உங்கள் நாப்கின் எத்தகையது?- பி.கமலா தவநிதி

பொதுவாகவே பெண்கள் தாங்கள் பயன்படுத்தும் எவ்வித பொருளாக இருந்தாலும் சரி, அதன் விலை, வெளித்தோற்றம், பிராண்ட், நிறம் என எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து வாங்குவதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கண்ணுக்கு இடும் மை தொடங்கி ஷாம்பூ, லோஷன், டியோட்ரண்ட், லிப்ஸ்டிக் என சகலத்திலும் என்ன இருக்கிறது, என்ன இல்லையென்று பெரியளவிலான ஆய்வுகளை நடத்தியபடியே இருப்பார்கள். இவைகளில் நடத்தப்படும் சோதனைகளை முக்கியமான ஒன்றில் நடத்த தவறிவிடுகிறோம் என்பதுதான் உண்மை.

நம்மில் நிறைய பேருக்கு நாம் பயன்படுத்தும் நாப்கின்கள் என்னவெல்லாம் கொண்டு தயாரிக்கப்படுகிறதென்றே தெரியாததுதான் அவலம். தற்போது ஆண்ட்ராய்டு ஃபோன் இல்லாதவர்களே இல்லை. நிச்சயம் நெட்பேக் வைத்திருப்போம். ஆனால் என்றைக்காவது நாப்கின்களை பற்றி நாம் சர்ச் செய்ததுண்டா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இப்போதாவது தெரிந்து கொள்வோம் வாசகிகளே.

முன்பெல்லாம் காட்டன் துணிகளைத்தான் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் நாப்கின்களை அறிவியலும் விஞ்ஞானமும் தற்போதைய தலைமுறையினருக்கு அளித்த வரப்பிரசாதமாகத்தான் பார்க்க வேண்டும். வெவ்வேறு வகைகளிலும், வடிவங்களிலும் நம்முடைய மாதவிடாய் நாட்களை எளிதில் கடக்க உதவுகின்றன இந்த நாப்கின்கள்.

தற்போது மார்க்கெட்டுகளில் கிடைப்பவை மற்றும் நமக்குத் தெரிந்தவை என்று பார்த்தால் சானிடரி பேட், டாம்பான்ஸ் மட்டுமே. இதனை தாண்டி மென்சுரல் கப் என்றும் கிடைக்கிறது. நாப்கின்கள் அல்ட்ரா தின், ரெகுலர், மேக்ஸி, ஓவர் நைட், சூப்பர் என பல வகைகளை கொண்டுள்ளது. இவற்றிலுள்ள வித்தியாசங்கள் என்னவென்று பார்த்தால் வடிவம், உறிஞ்சும் தன்மை, நீளம் ஆகியவைதான்.

டாக்டர் நிர்மலாவிடம் இதுகுறித்து பேசியபோது, ‘‘பொதுவாக நாம் பயன்படுத்தும் சானிடரி பேட்களை 4 முதல் 6 மணிநேர இடைவெளிக்குள் மாற்றிவிட வேண்டும். 4 மணி நேரத்திற்கு மேல் போகும்போது இந்த நாப்கின்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி ஆரம்பமாகிறது என்பதே முக்கிய காரணம். மாதவிடாய் காலத்தில் வெளியேறும் உதிரத்தில் மிகுதியான கிருமிகள் இருப்பதனால் பிறப்புறுப்புகளில் நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

தற்பொழுது அதிகப்படியாக உறிஞ்சும் தன்மை கொண்ட நாப்கின்கள் தயாரிக்கப்படுகிறது. 12 முதல் 18 மணிநேரம் உபயோகிக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன இவை. அதிகம் உறிஞ்சும் தன்மையை உருவாக்க அதிகப்படியாக செல்லுலோஸ் சேர்க்கப்படுகிறது. இந்த செல்லுலோஸ் என்பது தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருள். மேலும் நாப்கின்கள் சிறந்த வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் பிளீச்சிங் பொருளும் சேர்க்கப்படுகிறது.

இந்த செல்லுலோஸ் செடிகளில் இருந்து எடுக்கப்படுவதால், செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் செல்லுலோஸில் சற்றே கலந்திருக்கும். அதேபோல் பிளீச்சிங் பொருளில் டையாக்சின் போன்ற வேதிப்பொருள் இருக்கிறது. ஆகவே அனைத்து நாப்கின்களிலும் பூச்சிக்கொல்லியும், டையாக்சினும் இருக்கும். இவை இரண்டும் நம் தோலில் பட்டுக்கொண்டே இருந்தால் தோலில் அலர்ஜி போன்றவை ஏற்படும் என்பதற்காகத்தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் நாப்கின் மாற்ற வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் நிர்மலா.

இந்த நாப்கினை தொடர்ச்சியாக வைத்திருக்கும்போது அதிலுள்ள டையாக்சினால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாப்கின்களின் அதிக பயன்பாட்டினால் கருப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. அடுத்ததாக பார்த்தால் டாம்பான்ஸ். டாம்பான்ஸ் என்பது பிறப்புறுப்புக்குள் வைப்பது.

உள்ளிருந்து உதிரத்தை உறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டது. இந்த டாம்பான்ஸ் கருப்பையின் அருகிலே இருப்பதால் சரியான கால இடைவெளியில் மாற்றவில்லை என்றால் அதாவது 6 மணி நேரத்துக்கு அதிகமாக வைத்திருந்தோமானால் எளிதில் நோய்த்தொற்று ஏற்படும். இந்த தொற்று நோய் கிருமி டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்னும் நோய் தாக்குதலை ஏற்படுத்துகிறது.

இந்த நோய்த்தொற்று உடல் முழுவதும் பரவி, உடலில் ரத்தம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அதே போல் ஆக்கிவிடும். மேலும் இருதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் செயல் இழக்க ஆரம்பித்துவிடும். உடனடியாக அன்டிபையோட்டிக்ஸ் கொடுத்து சரி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும். ஆகவே டம்பான்ஸில் அதிகப்படியான அபாயம் இருக்கிறது.

நம் பயன்பாட்டை பொறுத்துதான் நன்மையும் தீமையும் இருக்கிறது. சற்று கவனமாக கையாளப்படவேண்டிய ஒன்றுதான் டாம்பான்ஸ். டாம்பான்சின் மேற்பரப்பு மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வித ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக மகப்பேறின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் மேலும் கருப்பையில் நோய்த்தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நமக்காக மட்டுமின்றி, சுற்றுப்புற சூழலையும் கருத்தில்கொண்டுதான் நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. மாதவிடாய் உதிரம் வெளியில் வராமல் இருக்க நாப்கினின் மேல்பரப்பிலும் பின்புறத்திலும் பிளாஸ்டிக் ஷீட் இருக்கும். இது மக்காத குப்பையில் ஒன்று. இந்த பிளாஸ்டிக் மண்ணில் மக்காமல் இருந்து மண்ணின் வளத்தை கெடுப்பதோடு, பிராணிகளின் உயிரையும் எடுக்கிறது. ஒரு மாதத்திற்கு சுமார் 12 முதல் 14 நாப்கின்கள் ஒரு பெண்ணால் உபயோகிக்கப்படுகிறது.

இந்த நாப்கின்களை அகற்ற சரியான முறை ஒன்றும் இல்லாததால், ஒன்று எரிக்கப்பட வேண்டும் அல்லது புதைக்கப்பட வேண்டும். நாம் குப்பையில் போடுகிறோம். இந்த நாப்கின்கள் மக்கிப்போகாமல் மண்ணும் தண்ணீரும் நாசமாகின்றன. முன்பெல்லாம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணிகளை பயன்படுத்தி வந்தார்கள். அதனை தேவை முடிந்த பின் நன்கு அலசி மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்தார்கள். சில சமயங்களில் அதனை சரியாக சுத்தம் செய்யாவிட்டாலோ, மிகவும் பழசாகிவிட்டாலோ அதுவே நோய்த் தொற்றை உண்டாக்கும் என்பதனாலும், மேலும் தற்போது பெண்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருவதையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டவைதான்  நாப்கின்கள்.

ஆனால் அதுவே தீங்கு விளைவிக்கிறது என்பதனால் தற்போது கிலோத் பேட் என்று சொல்லப்படும் துணியினால் செய்யப்படும் நாப்கின்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இவற்றில் சில பூச்சிக்கொல்லிகள் போடாத ஆர்கானிக் முறையில் விளைவித்த நல்ல தரமான பருத்தியினை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பிளாஸ்டிக்கோ, செல்லுலோசா, சூப்பர் அப்ஸார்பன்ட் ஜெல் போன்ற எவ்வித ரசாயனமும் சேர்க்கப்படுவதில்லை. மாறாக நல்ல பருத்தி, பல மெல்லிய அடுக்கில் மென்மையான துணிகள் கொண்டு தயாரித்து விற்பனைக்கு வந்திருக்கின்றன. நம் கவனம் இதில் திரும்புமானால் நம் உடல் நலத்திற்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லதாக அமையும்.

பரவலாக ஆர்கானிக் பேட் தற்போது கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் ரசாயனம் இல்லாமல் இருக்குமே தவிர பிளாஸ்டிக் இல்லாமல் இருப்பதில்லை. சில உலகத் தரம் வாய்ந்த ஆர்கானிக் பேட்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இணைய தளத்தில் மட்டுமே கிடைக்கிறது. சில பெண்கள் அமைப்புகள் இதற்கு தீவிரமாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி, ஆரோவில் சுற்றுவட்டாரத்தில் கூட இது போன்ற ரசாயன கலப்பில்லாத நாப்கின்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ளாடையுடன் இணைத்து பின்பக்கம் பட்டன் போட்டுக்கொள்ளும் முறையில் தயார் செய்து வருகிறார்கள். இதனை தயாரித்து 3 முதல் 5 வருடங்களுக்குள் பயன்படுத்தும் வகையில் உற்பத்தி செய்கிறார்கள். இதில் குறைபாடு என்னவென்றால், அவரவர் உடல்வாகைப் பொறுத்து மாதவிடாய் போக்கின் அளவு மாறுபடும். சிலருக்கு அதிகப்படியாகவும், சிலருக்கு குறைவாகவும் என. அப்படி அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த துணி நாப்கின் சற்று பொருந்தாததாக இருக்கும்.

மாதாமாதம் நாப்கின் வாங்கும் விலையில் பாதிதான் இதன் விலையாக இருக்கிறது. இன்னும் இதன் மேல் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. நம் சமூகத்தில் இதற்கு சரியான வரவேற்பு இல்லாமல் இருப்பதும் உண்மைதான். மென்சுரல் கப் எனப்படுவது சிலிகானால் தயாரிக்கப்படும் ஒன்று. இதனை மடித்து பிறப்புறுப்பின் உள்ளே வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் பல்வேறு நிறம் மற்றும் அளவுகளில் கிடைக்கிறது. இது ரத்தத்தை வெளியிடாமல் இதனுள் சேர்த்து வைத்துக் கொள்ளும். மாதவிடாய் காலத்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 20 மில்லி ரத்தம் வெளியேறும் என்பதால், இதனை அடிக்கடி மாற்ற தேவையில்லை.

4 மணி நேரத்துக்கு ஒருமுறை, இதனை வெளியே எடுத்து, அதில் சேமிக்கப்பட்ட உதிரத்தை கொட்டி விட்டு நன்கு அலசி, பின் மீண்டும் பிறப்புறுப்பினுள் வைத்துக் கொள்ளலாம். இதனை 4 வருடங்கள் வரையும் பயன்படுத்தலாம். நாம் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின், டாம்பான், மென்சுரல் கப் போன்றவற்றை நன்கு சுத்தம் செய்த பிறகே குப்பையில் போட வேண்டும்.

டாம்பான்ஸ் தவறாக பயன்படுத்துவதால் பிறப்புறுப்பில் பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியா டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்ற நோயை ஏற்படுத்துகிறது. திடீரென்று அதிகப்படியான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, குறைந்த ரத்த அழுத்தம், வலிப்பு, தசை வலிகள், கண், தொண்டை அல்லது வாய் பகுதி சிவந்து போதல், உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் தடிப்புகள் போன்றவை இதன் அறிகுறிகள். இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. இரவு முழுவதும் டாம்பான்ஸை பிறப்புறுப்புக்குள் வைத்திருக்கக் கூடாது.

அதற்கு பதிலாக இரவு முழுவதும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை பயன்படுத்தலாம். அதேபோல் நாப்கின்களில் இருக்கும் டையாக்சின் ரசாயனம் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னவென்று பார்த்தால், வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் அசாதாரண திசு வளர்ச்சி, உடல் முழுவதும் அசாதாரண செல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ஹார்மோன் மற்றும் எண்டோகிரைன் மண்டலத்தில் இடையூறு போன்றவையாகும்.

இதனால் எல்லா உறுப்புகளும் தத்தம் வேலையை நிறுத்திவிடும். உடல் முழுவதும் குளிர்ந்து போய்விடும். ரத்தத்தில் இந்த நோய்த்தொற்று பரவி, சீரான ரத்த ஓட்டம் இல்லாமல் உடலில் ஆங்காங்கு ரத்தம் தேங்கி விடும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் மரணத்தில் முடிந்துவிடும்” என்கிறார் மருத்துவர் நிர்மலா.

ஆகவே, வெளி அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் இதுபோன்ற முக்கியமான விஷயங்களை பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அனாவசியத்தை தவிர்த்து அவசியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம் தோழிகளே.