க்ரீன் காபி - அசத்தும் பெண் விவசாயி



- பி. கமலா தவநிதி

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார்- மணிமேகலை தம்பதி இந்தியாவிலேயே முதல் முறையாக ஆர்கானிக் முறையில் க்ரீன் காபியை பயிரிட்டு இந்தியா முழுக்க ஏற்றுமதி செய்து விவசாயத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டு சாதித்துள்ளனர். இயற்கை விவசாயத்தின் மூலம் காபி விளைவித்து அதை லாபகரமாக எப்படி விற்பனை செய்வதென்ற அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

“எங்களுக்கு திருப்பூர்தான் சொந்த ஊர். இருபது வருஷத்துக்கு மேல டெக்ஸ்டைல் பிசினஸ்தான் எங்களோட முக்கிய தொழில். ஆனா விவசாயம் பண்ணணும்கிறது எங்களோட ரொம்ப நாள் ஆசை, கனவு. எங்க தலைமுறைல தாத்தா காலத்தோட விவசாயம் முடிஞ்சுபோச்சு. திருப்பூர் பகுதில விவசாயம் பண்றதுக்கான வாய்ப்பு கிடைக்கல. ஆனா எங்களுக்கு கொடைக்கானல் பகுதி சவரிக்காட்டுல 40 ஏக்கர் இருந்தது.

மலை விவசாயம்னா எப்பவுமே வித்தியாசமான ஒண்ணுதான். நிலத்துல பண்ணுறத விட மலைப் பகுதில பண்ணும்போது பயிர்களுக்கான சத்துகள் எளிதில் கிடைக்கும். எந்த ரசாயனமும் இல்லாத விவசாயம் செய்து தோட்டத்தை மேம்படுத்தியுள்ளோம். சின்ன வயசுல தாத்தா-பாட்டி கூட இயற்கையோடு ஒன்றிதான் வளர்ந்தேன். அப்ப ரொம்பவே ஆரோக்கியமான உணவு கெடச்சுது. ஆனா இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு அப்படியான ஆரோக்கியம் உணவுல கிடைக்கிறதில்ல. அதனால ஏதாவது ஒரு விதத்துல எல்லாருக்கும் குறைந்தபட்ச ஆரோக்கியத்தை கொண்டு சேர்க்கணும்கிற ஒரே எண்ணம்தான் எங்களை இதில் முன்னேற்றியிருக்கு.

இந்தியாவில் முதல் முறையாக க்ரீன் காபியை அறிமுகப்படுத்தினோம். இதில் கஃபைன் கிடையாது. உடல் மெட்டபாலிஸத்தை அதிகப்படுத்தி தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. க்ரீன் காபியை பெங்களூரில் உள்ள காபி போர்டு தலைமையகத்தின் உதவியோடு இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தப்படுகிறது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

அதை தொடர்ந்து இயற்கை முறையில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை க்ரீன் வாஷ் என்ற ஒன்றையும் தயாரிக்கிறோம். மேலும் முதல் தரச்சான்றிதழ் பெற்ற காபி கொட்டையில் தயாரிக்கப்பட்ட ரெகுலர் காபி பவுடர் அல்லது வறுக்கப்பட்ட காபி கொட்டைகளையும் சந்தைப்படுத்துகிறோம்” என்று மிகவும் உற்சாகமாகவும் ஆர்வத்துடனும் கூறுகிறார் மணிமேகலை செந்தில்.

ஆரம்பத்தில் பெரிய வருமானம் இல்லாமல் இருந்தது. நிறைய பேர் பல ரசாயனங்களை பரிந்துரைத்தும், அதனினும் அதிக மதிப்புள்ள ஆடு மற்றும் மாட்டு உரங்களை வைராக்கியமாக பயன்படுத்தினோம். தொடர்ச்சியாக மழை இருப்பதுதான் பெரிய வரம். தற்போது பயிற்றப்பட்ட காபி அரபிக்கா வகையை சார்ந்தது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் காபிக் கொட்டை பெரிதாகவும், மிகவும் ருசியாகவும் இருக்கும். அதற்கு பதில் செடி, கொடிகளை வெட்டி போட்டுவைப்பதே உரமாக மாறி நல்ல விளைச்சல் தருகிறது.

காபி 3 முதல் 5 வருடங்களுக்கு பிறகுதான் பலன் தர ஆரம்பிக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் செடிகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் வேப்பம் பூ, தழை, கொட்டை போன்றவற்றை அரைத்துத் தண்ணீரில் கலந்து தெளித்து விடுவோம். காபியில் நிறைய செய்முறைகள் உண்டு. பறித்தவுடன் அப்படியே விற்க முடியாது. காபிக் கொட்டையைப் பறித்து, காயவைத்து, தோல்நீக்கி பிறகுதான் சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியும்’’ என்று மேலும் காபி உற்பத்தியை பற்றி விவரிக்கிறார் மணிமேகலை செந்தில்.

‘‘எலுமிச்சை, கொய்யா, மாதுளை போன்ற செடிகளை 40 ஏக்கர்ல பரவலா பயிரிட்டு இருக்கோம். திண்டுக்கல் மாவட்டத்துக்கு போய் நாட்டு ரகச் செடிகளை வாங்கி வந்தோம். எலுமிச்சைல நாட்டு ரகம்தான் வச்சிருக்கோம். அதிக மகசூல் தருகிற எத்தனையோ ஹைபிரிட் ரகம் இருக்கும்போது நாட்டு ரகம் தேர்வு செஞ்சதுக்கான காரணம் என்னனா, இதுல மருத்துவ குணமும், புளிப்புத் தன்மையும் அதிகம் இருக்கும். மேலும் நாட்டு ரகம் தொடர்ச்சியாக 25 முதல் 30 வருடங்களுக்கு மகசூல் தரக்கூடியது.

செடி வச்சு 5 வருஷத்துல இருந்து பலன் தர ஆரம்பிச்சிடும். ஒரு வருஷத்துக்கு தோராயமாக, ஒரு செடியிலிருந்து ஏறக்குறைய 2000 காய்கள் கிடைக்கும். இதுவரை தோட்டத்தில் 2500 எலுமிச்சை செடிகள் இருக்கும். அதனால் எலுமிச்சைல இருந்து மட்டும் ஒரு வருடத்திற்கு 9 முதல் 10 லட்சம் வரை லாபம் இருக்கும். அதனால எலுமிச்சையை மதிப்பு கூட்டி விற்கணும்னு புது யுக்திய கையாண்டதால தான் இப்ப இவ்ளோ லாபம் ஈட்ட முடியுது.

அதுதான் மதிப்பு கூட்டுறது. மதிப்பு கூட்டுறதுனா, பழங்களை அப்படியே தராமல், அதன் சாறு எடுத்து 6 மாதம் வரை கெட்டுப் போகாத வகையில் விற்பனை செய்கிறோம். இதற்கு லைமன் (LIMON ) என்று பெயர் வைத்துள்ளோம். நாங்க மைசூர், திருச்சி, கோவை மாவட்டங்கள்ல போய் பயிற்சி எடுத்துட்டு இதை செய்கிறோம். இதேபோல மாதுளை மற்றும் விருப்பாச்சி மலைவாழை பயிரிட்டிருக்கோம். ஆட்டு உரத்தைத்தான் எல்லா செடிகளுக்கும் உரமா போடுறோம்.

மலை பகுதிங்கிறதால தண்ணி அதிகமா தேவைப்படாது. நாட்டு மாதுளை 3 வருடங்களுக்கு மேல் மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும். ஒரு வாரத்திற்கு 200 முதல் 250 கிலோ மாதுளை கிடைக்கிறது. தற்போது தோராயமாக 100 மரங்கள் இருக்கின்றன என்பதால் வருடத்திற்கு 10 முதல் 14 லட்சம் வரை வருமானம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டு கொய்யா மரங்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை இருக்கின்றன.
இது சிவப்பு கொய்யா. விதையும் நிறைய இருக்கும். ஹைபிரிட் பழங்கள் சாப்பிடும்போது இனவிருத்திக்கான கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதால் ஹைபிரிட் செடிகள் எதையும் நாங்கள் விதைப்பதில்லை. ரசாயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கக்கூடிய கொய்யாவிலேயே புழு இருப்பது வழக்கம் தான்.

ஆனால் நாங்கள் பஞ்சகவ்யம் பயன்படுத்துவதால் எங்கள் தோட்டத்தில் விளையும் கொய்யாவில் புழுக்கள் இருப்பதில்லை. கொய்யாவுக்கு பெரியளவு பராமரிப்பு தேவையில்லை என்பதால் எளிதில் லாபம் தரக்கூடிய பழம். கொய்யா, மாதுளை, அவகடோ, எலுமிச்சை, வாழை, இதுபோக இயற்கை விவசாயத்தில் மா, பலா, மிளகு, காபி, பப்பாளி மற்றும் வீடு உபயோகத்திற்காக நாட்டுக் காய்களும் பயிரிட்டுள்ளோம்” என்கிறார்.