இருமனம் கொண்ட திருமண வாழ்வில்



மகேஸ்வரி - 2

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்…

இரு வீட்டார் பேசி இரு மனம் இணைந்தால் அடுத்தது என்ன..? அட அழைப்பிதழ்தான்… “என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்…” என திருமணத்தின் முகவரியாய்... பரிணாம வளர்ச்சியில் பல மாற்றங்களைக் கண்டுள்ள அழைப்பிதழ்கள், இன்று இளைஞர்களின் கற்பனையுடன், ஆடம்பரமும் இணைய புதுமை... புதுமை... புதுமைதான்.

மஞ்சளும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் நான்கு மடிப்புகளுடன் வந்த அழைப்பிதழ்கள், இன்று எந்த அளவு வளர்ச்சி கண்டுள்ளது என்பதை அறிய இத்துறையில் கால் பதித்து கால் நூற்றாண்டு கடந்து, உத்திரவாதத்துடனும் நம்பிக்கையுடனும் இயங்கிக் கொண்டிருக்கும் மேனகா கார்ட்ஸ் உரிமையாளர் சங்கரலிங்கத்தை சந்தித்தபோது…

“1980ல் கோடம்பாக்கத்தில் சிறிய அளவில் ஆரம்பித்த இந்தத் தொழில் இன்று பல முன்னேற்றங்களைக் கடந்து, தமிழ்நாடு முழுவதும் 50 முகவர்கள், மாநிலம் கடந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் நாடு கடந்து மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் என தன் தொழிலின் எல்லைகளை விரிவு செய்திருக்கிறேன்” என நம்மிடம் பேசத் துவங்கினார்.

‘‘நேரில் சென்று உறவுகளையும், சுற்றத்தையும், நட்புகளையும் அழைத்த காலங்கள் மலையேறி இன்று இணையம், ஸ்மார்ட் போன், அலைபேசி என அவசர யுகத்தில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே  வீடியோ கால், மின்னஞ்சல், வாட்ஸ் அப், முகநூல் என நவீன ஊடகம் வாயிலாக அழைப்பிதழ்களை அனுப்பி அழைத்தாலும், நேரில் சென்று நேருக்குநேர் முகம் பார்த்து, புன்னகைத்து, மகிழ்ச்சியை பகிர்ந்து உறவுக்கும் நட்புக்கும் அழைப்பிதழை கொடுத்து ஆத்மார்த்தமாய் அழைக்கும் அந்த நெருக்கத்தை இழக்க யாரும் விரும்பவில்லை.

அதனால்தான் இன்றும் அழைப்பிதழ்களை அச்சடிக்கும் துறை பல முன்னேற்றங்களை கண்டு திருமண வீட்டாரை பரவசப்படுத்துகிறது. எல்லாவற்றிலும் புதுமை மற்றும் லேட்டஸ்ட் டிரெண்டை பெற்றோர்களும், இளைஞர்களும் எதிர்பார்க்கிறார்கள். டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் தயாராகும் ரிச் கார்டு அளவிற்கு இங்கே அழைப்பிதழ்களில் பணத்தை செலவிட விரும்பாத மனோநிலை தமிழ்நாட்டு மக்களிடத்தில் இருந்தாலும், தங்கள் இல்லத் திருமணத்தின் ஆடம்பரத்தை அழைப்பிதழ்களில் வெளிப்படுத்த நினைப்பவர்களும் இங்கு உண்டு.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, லேசர் கார்டு, விண்டேஜ் கார்டு, ஃப்ரெண்ட்ஸ் கார்டு, தஞ்சாவூர் பெயின்டிங் கார்டு, தீம் வெட்டிங் கார்டு, பாக்ஸ் டைப் வெட்டிங் கார்டு, செலிபிரேட்டி கார்டு, லேஸ் டைப் கார்டு, அக்ராலிக் கார்டு என பலவிதமான கார்டுகள் எங்களிடம் உள்ளன. சில வாடிக்கையாளர்கள் அழைப்பிதழ் என்பது பார்த்ததும் கிழித்துப்போடுகிற, அல்லது தூக்கிப்போடுற ஒன்றுதானே, இதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என நினைத்து தேவைக்கு தகுந்த லக்ஸரி வகை கார்டு, பெர்சனல் கார்டு, ஜென்ரல் கார்டு என பிரித்து பிரித்து வாங்கி தங்களின் தேவைகளை நிறைவு செய்கின்றனர்.

இளைஞர்கள் என்றால் டிரெண்டியாக, புதுமாதிரியாக, யாருமே இதுவரைக்கும் செய்யாதது போல, மொத்தத்தில் ‘பாகுபலி’ மாதிரி பிரமாண்டமாக ரிச்சாக எதிர்பார்க்குறாங்க. புதுமையை எல்லாவற்றிலும் கேட்கிறார்கள் என சிரிக்கிறார். சில வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு எல்லை கடந்தது. அவர்களை திருப்தி செய்யவே முடியாது. சில கிரியேட்டிவ் விசயங்களை அவர்களே டிசைன் செய்துகொண்டு நம்மிடம் வருகிறார்கள்.

அந்த மாதிரியான கஸ்டமைஸ்டு கார்டுகளையும் நாங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பமறிந்து தயார் செய்து தருகிறோம். 10 ரூபாய் முதல் ஆயிரம், பத்தாயிரம் ரூபாய்வரை எங்களிடம் அழைப்பிதழ்கள் உள்ளன. திரை உலகம் சார்ந்த செலிபிரிட்டிகள், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள், பிசினஸ் உலகத்தைச் சேர்ந்த மில்லியனர்கள் எங்களிடம் லக்ஸுரியஸ் கார்டுகளை ஆர்டர் கொடுத்து பெற்றுச் செல்கின்றனர்.

அழைப்பிதழ்கள் என்பது ஒரு குடும்பத்தின் பெருமை சார்ந்த விசயமாக மாறிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி இது இரு மனங்கள் இணையும் பந்தத்திற்கான ஒரு முகவுரை. லாபத்தைத் தாண்டிய ஒரு மனநிறைவான தொழில்” என முடித்தார். இளைஞர்களின் டிரெண்ட் மற்றும் அண்மைய திருமணங்களின் போக்கு ஆகியவற்றை உணர்ந்து அதற்கேற்ப கஸ்டமைஸ்டு கார்டுகளை வடிவமைத்து தரும், வடபழனியில் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வமங்களா வெட்டிங் கார்ட்ஸ் உரிமையாளர் ராஜ், “இப்போதெல்லாம் திருமண அழைப்பிதழ்களை தயார் செய்ய இருவீட்டாரும் அதிகம் மெனக்கெடுகிறார்கள்.

எல்லாமே டிரெண்டியா இருக்கணும், தனியா தெரியணும், புதுசா என்ன இருக்கு? புதுசா... புதுசா... இன்னும்... இன்னும்... எனத் தேடிதேடி அலைகிறார்கள். அழைப்பிதழின் வடிவத்தை மாற்றி ரவுண்ட ஷேப், வெர்டிக்கிள், ஓவல் என தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப டிரெண்டியாக்குகிறார்கள். அந்த மாதிரியான வாடிக்கையாளர்கள் விலை பற்றி யோசிப்பதே இல்லை. ஒரு சில வாடிக்கையாளர்கள் கான்செப்ட் ஓரியன்டட் கார்டுகளை எதிர்பார்த்து அவர்களே டிசைன் செய்து கொண்டு வருகிறார்கள்.

உதாரணத்திற்கு புக் மை ஷோ ஆப், வாட்ஸ் ஆப் அழைப்பிதழ் மாதிரி கான்செப்ட். தீம் வெட்டிங் கார்டுகள் போன்றவை இதில் அடக்கம். பெர்சனல் கார்டு எல்லாமே வாடிக்கையாளர்களின் ஐடியாதான். டபுள் டோர் ஸ்டெப் கார்டு, கிரெடிட் கார்டு அழைப்பிதழ், ஸ்க்ரால் அழைப்பிதழ், ஆப்பிள் போன் மாதிரி ஓப்பன் பண்ணி அதில் இருந்து வருவது மாதிரி என பல ஐடியாக்களை இளைஞர்கள் எடுத்து வருகிறார்கள்.

இந்த கார்டுக்கு என்ன அட்டை... எவ்வளவு மொத்தமாக அல்லது மெலிதாக பயன்படுத்த வேண்டும், காகிதத்தின் தரம் போன்றவற்றை நாங்கள் கொடுப்போம். கேரிகேட்சர் மாடல் அழைப்பிதழ்கள் சமீபத்திய டிரெண்ட். மணமக்களின் போட்டோ இல்லாமல் கார்ட்டூன் படமாக அவர்களை செய்கிறோம். இது தவிர்த்து ஹேண்ட்மேட் கார்ட்ஸ், மேனுவல் ரிட்டர்ன் இன்விடேஷன் போன்றவற்றையும் அழைப்பிதழ்களில் சிலர் விரும்புகிறார்கள்.

வாடிக்கையாளர்களின் கருத்துதான் எங்களுக்கு முதலுரிமை. பிரின்டர்ஸ் கருத்து, மூலப் பொருட்கள் விநியோகிப்போர், அட்டைகள் வழங்குவோர் ஆகியோர் இணைந்தால்தான் அழைப்பிதழ்களின் அவுட் புட் சரியாக வரும். 3 ரூபாயில் துவங்கி 3000 ரூபாய் கார்டு வரை உள்ளது. இது தவிர்த்து சம்பந்தி பாக்ஸ், ஸாரி பாக்ஸ், திருமண கிஃப்ட் பாக்ஸ் இவைகளையும் வடிவமைத்துத் தருகிறோம்.

சம்பந்திகளுக்குள் அழைப்பிதழ் கொடுத்து தட்டு மாற்றிக் கொள்ளும் பழக்கம் என்ற ஒன்று தமிழகத்தில் உள்ளது. அதற்கென தட்டில் வைத்துத் தரப்படும் பொருட்களை பாக்ஸ் வடிவத்தில் டிசைன் செய்து, 18 வகை உலர்பழங்கள், சாக்லெட், அழைப்பிதழ், உடைகளுடன் கூடிய கிஃப்ட் பாக்ஸை பிரசன்டேஷன் கார்டுடன் வடிவமைத்துத் தருகிறோம்.

இது தவிர நிச்சயதார்த்த ஓலை என்ற ஒன்றும் உண்டு. நிச்சயம் செய்யப்போகும் மணமக்கள் குடும்பத்தார் பற்றிய விவரங்களுடன் இன்னார் பெண்ணை இன்னார் பையனுக்கு மணம் முடிக்க முடிவு செய்து எனக் கையால் எழுதி இருவீட்டாரும் கையெழுத்திட்டு உறுதி செய்யும் முறையினை இரண்டு தினங்களுக்கு முன்பே ஸ்க்ரால் வடிவில் வெல்வெட் துணியில் பிரின்ட் செய்து சுருட்டி ஸ்டாண்டுடன் வழங்கி
விடுவோம்.

நிச்சயதார்த்தம் நடக்கும்போது ஸ்க்ராலைப் பிரித்து ஸ்டாண்டில் பொருத்தி வந்திருப்போர் முன்னிலையில் படித்து நிச்சயம் செய்யும் முறையும் வந்துவிட்டது. இந்தத் தொழிலில் பொறுமை மிகமிக அவசியம். 10 ரூபாயில் கூட யாரும் பண்ணாத ஒரு சின்ன வேலையை
வித்தியாசமாக டிரெண்டியா பண்ணுவோம். எல்லாமே ஸ்பார்க்தான். இளைஞர்களிடம் இந்த விஷயங்கள் ஃபயர் மாதிரி பற்றிக்கொள்ளும்” என முடித்தார்.

(கனவுகள் தொடரும்...)

படங்கள்: ஆர்.கோபால்