நீங்கள் எந்தப் பாத்திரத்தில் சமைக்கிறீர்கள்?



-திருவரசு

உணவே மருந்து என்றிருந்த நிலை மாறி இன்று மருந்தே உணவு என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். காரணம், உணவுப் பொருட்களில் மட்டுமல்லாமல் அந்த உணவுப் பொருட்களை சமைக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களிலும் ரசாயனம் கலந்துள்ளது. அது நம்முடைய உடலில் பல நோய்களை உண்டாக்குகிறது. பண்டைய காலத்தில் நம் முன்னோர் பயன்படுத்திய பாத்திரங்களில் நம் உடலுக்குத் தேவையான சத்துகள் இருந்ததுடன் உணவுப் பொருட்களுக்கு கேடு விளைவிக்காத வகையிலும் இருந்தன. முன்னோர் பயன்படுத்திய பாத்திரங்கள் குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் சுஜாதா.

‘‘நாம் இப்போது மெதுவாக நவீன முறைகளிலிருந்து  பழைய பாரம்பரிய முறைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பல வீடுகளில் சமையலறைகளிலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், நான்-ஸ்டிக் போன்ற பாத்திரங்களுக்குப் பதிலாக பாரம்பரிய பாத்திரங்களான மண்பானை, இரும்பு, செம்பு, பித்தளை போன்ற பாத்திரங்களை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது. இம்மாற்றம் ஏன் சிறந்தது என்று பார்ப்போம்.
 
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் நிக்கல், குரோமியம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை அவற்றில் சமைக்கப்படும் உணவிலும் கலக்க வாய்ப்புகள் அதிகம். இந்த உலோகங்களை அளவுக்கு மீறி உட்கொண்டால் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் உலோக நச்சுத்தன்மை ஏற்படும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்குப் பிறகு வந்த மற்றொரு பாத்திர வகை, டேபிளான் பூசப்பட்ட நான்-ஸ்டிக் பாத்திரங்கள். இவற்றில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய நச்சுப்பொருட்கள் அதிக அளவில் உள்ளன.

அவற்றில் சமையல் செய்யும்போது உண்டாகும் நச்சுப் புகையை சுவாசிப்பதால், நம் உடல் நோய் பாதிப்பிற்குள்ளாகும். மேற்குறிப்பிட்டுள்ள காரணங்களினால் நவீன பாத்திரங்களை பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கவல்லது. அவற்றிற்கு பாரம்பரிய பாத்திரங்களே நச்சு இல்லாத மாற்றுப்பொருள்.

பாரம்பரிய பாத்திரங்கள் எனப்படுவது, அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண், இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, கல், மரம் போன்ற பாத்திரங்களை குறிக்கிறது. இவை மட்டுமல்லாமல், தங்கம் மற்றும் வெள்ளியும் பயன்படுத்தப்பட்டது. நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கான ரகசியம் இதுவென்றும் கூறலாம். பாரம்பரிய பாத்திரங்கள் மிகவும் அதிக வெப்ப எதிர்ப்பு தன்மை உடையது.

இப்பாத்திரங்களை சமையலுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உணவு நீண்ட நேரம் மெதுவான சூட்டில் சமைக்கப்படுகிறது. இதனால், சேர்க்கப்பட்டுள்ள கூட்டுப்பொருட்களின் சுவை நன்கு உணவில் பரவி சுவையை அதிகரிக்கிறது. குறைந்த நேரத்தில் சமைப்பதற்காக நவீன பாத்திரங்களில் அதிக சூட்டில் சமைக்கும்போது, உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் குறையும்.

பாரம்பரிய பாத்திரங்களை பயன்படுத்தும்போது, உணவு குறைந்த  சூட்டில் சமைக்கப்படுவதால், ஊட்டச்சத்துகள் அழியாமல் உள்ளடக்கப்படுகிறது. ஊட்டச்சத்து உள்ளடக்கம் மட்டுமல்லாமல், உணவின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் திறன் படைத்தவை நம் பாரம்பரிய உலோகங்கள்.

இரும்பு, செம்பு, ஜின்க் போன்றன நம் உடலுக்கு சிறிய அளவில் தேவையான கனிமங்கள். இவை நம் உடலுக்கு, உண்ணும் உணவின் மூலமே கிடைக்கும். நாம் சமைக்கும் காய்கறிகளில் உள்ள கனிமங்களின் அளவு, அவை வளர்க்கப்பட்ட மண்ணின் தன்மையைப் பொறுத்தவாறே அமையும். நாம் பாரம்பரிய பாத்திரங்களில் சமைக்கும்போது அந்தக் கனிமங்களின் அளவு, உணவில் அதிகரித்து நமக்கு நன்மை தருகிறது.

இரும்பு பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவில், இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படும். மண் பானையில் சமைத்த உணவில், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், போன்ற சத்துகள் மேம்படுத்தப்படுகிறது. மேலும் மண்பானை காரத் தன்மை வாய்ந்ததால் உணவின் அமிலத் தன்மையை சமநிலைப்படுத்துகிறது. பண்டைய கால அரசர்கள், தங்கம் - வெள்ளியாலான பாத்திரங்களை பயன்படுத்தினர்.

ஆயுர்வேத மருத்துவத்திலும் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு பல நோய்களின் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் குழந்தைகளுக்கு தங்கத்தை கல்லில் உரைத்து அதில் தேன் சேர்த்து, அக்குழந்தையின் நாக்கில் வைக்கும் ஒரு பழக்கம் உள்ளது. தங்கம் ஆஸ்துமா மற்றும் பல வகை சுவாசக் குறைபாடுகள் மற்றும் இதயம், மூளை குறைபாடுகளையும் குணப்படுத்த வல்லது.

வெள்ளி செரிமான பிரச்னைகள் மட்டுமல்லாமல் தொற்று நோய்களையும் தடுக்கவல்லது. வெள்ளி கெட்ட பாக்டீரியாக்கள் வளர்வதை தடுக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், முன்னோர்கள், பால் கெடாமல் பாதுகாக்க, அதில் வெள்ளி காசுகளை போட்டு வைப்பார்களாம். ஆனால் இவை சாமானியர்களுக்கு சாத்தியமில்லை.

செம்பு மூட்டு வலி, போலியோ, லெப்ரஸி, ரத்த அழுத்தம், மனஅழுத்தம், பக்கவாதம் போன்ற பிரச்னைகளை தடுக்க வல்லது; முடி வளர்ச்சி, காயம் ஆறும் திறன், ரத்த அணு உற்பத்தி ஆகியவற்றையும் அதிகரிக்கிறது. பித்தளையில் செம்பு மற்றும் ஜின்க் உள்ளது. ஜின்க் நோயெதிர்ப்பு திறன், காயம் ஆற்றும் திறன், செரிமானம் ஆகியவற்றை மேம்படுத்தி, சர்க்கரை நோய், மன அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

வெண்கலத்தில், செம்பு மற்றும் டின் உள்ளது. டின் ரத்த அணு உற்பத்தி, செவித் திறன், முடி வளர்ச்சி ஆகியவற்றிற்கு உதவுகிறது. நம் முன்னோர்கள் மாவு மற்றும் மசாலா அரைக்க கல்லாலான இயந்திரங்களை பயன்படுத்தினர். இவை சக்கி, ஆட்டுக் கல், அம்மிக் கல், உரல் - உலக்கை ஆகியன. இவை நீண்டகாலம் நீடிக்கக்கூடியவை.

மாவு, மசாலா சரியான பதத்தில் மற்றும் சுவையில் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், மர இயந்திரங்களும் (மத்து போன்றன) பாத்திரங்களும், உணவு நொதிக்க சிறந்தது; ஏனென்றால் அவை அந்த உணவில் உள்ள அமிலத்துடன் சேராது. பாரம்பரிய பாத்திரங்களில் உணவு வைத்திருந்தால், அது நீண்ட நேரம் சூடான நிலையில் வைக்கும். இத்தன்மையின் மூலம் அது உணவிற்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை தடுக்கிறது.

மேலும், மண் பானை குடிநீரை குளிரவைக்க பயன்படுத்தவல்லது. மேற்கண்ட காரணங்கள் மட்டுமல்லாமல் பாரம்பரிய பாத்திரங்களில் சமைத்தால் மட்டுமே உணவில் பாரம்பரிய சுவைகளை அடைய முடியும். காலம் மாற நமது சமையலறையின் வடிவமைப்பும் மாறுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உடல் செயல்பாட்டிற்கான அவசியமும் குறைகிறது. இது உடல் நலத்தை பாதிக்கிறது. பாரம்பரிய பழக்கங்களை மெதுவாக நாம் செயல்படுத்துவதின் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகளை சரிப்படுத்தலாம்’’ என்றார்.