கல்லடைக்குறிச்சி பாட்டிகள் ( அவர்கள் பிள்ளைகளிடம் கூலியாக பெற்றுவந்த ஆண்ட்ராய்டுகள் மூலம்) என அதிகமாகப் பாதிப்படைகின்றனர்.

வா.வா.பே. நோய் பரவுதலுக்கு நெடுங்காலம் பண்பாட்டுக் கூறாக இருந்த `நலம். நலமறிய அவா’, `சுகமா இருக்கீங்களா?’ என கடிதம் பார்த்து, கண் பார்த்து, முகம் மலர்ந்து கேட்ட பொழுதுகள் காணாமல் போனது முதல் காரணம். `அவுக லெட்டர் இன்னைக்கு கண்டிப்பா வரும்’ என பதினைந்து நாட்களாக காத்திருப்பதும். அந்த இன்லேண்ட் கடிதத்தின் கிடைக்கும் ஒவ்வொரு மூலையிலும் நுணுக்கி நுணிக்கி அன்பை அள்ளி வீசும் எழுத்துக்கள் இந்த வா.வா.பே. நோய் பரப்பும் ஆண்ட்ராய்டுகள் எழுத்தில் இல்லை; ஊனமாகிப் போன ஆங்கில எழுத்தும், உயிரற்ற எமோட்டி கான் உணர்வும் மட்டுமே அங்கு நிரம்பிக் கிடக்கின்றது.

இன்னும் மனப்பாடம் செய்ய ரொம்ப கஷ்டமான, அந்த எமோட்டிகான் சொல்லும் மேட்டரையும், அதன் சங்கேத மொழியையும் எல்லா குட்டிச்சுவருகளும் அச்சுப்பிசகாது கற்றுக் கொள்வது எப்படி  என தற்போதைய ஐன்ஸ்டீன்கள், கலீலியோக்களும் மண்டையைப் பிறாண்டிக் கொண்டிருக்கின்றார்கள். அன்று விஷயத்தை எழுத்து மொழியை விட, முகமொழிதான் வடிவாய்த் தெரிவித்தது.

எதிரே இருக்கும் நண்பனின் முகம் கோணாமல், காதலி உதடு சுளித்திடாமல், மனைவியின் புருவம் கோணிடாமல், பேச விரும்பும் நபர் பழைய இலக்கணத்தை மறந்து அல்லது புதிய இலக்கியம் படைத்து பேசுவர். அந்த உரையாடல் எதிராளியை ஆற்றுப்படுத்தும் அல்லது அரவணைக்கும். ஆனால், இந்த ஆன்லைன் கூச்சலும், அதில் குதறிப்போட்ட மொழியும், முகம் இல்லாததால், எதிரே இருக்கும் நபர் அலுவலில் மண்டையை உடைத்து விழி பிதுங்கி நிற்கின்றாரா? கழிப்பறையில் கழிக்க மலச்சிக்கலில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றாரா?  என புரியாமல், வாந்தி பேதியாய் செய்தியை சட்டைப்பைக்குள் வாரிக்கொட்டும்.

`சனியன் அப்போதிருந்தே சிணுங்குதே’  எனத் தடவிப்பார்க்கையில், `பார்த்துட்டாண்டா..` என நீல நிறக் கொள்ளியை எழுதியவனுக்குக் கொளுத்திப் போடும். அடுத்த நேனோ கணத்தில், `நான் அப்பவே அன்போட  `ஆய்’னு எழுதினேன்.. 15 நிமிஷமா நீ பதிலே சொல்லலை. உன் அன்பு இவ்வளவுதான். உனக்கு வேணாம்னா சொல்லிடு. பிரேக் அப் பண்ணிக்கலாம்’ என நல்ல குத்து ஆங்கிலத்தில் குதறத் துவங்கும். `ஹலோ நீ ஆய்னு எழுதனப்ப, உண்மையிலேயே நான் `ஆய்’ போய்க் கொண்டிருந்தேன்பா.

அப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் எடுத்துப் பார்க்க முடியாது’ என சத்தியம் பண்ணிச் சொல்ல. `அப்படின்னா யார் மெசேஜ் வரும்னு போனை அங்கே கொண்டு போனே?’ என எதிர்த்தரப்பு திருப்பதிகம் பாடத்துவங்கும். முகமொழியைத் தெரிவிக்காமல் வாந்திபேதியாய் வந்து விழும் இந்த வாட்ஸப் சிணுங்கல்; முதலில் அன்பின் செல்லச் சிணுங்கல்; அப்புறம் ஆதிக்க மிரட்டல்; அதுக்கப்புறம் அகோரிப் பாய்ச்சல்.

இன்றைக்கு இந்த வா.வா.பே. நோய்க்குப் பயந்து பலர், `புறா காலில் கடிதம் எழுதி அனுப்பும் பயிற்சி யாரேனும் வாரக் கடைசியில் கற்றுக் கொடுக்கிறார்களா’ என சென்னையில் திரிவதாகக் கேள்வி. உரையாடலைத் தாண்டி வா.வா.பே. நோயின் இன்னொரு பயங்கரவாதமான பக்கம்- அதில் பார்வேர்டு செய்யப்படும் அதிபயங்கரப் பொய்கள். `உங்களுக்கு சுகரா?

பழைய செருப்பின் மோதிரப்பகுதியை மூணு நாள் குலேபகாவலிக் கஷாயத்தில் ஊற வைத்து, குறுக்குவாட்டில் படுத்துக் கொண்டு 60 மிலி என 6 நாள் குடித்தால் சர்க்கரை நோய் பறக்கும்; குலேபகாவலி கிடைக்காத பட்சத்தில், குல்மஹர் மலரைப் பயன்படுத்தலாம் என புலிப்பாணி சித்தர் பாடலில் உள்ளது’ என்கிற மாதிரி செய்திகளைப் பரப்பி, ஊரில் பலபேர் பழைய செருப்பை பத்திரப்படுத்தும் பயங்கரவாதச் செயலைத் தூண்டுவது இந்த வா.வா.பே. நோயில் நடக்கின்றது.

இன்னொரு பக்கம், `நேற்று சென்னையில் நிறைய பேர் தும்மியதற்குக் காரணம், அமெரிக்காவின் டிரம்ப், `தமிழ்நாட்டு வானம் வழியாக போன அமெரிக்க விமானியின் கர்சிப்பை உதறச் சொன்னது’தான். இதெல்லாம் இலிமினாட்டி வேலைன்னு கூட தெரியாத ஆளா  நீ?’ என பயங்கர தேசபக்த கேள்வியுடன்,  கான்ஸ்பிரசியை காலை வேளையில் காபியில் கலக்கி விடுவது.

வந்த இந்த வாந்தியை, என்னவென்றே தெரியாமல், போனில் உள்ள அத்தை, மாமா, எல்ஐசி ஏஜென்ட், எதிர்த்த வீட்டுப் பெண், குடும்ப டாக்டர், வீட்டு பிளம்பர் என அத்தனை பேர்  நம்பருக்கும் ஃபார்வர்டு செய்வதில் அடுத்த 30 நிமிஷத்தில், தனித்தமிழன் அத்தனை பேர் மண்டையிலும் இது ஊறத்துவங்கும்.
 
வா.வா.பே.யின் இன்னொரு குரூரமான  பிரச்சினை, இதில் குரூப் வைப்பது. பன்னீர்-பழனி எல்லாம் தாண்டி, இந்த குரூப்பில் நடக்கும் அரசியல் நாடகம் மாபெரும் அள்ளு. குரூப்பில் உள்ள அத்தனை  பேரும் ஆளுக்கொரு உட்கட்சி பூசலுடன் ரகசியமாக தனித்தனி குரூப் வைத்திருப்பர்.  மொத்த  குரூப்பின் உரையாடலை பக்கத்து உட்கட்சி குரூப்பில் குதறி கும்மியடித்து, பின் ரொம்ப அம்மாஞ்சியாய் மொத்த குரூப்பில் கும்பிடுவது, கைதட்டுவது, மூஞ்சு காட்டுவது என நடத்தும் நாடகங்களில்தாம் இந்த வா.வா.பே. நோயின் தீவிர நிலை துவங்கும்.

இந்த குரூப், வியாதிக் கட்டத்துக்கு வந்தபின்னர் இந்த வா.வா.பே. நோயில் இருந்து விடுபடுவது சற்று கடினம். `போய் ஒழி. உன் சங்காத்தமே வேணாம்..டைவர்ஸ் வங்கிப்போமா.  பிரேக் அப் தான் இனி’  என மொத்தமாய் உறவில் சங்கு ஊதிய பின்னர் சில மணித்துளிகள் அல்லது சில நாட்கள் வாட்ஸ் அப்பில் இருந்து வெளி நடப்பு செய்வர். பின்னர் அதே நோய் வேறு வண்ணங்களில் தொடரும்.
 
வா.வா.பே. நோயில் இருந்து, நம் வீட்டுப் பிள்ளை  நம் புருஷன் பொஞ்சாதிகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். தவறினால், வீட்டில், பெரும்பாலானோர் மணிரத்ன ஹீரோ மாதிரி வார்த்தையே இல்லாமல் பேச ஆரம்பிப்பர். ஆன் லைனில் மட்டுமே அத்தனை பேரும் கவுன் கட்டி ஆடுவர். மற்ற நேரமெல்லாம், சேது விக்ரம் மாதிரிதான் திரிவர். எல்லோரையும் விட, காதலன் காதலிகள் வா.வா.பே. நோயில் அடையும் பாதிப்பில், தன் ஆயுள் காலத்தில் இன்னொரு காதலை எண்பது வயதிலும் வைத்துவிடக் கூடாது எனும் வைராக்கியத்தில் வாழத் துவங்கியுள்ளனர்.

குறிப்பாய், மென்பொருள் எழுதும் பெண் முதல், முறுக்கு சுத்தும் ஆயா காதலி வரை, அவர்கள் காதலர்கள், கிறிஸ்து பிறக்கும் முன்னர் நடத்திய  உரையாடலை ஆர்ச்சீவ்ஸ்சில் சேமித்து வைத்து, தேவையான போது கிண்டி எடுத்து, முன்னாடி போட்டு `அன்றைக்கு இப்படி பேசிட்டு, இன்றைக்கு இப்படியா?’ என எவிடன்சுடன் எழுந்து நிற்கும் காட்சி இருக்கின்றதே, அடடா! பாகுபலி ராஜமாதாவிடம்  கூட அதைப் பார்க்க முடியாது. 

அந்த கிளைமாக்சில், காதலனின் சுமார் மூஞ்சியில் சின்னதாய் மலரும் `ஞே’- யில்இருந்து  பிறந்து சின்னாபின்னமாகிப் போகும்  அவன் தன்மானம், சில மணி நேரம் கழித்து, பொங்கத்துவங்க, அதில் பல ஆண்ட்ராய்டுகளை ஆப்பிள்களை அடித்து நொறுக்கியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. வா.வா.பே. நோயில் இருந்து அடுத்த மற்றும் இந்த  தலைமுறையை காக்க என்ன செய்யப்போகின்றோம்? மருத்துவ உலகம் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கின்றது!